
கிராமத்துல ஒரு கதை சொல்லுவாங்க — கவுண்டமணி காமெடியாக் கூட வந்திருக்கு — கிராமத்து நாட்டாமை ரொம்ப செல்வாக்கா இருக்காரு. அவரோட மச்சானுக்கு பொறாமை. ஒரு நாள் நாட்டாமையோட மனைவி என்னோட தம்பியையும் பெரிய மனுஷனாக்கி விடுங்களேன்னு ஒரே பொலம்பல். நாட்டாமையும் போகுமிடத்துக்கெல்லாம் மச்சானைக் கூட்டிச் செல்கிறார். ஒரு இழவு வீட்டுக்குச் செல்கிறார். மகனை இழந்த தாய் கதறுகிறார். “ நீங்கள் அவருக்கு மட்டுமா? எங்கள் எல்லோருக்கும் தாய்” என்று ஆறுதல் கூறுகிறார். ஒருநாள் நாட்டாமைக்கு உடம்புக்கு சுகமில்லை. மச்சானை ஒரு இழவு வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். கணவனை இழந்து வாடும் மனைவி கதறுகிறார். “நீங்கள் அவருக்கு மட்டுமா? எங்கள் எல்லோருக்கும் மனைவிதான் “ என்று ஆறுதல் கூறுகிறார் மச்சான். அப்புறமென்ன? தர்ம அடிதான்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா என்ன சொல்கிறது? பாக்கிஸ்தான், பங்களாதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், பார்ஸிகள், புத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் ஜைனர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.
இதனை ஏன் எதிர்க்க வேண்டும்? ஒரே ஒரு காரணம்தான் — ஓட்டுக்காக அலையும் மனோநிலை. தமிழக அளவில் எந்த ஒரு நல்ல திட்டத்தையும் எதிர்க்க வேண்டுமானால் உடனே சாதியைக் கையிலெடுத்துக் கொள்வார்கள். தேசிய அளவில் மதத்தைக் கையிலெடுத்துக் கொள்வார்கள். இதைத்தான் காங்கிரஸ், திரினாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் செய்கின்றன இந்த விஷயத்திலும். இவர்கள் எதிர்ப்பதற்குக் கூறும் காரணம் என்ன? இது முஸ்லிம்களுக்கு எதிரானது. எப்படி எதிரானது? இது ஹிந்துக்களுக்குக் குடியுரிமை வழங்கும்போது முஸ்லீம்களுக்கு வழங்கவில்லையாம்.
மசோதாவின்படி மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களுக்குக் குடியுரிமை எனும்போது பாக்கிஸ்தான், பங்களாதேசம் & ஆஃப்கானிஸ்தானில் முஸ்லீம்கள் என்பதற்காக யாராவது துன்புறுத்தப்பட்டிருப்பார்களா? இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஓட்டுக்காக அலைந்து கொண்டு எதிர்க்கின்றவர்களை என்னவென்று சொல்வது?
தேசப்பிரிவினையின்போது இன்றைக்கு பங்களாதேஷ் என்றழைக்கப்படும் அன்றைய கிழக்கு பாக்கிஸ்தானில் ஹிந்துக்கள் 22.5% இருந்தனர். ஆனால் இன்றைக்கு? 10.7% மட்டுமே. என்ன ஆயினர் மீதமுள்ளவர்கள்? பங்களாதேசத்தின் மக்கள்தொகை கட்டுக்கடங்காமல் பெருகும்போது ஹிந்துக்கள் மட்டும் பாதியாகக் குறைந்து வருவது ஏன்? பாக்கிஸ்தானை எடுத்துக் கொண்டோமானால் ஹிந்துக்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களும் சீக்கியர்களும் கூட மதரீதியாகத் துன்புறுத்தப்படுகின்றனர். மதத்தையும் கடவுளையும் இழிவுபடுத்தி விட்டார் என்று ஒரு கிறிஸ்தவப் பெண்மணையைத் துன்புறுத்தி அவருக்காக உலக நாடுகள் அனைத்தும் குரல் கொடுத்து ஒருவழியாக நீதிமன்றத்தின் மூலமாக சிறையிலிருந்து விடுதலை பெற்றதை மறக்க முடியுமா?
