
மத்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் 50 கோடி மக்களை கவரும் வகையில் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தது. இது குறித்து எதிர்க்கட்சிகளும் சில விஷமிகளும் சமூக வலைத்தளங்களில் பொய்யான பல செய்திகளை பரப்பி வருகின்றனர்.
2018 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அடுத்து தவறான தகவல்களை பரப்பி குழப்பத்தை உருவாக்க ஒரு கூட்டம் வேலை செய்து வருகிறது.
டிவிட்டரில் @sway_hi (The Angry Indian) என்பவர் அந்த பொய் செய்திகளை தகர்க்கும் வகையில் இழை ஒன்றை பதிவிட்டிருந்தார். அதன் தமிழாக்கமே இது. எனவே, 2018 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மீது எழுப்பப்படும் கட்டுக்கதைகளை அகற்றவே இந்த இழை.
பின் குறிப்பு: குழுமம் காப்பீடு (உடல்நலக் காப்பீடு மற்றும் உயிர் காப்பீடு) இரண்டிலும் கார்ப்பரேட் அனுபவம் எனக்கு உண்டு.
கட்டுக்கதை 1: உடல்நல காப்பீட்டின் பிரீமியம் பாலிசி பஜாரில் (Policy Bazaar) அதிகம் எனவே இங்கும் உயர்வாக இருக்கும்.
உண்மை: தனிப்பட்ட காப்பீட்டையும் குழும காப்பீட்டையும் ஒப்பிடாதீர்கள். தனிப்பட்ட காப்பீட்டில் கொள்கை எழுத்துறுதி அவரவர் ரிஸ்க் ஃபாக்டர் பொறுத்து செய்யப்படுகிறது. குழும காப்பீட்டில் முழு குழுவிற்காக செய்யப்படுகிறது. குழும ஏற்படும் இடர்பாடுகள் (Risk) அக்குழுவில் உள்ள அனைவரும் தாங்கக்கூடியவாறு இருக்கிறது.
Thumb Rule: குழு எவ்வளவு பெரியதோ அதற்கேற்றவாறு பிரீமியம் குறையும். குழும காப்பீடு திட்டம் இவ்வாறே உலகம் முழுவதும் செயல்படுகிறது. கூடுதலாக, குழுவில் இருக்கும் அபாயாம் மறுகாப்பீடு செய்யப்படுகிறது.
கட்டுக்கதை 2: 5 லட்சம் ஒரு குடும்பத்திற்கு என்பது பெரிய தொகை. அனால் பட்ஜெட்டில் அதற்கு ஒதுக்கிய நிதி மிக குறைவு.
உண்மை: பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி ப்ரீமியத்திற்காக ஒதுக்கப்பட்டது. நிதியமைச்சர் குறிப்பிட்டதுபோல் தேவைப்பட்டால் இது அதிகரிக்கப்படும். மேலும் 5 லட்சம் என்பது ஒரு குடும்பத்திற்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச தொகை. அதாவது 5 லட்சம் மதிப்புள்ள உடல்நல காப்பீடு ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தேவைப்படும்போது அதை அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ளலாம். எல்லா குடும்பங்களும் எல்லா நேரத்திலும் 5 லட்சம் பணத்தையும் முழுவதும் பயன்டுத்திக்கொள்வார்கள் என்று அர்த்தமில்லை.
உயிருக்கு போராடும் நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இது ஒரு பாதுகாப்பு வலையாக இருக்கும். பெரும்பாலான குடும்பங்கள், குறைந்த செலவாகும் நோய்களுக்கான சிகிச்சைக்கு இதை பயன்படுத்துவார்கள். உதாரணமாக, காசநோய் அல்லது மலேரியா அல்லது டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களுக்கான சிகிச்சைக்கோ, ஒருவேளை கர்ப்பத்துடன் தொடர்புடைய சிகிச்சைக்கோ கூட பயன்படுத்துவார்கள். இதற்கான செலவை அந்த குழுவை காப்பீட்டு செய்த பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.
கட்டுக்கதை 3: அரசாங்கம் பணக்காரர்களிடமிருந்து பணத்தை எடுத்து ஏழைகளுக்குக் கொடுக்கிறது.
உண்மை: இல்லை அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை. பணக்கார / நடுத்தர வர்க்க மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அளவிற்கு ப்ரீமியத்தின் விலை இல்லை. மருத்துவ செலவுகளை அவசர காலகட்டங்களில் எதிர்கொள்ள பாதுகாப்பு இல்லாததால் நடுத்தர/கீழ் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பிச்சை எடுக்கும் அவலத்திற்கோ அல்லது தற்கொலை செய்யும் நிலைக்கோ தள்ளப்படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலைகள் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு மற்றும் வர்க்கப் பின்னடைவை ஏற்படுத்தி அதிக குற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. இந்த பணம் நமது கையில் இருந்தே அரசாங்கம் எடுக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். இந்த பணம் அரசியல்வாதிகளின் பாக்கெட்டிற்கு செல்லாமல் ஏழைகளுக்கு தேவையான மருத்துவ உதவிக்கு செல்கின்றது என்பது ஒரு மிகச்சிறந்த செயல்தானே?
கட்டுக்கதை 4: அரசு இதற்கு பதிலாக மருத்துவமனைகள் கட்ட இப்பணத்தை செலவிடக்கூடாதா?
உண்மை: இவ்வரண்டு விஷயங்களையும் வெவ்வேறாக காண்பது தவறு. பட்ஜெட்டிற்கு பிறகு அரசு வெளியிட்ட செய்தியில் நாடு முழுவதிலும் 25 அரசு மருத்துவ கல்லூரிகள் கட்டப்போவதாக அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் ஏழை மக்கள் ஏற்கனவே சிகிச்சைக்காக சில மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். காப்பீட்டு நிறுவனம் இந்த மருத்துவமனைகளில் தரப்படுத்தப்பட்ட சேவைகளை உறுதி செய்யும்.
கட்டுக்கதை 5: தனியார் மருத்துவமனைகள் ஏழைகளிடமிருந்து கொள்ளையடிக்கமாட்டார்களா?
உண்மை: மாறாக, ஒரு காப்பீட்டு நிறுவனம் அங்கு இருப்பதால் இதுபோன்ற செயல்கள் நடக்காதவாறு பார்த்துக்கொள்வார்கள். மேலும், அனைத்து மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும் மருத்துவமனைகளை ஆய்வு செய்யவும், தங்கள் பட்டியலில் சேர்க்கவும், தவறுகள் நடக்கும் மருத்துவமனைகளை பட்டியலில் இருந்து நீக்கவும் தனக்கென ஒரு தனி குழுவே வைத்து செயல்படுகிறார்கள்.