
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, முறைகேடாக வசதிகள் செய்து தரப்பட்டு, அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது கடந்த மாதத்தில் புகைப்பட ஆதாரங்களுடன் அம்பலமானது. இதையடுத்து புழல் சிறையில் 5 முறை அதிரடி சோதனை நடத்தப்பட்டு, 50 டிவிகள், 70 எஃப்எம் ரேடியோக்கள், சிறைக் கைதிகளுக்கு முறைகேடாக வாடகைக்கு விடப்பட்டிருந்த மருத்துவமனை கட்டில்கள், 700 கிலோவுக்கும் மேற்பட்ட பாசுமதி அரிசி, சமையலுக்கு பயன்படும் பொருட்கள், கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. புழல் சிறையில் இருந்து 17 வார்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சோதனைகளுக்குப் பிறகும், புழல் சிறையில் முறைகேடுகள் தொடர்வது வீடியோ ஆதாரத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. சிறைக்கு வரும் கைதிகளின் உடமைகளை வைக்கும் அறை, குட்டி சமையல் அறையாக மாற்றப்பட்டுள்ளது. அதில் பிரியாணி சமைக்கத் தேவையான அனைத்துப் பொருட்களுடனும், கல்யாண விருந்துக்கு நடைபெறும் ஏற்பாடு போல தடபுடலாக உணவு தயாராவது, புழல் சிறையில் அண்மையில் எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதேபோல, கைதி ஒருவரின் அறையில் டிவி, எஃப்எம் ரேடியோ உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஜன்னலுக்கு வெளியே தோட்டத்தில் வைத்து பிரியாணி தயார் செய்யப்படுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இப்படி முறைகேடாக சிறைக்குள் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு பிரியாணி உள்ளிட்ட உணவுகள் தயார் செய்யப்படுவது ஒருபுறம் என்றால், அவற்றை கைதிகளுக்கு பலமடங்கு விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதாவது புழல் சிறையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளுக்குப் பிறகு, முறைகேடாக விற்பனை செய்யப்படும் பிரியாணி, சிக்கன், மட்டன், முட்டை உள்ளிட்டவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு பொட்டலம் பிரியாணி 500 முதல் 700 ரூபாய்க்கும், 100 ரூபாய் விற்ற முட்டை பொடிமாஸ் 200 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட 2 சப்பாத்தி 300 ரூபாய்க்கும், 50 ரூபாய் விற்ற ஆம்லேட் 100 ரூபாய்க்கும் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சிறைக்குள் விநியோகிக்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளது எனக் கூறி கைதிகள் அண்மையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.