தெலுங்கு மொழியிலே குதிரையென்றால் குர்ரம் என்று சொல்வார்கள். இப்போ எதுக்கு தெலுங்கு என்று கேட்காதீர்கள். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின் அவர்களின் எதிர்ப்பு காரணமாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்திக்குப் பதிலாக தெலுங்கினை விருப்ப மொழியாக மாற்றியதற்கும், தன்னை மலையாளி என்று கூறிய திரு.கருணாநிதியை தீவிர விசாரணைக்குப் பிறகு தெலுங்கர் என்று திட்டவட்டமாக திரு.எம்.ஜி.ஆர். அறிவித்ததற்கும் நான் தெலுங்கைப் பற்றி பேசுவதற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை – எனக்கு தெலுங்கும் கொஞ்சம் தெரியும் என்பதைத் தவிர.
கேள்வி கேட்க புத்திசாலித்தனம் தேவையில்லை. பதில் சொல்லவும் சொன்ன பதிலை புரிந்து கொள்ள மட்டுமே புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. அதனால்தானோ என்னவோ கேள்விகள் ஆயிரம் இங்கே. ( கேள்வி கேக்கறது எவ்வளவு சுலபம் தெரியுமா? ஆனா பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? என்ற பஞ்சதந்திரம் வசனத்தின் தெளிவுரை இது) பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருப்பவர்கள் முஸ்லீம்கள். அவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்படுகிறது என்று பலர் கேள்வியெழுப்புகின்றனர். பாக்கிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி என்பதைக்கூட அறியாமல் இப்படி உளறினால் என்ன சொல்வது? ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்ற கேள்வியெழுந்தால் காராசாரமாகக் கேள்வி கேட்டபிறகு எதிர்த்துதான் ஆகவேண்டும். ஆனா ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை என்றால் என்ன அர்த்தம்? ஒருவேளை இயக்குனர் சந்தானபாரதியைப் பார்த்தாலே குலைநடுங்குகிறதா?
சரி, அது போகட்டும், இந்த அர்ரம் குர்ரம் விஷயத்துக்கு வருவோம். இந்தக் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவானது பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியான அடக்குமுறைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகி இந்தியாவில் அடைக்கலம் தேடும் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டம். பங்களாதேசத்தில் முஸ்லீம் என்ற காரணத்துக்காக ஒருவர் அடக்குமுறைக்கு ஆளானார் என்று சொல்ல முடியுமா? கேட்பதற்கே காமெடியாக இல்லையா? அப்புறம் எதற்காக இதனை முஸ்லீம்களுக்கு எதிரான சட்டம் என்று புலம்ப வேண்டும்?
அது ஏன் இந்த மூன்று நாடுகளுக்கு மட்டும்? எல்லா நாடுகளிலும் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு அடைக்கலம் தரலாமே என்ற கேள்வியும் எழலாம். இந்த மூன்று நாடுகளும் ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்திய அரசின் பகுதியாக இருந்தது. அதனால் அவர்களும் ஒரு காலத்தில் இந்தியர்கள். அப்படிப் பார்த்தால் இன்றைய மயான்மார் கூடத்தானே என்று கேட்கலாம். மயான்மாரில் மதரீதியான துன்புறுத்தல்கள் இந்தியர்களுக்கு இல்லை. ரோஹிங்க்யா முஸ்லீம்கள் இந்தியர்கள் அல்ல, அவர்கள் பங்களாதேசிகள். அதுதான் மயான்மாரில் பிரச்சினைக்கே காரணம்.
இப்போது இன்னொரு கேள்வியும் எழுப்பப்படுகிறது. அதாவது இந்த சட்டதிருத்த மசோதாவில் இலங்கைத்தமிழர்களுக்கு என்ன செய்தீர்கள்? அவர்களை விட்டுவிட்டீர்களே? என்று கண்ணீர் வடிக்கிறார்கள். என்ன செய்வது? இந்தக் கண்ணீரை இறுதிப்போரின்போது வடிக்கவில்லையே! வாரிசுகளுக்குப் பதவி பெறுவதற்காக மட்டுமே போராடினோமே! என்ற சங்கடமான சரித்திர நிகழ்வுகள் மக்களின் மனதை விட்டு சுலபமாக அகலுவதில்லை.
இலங்கைத் தமிழர்கள் யார்? அவர்கள் இனப்படுகொலை காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்தவர்கள். தங்களது வீடு, நிலம், சொத்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வந்தவர்கள். அவர்களுக்குக் குடியுரிமை கொடுத்து இங்கேயே வைத்துக்கொள்வது நீதியா? அல்லது அவர்கள் இழந்த வீடு நிலம் சொத்துக்களை மீட்டுக்கொடுத்து அவர்கள் சொந்த மண்ணிலே மீண்டும் தைரியமாக சம உரிமைகளுடன் தலைநிமிர்ந்து வாழச் செய்வது நீதியா?
இங்கே குடியுரிமை கொடுத்துவிட்டால் அவர்கள் தங்கள் இழந்த சொத்துக்களை மறுபடியும் அடையவே முடியாது. அதுமட்டுமல்ல, இலங்கைத் தீவு முழுவதும் சிங்களவர்களுக்குத்தான் என்று ஆகிவிடாதா?
யார் வேண்டுமானாலும் எத்தனை ஆயிரம் கோடிகள் வேண்டுமானாலும் இலங்கையில் முதலீடு செய்யுங்கள். அதற்காக சிங்களர்களுடன் கூடிக்குலாவுங்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை கொடுத்து அவர்கள் செல்வங்களை சிங்களர்களுக்குத் தாரைவார்த்து இலங்கை முழுவதும் சிங்களர்களுக்கே சொந்தம் என்று ஆக்கிவிடாதீர்கள்.
இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன் என்று கூறி அவர்கள் வாழ்க்கையை இன்னும் சிக்கலாக்கி விடாதீர்கள். உங்கள் சுயநலத்தை உங்கள் வாரிசுகளின் பதவிகளுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். இலங்கைத் தமிழரின் வாழ்வை அழிக்கப் பயன்படுத்தாதீர்கள்.
#CAB #SrilankanTamils #CitizenshipAmmendmentBill2019 #IndiaSupportsCAB
ஸ்ரீஅருண்குமார்