
கோவில்களை நாம் புனிதமான இடமாகக் கருதுகிறோம், அதனால் கோவிலுக்குள் செருப்பு அணிந்து செல்வதில்லை. ஆனால் கோவிலின் கர்பக்ருகத்துக்குள்ளேயே காலணிகள் இருப்பதைப் பார்த்திருக்கீங்களா? தோட்டத்துப் பச்சிலை என்று சொல்வார்கள். கையருகே பொக்கிஷம் இருக்கும், ஆனால் நமக்குத் தெரியாமல் ஒதுக்கி வைத்திருப்போம். எந்தக் கல்லூரியில் எஞ்சினியரிங் படித்தார் என்று கேட்டவர் இதைப் பற்றி அறிந்திருந்தால் எந்தக் கல்லூரியில் சட்டம் படித்தார் என்று கேட்டிருக்கலாம். ஆனால் உலகத்துக்கே அறிவியலைக் கற்றுக் கொடுத்தது நமது ஹிந்து சமுதாயம் என்ற உண்மையை மட்டும் மறைத்து விட்டு எல்லாமே வெள்ளைக்காரன் கொடுத்தது என்று அடிமைத் துதி பாடுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும் இன்றைய நிலையில் நமது தொன்மையை மட்டுமல்லாது அறிவியல் முன்னேற்றத்தையும் எடுத்துரைக்க வேண்டியது நம் கடமையாகிறது.
அதுக்கு முன்னாடி குரு சிஷ்யன் படத்தை ஒரு தடவை ஞாபகப்படுத்திக்கோங்க. ஒரு லெட்டரை ரஜினி காண்பிப்பார், உடனே வினு சக்ரவர்த்தி அதைக் கிழிந்தெரிந்து விட்டு ‘இப்போ என்னா பண்ணுவே?’ என்று ஆடுவார். உடனே அது வெறும் ஜெராக்ஸ் காப்பிதான், இதுபோல நூறு காப்பி இருக்கு, ஒரிஜினல் பத்திரமா வீட்டுல இருக்கு என்று கலாய்ப்பார் ரஜினி.
சுந்தரர் – சிவபெருமானின் அணுக்கத் தொண்டர். ஒரு முறை கைலாசத்தில் — நித்தியானந்தாவோட கைலாசம் இல்லீங்க – நெஜமான கைலாசம் — பார்வதியின் தோழியரைப் பார்த்து ஒரு கணம் மனம் பறிகொடுத்தார். இதனையறிந்த சிவபெருமான் சுந்தரா நீ பூலோகத்தில் பிறந்து மனித இன்பங்களைத் துய்த்துப் பின் என்னையடைவாயாக என்று கூறுகிறார். சுந்தரரின் வேண்டுகோளுக்கிணங்க தக்க சமயத்தில் வந்து உனை ஆட்கொள்வேன் என்றும் கூறுகிறார்.
சரியான பிராயத்தில் சுந்தரருக்குத் திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்தன்று ஒரு முதியவர் திடீரெனத் தோன்றி சுந்தரா, என் அனுமதியின்றி நீ எப்படித் திருமணம் செய்து கொள்ளலாம்? நீ என் அடிமை என்கிறார். சுந்தரர் திகைத்தாலும் சுதாரித்துக் கொண்டு நீ என்ன பித்தனா? நான் எப்படி உனக்கு அடிமை? என்று கேட்கிறார். அவர் கூட இருந்தவர்களும் இவர்கள் குலத்தில் அடிமைகளாகப் போவது வழக்கமில்லையே என்று கூறுகிறார்கள். அதாவது எல்லா விஷயங்களையும் சட்டப் புத்தகத்தில் அடக்கி விட முடியாது. நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களும் கஸ்டமரி லா என்ற வகையில் சட்டத்தின்பாற்படும். சபரிமலை வழக்கிலும் இந்த கஸ்டம் எனப்படும் நடைமுறைதான் வாதாடப்பட்டது. உடனே கிழவர் தன் கையிலிருந்த ஒரு ஓலையைக் காட்டி இதோ பார், இது உன் தாத்தா எழுதிக் கொடுத்த ஓலை. இதன்படி நாவலூரானாகிய உன் பாட்டனும் அவர் சந்ததிகளும் எனக்கு அடிமை என்று கூறுகிறார். ஓலையைப் படித்துக் பார்த்த சுந்தரர் அது உண்மை என உணர்கிறார். சட்டென யாரும் எதிர்பாராத விதமாக அந்த ஓலையைக் கிழித்துப் போட்டு விடுகிறார். இப்போ குரு சிஷ்யன் படம் வெளங்குதா?
