அம்மையப்ப முதலியார் என்ற பெயரை வேண்டுமானால் மறந்திருக்கலாம், ஆனால் தமிழ் கூறும் நல்லுலகம் சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தை மறக்கு முடியாது.  நாடக உலகத்திலிருந்து திரைக்கு வந்து கோலோச்சிய விசு அவர்களின் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்று. கூட்டுக் குடும்பத்தில் தன் வருமானம் வீணாப்போவதாக எண்ணும் மூத்த மகன் ரகுவரன் பிரிந்து தனிக் குடித்தனம் போகிறார். இதனை மனைவி  லக்ஷ்மி தடுக்கிறார். ஆனால் அதனை மீறி தனிக்குடித்தனம் போகிறார்கள். போனபிறகுதான் செலவுகள் கண்ணைக் கட்டுகிறது. அப்புறம்தான் ரகுவரனுக்கு இதுநாள் வரை தன் வருமானத்தில் குடும்பம் ஓடவில்லை, மற்றவர்களது வருமானத்தையும் சேர்த்துத்தான் தன் செலவுகளும் ஓடியது என்று புரிய வருகிறது. மீண்டும் கூட்டுக்குடித்தனம் என்று முடிவெடுக்கும்போது லக்ஷ்மி தடுத்து விடுகிறார்.  மீண்டும் போய் சேர்ந்து கொண்டால் மானம் மரியாதை எல்லாம் போய்விடும். கையாலாகதவன் என்பதால் திரும்ப வந்து ஒட்டிக் கொண்டான் என்ற பேச்சு வரும், ஆகவே பிரிந்தது பிரிந்ததுதான் என்று கனத்த மனதோடு முடிவெடுக்கிறார். பார்க்கப்போனால் அதுதான் சரி. செலவு தாங்க முடியவில்லை என்று மீண்டும் ஒட்டிக் கொண்டால் கடைசி வரைக்கும் யாராவது இதனை சொல்லிக் காட்டுவார்களோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.  பயந்து கொண்டே சேர்ந்து வாழ்வது ஒரு வாழ்க்கையா?

சரி, இது எங்கே ஐரோப்பாவிற்குப் போச்சுன்னு கேக்கறீங்களா?  இருங்க. ஜூன் 23, 2016. பிரிட்டனின் தலைவிதியை அடியோடு மாற்றிய நாள்.  அன்றுதான் ஐரோப்பிய யூனியனில் இருப்பதா அல்லது விலகுவதா என்ற மக்களின் கருத்தைக் கேட்க பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட தினம்.  52-48 என்ற விகிதத்தில் மக்கள் வெளியேற முடிவு செய்தனர் – கவனிக்கவும் இது வாக்களித்தவர்களில் மட்டும்தான். வாக்களிக்காதவர்கள் மக்கள் என்பதில் சேர்த்தியில்லை.  அன்று தொடங்கியது சரிவு. மூன்று வருடங்கள் அவகாசம் இருந்தும் எப்படி வெளியேறுவது, வெளியேறிய பின் என்ன செய்வது என்பது பற்றிய சரியான புரிதலும் இல்லை, முன்னேற்பாடுகளும் இல்லை.

 

போறதுன்னா சட்டு புட்டுன்னா போறதுதானே இதிலென்ன பிரச்சினைன்னு கேக்கறீங்களா?  பிரிட்டன் முன்னேறிய நாடுகளில் ஒன்று – ஆனாலும் பாதிக்கு மேலான உணவுப் பொருட்களும் மருந்துகளும் இறக்குமதி ஆகின்றன. அதில் பெரும்பகுதி ஐரோப்பிய நாடுகளிலிருந்து.  இதுவரைக்கும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்தாச்சு. அதனால் சுங்கச்சாவடிகள், சோதனைகள், வரிகள், தடைகள் எதுவும் இல்லை. வெளியே போனபிறகு உள்ளே வருவதும் போவதும் சோதனைகளுக்குப் பிறகுதான்.  ஆக வெளியேறிய பின் பல மாதங்களுக்கு சோதனைச் சாவடிகளில் மணிக்கணக்கில் அல்ல நாட்கணக்கில் வாரக்கணக்கில் சரக்கு வண்டிகள் காத்திருக்க வேண்டியது அவசியம். அதுவரைக்கும் உணவுக்கும் மருந்துக்களுக்கும் தட்டுப்பாடு கட்டாயம் ஏற்படும்.

