கடந்த சில தினங்களாக எல்லையில் பெரும் பரபரப்பு. ஒவ்வொரு நாளும் ஒரு பிரேக்கிங் நியூஸ்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள பதட்டமும், அதன் பொருட்டு நாம் இழந்த 20 இன்னுயிர்களும், அதை வைத்து இங்கே நடக்கும் இழிவான அரசியலும் நம்மை சுற்றியுள்ள குள்ளநரிகளை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிச்சமிட்டு காட்டிய வண்ணம் உள்ளது.

இந்த இழப்பின் காரணம் வெகுண்டெழுந்த இந்திய மக்கள் பலர் பாய்காட் சீனா என்று முழக்கமிட துவங்கியுள்ளனர்.

சீன பொருட்களுக்கு தடை என்பதற்கும், நாங்கள் அவர்கள் பொருட்களை புறக்கணிப்போம் என்ற முழக்கத்திற்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் உள்ளது.

ஒரு அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட நாட்டின் பொருட்களை மட்டும் தடை செய்ய வேண்டுமாயின் அதில் பல தடங்கல்கள் உண்டு. சர்வதேச அரங்கினில் அதற்கான காரணம் மற்றும் அதன் பொருட்டு எழும் மற்ற நாடுகளின் புறக்கணிப்பு என்று அனைத்தையும் எதிர்க்கொள்ள நேரிடும்.

மேலும், ஒரு ஜனநாயக அரசு அவ்வாறு செய்வதன் மூலம், மக்களின் விருப்புக்கு மாறாக செயல்படும் நிலையும் எழ நேரிடும். மக்களால் அங்கீகரிக்க பாடாத எந்த ஒரு திட்டமும் தோல்வியையே தழுவும்.

எனவே ஒரு அரசாங்கம் இதை செய்வதை விட மக்களாகியா நாமே அந்நாட்டின் பொருட்களை புறக்கணிப்பதன் மூலமாக நமது கண்டனங்களை தெரிவிப்பதில் தவறேதும் இல்லை.

இந்நிலையில் அனைத்து சீன பொருட்களையும் புறக்கணிக்க முடியுமா என்று கேலி பேச்சுகளும் துவங்கியுள்ளது. ஆச்சர்யம் ஏதும் இல்லையே.

இன்று இந்தியாவில் விற்பனையாகும் பொருட்கள் மட்டுமல்ல, இங்கே உற்பத்தியாகும் பல பொருட்களும் சீன நாட்டின் மூலப்பொருட்களை கொண்டே தயாரிக்கப்படுகிறது என்பதும் மறுக்கப்படாத உண்மை.

ஒரே நாட்களில் இதை மாற்றுவது சாத்தியமில்லை. ஆனால், எதற்குமே ஒரு துவக்கம் அவசியம். பல்லாயிர கிலோமீட்டர் பாதயாத்திரை கூட தன் முதல் எட்டில் தானே துவங்குகிறது.

உதாரணமாக சமீபத்தில் கொரோனா பாதிப்பின் எதிரொலி நாம் அனைவரும் அறிந்ததே. துவக்கத்தில் இதற்கு பரிசோதனை செய்யும் பொருட்கள் தொடங்கி இந்த தொற்று நோய் தடுக்க தேவையான முகக்கவசம், PPE kits போன்றவைகளும் இன்றி தவித்து கொண்டிருந்தோம்.

ஆனால், இந்த தேவையையே ஒரு வாய்ப்பாக கொண்டு இன்று இந்தியாவிலேயே நாள் ஒன்றுக்கு 4 லட்சம் உடைகளுக்கும் மேலே தயாரிப்பது என்பது சாதனை அல்லவா? இதை உற்பத்தி செய்ய தேவையான பொருட்களில் சில கண்டிப்பாக சீன நாட்டிலிருந்து வந்திருக்கலாம். சந்தேகமில்லை. இருப்பினும், உடனடியாக நமது மருத்துவர்களையும் செவிலியர்களை காக்க இது இன்றியமையாததாகும்.


அதே போன்று நமது அடுத்த இலக்கு இந்த PPE உபகரணங்களையும் அதற்கு தேவையான மூலப்பொருட்களும் இங்கே நம் நாட்டிலேயே உற்பத்தி செய்வதே ஆகும். சவாலையும் சந்தர்ப்பமாக கொண்டு செயல்படுவதில் இந்திய நாடு என்றும் முன்னிலையில் உண்டு.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஆம். மக்கள் குரல்களுக்கு என்றுமே மிகப்பெரிய சக்தி உண்டு. எனவே தான், மக்கள் குரல்களை கேட்டு பல இந்திய அரசாங்கமும், உற்பத்தியாளர்களும் அதற்கு செவிசாய்க்க துவங்கி உள்ளார்கள்.

ஆம், அரசாங்கமும் மக்கள் மனதை உணர்ந்து 59 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. ஆச்சர்யமாக இதற்கும் மக்களிடம் பெரும் ஆதரவு பெருகியுள்ளது. Tiktok போன்ற நேரத்தை விரயம் செய்யும் செயலிகள் மட்டுமின்றி தனிநபர்களின் விவரங்களை திருடும் செயலிகளும் ஏராளம். அவை அனைத்தையும் தடை செய்துள்ளது இந்திய அரசாங்கம்.

மேலும், பிரெஸ்டிஜ் TTK போன்ற நிறுவனம், தற்போதைய கொள்முதல் முடிந்த பின், புதிதாக சீனாவிடமிருந்து எந்த பொருட்களும் வாங்குவதில்லை என்று உறுதி மொழி கொண்டுள்ளார்கள். பாராட்ட வேண்டிய முடிவு.