சளைக்காமல் கிழவரும் பதில் சொல்கிறார். தம்பி, இது படி ஓலைதான் ( படி என்பது நகல்) அசல் ஓலை பத்திரமாக இருக்கிறது என்று சிரிக்கிறார். இந்த அசல் நகல் இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் வியக்கவில்லை. இதிலிருந்து இந்த ஜெராக்ஸ், போட்டோ காப்பி, அசல், நகல் போன்ற விஷயங்களெல்லாம் அந்தக் காலத்திலேயே நடைமுறையில் இருந்தவைதான் என்பது புரிகிறதா?
சொத்துரிமையை உறுதி செய்யும் பத்திரத்தைக் கிழித்துப் போட்டு விட்டால் பிறகு சுலபமாக நில அபகரிப்பு செய்யலாம் என்ற பழக்கம் அன்றே இருந்திருக்கிறது.
இப்படி ஒரு வயதானவன் கையிலிருந்த ஓலையைப் பறித்துக் கிழித்து விட்டாயே? இது நியாயமா? என்று முதியவரும் சுந்தரரைப் பார்த்துக் கேட்கிறார். ஆனால் கல்யாணத்துக்கு வந்திருப்பவர்கள் எல்லாம் சுந்தரருக்கு வேண்டியவர்கள் அல்லவா? அதனால் ஓலையைக் கிழித்த சுந்தரரைக் குறை சொல்லாமல், கடிந்து கொள்ளாமல், முதியவரைப் பார்த்து உங்கள் ஊர் எது என்று வினவுகிறார்கள். இதேதாங்க இன்றைக்கும் நடக்கிறது. யாராவது குறை சொன்னால், உண்மையை எடுத்துக் கூறினால் உடனே அவனை வந்தேறி என்பது, தமிழின விரோதி என்பது, மலையாளி, கன்னடத்தான், மராட்டியன் என்று வசை பாட வேண்டியது.
முதியவரும் வெண்ணெய்நல்லூருக்குச் சென்று வழக்குரைப்பதாகப் புறப்படுகிறார். இங்கே வழக்கு நடந்தால் நியாயம் கிடைக்காது, அதனால் வேறு மாநிலத்தில் வழக்கு நடத்த வேண்டும் என்று இன்றைக்குக் கேட்கிறோமே அதன் ஆரம்பமே இங்கேதாங்க. அங்கே ஊரார் முன்னிலையில் வழக்கு தொடுக்கப் படுகிறது. இவர் உங்களுக்கு அடிமை என்றால் அதற்கான ஆதாரம் எங்கே என்று சுந்தரர் தனக்கு அடிமை என்று கூறும் முதியவரைப் பார்த்து நடுவர் மன்றத்தினர் கேட்கிறார்கள். எந்த மாதிரி ஆதாரம்? எழுத்து மூலமான பதிவு அல்லது அனுபவ பாத்யதை அல்லது அயலார் சாட்சி. இவைகள் மட்டுமே இன்றளவுக்கும் சொத்துரிமைக்கான ஆதாரங்கள் என்பதுதான் ஆச்சரியம்.
முதியவர் தனது மூல ஓலையை எடுத்து சபையோர் முன்பு காட்டுகிறார். ஆனால் அதைக் காட்டியதும் உடனே நம்பி விடவில்லை நடுவர்கள். அதன் பழமையை சோதித்துப் பார்க்கின்றனர். இன்றைக்கும் சந்தேகம் இருக்கக் கூடிய விஷயங்களில் பத்திரத்தின் நம்பகத்தன்மையை சோதித்துப் பார்க்க அதன் பழமையை சோதித்துப் பார்ப்பது வழக்கம். அது முத்திரைத் தாள் விற்கப்பட்ட தேதி அல்லது பத்திரப் பதிவு அலுவலகத்தின் முத்திரைத் தேதி போன்றவையாகும்.
பழமை உறுதியான பின்பு அதன் வாசகத்தைப் படிக்கின்றனர். அதில் சுந்தரரின் தாத்தா எழுதிக் கையொப்பமிட்டிருக்கிறார். கூடவே சில சாட்சிகளும். இன்றைக்கும் பத்திரப் பதிவுகளுக்கு சாட்சியம் அவசியம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது தொடங்கிய காலம் எது என்பது இதன் மூலம் புரிகின்றது.