அடுத்தது —  பிரிட்டனில் விவசாயம் மற்றும் கட்டுமானத் தொழில்களில் எப்படி நம் ஊரில் பீகாரிகள் வந்திருக்கின்றனரோ அவ்வாறு கிழக்கி ஐரோப்பிய நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் வருகின்றனர். ஆனால் அது இப்போதே தடைப்பட்டு விட்டது. அதனால் அறுவடை முதல் நடவு வரை பாதிக்கப்பட்டுள்ளது.  அதே சமயத்தில் பிரிட்டனிலிருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்கள் எதுவாக இருந்தாலும் மற்ற எல்லா நாட்டு சரக்குகளையும் போலவே வரி கட்ட வேண்டிய அவசியம் ஐரோப்பிய நாடுகளுக்கு. அதனால் பிரிட்டனின் தயாரிப்புக்களின் விலை ஐரோப்பிய நாடுகளில் உயரும், இதனை ஆசிய நாடுகளின் விலை குறைந்த தயாரிப்புக்கள் ஒழித்துக் கட்டி விடும். இதனால் பிரிட்டனின் ஏற்றுமதி பாதிக்கும்.

 

பிரிட்டனில் தயாரித்து ஏற்றுமதி செய்தால் இனி வரி கட்ட வேண்டியிருக்கும் என்பதால் பிரிட்டனில் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை ஐரோப்பாவின் மற்ற நாடுகளுக்கு மாற்றிக் கொண்டுவிடத் திட்டமிட்டுள்ளன. இதனால் படித்த திறமை வாய்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்படும்.  ஒரு புறம் கீழ்மட்டத் தொழிலாளர்கள் பற்றாக்குறை. இன்னொருபுறம் மேல்மட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம்.

தொழிற்சாலைகள் பிரிட்டனை விட்டு நீங்கினால் ஏற்றுமதி வருவாய் குறையும்.  பிரிட்டனில் பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பு குறையும். இதனால் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை உயரும் – முக்கியமாக உணவுப் பொருட்களும் மருந்துகளும்.

 

என்ன கொடுமை சரவணன்?  ஒரு காலத்தில் உலகத்தையே ஆட்டிப்படைத்த பிரிட்டனா இது?  கூடிய விரைவில் பிரிட்டனிலிருந்து இந்திய தொழிற்சாலைகளுக்கு விண்ணப்பங்கள் வரலாம்.  ஆச்சரியப்படத் தேவையில்லை.

 

இதையெல்லாம் விட ஒரு பெரிய பிரச்சினை காத்திருக்கிறது – பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் வரைக்கும் வீட்டின் நடுவே ஒரு கோடு கிழித்து வைத்திருப்பாரே விசு அது மாதிரி.

 

அயர்லாந்து – வடக்கு அயர்லாந்து பிரிட்டன் வசம் உள்ளது. கீழேயுள்ள பகுதி அயர்லாந்து என்ற சுதந்திர நாடாக உள்ளது.  இது ரொம்ப காலம் பிரச்சினையாக இருந்தது. கடைசியில் அயர்லாந்து – வடக்கு அயர்லாந்து (பிரிட்டன்) என்பது இரு நாடுகளாக இருந்தாலும் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் கொண்டு கொள்ள எந்தத் தடையும் இல்லை என்று புனித வெள்ளி ஒப்பந்தம் ஆனதும் பல வருடப் பிரச்சினை முடிவுக்கு வந்தது.  ஒட்டு மொத்த அயர்லாந்தில் இருக்கும் குடிமகன் எவரும் எங்கு வேண்டுமானாலும் போகலாம் வரலாம் வியாபாரம் செய்யலாம் – காஷ்மீர் மாதிரி எந்தத் தடையும் இல்லை.

