ஆங்கிலத்தை விடவும் தமிழில்தான் அதிகமான செய்தி சேனல்கள் இருக்கின்றன போலத் தோன்றுகிறது.  பொழுதுபோக்கு சேனல் நடத்துவதை விடவும் அதிகமான செலவு செய்தி சேனலுக்கு ஆகும். குறைந்தபட்சம் தமிழகமெங்கும் செய்தியாளர்களும் கேமராமேன்களும் வேண்டும். உடனுக்குடன் அதனை தலைமையகத்துக்கு அனுப்ப தகவல் தொடர்பு கட்டமைப்புக்கள் வேண்டும்.  எல்லா நிகழ்ச்சிகளையும் ஸ்டூடியோவிலேயே எடுத்துவிட முடியாது. நிறைய எடிட்டர்கள் வேண்டும். இப்படி பல செலவுகள். என் டி டி வி – இது ஆங்கிலத்தில் முதன் முதலாக வந்த சேனல்களில் ஒன்று. அதுவே நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.  நடுவில் பர்கா தத் ஆரம்பித்த திரங்கா டி வி கொஞ்ச நாளிலேயே இழுத்து மூடப்பட்டு விட்டது நஷ்டத்தினால். இத்தனைக்கும் ப்ரணாய் ராயும் பர்க்கா தத்தும் நாடறிந்த ஊடகவாதிகள்.

ஏதாவது ஒரு விசித்திரமான சம்பவம் அல்லது திடீரென நடக்கும் ஒரு விஷயம் என்றால் அது ப்ரேக்கிங் ந்யூஸ்.  ஒவ்வொரு நொடியும் ப்ரேக் ஆகிக்கொண்டே இருந்தால் அது எப்படி ப்ரேக்கிங் ந்யூஸாகும்? எதுவுமே நடக்காவிட்டாலும் இந்த ப்ரேக்கிங் ந்யூஸ் மட்டும் வந்து கொண்டே இருக்கும் பார்த்திருக்கிறீர்களா?  எதையாவது செய்தியாக மக்களிடையே திணித்துக் கொண்டிருக்க வேண்டும். அதுதான் இந்த சேனல்களின் முக்கிய குறிக்கோள்.

 

மனித உணர்வுகள் முற்றிலும் அற்றுப் போனவர்களா இவர்கள் என்று கேட்கத் தோன்றும் அளவுக்கும் இவர்களின் செய்தி சேகரிக்கும் ஆர்வம் குமுற வைக்கிறது. இறந்தவரின் வீட்டுக்குச் சென்று அவர் குடும்பத்தினரின் முகத்தில் மைக்கை நீட்டி அவர் செத்துப் போயிட்டாரு.  நீங்க இதை எப்படி ஃபீல் பண்றீங்க?  இப்படியெல்லாம் செய்தி சேகரிக்கலாமா?

தமிழ்நாட்டின் தன்னிகரில்லாத் தலைவியாகத் திகழ்ந்த செல்வி.ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். உடல்நிலை மோசமானது என்ற செய்தி வந்த போது நாட்கணக்கில் மருத்துவமனை வாசலிலேயே செய்தி நிறுவனங்கள் கிடையாய்க் கிடந்தது மறந்து விட்டதா? அதுவும் கடைசி 2-3 நாட்களில் எப்பொழுதும் இதே ப்ரேக்கிங் ந்யூஸ்தான்.  ஜெயலலிதா சாவதை உலகுக்கு உடனே சொல்வதில் அத்தனை ஆர்வம். கேக்கவே அறுவெறுப்பாக இல்லையா?

தற்போது சிறுவன் சுர்ஜித். நடந்தது என்ன?  ஆழ்குழாய்க்கிணறு தோண்டி பின்னர் அதனைக் கைவிட்டது சுர்ஜித்தின் தந்தை.  லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து குழி தோண்டியவருக்கு ஒரு 200 ரூபாய் செலவு செய்து சிமிண்ட் பூசி மூட மனமில்லை. 

ஆனால் இதற்கு ஒரு மூடர் கூடம் கூட்டம் சேர்ந்து கொண்டு ராக்கெட் விட்டு என்ன பயன்? சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் சென்று என்ன பயன்? குழியில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற ஒரு தொழில் நுட்பம் இல்லாவிட்டால் இந்த அறிவியலால் என்ன பயன்? என்று அரசைக் குற்றம் சாடுவதும் அறிவியலையும் விஞ்ஞானிகளையும் குறை சொல்வதற்குப் புறப்பட்டுள்ளது.  விபத்துக்களிலும் அரசியலும் ஆதாயமும் பார்க்கும் கும்பல் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள ஒரு பேராபத்து.

 

ஒரே ஒரு கேள்வி —  இத்தனை பள்ளிகள் கல்லூரிகள் இருந்தும் 200 ரூபாய் செலவு செய்து சிமிண்ட் பூசி மூட வேண்டும் என்று கூடத் தெரியாமல் ஒரு மனிதன் இருக்கும்போது அந்தக் கல்விக்கூடங்கள் எதற்கு?  பள்ளிகளையும் கல்லூரிகளையும் இழுத்து மூடிவிடலாமா? பைக்கிலிருந்து விழுந்து மண்டை உடைந்தால் காப்பாற்ற முடியாத மருத்துவம் இருந்து என்ன பயன்? மருத்துவமனைகளை இழுத்து மூடிவிடலாமா?  