சமீபத்தில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் பாக்கிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதையும் பயமுறுத்தி மதமாற்றம் செய்யப்பட்டதையும் மறந்துவிட முடியுமா? அந்த அளவுக்கா சொரணையற்றுப் போயிருக்கிறோம் நாம்?
பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான் மூன்றுமே இஸ்லாமிய மத அடிப்படையிலான அரசியல் நடக்கும் நாடுகள். இஸ்லாத்தை நம்பாதவர்கள் காஃபிர்கள், அவர்களைக் கத்தி முனையில் மதமாற்ற வேண்டும் அல்லது கொன்றொழிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட கட்சிகள் செல்வாக்கு பெற்ற நாடுகள். இத்தகைய நாடுகளில் பாதிப்புக்கு உள்ளாவது முஸ்லீம்களா அல்லது பிற மதத்தினரா? இந்த அறிவு கூட இல்லாமல் இந்த மசோதாவை எதிர்க்க ஒரு கூட்டம், அதனை ஆதரித்து ஒரு அறிவுஜீவி என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் ஒரு கும்பல்.
ஒரு ஆச்சரியமான ஒற்றுமை என்னவென்றால் இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள்தான் ரோஹிங்க்யா முஸ்லீம்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டுமென்ற கோஷம் போட்டவர்கள். ரோஹிங்க்யா முஸ்லீம்கள் யார்? பங்களாதேசத்திலிருந்து மயான்மார் ( பர்மா ) நாட்டிற்குக் குடிபுகுந்தவர்கள். அங்கே உள்ள புத்த மதத்தினரிடம் பிரச்சினை தோன்றியதும் கலவரம் வெடித்தது. இதனால் பல லட்சம் பேர் மயான்மாரை விட்டு வெளியேறினர். சரி, அவர்களது பூர்வீகம் பங்களாதேஷ். அகதிகளாக வெளியேறினால் தாய்நாடான பங்களாதேஷுக்கு வரவேண்டும். ஏற்றுக் கொள்கிறோம். ஒரு வேளை இந்தியா – மயான்மார் எல்லைப்பகுதிகளில் நுழைந்தால் வடகிழக்கு மாநிலங்களில் தஞ்சம் புகுந்திருக்கலாம். ஆனால் மயான்மாரிலிருந்து பக்கத்தில் உள்ள இடங்களில் நுழையாமல் வெகுதூரத்திலிருக்கும் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலும் அதையும் விட தொலைதூரத்தில் இருக்கும் ஜம்மு காஷ்மீரத்திலும் புகுந்தது எப்படி? அப்படிப் புகுந்தவர்களுக்கு உதவியாக இருந்தது யார்? அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று திரினாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அலறுவது ஏன்?
சட்டவிரோதமாகப் புகுந்த ரோஹிங்க்யா முஸ்லீம்களுக்குக் குடியுரிமை உள்ளிட்ட எல்லா சலுகைகளும் கொடுக்க வேண்டுமாம், ஏனென்றால் அவர்கள் மயான்மார் அரசினால் துன்புறுத்தப்படுகிறார்களாம், ஆனால் பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தானில் துன்புறுத்தப்படும் ஹிந்துக்கள் உள்ளிட்ட பிற சிறுபான்மையினருக்குக் குடியுரிமை கொடுத்தால் தீவிரமாக எதிர்ப்பார்களாம் இந்த எதிர்க்கட்சிகள்.

இதிலிருந்தே தெரியவில்லையா இவர்களது இரட்டை வேடம்? இதுதான் உண்மையில் அப்பட்டமான மதவாதப் போக்கு. ஆனால் இந்தக் கட்சிகள்தாம் தங்களை மதச்சார்பற்ற கட்சிகள் என்று அழைத்துக் கொள்கின்றன.
மதச்சார்பற்ற கட்சிகள் என்று அழைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் ஆதரித்துக் கொண்டு பிற மதத்தினரைப் புறந்தள்ளி விடுவது மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியாகும். இதனால்தான் மக்களிடையே மதரீதியான பிரிவினைகளும் பிரச்சினைகளும் உருவாகிறது. இந்தக் கட்சிகளுக்கு இன்னமும் நாம் தொடர்ந்து ஆதரவளித்து வந்தால் நாடே கலவரபூமியாகிவிடும். இன்னும் எத்தனை நாள் மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகளைப் பொறுத்துக் கொண்டிருக்கப் போகிறோம்?
ஸ்ரீஅருண்குமார்