 

இங்குதான் இருக்கிறது ஆபத்து.  அயர்லாந்து ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடு.  பிரிட்டன் வெளியேறிய பிறகு வடக்கு அயர்லாந்து குடிமகன்கள் தங்குதடையின்றி அயர்லாந்துக்குள் நுழைய முடியாது, ஏனென்றால் உறுப்பு நாட்டுக்குள் உறுப்பினராக இல்லாத நாட்டின் குடிமகன்கள் நுழைவதற்குக் கட்டுபாடுகள் உள்ளன.  அது மட்டுமல்ல, பிரிட்டனின் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்படப்போகின்ற பிரிட்டிஷ் மக்கள் அயர்லாந்துக்குள் நுழைந்து அதன் மூலம் ஐரோப்பிய யூனியனின் சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முடிவு செய்யலாம், இது யூனியனை விட்டு வெளியேறியும் அதன் பலன்களைப் பெறுவதற்கு சமம்.

 

பிரிட்டனிலிருந்து ஏற்றுமதி செய்தால்தானே வரி?  நாங்கள் பிரிட்டனில் உற்பத்தி செய்த பொருட்களை வடக்கு அயர்லாந்துக்குக் கப்பல் மூலம் கொண்டு சென்று அங்கிருந்து அயர்லாந்திற்குத் தடையின்றி கொண்டு சென்று  அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் வரி கட்ட வேண்டாமே! என்று பிரிட்டிஷ் மக்கள் முயல்வார்கள் என்பது ஐரோப்பிய யூனியனுக்கும் தெரியும்.

அதே சமயத்தில் இந்த புனித வெள்ளி உடன்படிக்கையின் முக்கிய ஷரத்தான வடக்கு அயர்லாந்திற்கும் அயர்லாந்திற்குமான திறந்த எல்லை என்பதை மறுபரிசீலனை செய்யவே முடியாது. எல்லைகள் பிரிந்தால் அது மீண்டும் பெரும் பிரிவினைவாதத்தை உருவாக்கும்.

 

ஐரோப்பிய யூனியன் இதற்குக் கொடுத்த பரிகாரம் —  அயர்லாந்திற்கும் வடக்கு அயர்லாந்திற்கும் இடையே எல்லைகள் வேண்டாம், தங்குதடையற்ற வர்த்தகமும் ஆள் போக்குவரத்தும் இருக்கட்டும், ஆனால் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்.

 

என்னய்யா நியாயம்? யூனியனை விட்டு வெளியே வந்தாலும் அவங்க சட்டத்துக்குக் கட்டுப்படணுமாம், ஆனால் அவங்க என்ன சட்ட போட்டாலும் அதனை விவாதிக்கும் உரிமை பிரிட்டனுக்குக் கிடையாதாம்.

 

இதுக்கு பிரிட்டன் பிரதமர்கள் ஒத்துக் கொள்ள மறுத்தனர். இதனால் அம்மையப்ப முதலியாரான ஜன்கர் இன்னொரு பரிகாரம் சொன்னார். அதாவது அயர்லாந்துக்கும் வடக்கு அயர்லாந்துக்கும் இடையே எந்த ஒரு தடையும் வேண்டும், ஆனால் பிரிட்டனிலிருந்து பிரிட்டனின் ஒரு பிரதேசமான வடக்கு அயர்லாந்துக்கு ஆட்களோ பொருட்களோ போகவேண்டுமென்றால் அது ஐரோப்பிய யூனியனின் சட்டதிட்டங்களுக்கும் வரி விதிப்புக்கும் உட்பட வேண்டும்.  