அறம் என்ற படத்தில் கோபி நயினார் இப்படி ராக்கெட் அறிவியல் பற்றிய கேள்வியை ஏற்கெனவே எழுப்பினார் என்று வக்காலத்து வாங்குகிறார் தொல்.திருமா. ஏங்க  200 ரூபாய்க்கு முடிய வேண்டியதை கார்ப்பொரேட் நிறுவனங்கள் தயாரித்து கோடிகளில் விற்க வேண்டும் என்பதுதான் உங்கள் பொது அறிவா?

 

ஆருஷி தல்வார் நினைவிருக்கிறதா?  ஆங்கில செய்தி நிறுவனங்களே புலனாய்வு நடத்தி பெற்றோர்தான் குற்றவாளிகள் என்று தீர்ப்பும் எழுதிப் பின்னர் காவல்துறை விசாரணையில் குற்றம் ருசுப்படவில்லையென்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, ஊடகங்கள் வெகுண்டெழ, நீதிபதியும் காவல்துறை அறிக்கையை ஏற்க மறுக்க, மீண்டும் விசாரணை செய்து பெற்றோர்கள் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட, மேல்முறையீட்டில் அவர்கள் விடுதலையாகினர்.

சில வருடங்களுக்கு முன்பு ஆப்பு கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் மீது பாலியல் புகார் சுமத்த உடனே ஆங்கில ஊடகங்கள் பொங்கியெழுந்து அவரை காமக் கொடூரனாக சித்தரித்து விட்டன. நாலு வருடங்களுக்குப் பிறகு குற்றச்சாட்டு போலியானது என்று  நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதனை எந்த ஊடகமாவது பிரதானமாக வெளியிட்டதா?

ஓரிரு நாட்களுக்கு முன்னர் என் டி டி வியில் ஒரு செய்தி வாசிப்பாளர் அஸ்ஸாமில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடையாது என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறார் முதல்வர். ஆனால் அவருக்கே ஆறு குழந்தைகள், அவர் என்ன செய்யப் போகிறார் என்று கேள்வி எழுப்பினார். உண்மையில் அஸ்ஸாம் முதல்வருக்குத் திருமணமே ஆகவில்லையென்பதுதான் உண்மை.  

சுர்ஜித் மீட்கப்படும்வரை தீபாவளி கொண்டாடமாட்டோம், தமிழ்நாடே தவித்துப் போயிருக்கிறது, இன்னும் ஒரு படி மேலே போய் தமிழ்நாடே கொதித்துப் போயிருக்கிறது என்றெல்லாம் செய்திகள்.  மக்கள் தீபாவளி கொண்டாடக்கூடாது என்றால் இவர்கள் மட்டும் விளம்பரம் வெளியிடலாமா? அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் குழந்தை மீட்கப்படும் வரை எங்களுக்கு தீபாவளி கிடையாது என்று பேசுகிறார். கட் பண்ணினால் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள் என்று ஒரு எம் பி விளம்பரத்தில் வாழ்த்துகிறார். இதுதான் ஊடகங்களின் லட்சணம்.  இதிலே சினிமா நடிகர்களின் பேட்டி வேறு. சினிமா நடிகர்கள்தான் இங்கே விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுனர்கள், மேதைகள், சமூக சிந்தனையாளர்கள்.  

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு எப்போதும் ஒரு கொதிநிலையிலேயே வைத்திருந்து அதன் மூலம் விளம்பர வருவாயைப் பெருக்கிக் கொள்வதே நோக்கமாக இருக்கிறதோ என்று எண்ண வைக்கிறது இந்த செய்தி ஊடகங்களின் நடவடிக்கைகள்.  இது தவிர தினமும் இரவு விவாதங்கள். எந்த ஒரு பிரச்சினையும் இல்லாவிட்டால் இவர்கள் விவாதம் எப்படி நடைபெறும்? அதற்காகவே உப்புப் பெறாத விஷயங்களையும் பிரச்சினையாக்கி விவாதங்கள். இதில் பல நேரங்களில் நெறியாளர் என்பவர் ஒருதலையாகவே நடந்து கொள்வார்.  அவர் வைத்ததுதான் சட்டம், அவர் சொல்வதுதான் உண்மை. பங்குபெறுபவர்களை மரியாதையாக அழைக்கும் தமிழ்க்கலாச்சாரத்துக்கு வேட்டு வைத்துவிட்டு பெயர் சொல்லி அழைக்கும் அசிங்கத்தை அரங்கேற்றுவதும் இவர்கள்தான்.

ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸப், டெலிகிராம், இதுதவிர பலவித ஆப்புகள் என நாமே பல ஆப்புக்களை சொருகிக் கொண்டிருக்கிறோம்.  BP எகிறுவதற்கும் இது ஒரு காரணமாகலாம். இப்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினை இன்ஃபர்மேஷன் ஓவர்லோட். ஒரு நாளைக்கு செய்தி சேனல்களையும் சமூக ஊடகங்களையும் தவிர்த்துப் பாருங்கள். உலகமே அமைதியாகவும் ஆனந்தமயமாகவும் தோன்றும்.

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.