வேட்டைக்காரன் வரான் பாரு, ஓட்டையெல்லாம் அள்ளிட்டுப் போயிடுவான் பாரு என்று காங்கிரஸ் தலைமையே பயந்தது என்றால் அது புரட்சித் தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களுக்கு மட்டும்தான். குண்டடி பட்டு பிரச்சாரத்துக்கு வர முடியாத நிலையில் புகைப்படத்தை வைத்தே ஓட்டு வாங்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது எம் ஜி ஆரின் மக்கள் செல்வாக்கு.  ஆட்சிக்கு வந்து சில காலத்திலேயே அண்ணா மறைகிறார். அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுகிறது. மதியழகன், நாவலர் நெடுஞ்செழியன் போன்ற மூத்த தலைவர்களெல்லாம் இருக்க திடீரென்று கலைஞர் கருணாநிதி முந்துகிறார். அண்ணா என் கனவில் வந்தார், நீதான் ஆட்சியேற்க வேண்டும் என்று சொன்னார் என்று கூற, பகுத்தறிவுப் பாசறையும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ள ஒரே சபாநாயகர் நாற்காலியில் இரண்டு பேர் என்ற கூத்துக்களெல்லாம் அரங்கேறி ஆளுயர மாலைகள் சூழ கருணாநிதி முதல்வராகப் பதவியேற்கிறார்.  இதற்கெல்லாம் காரணம் அவருக்குத் துணையாக நின்ற எம் ஜி ஆர். ஆனால் அதை மறந்து விட்டு எம் ஜி ஆரை அரசியல் ரீதியாக ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டுகிறார். தனது மகன் மு க முத்துவை எம் ஜி ஆர் போலவே நடை உடை பாவனைகளை மாற்றி கதாநாயகனாக நடிக்க வைக்கிறார். எம் ஜி ஆர் போலவே கைகளை ஆட்டி டூயட் பாடுகிறார். அதே டி எம் எஸ் குரலில். ஆனாலும் எடுபடவில்லை. இருவருக்கும் பகை முற்றுகிறது. ஒருவழியாகக் கட்சியை விட்டு வெளியேற்றப்படுகிறார் எம் ஜி ஆர். தனிக் கட்சி ஆரம்பிக்கிறார்.

ஆனாலும் தி மு கவில் தலைவர்கள் எல்லாரும் தைரியமாக இருக்கின்றனர் – அதாவது அப்படிக் காட்டிக் கொண்டனர். உண்மை தெரிந்தவர்கள் மட்டும் எம் ஜி ஆருடன் தங்களை இணைத்துக் கொண்டனர்.  உதயசூரியன் சின்னம் அண்ணா கண்ட சின்னம். மக்கள் சின்னத்தை தங்களது வாழ்க்கையுடன் இணைத்துக் கொண்டனர். இனிமேல் புதிய சின்னம் வாங்கி அதனை புதுக்கட்சியுடன் அடையாளப்படுத்தி – இதெல்லாம் தேறாது என்பதுதான் இவர்களது எண்ணமாக இருந்தது.

 

1977ல் மாபெரும் வெற்றி பெற்று புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் ஆட்சிக் கட்டிலில் ஏறுகிறார். மீண்டும் ஆட்சி கலைக்கப்பட்டு 1980 தேர்தலிலும் மாபெரும் வெற்றி.  அடுத்த தேர்தலில் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்து கொண்டே வெற்றி பெறுகிறார்.

 

இவ்வாறாக எம் ஜி ஆர் உயிரோடு இருந்த வரையில் திமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற அனுமதியே இல்லை. எம் ஜி ஆர் மறைவுக்குப் பிறகு கட்சி இரண்டாகிறது. ஜெ ஜா என இரண்டு அணிகள்.  இரட்டைப் புறா சேவல் என இரண்டு சின்னங்கள். இரட்டை இலை முடக்கப்படுகிறது. தி மு க ஆட்சி அமைக்கிறது.

1991ல் ஒன்றிணைந்த அதிமுக தலைமையேற்று இரட்டை இலைச் சின்னத்தைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கிறார் ஜெயலலிதா. 

 

இப்போ ஒரு சின்ன சந்தேகம் வரலாம்.  உதயசூரியன் சின்னம்தான் பெரியது என்றால் எம் ஜி ஆர் தனிக்கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றது எப்படி?  இல்லை சின்னம் பெரிதல்ல என்றால் இரட்டை இலை இல்லாதபோது ஜெ தோற்றதும் இரட்டை இலை கிடைத்த பின் 1991ல் ஜெயித்ததும் எப்படி?

 

அதை அப்படியே வெச்சிட்டு இன்னும்  கொஞ்சம் மேலே போவோம். 1996 தேர்தலில் ஜெ படு தோல்வி. தான் போட்டியிட்ட தொகுதியிலேயே தோல்வி அடைகிறார்.  ஆனால் அதே இரட்டை இலை சின்னம்தான். மீண்டும் 2001ல் ஆட்சியைப் பிடிக்கிறார். 2006ல் திமுக வெற்றி. மீண்டும் 2011ல் ஆட்சியைப் பிடித்து 2016ல் அதனைத் தக்க வைத்துக் கொள்கிறார் ஜெ.  கொழப்புதா? அப்போ இரட்டை இலை சின்னம்தான் வெற்றி தந்ததா? சின்னம் பெரிதா? இல்லையா? இன்றைக்கும் இரட்டை இலை சின்னம் என்றால் உடனே அது எம் ஜி ஆர் என்ற நினைப்பில்தான் ஓட்டுப் போடுபவர்கள் பலர். வேட்பாளர் யார் என்றெல்லாம் கவலையில்லை. எங்கள் ஓட்டு எம் ஜி ஆருக்கு, அவரது சின்னம் இரட்டை இலை. இதுதான் பலரின் மூச்சு. ஆனால் அதே இரட்டை இலை சின்னத்தில் நின்றும் அதிமுக தோல்வியுற்றது ஏன்?

