
கல்யாண மேடை நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். சொல்லுங்க, உங்களுக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும்?
நாங்க எஞ்சினியர் ஜாதிங்க. எங்க பொண்ணு ஐ டி எஞ்சினியர். மாப்பிள்ளையும் எஞ்சினியர் ஜாதியிலே ஐ டி பிரிவா வேணுங்க.
நல்லதுங்க. நீங்க எதிர்பாக்கற மாதிரியே நல்ல மாப்பிள்ளை எஞ்சினியர் ஜாதியிலேலே கிடைப்பாரு. கல்யாண மேடை நிகழ்ச்சியிலே கலந்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி.
இதெல்லாம் ஏதோ அதீத கற்பனைன்னு நினைக்காதீங்க. அடுத்த தலைமுறையிலே இது சாதாரண நிகழ்வாகப் போகிறது.
தமிழகம் வருடந்தோறும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட எஞ்சினியர்களை உருவாக்குகிறது. ஆக, கடந்த இருபது வருடங்களில் இதுவரைக்கும் சுமார் 25 லட்சம் எஞ்சினியர்கள் உருவாகியிருப்பார்கள். இன்றைக்குத் தமிழ்நாட்டில் எல்லா தெருவிலும் ஏழெட்டு எஞ்சினியர்கள் இருப்பார்கள் – வேலையில்லாமல், ஆனால் ஒரு எலக்ட்ரிஷியனோ ப்ளம்பரோ கிடைக்க மாட்டார்கள் என்று நகைச்சுவை உலவினாலும் கிட்டத்தட்ட உண்மை நிலை இதுதான்.
எஞ்சினியர் என்பதிலேயே ஏகப்பட்ட பிரிவுகள் – மெக்கானிகல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ்&கம்யூனிகேஷன், சிவில், ஐ டி, கம்ப்யூட்டர் ஸயின்ஸ், மைனிங்க் என்று நீண்டு கொண்டே போகும். எஞ்சினியரிங்க் படித்து முடித்து விட்டுப் பட்டம் வாங்கி விட்டால் போதுமா? நான் ஒரு எஞ்சினியர் என்று சொல்லிக் கொண்டால் சமூகத்தில் உங்களுக்கு மரியாதை கிடைத்து விடுமா? சொல்லப் போனால் இன்றைக்கு உள்ள நிலைமையில் எஞ்சினியர் என்றால் அன்றைக்கு எழுத்தாளர்களுக்குக் கிடைத்த மரியாதைதான் கிடைக்கும் – “அது சரி சோத்துக்கு என்ன செய்யறீங்க?”.
நீங்கள் எந்தக் கல்லூரியில் படித்தீர்கள், எத்தனை மதிப்பெண்கள் பெற்றீர்கள், அதற்குப் பிறகு போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகளை சந்தித்து எந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள், என்ன வேலை பார்க்கிறீர்கள், எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் இதையெல்லாம் வைத்துதான் உங்கள் தகுதி நிர்ணயிக்கப் படுகிறது.
உங்கள் குடும்பம் பணக்காரக் குடும்பமாக இருந்தால் நீங்கள் பணக்காரக் குழந்தையாக இருக்கலாம். ஆனால் உங்கள் பெற்றோர் புத்திசாலிகளாக இருந்தால் படிக்காமலேயே நீங்கள் புத்திசாலியாகிவிட முடியாது. உண்மைதானே?
