
நேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0.
என்னடா பட்ஜெட்டா ன்னு குழம்பாதீங்க!
20 லட்சம் கோடி என்பது மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கும் பணத்தை விட மிகமிக அதிகம். இது கொரோனா நிவாரணம் என்று சொல்ல முடியாது. கொரோனாவால் கிடைக்க போகும் ஆதாயம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு கெட்டதிலும் இன்னொரு நல்லது உருவாகும் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. அது இன்று 100% உண்மையாக போகிறது. காங்கிரஸ் திமுக போன்ற எதிர்மறை கூட்டதிற்கு சமையல் வேலை அதிகம் இருப்பதால் இதை பற்றி எல்லாம் கண்டுகொள்ள நேரமில்லை என்பதை நேற்றே ஒத்துக்கொண்டனர்.
அவர்களை விமர்சனம் செய்வதில் உபயோகம் இல்லை. சரி இன்றைய அறிவிப்பில் என்ன தான் முக்கியத்துவம் என்றால்:
வருமான வரி தாக்கல் மூன்று மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று சிலர் சம்பந்தமே இல்லாமல் பேசுகின்றனர். உண்மையில் அது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்பது என் கருத்து. இது கண்டிப்பாக ஒரு பலன் தரும் முடிவு என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் இதை மட்டுமே கூறி திசை திருப்ப சிலர் முயல்கின்றனர்.
நிதியமைச்சர் கூறியது போன்று இன்றைய மிக முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு MSME நிறுவனங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு.
ஒண்ணா ரெண்டா! சொக்கா சொக்கா! 3 லட்சம் கோடி.
என்னதான் செய்வது என்று திக்கற்ற நிலையில் இருந்த சிறு, குறு, மத்திய தர நிறுவனங்களுக்கு ஆறுதல் மட்டும் அல்ல, ஒரு ஆக்சிஜன் சிலிண்டரே தந்த செயல்.
கடன் கொடுத்தா என்ன பண்ண, நாங்க தானே திருப்பி கட்டணும், இப்படி சிலர் கேட்கின்றனர்.
10 ஆயிரம் ரூபாய் யாரிடமாவது கைமாத்து வாங்குங்களேன் முடிந்தால். இந்த மூச்சு விடவே கஷ்டப்படும் நெருக்கடியில் தெரிந்து யாரும் கடன் தர முன்வருவார்களா?
நீங்களே நாளை உயிருடன் இருப்போமா என்று தெரியாத நிலையில் பிணை இன்றி கடன் தர யார் முன்வருவர்?
ஆனால் அரசு தருகிறது!
அதுவும் 1 வருட காலம் கழித்து தான் திரும்ப செலுத்த சொல்கிறது. சரி, இது முதலாளிகள் மட்டுமே பயன்பெறுவர் என்று கம்யூனிஸ்ட்கள் பேசுவர். இந்த 40 நாட்களில் அடியோடு முடங்கி போன தொழில்கள் சீராக விருப்பமில்லாதவர்கள் போல இந்த கம்யூனிஸ்ட்கள்.
தொழிலாளர் நலம் ஒன்றே குறிக்கோள் என்கையில் அதில் முதலாளிகளும் அடக்கம் என்பதை எளிதாக மறந்து விடுகிறார்கள். எண்ணற்ற சிறு, குறு தொழில்கள் கடந்த ஆறு மாதங்களாவே தட்டுதடுமாறி நடை போட்டு வருகையில், இந்த ஊரடங்கு மொத்தமாக வாழ்க்கையை திருப்பி போட்டுவிட்டது என்பதை யார் அறிவர்.
வாடகை, சம்பளம், தனிநபர் மற்றும் வீட்டுகடன், இயந்திரங்கள் மீது வாங்கிய கடன், சப்ளையர்களுக்கு தர வேண்டிய பாக்கி என அனைத்துமே முடங்கியது. ஒருவர் வாழ்க்கையில் மொத்தமாக 40 நாட்களுக்கு கோமாவில் இருந்தால் என்ன நடக்குமோ அது நடந்தது.
இனி என்ன செய்ய? எப்படி இத்தனை பேருக்கும் பதில் சொல்ல? என்று நிராயுதபாணியாக நிற்கும் நிலையில் யாரை நொந்து என்ன பயன்? வேறு எதுவும் இல்லாவிடினும் இருக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுத்து நிலைநிறுத்தினால் மட்டுமே மேற்கொண்டு முன்னேற முடியும் என்ற நிலையில் கடந்த ஒரு வாரத்தில் தனிநபர் கடனுக்கும் நகைகடனுக்கும் வங்கிகளில் வந்த அழைப்புகள் எவ்வளவு என்று விசாரித்தால் தெரியும்.
வரப்பு உயர நெல் உயரும்; நெல் உயரக் குடி உயரும்;
குடி உயரக் கோல் உயரும்; கோல் உயரக் கோ உயரும்.
முதலாளிகள் கையில் பணம் புழங்கினால் மட்டுமே தொழிலாளிகள் வீட்டில் அடுப்பெரியும். தொழிலாளர் நலன் என்பது முதலாளிகளையும் உள்ளடக்கியது. அதற்கு முதல்கல்லாக அரசு எடுத்த நடவடிக்கை பாராட்ட வேண்டாம், கண்ணீருடன் நன்றி சொல்ல வேண்டும்.
கடன் எதற்கு, இலவசமாய் தாருங்கள் என்று சில மெத்த படித்த மேதாவிகள் முழங்குவர். ஆனால் தொழில் நிறுவனங்களை கேட்டு பாருங்கள்.
“Give a man a fish and you feed him for a day; teach a man to fish and you feed him for a lifetime” என்ற பழமொழிக்கேற்ப நம் அரசு ஓரே ஒரு நேரத்துக்கு மீனை தராமல் மீன் பிடிக்க வலையும், அதற்கான முதலீடும் தருகிறது என்றால் யாருக்கு கசக்கும்?
இது நம்பிக்கையை விதைக்கும் முதல்படி. இனி வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே முதலீடு செய்கையில் அவர்களுடன் இயைந்து செயல்பட இங்கே இருக்கும் நிறுவனங்களுக்கு ஒரு உற்சாக டானிக் அரசு நல்கியுள்ளது. கூடவே 200 கோடி வரை உள்நாட்டு நிறுவனங்களுக்கே டெண்டர் என்பதை பாராட்ட வார்த்தை இல்லை.
தொழில் துலங்க இனி என்ன செய்ய வேண்டும்? பணப்புழக்கம் அதிகரிக்கும்போது மக்கள் நலம் பெருகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்கான மற்ற அறிவிப்புகளும் அடுத்தடுத்து வரும் என்பதை எதிர்நோக்குவோம். வெற்றியைத்தொட ஒரு சில படிகளே உள்ளன.
இனி வென்றெடுப்போம் சுயசார்பு பாரதத்தை!
~முகுந்தன் @manin_kaavi