ஒரு பழத்தினால் எப்படி சண்டை வந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். மூத்த பிள்ளைதான் செல்லப் பிள்ளை, இளையபிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை என்று முருகன் கோவித்துக் கொண்டு சென்றார். ஆனால் அவர் கோவம் நியாயம் இல்லை, ஏனென்றால் போட்டியில் நியாயமாக ஜெயித்தது பிள்ளையார்தான். ஆனால் கரகாட்டக்காரனில் செந்தில் அநியாயமாக இதாண்ணே இன்னொண்ணு என்று அழிச்சாட்டியம் பண்ணும்போது எல்லோரும் செந்திலுக்கே ஆதரவாகப் பேசுவார்களே அதாண்ணே பிரச்சினைக்கே காரணம்.

என்ன பிரச்சினைன்னு கேக்கறீங்களா? வர்றேன்.

பண்டிகைகள் என்பது மதம் சார்ந்தது, மதம் என்பது கடவுள் சார்ந்தது. ஆக கடவுள் இல்லாமல் பண்டிகை இல்லை. இஸ்லாமிய & கிறிஸ்தவப் பண்டிகைகளுக்கு மட்டும் விழுந்து விழுந்து வாழ்த்து தெரிவிப்பது, பண்டிகைக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது, அவர்களது மதச்சின்னங்களைத் தரித்துக்கொள்வது இதில் தொடங்கி ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவது, ஹிந்து மதத்தின் சம்பிரதாயங்களை கேலி செய்வது, ஹிந்து மதம் இழிவானது என்று சித்தரிப்பது என்று மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது தமிழக அரசியல்.

யாரும் வாழ்த்து தெரிவிக்காததால் நமது பண்டிகைக் கொண்டாட்டங்கள் குறைந்து விடப் போவதில்லை. உங்கள் வாழ்த்துக்காக இங்கே யாரும் காத்துக் கொண்டிருக்கவில்லை. சொல்லப்போனால் நீங்கள் எந்த ஆணியையுமே பிடுங்க வேண்டாம். ஆனாலும் இந்த நிலைமை தொடர்வது நாட்டுக்கே பேராபத்து. எப்படி என்கிறீர்களா? ஹிந்துக்களை இழிவுபடுத்தினால் சிறுபான்மையினர் மகிழ்வார்கள், நமக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற எண்ணம்தான் இதற்கெல்லாம் காரணம். எந்த முஸ்லீமும் கிறிஸ்தவனும் நீங்கள் ஹிந்துக்களை இழிவுபடுத்தினால் எங்களுக்கு சந்தோஷம் என்று கூறவில்லை, தி மு கழகம் தலையாக சில கட்சிகள் மட்டுமே இதைக் கடைப்பிடிக்கின்றன. ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது கிடையாது என்பது எங்கள் கொள்கை என்று பகிரங்கமாக அறிவிக்கும் அளவுக்கு இது போய்விட்டது. ஏன்?

ஹிந்துக்கள் பண்டிகைகளும் கடவுளுக்கானவையே. கடவுள் இல்லை என்று வாய்கிழியக் கூவிவிட்டு சிறுபான்மையினரின் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வீர்கள் என்றால் அவர்கள் கடவுளை மட்டுமே நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள், ஹிந்துக்களின் கடவுளர்கள் எல்லாம் பொய்யென்பீர்கள், அப்படித்தானே? இந்த ஓட்டு முதன்மைத் தத்துவத்தின் அபாயகரமான நிலைமை இன்று வெளிநாட்டிலிருக்கும் தேச விரோத சக்திகள் மக்களிடையே ஊடுருவி ஹிந்துக்களை இழிவுபடுத்தும் கட்சிகள்தான் நமக்கு தோழர்கள் என்ற கருத்தை சிறுபான்மையினரிடையே ஆழமாக விதைத்து வருகிறது. இதன் எதிரொலி சிறிது சிறிதாக ஹிந்துக்களிடையே சிறுபான்மையினரிடத்தில் சிறு வெறுப்பு தோன்றும் பிறகு அது பெரிய பிளவாக உருவாகும். தொடர்ந்து சிறுபான்மையும் பெரும்பான்மையும் ஒற்றுமையாக இருப்பது என்பது இயலாத காரியமாகும். இப்படி நாட்டைப் பிளவுபடுத்துவதைத்தான் தேச விரோத சக்திகள் லட்சியமாகக் கொண்டுள்ளன, அதற்குத்தான் இங்குள்ள கட்சிகள் துணைபோகின்றன.

தன் நினைவு இல்லாத போதிலும் நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்த கை, சுய நினைவுடன் தலையில் குல்லா வைத்துக் கொண்டது ஏன்? இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வோம், ஹிந்து மதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதுதானே? இத்தகைய இழிவான அரசியல் நடவடிக்கைகளைக் கண்டிக்காமல் எதிர்க்காமல் இருந்ததன் விளைவுதான் இன்றைக்குப் பல தீவிர மதவாத அமைப்புக்கள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக்குவோம், கிறிஸ்தவ நாடாக்குவோம் என்று பகிரங்கமாக அறிவிக்கக் கூடிய நிலை. மதச்சார்பற்ற நாடு என்பது எதுவரைக்கும்? ஹிந்துக்களை சிறுபான்மையாக்கும் வரைக்கும்தானா? அதன்பிறகு இது ஒரு இஸ்லாமிய நாடாகவோ அல்லது கிறிஸ்தவ நாடாகவோ மாறி விடுமா?

அரசியலுடன் மதத்தைக் கலக்கக் கூடாது என்று பேசிவிட்டு சர்ச்சுகளிலும் மசூதிகளிலும் இன்ன கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள், இன்ன கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று மதத் தலைவர்கள் அறைகூவல் விடுப்பது சரியா? அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த மதத்தினர் எங்களுக்குத்தான் ஓட்டுப் போட வேண்டும் என்று வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்வது சட்டவிரோதமில்லையா?

எல்லாவற்றிற்கும் தலையாக ரோமாபுரிப் பேரரசர் சமீபத்தில் நமது தந்திரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும், ஹிந்துக்கள் கோவிலுக்குச் செல்வதை கேலி செய்யக்கூடாது என்று பேசியிருக்கிறார். மதம், கடவுள், ஆன்மீகம் பற்றிய இவர்களது கொள்கைகள் அனைத்துமே ஓட்டு என்பதைச் சுற்றியே இருக்கின்றது என்பதை இதைவிட வெளிப்படையாக யாராலும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க முடியாது.

இப்படியே ஹிந்துக்களை இழிவுபடுத்தியும் பிற மதத்தினைரை உயர்த்தி வைத்துமே சில கட்சிகள் தொடர்ந்து நடந்தால் முருகனுக்கு வந்த கோவம் போல மக்களுக்கும் ஒரு நாள் கோவம் வரலாம். முருகப் பெருமான் கடவுள், கூடவே அவ்வைப்பாட்டியும் சாந்தப்படுத்தினார். அதனால் அவர் சீக்கிரமே கோவம் தணிந்தார். மக்களின் கோவம் தணியுமா?

 

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.