எங்க தாத்தா ஒரு பயங்கர கிரிக்கெட் வெறியர்.  பிஷன் சிங் பேடின்னா உசுரு. பிரசன்னாவை வெறித்தனமா ரசிப்பார்.  இப்பவும் கிரிக்கெட் மேட்ச் நடந்தா எவ்வளவு நேரமானாலும் விடாமல் பார்ப்பாரு.  சோதனையா 2ம் தேதி விசாகப்பட்டினம் மேட்ச் அவரால பாக்க முடியாமப் போச்சு. ஏன்னா அவருடைய டிவி திடீர்னு கெட்டுப் போச்சு. உடனே எனக்கு ஃபோன் போட்டார். அடேய் டிவி வேலை செய்யலடா, எனக்கு மேட்ச் கமெண்ட்ரி நீதாண்டா குடுக்கணும்னார்.  எப்படித் தாத்தா? நான் பாக்க வேணாமா?ன்னு மறுத்தேன். அடேய் பேராண்டி, திருதராஷ்ட்ரனுக்கு சஞ்சயன் மாதிரி நீ இப்போ எனக்கு. இன்னைக்கு மேட்ச் முழுசும் கமெண்டரி குடுத்தா உனக்கு ஐஃபோன் எக்ஸ் வாங்கித் தரேன்னார். உடனே ஓ கே சொல்லிட்டேன்.  

 

ஆனாலும் ஒரு சந்தேகம் —  அதேன்ன சஞ்சயன் மாதிரி? தாத்தாகிட்டே கேட்டேன். அடேய் பயலே, குருக்ஷேத்ரத்தில மஹாபாரத யுத்தம் நடந்ததை கண் தெரியாத திருதராஷ்ட்ரனுக்கு சஞ்சயன்தான் சொன்னான். இது கீதையிலே இருக்குன்னார். மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு நேரம் இருக்கு. இங்கே சில சில்லறைகள் கீதையைப் படிக்கக்கூடாதுன்னு கலாட்டா செஞ்சதுலேர்ந்து அதுல என்னதான் இருக்குன்னு ஒரு ஆர்வம்.  ஐ ஐ எம் களில் இது ஒரு பாடம், உலகத்தின் பல பல்கலைக்கழகங்களில் இதைப் படிக்கறாங்க. ஆனா அதைவிட முக்கியம் இவனுங்க எதிர்க்கறதெல்லாம் நல்லதாவே இருக்கும்னு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால கீதையை எடுத்து முதல் அத்தியாயத்தைப் படிச்சேன். சுலபமா இருந்தது. அதனால அது மாதிரியே தாத்தாவுக்குக் கமெண்டரியை ஆரம்பித்தேன். பயப்படாதீங்க இது கொஞ்சம் வித்தியாசமான கமெண்டரி.

 

தாத்தா நம்ம ப்ளேயர்ஸும் சௌத் ஆஃப்ரிக்கன் ப்ளேயர்ஸும் எதிர்க்கெதிரா நிக்கறாங்கன்னேன். உடனே தாத்தா கேட்டார் அதென்னடா நம்ம ப்ளேயர்ஸ்? இந்தியாவும் சௌத் ஆஃப்ரிக்காவும்னுதானே சொல்லணும் எனக்குப் புரியலை.  எப்படி தாத்தா? இந்தியா நம்ம டீம், சௌத் ஆஃப்ரிக்கா எதிர் டீம், நான் சரியாத்தானே சொன்னேன்? என்று கேட்டேன்.

 

தாத்தா விளக்கினார்.  டேய், உலகக் கோப்பையில இரு அணிகள் விளையாடும்போது நாம எப்படி சொல்லுவோம்?  வெஸ்ட் இண்டீஸும் இங்கிலாந்தும் ஆடுதும்போம். அதே இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஆடினா?  நாமளும் ஆஸ்திரேலியாவும்னு சொல்லுவோம். இல்லையா? ஏன்னா இந்தியான்னு சொல்லும்போது அது நம்ம டீம்னு ஒரு பந்தம்.

 

ஆமா தாத்தா, அதான் நானும் நம்ம டீம்னு சொன்னேன்

 

இருடா பயலே.  நீயும் நானும் நம்ம டீம்னு சொல்லலாம், ஆனா அதையே சீனி மாமா சொன்னா?

 

கொஞ்சம் உறைத்தது.