இதில் ஒருவர் திடீரென்று சந்தேகத்தைக் கிளப்புகிறார் – இது சுந்தரரின் தாத்தா கையெழுத்துத்தானா என்று. உடனே இன்னொருவர் இதனை சுந்தரரிடம் காண்பித்துக் கேட்க அதற்கு முதியவர் ஆட்சேபணை தெரிவிக்கிறார். ஆம், இதிலே சுந்தரரின் சாட்சியம் சட்டப்படி செல்லுபடியாகாது. ஏனென்றால் அவர் interested party அதனால் பிறழ் சாட்சியமாகத்தான் இருக்கும். ஆனால் முதியவர் தெரிவிக்கும் யோசனை அதை விட ஆச்சரியமானது. சுந்தரரின் தாத்தா எழுதிய பிற ஓலைகள் இருந்தால் அதனைக் கொணர்ந்து அத்துடன் ஒப்பிட்டுப் பார்க்குமாறு கூறுகிறார். இதன் மூலம் கையெழுத்தை ஒப்பிடும் வழக்கமும் அக்காலத்தில் இருந்தது என்பதும் தெரிகிறது.
எல்லாம் முடிந்தது. சுந்தரரின் தாத்தா எழுதிக் கொடுத்த ஓலைதான் என்பது உறுதியாகிறது. சுந்தரர் வழக்காடிய முதியவருக்கு அடிமை என்பதும் நிரூபணமாகிறது. அப்போது நடுவர்கள் முதியவரைப் பார்த்து உமது ஊர் திருவெண்ணெய்நல்லூர் என்று இருக்கிறதே அப்படியானால் உமது வீட்டையும் முறைமைகளையும் காட்டும் என்று கேட்கிறார்கள். இது முதியவர் யார் என்று அறிந்து கொள்ள மட்டும் இல்லை. அப்படிக் காட்டத் தவறினால் முதியவர் அந்த ஊரைச் சேர்ந்தவர் இல்லை என்று ஆகிவிடும். அப்போது ஜூரிஸ்டிக்ஷன் செல்லாததாகிவிடும். அப்போதுதான் முதியவர் காட்டுகிறேன் எனது வீட்டை எனக்கூறி வெண்ணெய்நல்லூர் கோவிலின் கர்பக்கிரகத்தினுள் நுழைந்து மறைந்து விடுகிறார். கோவிலுக்குள் நுழைந்த முதியவரைக் காணாது தவித்த சுந்தரருக்கு காளையின் மீதமர்ந்து சிவ-சக்தி சொரூபமாகக் காட்சியளிக்கிறார். பின்பு சுந்தரருக்கு அவர் பிறவியினைப் பற்றி நினைவூட்டி விட்டுத் தன்னைப் பற்றிப் பாடுமாறு கூறுகிறார். என்னவென்று பாடுவது என்று சுந்தரர் கேட்க, பித்தன் என்று என்னை அழைத்ததால் “பித்தா” என்று எமைப் பாடுக என்று சிவபெருமான் கட்டளையிட, “பித்தா பிறைசூடிப் பெருமானே” என்று சுந்தரர் பாடுகிறார். அன்றைக்கு வழக்காடியாக முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான் விட்டுச் சென்ற பாதக்குறடுகள் எனப்படும் காலணிகள் இன்றளவும் திருவெண்ணெய்நல்லூர் கோவிலின் கர்பக்ரகத்தில் கண்ணாடிப் பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? எத்தனை பேர் இதனை தரிசிக்கும் பாக்யம் பெற்றோம்?
இதையெல்லாம் புராணக்கதைகள் — வெறும் கட்டுக் கதைகள் – என்று ஒதுக்கித் தள்ளலாம். ஆனால் இந்தக் கதையைக் கொஞ்சம் சட்டரீதியாக அணுகினால் இன்றைய சட்டதிட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் முன்னோடியாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பண்டைத் தமிழகம் இருந்ததைக் காணலாம். கற்பனையிலான புராணக்கதை என்றால் லாஜிக்கும் சட்ட நுணுக்கங்களும் அவசியமேயில்லையே! இன்றைய சமூகக் கதைகளிலேயே லாஜிக் பார்ப்பதில்லை. அப்படியிருக்க புராணக் கதையில் லாஜிக்கும் சட்ட நுணுக்கங்களும் அவசியமில்லை. அப்படியிருந்தும் இவையெல்லாம் தெளிவாக இருக்கின்றன என்பதிலிருந்தே இது புராணமல்ல வரலாறு என்பது புரியவில்லையா?
இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? மிகப் பிரம்மாண்டமான கோவில் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் ஆலயம். ஆனால் பக்தர்களைத்தான் காணவில்லை. தீராத வழக்குகளிலிருந்து நம்மைக் காத்து அருள்பாலிக்கக் காத்திருக்கும் இறைவனையும் அவன் விட்டுச் சென்ற பாதணிகளையும் வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டாமா? விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம். புறப்படுவோமா?
ஸ்ரீஅருண்குமார்
மிக அழகாக தொகுத்துக்கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
அவர்கள் புரிந்து கொள்ளப் போவது நடக்காது.
அதற்கு உண்மையான தமிழறிவு வேண்டுமே!