
ஒரு ஊர்லே ஒரு பாசக்கார மாமியார் இருந்தாளாம். மருமக வீட்டுக்கு வந்ததுலேர்ந்து மருமகளுக்கு எது நல்லது எது கெட்டதுன்னு பாத்து பாத்து கவனிச்சாளாம். “ நீதாண்டியம்மா எங்க குலத்தோட வாரிசையே பெத்து குடுக்கற தெய்வம். நீ நல்லா இருக்கணும்” னு தெனிக்கும் பத்து தடவையாவது சொல்வாளாம். மருமகளும் சந்தோஷமாயிட்டாளாம்.
மருமக கவிச்சி சாப்பிடணும்னு ஆசைப்பட்டாளாம். சந்தைக்குப் போய் மீன் வாங்கியாந்து கொஞ்சம் மீனை வறுத்து கொஞ்சம் மீனைக் கொழம்பு வச்சாளாம். உடனே மாமியார் வந்து அட ஒலகந்தெரியாத புள்ளையா இருக்கியே? எங்கெனயோ கெடக்கற கழிவுநீரெல்லாம் ஆத்துலயும் கடல்லேயும் கலக்குதாமில்லே? அதனால மீனெல்லாம் வெஷமாயிப் போச்சுதாமே, இந்த வெஷத்தையெல்லாம் நானே ஏத்துக்கறேண்டின்னு அத்தனையும் அவளே தின்னுட்டாளாம். மருமகளுக்கு மாமியாரோட பாசத்தையும் தியாகத்தையும் பாத்து கண்ணுல தண்ணியே வந்திட்டுதாம். கோழியாவது அடிப்போம்னு பாத்தா விக்கிற கோழிக்கெல்லாம் எதெதோ மருந்து குடுத்து வளக்குறாங்களாம். சாப்பிட்டா என்னா ஆவுறது ஒடம்புன்னு மாமியாரே எல்லாத்தையும் தின்னுட்டாளாம். சரி, காரசாரமா உருளைக்கெழங்காவது சாப்பிடலாம்னு பாத்தா அடி ஆக்கங்கெட்ட கூவ, உருளைக்கெழங்கு ஒரே வாய்வு. அத சாப்பிட்டா எங்கேயாவது ஒடம்பு பிடிச்சிக்கிடும். அதுவுமில்லாட்டி புருசன் பொஞ்சாதி தனியா இருக்கையிலே காத்து பிரிஞ்சா புருசங்காரன் ஒன்னத் தள்ளி வெச்சிடுவாண்டின்னு, நானோ தாலியறுத்தவ, எனக்கென்னா வந்ததுன்னு அதையும் முழுங்கிட்டாளாம்.
தெனத்துக்கும் இதே கதைதானாம். மருமகளுக்கு நெதமும் பழைய சோறும் கொல்லையிலே மொளைச்ச கீரையும்தானாம். இதை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்துப் போயி சொரணையத்துப் போயி பொழுதன்னிக்கும் மாமியாரைப் பத்தி பெரிசா சொல்லிக்கிட்டே காலத்தைக் கழிச்சாளாம் மருமக.
எல்லாம் சரிங்க, ஆரிய மாயைன்னு சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு என்னவோ நாட்டுப்புறக்கதையை சொல்றீங்க? இதுவும் மாயையான்னு கேக்காதீக. இதோ சொல்லிப்புடறேன்.
பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்ப்போம் – இதுதான் ஆரிய மாயையின் அடிநாதம். எங்கேயும் பார்ப்பன ஆதிக்கம், பார்ப்பனர்களின் அதிகாரம் – இப்படி சொல்லிச் சொல்லியே மாமியார் மாதிரி நம்மளை ஏமாத்திட்டு வந்திருக்காங்க. நாமளும் அந்த இளிச்சவாய் மருமக மாதிரி ஏமாந்துகிட்டே இருக்கோம். எப்படின்னு கேக்கறீங்களா?
யோகாவை எதிர்ப்போம், ஆனால் நாங்கள் மட்டும் பார்ப்பனர்களிடம் தனியாக யோகா பயில்வோம். எங்கள் வழக்குகளை கவனிக்க பார்ப்பன வழக்கறிஞரிடம்தான் போவோம். எங்கள் உடம்புக்கு ஏதாவது வந்தால் பார்ப்பன மருத்துவரிடம்தான் போவோம். எங்கள் கணக்கு வழக்குகளை கவனிக்க பார்ப்பன ஆடிட்டர்கள்தான் வேண்டும்.
இதையெல்லாம் கூட தனிநபர்களின் தேர்வு என்று விட்டுவிடலாம். ஆனால் இனி கட்சிகளைக் கூட வழிநடத்தப்போவது ஒரு வடக்கத்திய பார்ப்பனர்தான் என்று எண்ணும்போது உடம்பு சிலிர்த்துப்போவுது.
இனி என்னென்ன போராட்டம் நடத்துவது, என்னென்ன பேசுவது, எப்படிப்பட்ட வியூகம் வகுப்பது, யாருடன் கூட்டணி அமைப்பது, என்ன மாதிரி வாக்குறிதிகளை அளிப்பது என்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் பார்ப்பனரின் ஆணைப்படிதானா? இதுதான் அண்ணா முன்னெடுத்த திராவிட அரசியலா? இதுதான் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதா? பார்ப்பனரைத் தலைமையிடத்தில் உட்கார வைப்பதுதான் பெரியார் அண்ணா காட்டிய வழியா?
பீகாரிகள் எங்கள் வேலைகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள் என்பது இதைத்தான் குறிக்கிறதா? கட்சிகளை வழிநடத்தத் திறமையான ஆட்களே இல்லையா? அப்போ இனிமே கட்சிப் பதவிகளெல்லாம் பார்ப்பனர்களுக்குத்தானா? பார்ப்பனர்கள் சொல்வதுதான் வேதவாக்கா? பார்ப்பனர்களுக்குக் கைகட்டி அடங்கியிருக்க வேண்டுமா அனைவரும்?
காலம் ஒரு சக்கரம் என்று சொல்வார்கள். ஆனால் இவ்வளவு சீக்கிரம் இது சுற்றி வந்து நிற்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பார்ப்பன ஒழிப்பு என்பது பார்ப்பனருக்குப் பல்லக்குத் தூக்குவதிலா வந்து முடிய வேண்டும்? இதுதான் ஆரிய மாயை.
#ஸ்ரீஅருண்குமார்