 

இந்தக் கொழப்பத்துக்கெல்லாம் சுலபமான விடை இருக்கிறது.  மஹாபாரதத்தில் யுத்தம் முடிந்ததும் தேரை விட்டு அர்ஜுனன் இறங்க வேண்டிய நேரம்.  வெற்றி மமதை அர்ஜுனனுக்கு. ஆகவே வழக்கப்படி தேரோட்டி கீழே இறங்கி தனது கைகளால் அர்ஜுனனின் கால்களைத் தாங்கி இறக்கி விடுவான் என்று எதிர்பார்த்திருந்தான். தேரோட்டி சாட்சாத் கிருஷ்ணன். அவன் இறங்கவில்லை. அதனால் அர்ஜுனன் தானாகவே தேரிலிருந்து இறங்கினான்.  அதன் பிறகு கிருஷ்ணர் தேரிலிருந்து இறங்கினார். அவர் இறங்கியதும் தேர் படீரென வெடித்துச் சிதறியது. அதிர்ந்து போனால் அர்ஜுனன். கிருஷ்ணன் கூறினார் அர்ஜுனா, இத்தனை நேரம் கண்ணுக்குத்தெரியாத சக்தியாக இந்தத் தேரிலே கொடியாக இருந்து இதனைக் காத்தது ஹனுமன்.  நான் இருக்கும் வரையில்தான் அவர் இங்கு இருப்பார். நான் முதலில் இறங்கியிருந்தேனென்றால் அடுத்த கணமே நீயும் வெடித்து சிதறியிருப்பாய் என்றார். உண்மை உணர்ந்த அர்ஜுனன் தன் அகந்தையை நினைத்து வெட்கினான்.

 

அதுபோல சின்னம் வெற்றியைத் தருகிறது என்று நினைப்பதும் தவறு, ஒரு தலைவர் வெற்றியைத் தருகிறார் என்பதும் தவறு.  வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம் கண்ணுக்குத் தெரியாத சக்தியாக இருக்கும் மக்களும் அவர்களது ஆதரவும்தான். மக்கள் ஆதரவு இருக்கும் வரையில் வெற்றி கிடைக்கும். அது இல்லையென்றால் யாராக இருந்தாலும் மண்ணைக்கவ்வ வேண்டியதுதான்.  ஆகவே மக்களையே சரணடைய வேண்டும். அவர்களுக்கு வேண்டிய நல்லவற்றை செய்து வந்தால் அதுவே வெற்றிக்கு வழி. பிரஷாந்த் கிஷோர்களும் கேம்ப்ரிட்ஜ் அனலடிகாவும் வெற்றியைத் தராது.

                                       ஸர்வ தர்மான் பரித்தஜ்ய மாமேகம் சரணம் ப்ரஜ

 

எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு என்னையே சரணடைந்து விடு அர்ஜுனா என்று கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார்.  கிருஷ்ணரே சகலம் என உணர்ந்து அவரையே சரணடைந்து அவருக்கு உகந்ததை மட்டும் செய்தால் நீ வெல்லலாம் என்பது பொருள்.  

 

எத்தனையோ பொய்ப்பிரச்சாரங்கள், போலி ஊழல் குற்றச்சாட்டுக்கள், மதவெறித் தாக்குதல்கள், பன்னாட்டு சதி —  இத்தனைக்கு மத்தியிலும் மோடி ஜெயித்தது எப்படி? அவர் மக்களுக்காகவே எல்லா காரியங்களையும் செய்து வருகிறார். உஜ்வலா தொடங்கி ஸ்வச் பாரத் என எல்லாமே மக்களுக்காகவே. மக்களையே சரணடைந்து அவர்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டு சதாசர்வ காலமும் அவர்களுக்கே தொண்டாற்றி வருகிறார். அதனால் மீண்டும் அமோக வெற்றி பெற்றார். இது இனியும் தொடரும்.  இந்த வெற்றி என்பது மோடி என்ற தனிமனிதருக்கான வெற்றி என நினைத்தால் எதிர்க்கட்சிகள் தோற்றுத்தான் போகும். இந்த வெற்றி மக்களின் வெற்றி, மக்களையே சரணடைந்த ஒரு தலைவரின் வெற்றி.

கீதையை எதற்காகப் படிக்க வேண்டும்? அதிலே என்ன இருக்கிறது? என்று ஒரு கும்பல் இப்போது கூத்தடித்துக் கொண்டிருக்கிறது.  இத பாருங்க, ஒரே ஒரு விஷயம்தான். கீதையில் இது மட்டுமல்ல, இது போன்ற ஏராளமான வாழ்க்கைத் தத்துவங்கள் இருக்கின்றன. படித்து அதன்படி நடந்தால் உலகத்தை வெல்லலாம். இல்லையென்றால் நெஞ்சுக்கு நீதி படித்துக் கொண்டு காலத்தை ஓட்டலாம்.  உங்கள் விருப்பமே உங்கள் எதிர்காலம்.

 

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.