இது போன்ற சுதேசி போராட்டம் ஒன்றும் புதியதில்லை. சுதந்திரம் பெற்ற காலம் தொட்டே நமது முன்னோர்கள் இதற்கு பாடுபட்டு வந்துள்ளார்கள். ஆனால் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இதில் நாம் வெற்றி காண முடியவில்லை.

காரணம், நாட்டின் வெளியில் உள்ள எதிரிகளை விட நமது நாட்டில் நம் கூடவே மறைந்திருக்கு துரோகிகள் என்பது அன்று நமக்கு விளங்கவில்லை. ஆனாலும் இன்றுள்ள சமூக வலைத்தளங்களின் துணை மூலமாக ஏன் என்ற கேள்விக்கு அர்த்தம் கிடைத்துள்ளது.

இந்திய நாட்டிற்கு எந்த ஒரு நன்மை கிடைத்தாலும் அதை இழிந்து சிறுமைப்படுத்தவும், ஒரு சிறிய சறுக்களையும் கண்டு கை கொட்டி சிரிக்கவும் இங்கே பல மூடர்கள் உள்ளார்கள்.

அவர்களுக்கு ஒன்று நினைவில் இருக்கட்டும். நம் முதல் செயற்கைகோள் ஆரியபட்டா விண்ணில் சீறிப்பாய்ந்த பொழுதும் இவ்வாறே ஏளனம் செய்த நாடுகள் பல. அதில் சில இன்று இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் தங்களை இனைத்து ஒன்றாக செயல்படுகிறார்கள்.

அன்று முதல் இயன்று வரை இந்தியா வெற்றிகரமாக ஓர் சாதனை செய்யும் பொழுதும் அதை மட்டம் தட்டி பேசுவது மேலைநாடுகளுக்கு மட்டுமல்ல, இங்கேயுள்ள பல புல்லுருவிகளுக்கும் பொழுதுபோக்காகவே உள்ளது.

மறவாதீர். சமீபத்தில் இந்தியா தன் மங்கள்யான் விண்கலத்தை மிக குறைந்த செலவுகளில் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் செலுத்தி சாதனை ஏற்படுத்தியது. அதை கண்டு பொறுக்காத அயல்நாட்டு பத்திரிக்கையான நியூ யார்க் டைம்ஸ் ஒரு கீழ்த்தரமானகார்ட்டூனை வெளியிட்டு தன் அதிகார தோரணையை வெளிப்படுத்தியது.

வேறு வழியின்றி பின் அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டியதாகியது என்பது கூடுதல் தகவல்.

இதுவே இவர்களது சுயநலம். ஒருவகையில் அதையும் பொறுத்து கொள்ளலாம். ஏனெனில், அவர்கள் அவர்களது நாட்டிற்கு எதிராக வேறு நாடுகள் வளர்ந்து வருவதை விரும்பாமல் இவ்வாறு செய்து வருகிறார்கள்.

ஆனால் நமது நாட்டில் தான், சொந்த நாட்டிற்கே சூனியம் வைக்க அல்லும் பகலும் அயராமல் உழைக்க ஒரு கூட்டமே இருக்கிறது. அதற்கு மேலும் ஒரு உதாரணம்.

இந்தியாவில் தயாரித்த வென்டிலேட்டரின் லட்சணம் இவ்வளவு தான் என்ற தோணியில் பதிவு.

ஆனால் உண்மையில் இந்தியா தயாரித்த பல்லாயிர வென்டிலேட்டர்கள் நன்றாக வேலைசெய்து கொண்டிருக்கும் பொழுது சிலது பழுது என்று கூறி நாட்டின் உற்பத்தியையே கொச்சை படுத்தும் நோக்கில் வெளியிட்டுள்ள பதிவே இது.

ஒரு பெற்றோர், தன் குழந்தை மிதிவண்டி ஓட்ட பழகி நாலு முறை அல்ல, நாற்பது முறை கீழ விழுந்தால் கூட அதை ஊக்குவித்து வருவார்களே தவிர அக்குழந்தையை கேலி செய்து அதன் மனதை புண்படுத்தி ஓரத்தில் அமர செய்யமாட்டார்கள்.

இவ்வளவு ஏன், பெற்றவர்கள் அல்லாத மற்றவர்களும் கூட, அவர்கள் அந்த குழந்தையின் முன்னேற்றத்தில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பாரேயானால், அவ்வாறே ஊக்குவிப்பர். அதற்கு மேலும் ஓர் உதாரணமே இந்தியாவின் நலனில் அக்கறை கொண்ட தைவான் நாட்டின் இந்த விளம்பரம்.


அதே சமயம், அந்த குழந்தையை பிடிக்காதவர்கள், அதன் தோல்வியை விரும்புவர்களுக்கு, அதன் தோல்வியை கண்டு கைகொட்டி சிறிது மகிழ்வார்கள்.

அதே மனநோயில் தான் இன்று இவர்கள் இருக்கிறார்கள்.

இது போன்ற கீச்சுகளை இவர்கள் செய்யாமல் இருந்தால் நாம் எவ்வாறு இவர்களை கண்டுகொள்வது? எனவே தான் இன்றைய சமூக வலைத்தளங்களுக்கு நாம் மிகவும் நன்றிக்கடன் பட்டவர்கள் என்று கூறுகிறேன்.

உண்மை தானே?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.