சாதி – இது பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. சமூகத்தில் நிலவிய தீண்டாமையைக் காரணம் காட்டி ஹிந்து மதத்தை இழிவு படுத்தும் வேலைகளும் இதன் மூலம் மத மாற்ற முயற்சிகளும் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கின்றன ஒரு புறம். இதே சாதியை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதும் ஓட்டு வங்கிகளை உருவாக்குவதும் இன்னொரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆரம்பத்தில் தொழிலின் அடிப்படையிலேயே சாதிப் பிரிவுகள் உருவாகின. ஷத்ரியர்களுக்குப் பிறந்த கிருஷ்ணர் யாதவ நந்தகோபரிடம் வளர்ந்ததால் அவரும் யாதவர் ஆனார். காலம் செல்லச் செல்ல தொழிலின் நுணுக்கங்கள் வெளியே செல்வதை விட தனது வாரிசுளின் வளர்ச்சிக்கு உதவட்டுமே என்ற எண்ணம் பரம்பரையாக ஒரே தொழிலைச் செய்வதை ஊக்குவித்தது. சுலபமாகப் புரிய வேண்டுமா? என் கட்சித் தலைவர் பதவிக்கு எனக்குப் பிறகு எனது மகன், மகள், அவர்களுக்குப் பிறகு எனது பேரன், பேத்தி என்பதுதான் தொழில் அடிப்படையில் சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் மாறிப்போனதற்குக் காரணம். இதுதான் அரசியல்வாதி சாதி. இதிலேயே தலைவர் சாதி, தொண்டர் சாதி என இரு பிரிவுகள் உள்ளன.
சாதியால் ஏற்றத் தாழ்வுகள் கற்பிக்கப்படுகின்றன. அதனால் சாதிகளை ஒழித்தே ஆக வேண்டும். சரியா? அப்போ ஒழிக்க வேண்டியது ஏற்றத் தாழ்வுகள்தானே தவிர சாதிகள் இல்லையே! இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை போலத் தோன்றும். இருக்கிறது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றார் பாரதி. இதனையும் எல்லோரும் ஏற்றுக் கொள்வோம். இப்போது நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். பிறப்பால் உயர்வு தாழ்வு சொல்வது தவறென்று எல்லோரும் ஒத்துக் கொள்ளும்போது “நான் தமிழண்டா” என்று மீசையை முறுக்குவது சரியா? புரியவில்லையா? நீங்களும் நானும் என்ன சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியா தமிழனாகப் பிறந்தோம்? அப்புறமென்ன தமிழனென்று பெருமை கொள்ளடா என்று ஆர்பாட்டம்?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை சமூக ஊடகங்களில் டி பி யாகவோ அல்லது லெட்டர் பேடில் தலைப்பாகவோ வைக்க மட்டும்தான். அதனை யாரும் கடைப்பிடிப்பதில்லை. பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்றால் பிறப்பால் தமிழன், மலையாளி, தெலுங்கன், இந்தியன், ஜெர்மன், அமெரிக்கன் என்பதெல்லாம் ஒரு பெருமையே அல்ல. பிறப்பால் உயர்வு தாழ்வில்லை என்பதை முழுமையாக யாரும் ஏற்றுக் கொள்வதில்லை என்பதே எல்லாப் பிரிவினைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணம்.
சரி, ஏற்றத் தாழ்வுகளை எப்படி ஒழிப்பது?
ஏற்றத் தாழ்வுகள் மற்றும் தீண்டாமை பெரிதும் கடைப்பிடிக்கப்படும் இடமாகக் காண்பிக்கப் படுவது கோவில்கள். யோசித்துப் பாருங்கள் – சென்னையில் ஏராளமான கோவில்கள் இருக்கின்றன. இங்கு எதிலாவது இன்ன சாதியினர் நுழையக் கூடாது என்ற பிரச்சினை உருவாகியிருக்கிறதா? அது ஏன் கிராமங்களில் மட்டும் இந்தப் பிரச்சினை? இந்த சாதி என்பது சென்னையில் செல்லுபடியாகாத காரணம் என்ன?
வட இந்தியாவுக்குப் போய் நான் இன்ன சாதிடா என்று பெருமையாகக் கூவுங்கள் பார்ப்போம், ஒரு பய சீந்த மாட்டான். ஏன்னா அவன் ஊருக்கு அவன் சாதிதான் ஒசத்தி. இங்கே ரூபாய்னா அங்கே டாலர் அப்டீங்கறதெல்லாம் சாதியிலே கிடையாது, ஒரு சில சாதிகளைத் தவிர. அப்பவும் அவங்க ஊருக்காரந்தான் ஓசத்தி.