 

ஏன்னா சீனி மாமா ஐ ஸி ஸி யோட சேர்மனா இருந்தார். இப்போ ஷஷாங்க் மனோகர் இருக்கார். இவங்க எல்லா நாட்டு டீமுக்கும் பொதுவா இருக்கணும். அவர் எப்படி நம்ம டீம்னு இந்தியாவை சொல்ல முடியும்? அதே மாதிரிதான் திருதராஷ்ட்ரன் ஒரு அரசன். குடும்பத்துக்கு மூத்தவன். அதனால என் பசங்களும்  பாண்டுவோட பசங்களும்னு சொல்லியிருக்கலாம், இல்லே கௌரவர்களும் பாண்டவர்களும்னு சொல்லியிருக்கலாம். ஆனா என்னோட பசங்களும் பாண்டவர்களும்னு சொன்னான். அதுலேர்ந்தே அவன் குடும்பத்தோட தலைவன் மாதிரி பேசல, பெத்த தகப்பன் மாதிரிதான் பேசினான்னு தெரிஞ்சது. சரி, நீ மேலே சொல்லுன்னார்.

அப்போ ஏபி டிவிலியர்ஸ் இந்தியா டீமை ஒரு பார்வை பார்த்தார்.  நேரே அவரோட கோச் ரஸ்ஸல் டோமிங்கோ கிட்டே போய் சொல்றார் . அங்கே பாத்தீங்களா?  கோலியோட தலைமைல சென்னை டீம் கெத்தா நிக்குது.  கூடவே யாரெல்லாம்? ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால், செதேஷ்வர் புஜாரா, அஷ்வின், ஜடேஜா, ஹனுமன்விஹாரி, ரிஷப் பங்க்ஹ், குல்தீப் யாதவ், ஷுப்மான் கில், வ்ரித்திமான் சஹா, மொஹமத் ஷமி, உமேஷ் யாதவ்

 

இந்தியன் டீமை விவரிச்சிட்டு டிவிலியர்ஸ் அவரோட டீமைப் பத்திப் பேசறார்.

நாம மட்டும் என்னவாம்?  நீங்க தலைமை கோச், இதில்லாம இந்தியன் ப்ளேயர்ஸைப் பத்தி முழுசுமா தெரிஞ்ச நான், ஃபாஃப் டு ப்ளெஸி, டெம்பா பவுமா, டீன் எல்கர், ஹெயின்ரிஸ் க்ளாஸன், கேஷவ் மஹாராஜ், லுங்கி நெகிடி,, ககிசோ ரபடா, செனுரன் முத்துசாமின்னு பெரிய பெரிய வீரர்களா இருக்கோம். அதனால இந்த மேட்சுல இந்தியாவை மண்ணக்கவ்வ வெச்சிடலாம்னு  சொன்னார்.

 

தாத்தா உடனே இடைமறித்தார். டேய் நான் சொல்றேன் எழுதி வெச்சிக்கோ.  சத்தியமா சௌத் ஆஃப்ரிக்கா ஜெயிக்காது

 

எப்படி தாத்தா சொல்றீங்கன்னுகேட்டேன்.

 

பாத்தாலே தெரியலயா? மொதல்ல டிவிலியர்ஸ் கண்ணுக்குத் தெரிஞ்சது இந்தியன் டீமோட ப்ளேயர்ஸ்தான். எப்பவுமே பெரிசா இருக்கறதுதான் மொதல்ல கண்ணைக் கவரும். அது மாதிரித்தான் இந்திய டீமோட வீரர்கள் டிவிலியர்ஸ்க்கு பெரிசா தெரிஞ்சிருக்காங்க.  அந்த பயத்தை சமாளிக்கறதுக்காகத்தான் பெரிசா சீன் போட்டிருக்கார். இப்படித்தான் துரியோதனனும் போர்க்களத்துல பாண்டவ சைன்யத்தைப் பத்தித்தான் மொதல்லே பேசினான், தோத்துப் போனான், அதான் சொன்னேன்னு சொன்னார்.

 

ஆச்சரியமா இருந்தது.  மேட்சோட முடிவு எப்படி இருக்கும்? தாத்தா சொன்னது நெஜமாகுமா?  

