எனது நண்பர் வந்திருந்தார் — அவர் ரொம்ப சிவப்பு, பயங்கர கறுப்பு. 

வரும்போதே ரொம்ப சந்தோஷமாக வந்தார்.

என்ன தோழரே…. எங்கே போயிருந்தீங்க? விடுமுறை நாளும் அதுவுமா காலையிலிருந்தே காணலை?

என்ன கிண்டலா? இன்னிக்குப் பண்டிகை… தெரியுமா?

அது தெரியும் தோழரே… அதனாலதான் இன்னிக்கு விடுமுறையாச்சே.. அதான் கேட்டேன்

இன்னிக்கு மாபெரும் மாநாட்டுக்குப் போய்ட்டு வரேன்

என்ன மாநாடுங்க தோழரே?

தமிழர் உரிமை மாநாடு

அதென்ன தமிழர் உரிமை? இது நாள் வரைக்கும் மனித உரிமைகள், மக்கள் உரிமைகள்னு பேசிக்கிட்டிருந்தீங்க. இப்போது சுருங்கி தமிழர் உரிமைகள்னு போயிட்டீங்க

கிண்டலா? தமிழர்களை நசுக்கிட்டே இருந்தா இப்படித்தான் பொங்கி எழுவோம்

இப்போ என்ன நசுக்கிட்டாங்க நீங்க பொங்கி எழுவதற்கு

என்ன இப்படிக் கேட்டுட்டீங்க…. கீழடி தெரியுமா? அங்கே தமிழர்களின் தொன்மையை இந்த உலகத்துக்குத் தெரியப் படுத்தக்கூடிய ஏராளமான படிவங்கள் கிடைக்குது. ஆனா இதை மூடி மறைக்கணும்னு அரசு நினைக்குது. அதான் ஒரு பெரிய போராட்டத்துக்குத் தயாராகறோம்

மூடி மறைக்க நினைக்குதுன்னு யார் சொன்னாங்க தோழரே?

இதென்ன கேள்வி? கீழடியில ஆதாரங்கள் கிடைச்சும் ஏன் இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கல? அதுக்குக் காரணம் சொல்லுங்க

அரசு இயந்திரம் மெதுவாத்தான் இயங்கும்னு உங்களுக்குத் தெரியாதா?

அடடா நீங்கதான் இந்த அரசு ரொம்ப வேகமா இயங்கும்னு சொல்லுவீங்க… இப்போ என்ன? பெரிதாகச் சிரித்தார் தோழர். என்னை மடக்கி விட்டதாக நினைக்கும் போதெல்லாம் இப்படித்தான் சிரிப்பார்.

சரி, மொதல்லேர்ந்து வருவோம். கீழடியில் அகழ்வாராய்ச்சி செஞ்சது யாரு?

இந்திய தொல்பொருள் துறை

அங்கே படிமங்கள் கிடைச்சதை உலகத்துக்குச் சொன்னது யாரு?

அவங்கதான்

இப்போ சொல்லுங்க தோழரே… இதை மூடி மறைக்கணும்னு நினைச்சா மொதல்லயே மறைச்சிருக்கலாமே? எல்லாத்தையும் உலகத்துக்குக் காட்டிட்டு அப்புறம் ஏன் மறைக்கணும்னு நினைக்கணும்?

இதுதான் சதி… தமிழர்களோட வீரத்தோடயும் மானத்தோடயும் சீண்டி விளையாடும் முயற்சி. அதுக்காகத்தான் இன்னிக்கு மாநாடு. கீழடியிலிருந்து ஒரு பிடி மண் எடுத்து வந்து சபதம் எடுத்திருக்கோம்

தோழரே, திருக்குறள் தெரியுமா?

எங்கிட்டயேவா? நல்லாத் தெரியுமே

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவுன்னு சொன்னது உங்களுக்கு மறந்துடுச்சா?

எனக்கொண்ணும் மறக்கலே. இப்போ அதுக்கென்ன?