அமெரிக்காவுலே போயி நான் தமிழண்டா அப்டீன்னு மீசைய முறுக்குங்க பார்ப்போம். உங்களை ஒரு மாதிரியாகப் பாத்து விட்டு போனாப் போகிறதென்று “வாட்ஸ் யுவர் ப்ராப்ளம் மேன்?” என்று கேட்பான். இன்னொரு முறை உரக்கக் கத்தினால் 911க்கு போன் செய்வான், உங்களைக் கொத்தாக அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள்.
நீங்கள் எந்த சாதி என்ன மொழி என்பது முக்கியமல்ல, என்ன சாதித்தீர்கள், எவ்வளவு முன்னேறுகிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
இப்போது சாதி என்பதை எஞ்சினியரிங்க் டிகிரியாகப் பார்ப்போம். சாதி என்பது எல்லோருக்கும் கிடைத்த ஒரு எஞ்சினியரிங் டிகிரி. எஞ்சினியரிங்கில் பல பிரிவுகள் உள்ளது போல சாதியிலும் பல பிரிவுகள். எப்படி மெக்கானிகல் எஞ்சினியர்களெல்லாம் உயர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாதோ அது போல இந்த சாதி உயர்ந்தது என்றும் சொல்ல முடியாது. எப்படி சிவில் எஞ்சினியரிங் தாழ்ந்தது என்று சொல்ல முடியாதோ அது போல் இந்த சாதி தாழ்ந்தது என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் மெக்கானிகல் எஞ்சினியரிங் படித்தால் வேலை வாய்ப்புக்கள் பிரகாசம் என்று சொன்னாலும் வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் மெக்கானிக்கல் எஞ்சினியர்கள் லட்சக் கணக்கில். அது போல சிவில் எஞ்சினியரிங்கை யாருமே தேர்ந்தெடுக்கத் தயங்குவதன் காரணம் வேலை வாய்ப்புக் குறைவு என்று சொன்னாலும் நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் இருக்கும் சிவில் எஞ்சினியர்களும் ஏராளம்.
இதுலயே இன்னொரு விஷயமும் இருக்கு. கல்லூரியிலே கல்ச்சுரல்ஸ் நடக்கும். டான்ஸ் போட்டின்னு வெச்சிக்கோங்களேன். மெக்கானிகல் பையன் ஒருத்தன் போட்டி போட்டா ஒட்டு மொத்த மெக்கானிகல் டிபார்ட்மெண்டே அவனுக்கு ஆதரவா நிக்கும். டேய் நம்ம டிப்பார்ட்மெண்ட்தாண்டா ஜெயிக்கணும்னு அவன் எவ்வளவு கேவலமா ஆடினாலும் அவனுக்குக் கொடி பிடிக்கும். இத்தனைக்கும் எலக்ட்ரிக்கல் டிப்பார்ட்மெண்டும் அவன் காலேஜ்தானேன்னு எவனும் யோசிக்க மாட்டான். மெக்கானிகல் பையன்னா இவ்ளோ ஆதரவு தராங்களே இதெல்லாம் எதுவரைக்கும்? போட்டி முடியற வரைக்கும்தான். இதே மெக்கானிகல்லே ஒரு பையன் கல்லூரிக்கட்டணம் கட்ட முடியாம கஷ்டப்படறான்னா எவனாவது உதவ முன்வருவான்னு நினைக்கறீங்க? சுத்தமா கிடையாது. அதே மாதிரி ஒரு பையன் நிறைய அரியர் வெச்சிருக்கானே. அவன் பாஸாக எதாவது சொல்லிக் கொடுப்போம்னு யாராவது வருவாங்கறீங்க? ம்ஹூம். அப்புறம் என்ன மெக்கனிக்கல் டிப்பார்ட்மெண்ட் ஒத்துமை வாழுது? எல்லாம் ஒரு டான்ஸ் போட்டிக்கு மட்டுமே.
