இரட்டை இலை —  கொஞ்சம் நில்லுங்க. இது அரசியல் கட்சியைப் பற்றிய கதை இல்லை.  என் வாழ்வில் இரண்டு இலைகள் கற்றுத் தந்த பாடம். பாடம்னு சொன்னவுடனே பயப்படாதீங்க.  சுவையான படம்.

 

நான் கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும் போது  நடந்தது இது. நான் படித்தது ஒரு அரசு கலைக்கல்லூரியில்.  அங்கே பாடம் நடக்கிறதோ இல்லையோ ஒவ்வொரு வருடமும் தேர்தல் நடக்கும். என் நண்பன் பாரதி கல்லூரிப் பேரவை பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டான்.  பிரச்சார துண்டுப்பிரசுரங்களுக்கு கவர்ச்சிகரமான வாசகங்களை எழுதிக் கொடுப்பது, மாணவர்களின் வீடுகளுக்கு அனுப்ப தபால் கார்டு எழுதுவது என மிகவும் மும்முரமாக இருந்த நேரம்.  ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை என் வீட்டுக்கு வந்திருந்தான்.

 

எங்கம்மாவின் சமையலில் நன்றாக இருக்கும் ஒரே ஒரு விஷயம் கத்தரிக்காயுடன் கருவடாமும் வேர்க்கடலையும் சேர்த்து செய்யும் ஒரு கூட்டு என்பது என் மாற்ற முடியாத கருத்து.  இதனை கலோரி கூட்டு என்று அழைப்பேன் – ஏன்னா சாப்பிட்டா அடுத்த ரெண்டு வேளைக்கு பசிக்காது. பகல் 12 மணி இருக்கும். சாப்பிட்டு விட்டுப் போடா என்றேன். முதலில் மறுத்தவன் பிறகு வற்புறுத்தலுக்குப் பணிந்து உட்கார்ந்தான்.  இருவரும் தட்டு முன் உட்கார்ந்தோம். நன்றாகவே சாப்பிட்டு எழுந்தோம். வெளியே டீக்கடைக்கு வந்தோம். கடை காலியாக இருந்தது. நான் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க பாரதி பேசாமல் இருந்தான். வித்தியாசத்தை உணர்ந்து என்னடாவென்று கேட்டேன். சட்டென்று என் கையைப் பிடித்துக் கொண்டு எங்க சொந்தக்காரங்க வீட்டுக்குப் போனா எனக்கு இலையிலேதான் சாப்பாடு போடுவாங்கடா என்றான். கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன.  எனக்கு பகீரென்றது.  

 

இங்கே ஒரு ஃப்ளாஷ்பேக்.

 

நான் பத்தாவது வரைக்கும் படித்தது ஒரு சின்ன பெரிய கிராமத்தில்.  10+1 சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் சேர்க்க ஏற்பாடாகி இருந்தது. ஆனால் விண்ணப்பத்தில் சென்னை முகவரி தேவை. அதனால் சென்னையில் இருந்த என் உறவினர் வீட்டு முகவரியைக் கொடுத்திருந்தேன்.  நேர்முகத் தேர்வுக்கான கடிதம் வந்திருந்தால் வாங்கி வருவதற்காக ஒரு நாள் அவர்களுடைய பங்களாவுக்குப் போயிருந்தேன். பகல் ஒரு மணி. சாப்பிட்டு விட்டுப் போடா என்றார்கள். நான் மறுக்காமல்  உடனே தலையாட்டினேன். ஏன்னா வீட்டுக்குப் போவதற்கு எப்படியும் இன்னும் இரண்டு மணி நேரமாகும். அதுவரை பசி தாங்க வேண்டுமே. ஹோட்டலில் சாப்பிடும் அளவுக்கு வசதியில்லாத காலம். தரையில் சம்மணமிட்டு அமர்ந்ததும் இலையைப் போட்டார்கள். அதுவரையில் கல்யாணங்களுக்குக்கூட அவ்வளவாகப் போனதில்லை. அதனால் முதன்முறையாக இலையில் சாப்பிட ரொம்பவே திண்டாடிப்போனேன்.  ஓடி வழியும் ரசத்தைப் பிடித்து இழுப்பதற்கே நேரம் சரியாக இருந்தது.

ஃப்ளாஷ்பேக் முடிந்து விட்டது.  என் நண்பன் பட்டியலில் உள்ள பிரிவைச் சேர்ந்தவன்.  ஒருவேளை நான் வீட்டுக்கு அழைத்து அவனை அவமானப்படுத்தி விட்டேன் என்று நினைத்திருப்பானோ?  எங்கள் நட்பு அப்படிப்பட்டதல்ல. இருந்தாலும் மன்னிப்புக் கோரும் பாவனையில் அவன் கையைப் பிடித்துக் கொண்டு  சாரி பாரதி,  இலை வாங்கணும்னா 25 பைசா ஆகும்.  மாசக் கடைசி. கையிலே சில்லறையில்லை. அதான் தட்டிலே போட்டோம்.  தப்பா நினைச்சிக்காத. அடுத்த தடவை உனக்காக இலை வாங்கி வெச்சிடறேன் என்றேன்.