அதேதான்…. எவனோ எதையோ சமூக ஊடகத்தில் எழுதினா அதை அப்படியே நம்பி இன்னொரு இடத்துல வாந்தி எடுக்கறத என்னிக்கு நிறுத்தப் போறீங்களோ?

ரொம்பப் பேசாதீங்க. தமிழர்களோட வாழ்வுரிமையோட வெளயாடறதே வேலையாப் போச்சு. நாங்க இதை சகிச்சிக்க மாட்டோம். தமிழர்கள்தான் இந்த உலகின் மூத்த குடிகள், தமிழ் மொழியிலேர்ந்துதான் எல்லா மொழிகளும் உருவாச்சி… லெமூரியா கண்டம் முழுவதும் தமிழனின் ஆட்சிதான் இருந்தது. இதையெல்லாம் உலகுக்குச் சொல்ல என்ன வேண்டுமானாலும் செய்வோம்

தோழரே, உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? கீழடியில் கிடைத்த படிமங்களை விடவும் இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்கள் வாழ்ந்த இடம் ஒண்ணு இருக்கு. ஆனா அதையும் எதுவும் செய்யாம விட்டு வெச்சிருக்காங்க தெரியுமா?

கேள்வியுடன் பார்த்தான் தோழர் எங்கே?

நீங்க புதுசா ஃப்ளாட் வாங்கியிருக்கீங்களே பல்லாவரம். அங்கேதான். பல்லாவரமும் அதைச் சுத்தியிருக்கற சுமார் 100 கி மீ சுற்றளவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால மனித இனம் வாழ்ந்த அடையாளங்களும் எலும்புக் கூடுகளும் ஏராளமா இருக்காம். இது பல பத்திரிகைகளிலும் வந்ததே.. படிக்கலையா?

தோழரின் முகம் ரொம்ப சிவப்பானது. அதுக்கென்ன இப்போ?

இல்லே தோழரே… பல்லாவரத்தைத் தோண்டினா லெமூரியா கண்டத்தின் படிமங்கள் கூடக் கிடைக்கும். அப்போ நீங்க நினைக்கறதையெல்லாம் நிரூபிக்க அருமையான வாய்ப்பு கிடைக்கும். சொல்லப்போனா கீழடிக்கும் முன்னரே வெளிவந்தது பல்லாவரம் படிமங்கள். ஏன் தோழரே அதுக்காக ஒரு போராட்டம் பண்ணக் கூடாது?

ஏதோ கடனை உடனை வாங்கி சின்னதா ஒரு ஃப்ளாட் வாங்கியிருக்கேன். அது பொறுக்காதே உங்களுக்கு… தமிழன் ஒருத்தன் வாழ்ந்தா பொறுக்காம எதுனாச்சும் செஞ்சிக்கிட்டே இருக்கணும். அதானே உங்க ஆசை? தோழர் பொங்கிவிட்டார்.

இல்லே தோழரே… உங்க ஆசைப்படியே லெமூரியா கண்டத்தில் ஆட்சி செய்தது தமிழர்கள்தான்னு இந்த உலகத்துக்குச் சொல்லலாமே?

போய்யா போய் வேலையப் பாரு… தனக்கு மிஞ்சித்தான் தானமும் தருமமும்… எப்பவோ செத்துப்போனவனுக்காக என் வீட்டை இடிக்கணுமா? அப்படியொண்ணும் லெமூரியாவைக் காட்டணும்னு எனக்கொண்ணும் தலையெழுத்தில்லே

தோழரே… ஒரு வேளை கீழடியிலே உங்க வீடிருந்தா ஒரு வேளை மாநாட்டுக்குப் போயிருக்க மாட்டீங்களோ?

தோழர் புறப்பட்ட வேகத்தைப் பார்த்தால் நேரடியாப் பல்லாவரம் போய் ஃப்ளாட்டைப் பார்த்ததும்தான் ஆசுவாசமடைவார் போலிருந்தது.

 

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.