 

இப்போது கோலி தன்னுடைய கோச் ரவி சாஸ்த்திரியுடன் அணி வீரர்களைப் பார்க்கிறார்.  அவருடைய கையிலிருக்கும் பேட் நழுவுகிறது. கோச்சைப் பார்த்துப் பேசுகிறார் சாஸ்திரி,  எனக்கெதிராகப் போட்டியிடும் இவர்களெல்லாம் யார்?  என்னுடம் மோதப்போகும் இவர்களெல்லாம் யார்? நேற்று வரைக்கும் என்னுடன் ஒன்றாக விளையாடியவர்கள்,  நாளைக்கு ஐ பி எல்லில் என்னுடன் ஒன்றாக விளையாடப் போகிறார்கள். இவர்களுடன் ஒன்றாக நெட் ப்ராக்டிஸ் செய்ததை மறந்து விட முடியுமா?  இவர்களை எதிர்த்து நான் விளையாடப் போவதில்லை. இவர்களை வென்று எனக்கென்ன கிடைக்கப் போகிறது? அந்த உலகக்கோப்பையே கிடைத்தாலும் வேண்டாம் எனும்போது ஃப்ரீடம் கோப்பைக்கா நான் ஆசைப்படுவேன்?  வேண்டாம் சாஸ்திரி. என்னை விட்டுவிடுங்கள், நான் போகிறேன்  கோலியின் வாய் குழறுகிறது. கை கால்கள் தளர்ந்து விட்டன.

ரவி சாஸ்திரி கோலியின் அருகில் வந்தார்.  நீ ஒரு கேப்டன் கோலி.  இப்படிப் பின்வாங்குவது ஒரு கிரிக்கெட் வீரனுக்கு அழகல்ல.  இவர்களெல்லாம் யார்? அன்றொரு நாள் மும்பை அணியில் இருந்தார்கள், அடுத்த நாள் பெங்களூர் அணியில் இருந்தார்கள், நாளை வேறு அணியில் இருப்பார்கள். எந்த அணி விலைக்கு வாங்கியதோ அந்த அணிக்காக விளையாடுவதுதான் வீரனின் தர்மம். விளையாடாமல் ஓடுவது என்பது மேட்ச் ஃபிக்ஸிங்குக்க்குச் சமானம். அதனையா நீ விரும்புகிறாய்? இதனால் அழிக்க முடியாத பழி வந்து சேரும். நீ விளையாடாவிட்டால் உனக்கு பதிலாக வேறு யாராவது விளையாடத்தான் போகிறார்கள்.  நீ வெல்லாவிட்டாலும் வேறு அணி சௌத் ஆஃப்ரிக்காவைத் தோற்கடிக்கத்தான் போகிறார்கள். சௌத் ஆஃப்ரிக்கா தோற்க வேண்டும் என்பது விதி. அதனை யாராலும் மாற்ற முடியாது. விளையாட வேண்டியது உன் கடமை. அந்தக் கடமைக்காக மட்டுமே விளையாடு. கோப்பையின் மீது ஆசை வைக்காதே கோலி. கோப்பை யாருக்கு என்பதை நீயும் நானும் முடிவு செய்ய முடியாது. அதற்கு பெரிய சக்திகள் இருக்கின்றன. அதனை உன்னால் உணர முடியாது. ஆகவே கடமையைச் செய், கடமையை கடமைக்காக மட்டுமே செய், பலனை எதிர்பார்த்து கடமையை செய்யாதே என்று ரவி சாஸ்திரி கூறியதும் ஓரளவுக்கு சமாதானமடைந்த கோலி மீண்டும் தனது பேட்டைக் கையில் எடுத்தார்.

பகவத் கீதை என்பது ஹிந்து மதத்தின் பொக்கிஷம் என்றாலும் கீதை சொல்லப்பட்டது ஸ்ட்ரெஸ் எனும் பெரும் மன அழுத்தத்தில் இருந்த அர்ஜுனனின் வாட்டத்தைப் போக்கி அவனை சரியான பாதையில் செலுத்துவேண்டிய நோக்கத்துடன்தான். பார்க்கப்போனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல, அனைத்துப் பள்ளிகளிலும் இதனைப் பாடமாக வைக்க வேண்டும்.  இது ஒரு மேலாண்மைக் கல்வி. ஹிந்து மதம் என்பதால் ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது கேவலமான புத்தியைக் காட்டுகிறது. பள்ளிகளில் சொல்லித்தராவிட்டால் என்ன? இது போன்ற கட்டுரைகள் மூலம் இதனைப் பற்றித் தெரிந்து கொண்டு நீங்களாகவே கீதையைப் படிக்கலாம், பலரது சொற்பொழிவுகள் உள்ளன அதனைக் கேட்டு பயன் பெறலாம். வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், சவால்களை சந்தித்து வெற்றி பெற வேண்டுமானால் கீதையே நம் பாதை.  

 

 

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.