 

அவன் கண்களிலிருந்து டக்கென்று இரண்டு சொட்டு கண்ணீர் உருண்டோடியது.  என்னைக் கட்டியணைத்துக் கொண்டான். எப்படிடா  நீ மட்டும் இப்படி இருக்கே? என்றான்.  எனக்குப் புரியவில்லை.       இல்லேடா அப்பாவோட பென்ஷன் மட்டும்தான்.  அவ்வளவா வசதியில்லே. நானும் எதாவது பார்ட் டைம் வேலை இருக்கான்னு தேடிட்டிருக்கேன்.  மத்தபடி ஒண்ணும் பிரச்சினையில்லே என்றேன்.

 

என்னை உற்றுப் பார்த்தபடியே என் கன்னத்தைத் தட்டினான்.          உனக்குப் புரியலையாடா?  அவங்க வீட்டுத் தட்டுல நான் சாப்பிட்டா அசிங்கமாம். அதனால என்னோட சொந்தக்காரனுங்க கூட எனக்கு எலையிலேதான் சோறு போடுவாங்க. ஆனா உங்க வீட்டுல கொஞ்சம் கூட வித்தியாசம் பாக்காம நீங்க சாப்பிடற தட்டுலே போட்டீங்களே?  எப்படிடா உங்க குடும்பம் மட்டும் இப்படி இருக்கீங்க? என்றான்.

 

இப்போது நான் மௌனமானேன்.  மறுபடியும் அந்த ஃப்ளாஷ்பேக்கை நினைத்துப் பாருங்கள்.  அடப்பாவிகளா, ஏதோ என்னைக் கௌரவப்படுத்துவதற்காக இலையில் ( மந்தார இலையில்) சாப்பாடு போட்டதாக நினைத்தேன். ஆனால் இவன் சொன்னப்புறம்தான் புரிந்தது சமையலைறையில் தரையில் உட்கார வைத்து இலையில் சோறு போட்டதன் பின்னால் இப்படி ஒரு  காரணம் இருக்கிறது என்பது.

 

சாதிக் குணம்னு சொல்லுவாங்க, அதாவது ஒவ்வொரு சாதிக்கும் ஒரு குணம் இருக்குமாம். வெளக்கெண்ணைகளா —  பணமிருப்பவனைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் ஏழையைக் கீழே போட்டு மிதிப்பதும்தான் எல்லா சாதிகளுக்கும் உள்ள ஒரே குணம்.  இதில் கொஞ்சம் கூட வித்தியாசமோ மாற்றமோ கிடையாது.

 

எல்லா சாதிக்காரங்களுக்கும் சொல்லிக்கறது ஒண்ணே ஒண்ணுதான்.  நீங்க எந்த சாதியா வேணும்னா இருங்க. நீங்க படிச்சு உழைச்சு பணம் சம்பாதிச்சு சொந்தக் காலிலே நின்னு கௌரதையா இருந்தாதான் சொந்தக்காரனே மதிப்பான். அப்புறம்தானே உங்க சாதிக்காரன் மதிக்கறதுக்கு.  

யோசிச்சுப் பாருங்க, ஒரே சாதிக்காரன் என்பதாலேயே உங்களை சரிசமமாக நடத்துவானா? இல்லே பொண்ணு குடுத்து பொண்ணு எடுப்பானா? சொந்தக்காரனே வீட்டுக்குள்ளே சேக்கமாட்டான் மக்கா. பணம்தாங்க இங்கே எல்லாமே.  பணம்தான் உங்கள் நிலையை உயர்த்துவதும் தாழ்த்துவதும்.  

 

சாதி சனம் மதிக்கணும், இன்ன சாதியிலேதான் பொறக்கணுங்கறதெல்லாம் சும்மா மக்கா.  நல்லா படிச்சு நல்லா சம்பாதிங்க. இந்த உலகமே மதிக்கும். இல்லாம என் சாதி உசத்தியா உன் சாதி உசத்தியான்னு சண்டை போட்டுக்கிட்டே இருந்து சம்பாதிக்காம இருந்தீங்கன்னா கட்டின பொண்டாட்டி, பெத்த புள்ளைங்களே மதிக்காது.  கடைசி வரைக்கும் சாக்கடைப் புழுக்களாகவே இருந்து ஏழ்மையில் சாக வேண்டியதுதான்.

 

ஸ்ரீஅருண்குமார்

2 Replies to “எல்லாம் ஒரே வெளக்கெண்ணைதான்”

  1. அவர்கள் வீட்டு எச்சி தட்டில் விருந்தாளி சாப்பிடக்கூடாது என்பது தமிழர் வழக்கம். எல்லா சாதிக்கும் இது பொருத்தம். சும்மா நொன்னைகளாட்டம் கதை எழுதாதீங்கடா

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.