
ஜல்லிக்கட்டு போராட்டம்– நினைவிருக்கிறதா? நாட்டு மாடுகள் அழிந்து வருகின்றன, ஏ2 பாலை ஒழிக்க பெரிய வெளிநாட்டு சதி, இலுமினாட்டிகளின் சதி என்றெல்லாம் பல காரணங்கள் சரி, நாட்டு மாடுகளுக்காக அவ்வளவு அக்கறையுடன் போராடியவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்? ஜல்லிக்கட்டு நடத்தினால் நாட்டு மாடுகள் பாதுகாக்கப்பட்டுவிடுமா?
இன்றைக்கு பாலுக்காக மாடு வளர்ப்பவர்களின் முதல் தேர்வாக இருப்பது இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டுப்பசு இனங்களான ஜெர்ஸியேதான். ஏன்? நாட்டுமாடுகளை நமது மக்களே கைவிட்டது ஏன்? முதல் காரணம் நாட்டு மாடுகளை விடவும் ஜெர்ஸி பசுக்கள் ஏராளமான பால் தருவதுதான். கூடவே முன்னர் புறம்போக்கு நிலங்கள் மேய்ச்சல் நிலங்களாக விளங்கின. ஆனால் இப்போது புறம்போக்கு நிலங்களெல்லாம் அபகரிக்கப்பட்டுவிட்டன. இலவசமாக மேய்ந்து பால் கொடுத்த காலம் போய் காசுக்கு தீவனம் வாங்கி மாடு வளர்க்கும் நிலைமை. ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ரூ.200/- செலவாகும் ஒரு மாட்டைப் பராமரிக்க. ஆனால் அது கொடுக்கும் பாலின் மூலம் வரும் வருவாய்? பல சமயங்களில் பராமரிப்பு செலவைவிட குறைவாகவே கிடைக்கும். பால் கறக்காத காலங்களில்? ஆக நாட்டு மாடுகளால் செலவு அதிகம். அப்புறம் யார் வளர்ப்பார்கள் நாட்டு மாடுகளை? அதே சமயம் ஜெர்ஸி போன்ற இறக்குமதி செய்யப்பட்ட பசு இனங்கள் சுலபமாக நோய்த்தாக்குதலுக்கு ஆளாகின்றன. நமது பருவநிலை அவற்றிற்கு ஒத்துப்போவதில்லை.
கரூரை அடுத்த பி.செல்லாண்டிபாளையம் கிராமத்தில் ஒரு சோதனை முயற்சியாக நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார் திரு.கணேசன். சொந்தமாக நிலம் இருப்பதால் தீவனத்திற்குப் பெரிய செலவில்லை. எந்த விதமான ரசாயனங்களும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் வளர்க்கிறார் இவர். பாலை மிகமிகக் குறைவான விலைக்கு விற்கிறார். இந்திய மாட்டு இனங்களை அடையாளம் கண்டு கொள்ள மாடுகளின் திமில் உதவும் என்று கூறுகிறார் இவர் .இவைதரும் ஏ2 பால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. முறையாக, பெரிய அளவில் பண்ணைகள் அமைத்துப் பராமரித்தால் நாட்டு மாடுகளும் நிறைய பால் கொடுக்கும், வணிகரீதியாக லாபம் பார்க்கலாம் என்பதை நிரூபிக்கிறார் திரு.கணேசன். தேசவிரோத சக்திகள் உட்புகுந்து கைப்பற்றிய ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைக் கேட்கிறேன்! நாட்டு மாடு இனங்கள் இப்போது தழைத்து விட்டனவா? எங்கே போனது உங்கள் நாட்டு மாடுகள் மீதான பாசம்? இப்போது எங்கே இருக்கிறார்கள் அந்த நாட்டு மாடு ஆர்வலர்கள்? ஒருவேளை மாட்டுக்கறி பிரியாணி தீர்ந்து விட்டதோ?
ஒரு காலத்தில் நமது நாட்டு மாடுகள் தாராளமாகப் பால் கொடுத்துக் கொண்டிருந்தன. அத்தகைய மாடுகளைப் பராமரிக்கும் கோபாலர்களைப் பற்றிப் பாடித் தனது தோழிகளை எழுப்புகிறாள் ஆண்டாள்.
எப்போதும் கன்றுகளுடன் இருக்கக்கூடிய இளமை மாறாத பசுக்கூட்டத்திலிருந்து பால் கறந்த கோபாலர்கள் தங்களது பகைவர்களின் இடத்துக்கே சென்று அவர்களது பலத்தை அழிக்குமாறு சண்டையிடுவார்கள். அத்தகைய கோபாலர்களின் குலத்தில் தோன்றிய பொற்கொடியே… மயில்போல் அழகான பெண்ணே… வீதியில் இறைவனின் புகழைப் பாடவேண்டிய நேரத்திலே நாங்கள் உன் வீட்டு வாசலில் வந்து நின்று பாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீ கொஞ்சம்கூட அசையாமல் படுத்துக் கொண்டிருக்கிறாய். எதை நினைத்து இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறாய்? உயர்ந்த குணங்கள் உடைய நீ இப்படித் தூங்கலாமா? எழுந்து வா என்று தோழிகளை அழைக்கிறாள் ஆண்டாள்.
கற்றுக்கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்றுசெருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றரவல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம்புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர்எம்பாவாய்.
#11மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்