இப்ப இப்படிக்கா வாங்க. தேர்தல் வந்தா நம்ம சாதிக்காரந்தான் ஜெயிக்கணும்னு வரிஞ்சு கட்டிட்டு ஆதரவு தெரிவிப்பாங்க. ஆனா நம்மோட சாதிக்காரன் சோத்துக்குக் கஷ்டப்படறானே, அவனுக்கு எதாவது உதவி செய்வோம்னு யாராவது வருவாங்களா? இல்லை நம்ம சாதிக்காரப் பையன் படிக்கக் கஷ்டப்படறானே அவனுக்கு எதாவது உதவி செய்வோம்னு மனசு வருமா? சொந்தக்காரப்பையனுக்கே உதவி செய்யாதவங்கதான் மத்தவனுக்கு உதவி செய்வாங்களா? இப்போ புரியுதா எஞ்சினியரிங்க் டிகிரி மாதிரிதான் சாதியும் ஒண்ணுக்கும் உதவாதுன்னு.
இப்போ அடுத்த ஃபேஷன் என்னன்னா ஒரு டாக்டரா இருந்தா இன்னொரு டாக்டரைத்தான் கட்டணும், ஏன்னா ஒரு டாக்டரோட கஷ்டம் இன்னொரு டாக்டருக்குத்தான் தெரியுமாம். இன்னும் அடுத்த தலைமுறையிலே பாருங்க எம் பி ஜாதிக்காரங்க எம் எல் ஏ ஜாதியிலே கல்யாணம் கட்ட மாட்டாங்க. கார்டியாலஜிஸ்ட் ஜாதிக்காரங்க டெண்டல் ஜாதியிலே கல்யாணம் கட்ட மாட்டாங்க. இவ்வளவு ஏங்க. மெக்கானிக்கல் ஜாதியிலே யாரும் சிவில் ஜாதியிலே சம்மந்தம் பண்ண மாட்டாங்க.
இதுதாங்க விஷயம், எப்படி நாலு வருஷம் படிச்சு முடிச்சு வெளியே வந்ததும் எஞ்சினியர்னு ஒரு பட்டம் கொடுக்கிறார்களோ அது போல பத்து மாசம் கழிச்சு ஒரு குழந்தை பிறந்ததுமே அதுக்கு ஒரு பட்டம் மாதிரி ஒரு சாதியைக் கொடுத்து விடுகிறோம். எஞ்சினியரிங் டிகிரியை மட்டுமே வைத்து நாக்கு வழிக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். எந்த ஒரு வேலைக்கும் போட்டித் தேர்வுகள் – அதுவும் பல கட்டங்களில் – அப்புறம் நேர்முகத் தேர்வு, பயிற்சிக்காலம் என்று பல கட்டங்களைக் கடந்தால்தான் நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல வாழ்க்கை. அது மாதிரிதாங்க, சாதி என்பது பிறப்பில் உங்களுக்குக் கிடைத்த ஒரு பட்டம். அதை வைத்துக் கொண்டு ஒரு டீ கூட வாங்க முடியாது. நீங்கள் படித்து, உழைத்து முன்னேறினால்தான் உங்கள் வாழ்க்கை நன்றாக அமையும். அதை விட்டு விட்டு நான் எஞ்சினியர் என்ற பட்டத்தை மட்டும் காட்டினால் எப்படி சோத்துக்கு சிங்கியடிக்க வேண்டுமோ அது போலத்தான் சாதியை மட்டும் வைத்துக் கொண்டு நான் பெரிய ஆள் என்று ஸீன் போடுவதும். இவ்வளவுதாங்க சாதி. இதைப் புரிந்து கொண்டால் அப்புறம் ஏற்றத்தாழ்வுக்கு இடமேது?
ஸ்ரீஅருண்குமார்