 

என்னடா இது? பிரிட்டனின் ஒரு பிரதேசமான வடக்கு அயர்லாந்து ஐரோப்பிய யூனியனின் சட்டங்களை ஏற்க வேண்டும், பிரிட்டனின் சட்டமும் வரியும் செல்லாது.  வாங்கடா வாங்க, காஷ்மீர் பிரச்சினையைத் தலையில் கட்டிட்டுப் போனீங்களே இப்போ அதே மாதிரி நீங்க மாட்டினீங்க பாருங்க.

 

சரி, இது எங்கேயோ ஐரோப்பாவில் நடக்கிறது, இதுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்னு கேக்கறீங்களா? சம்மந்தத்துக்கும் சம்மந்தத்துக்குமே சம்மந்தம் இல்லாத நாட்டில் நாங்க எல்லாத்துக்கும் சம்மந்தம் பண்ணி வெச்சிடுவோம்.

இந்த ப்ரெக்ஸிட் என்று அழைக்கப்படும் பிரச்சினைக்கு மூல காரணங்கள் 2.  ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் தீர்கமாக முடிவெடுக்காமல் மக்கள் கருத்துக்களைக் கேட்கலாம் என்று பொது வாக்கெடுப்பு நடத்தியது முதல் காரணம்.  ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவாக வெளிநாட்டு சக்திகள் உள்ளே நுழைந்து சமூக ஊடகங்கள் மூலம் பொய்ச்செய்திகளை பரவவிட்டு பிரிட்டனுக்குள்ளேயே சில செல்வாக்கு வாய்ந்த புள்ளிகளைப் பலவிதங்களில் கைக்குள் போட்டுக்கொண்டு விஷமப் பிரச்சாரத்தைப் பரப்பி பிரிட்டனை யூனியனிலிருந்து வெளியேற வைத்தார்கள் – எங்கள் நாட்டை நாங்களே ஆளுவோம், எங்கள் சட்டங்களை நாங்களே இயற்றுவோம், எங்கள் நாடு அன்னியருக்கல்ல போன்ற கோஷங்களை முன்வைத்து.  ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தொழிலதிபர்களே இன்றைக்குத் தங்களது தொழிற்சாலைகளைப் பிற நாடுகளுக்கு மாற்றிக் கொண்டிருக்கின்றனர். பொது வாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்ததும் லட்சக்கணக்கான மக்கள் நாங்கள் தெரியாமல் வெளியேற ஆதரவு கொடுத்து விட்டோம், மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்துங்கள், யூனியனை விட்டு வெளியேறினால் நாங்களெல்லாம் நடுத்தெருவுக்கு வந்துவிடுவோம் என்று மன்றாடிக் கேட்டு ஊர்வலம் போனதெல்லாம் ட்ராஜெடியான காமெடி.

 

இங்கேயும் ஒரு சில கும்பல் இதைப்போன்றே மக்கள் கருத்து என்ற விஷவித்தை விதைத்துக் கொண்டிருக்கின்றது.  என் வீட்டு கழிப்பறைக்குள் எட்டிப்பார்க்காதீர்கள் என்று ( ஓங்கிக் குரல் என்று சொல்ல முடியாது) கரகரத்த குரலில் கோஷமெழுப்பிய மய்யத் தலைவர் இப்போது பத்து பேரை ஒரு வீட்டிற்குள் அடைத்து கழிப்பறை முதல் படுக்கறையறை வரைக்கும் எல்லாரையும் கூட்டி வைத்துக் கொண்டு வெளிச்சம் போட்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறாரே இவர் தொடங்கி இன்னும் சிலர் மக்கள் கருத்து என்ற விஷவித்தை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.  அன்னிய சக்திகளும் பிரிட்டனை நாசமாக்கியது போல இந்தியாவையும் நாசமாக்க முனைப்புடன் இருக்கலாம். ஜனநாயகம் என்பதை கேலிக்கூத்தாக்கும் செயல்தான் இந்த மக்கள் கருத்து. இதனை பிரிட்டன் மக்கள் உணர்ந்து கொண்டனர். நாம் அதைப் பார்த்துப் பாடம் கற்கப் போகிறோமா அல்லது பட்டால்தான் தெரியுமா?

 

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.