
எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் கூட்டணி என்பது பல நேரங்களில் இன்றியமையாத ஒரு தீர்வாக அமைந்து விடுகிறது. கூட்டணி அவசியமா? கூட்டணி மூலம் ஒரு கட்சிக்கு நன்மையா, தீமையா? மேலும் தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியுமா என்பது போன்ற விஷயங்களை இந்த கட்டுரை அலசுகிறது. எந்த ஒரு அரசியல் கட்சியும் காலத்தின் ஓட்டத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவே விரும்புகிறது. இதன் விளைவாக அக்கட்சிகள் தேர்தலை வெற்றிகரமாக கடப்பது என்பது அத்தியாவசியமான நிகழ்வாக ஒவ்வொரு கட்சிக்கும் அமைகிறது.
எனினும் தேர்தல் களத்தில் சாதிப்பது என்பது பல கட்சிகளுக்கு பகீரதப் பிரயத்தனமாகவே உள்ளது. கட்சிகள் பல இணைந்து கூட்டணியாக உருவாகும் போது பல்வேறு சாதக பாதகங்களை சந்திக்க வேண்டியுள்ளது. கூட்டணியில் பெரும்பாலும் ஓரளவு சற்றேறக்குறைய ஒத்த சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகள் ஒரு கூட்டணியில் இணைவது வழக்கமாக இருக்கும். ஆனால் சில வேளைகளில் இந்த சித்தாந்தம் மாறிவிடுகிறது. எதிரெதிர் கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட சில சமயங்களில் ஒரே கூட்டணியில் அமையும் சூழல் அமைந்து விடுகிறது. கூட்டணி தேர்தலுக்குப் பின்னாலும் தொடர்ந்தாலும், தேர்தலின் போது செய்யப்படும் பணிகளே கூட்டணியின் வலிமைக்கு பெரிய காரணியாக இருக்கும். கூட்டணி அரசியல் என்பது சர்வதேச ரீதியில் நிகழக்கூடிய சாதாரணமான நிகழ்வுதான்.
பல நாடுகளையும் கூட்டணியின் மூலம் அரசை நடத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை கூட்டணியின் மூலம் அரசுகள் உருவாகி, பல அரசுகள் கவிழ்ந்த வரலாறும் உண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆரம்ப கால கட்டங்களில் தனிப்பெரும் கட்சிகளின் ஆதிக்கம் இருந்தாலும் பின்னாட்களில் கூட்டணி அரசியல் என்பது தவிர்க்க இயலாத சக்தியாக தமிழக அரசியலில் மாறியது.
திராவிட கட்சிகளைத் தாண்டி வேறெந்த தனிப்பெரும் கட்சியும் மாபெரும் வெற்றியை ருசிக்க இயலாத சூழல் தான் தமிழகத்தில் நிலவி வந்தது. 90களில் இந்த அரசியல் சூழல் வெகுவாக மாறியது. திராவிட கட்சிகள் பிற கட்சிகளின் ஆதரவை ஆட்சியமைக்க நாடினர். உதாரணமாக தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ், தேசிய முற்போக்கு திராவிட கழகம் போன்ற கட்சிகளின் தயவை ஆட்சிக் கட்டிலில் தம்மை அமைத்துக் கொள்வதற்கு இருபெரும் கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன. கூட்டணி இல்லாமல் தனித்து நிற்போம் என்று அறிவித்த கட்சிகள் கூட கூட்டணியின் நிலைப்பாட்டிற்கு தங்களை மாற்றிக்கொண்டன.
சமீப காலகட்டங்களில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது என்பது அரிதினும் அரிதான நிகழ்வாக மாறிவிடுகிறது. கூட்டணி இல்லாமல் ஒரு கட்சி ஜெயிக்க வேண்டுமானால் அதற்குப் பல்வேறு காரணிகள் தேவைப்படுகிறது. வலுவான கட்சியின் தலைமை, கட்சியின் அடிப்படை கட்டமைப்பின் வலிமை, பிராந்திய சிக்கல்களில் உள்ள தெளிவான பார்வை மற்றும் மக்களை ஈர்க்கக் கூடிய வலுவான தலைவர்கள் என்பது போன்ற பல காரணிகள் கூட்டணி இல்லாமல் ஒரு கட்சி போட்டியிட்டு வெல்லும் அளவிற்கு அக்கட்சிக்கு உதவிகரமாக இருக்கும். சரி இப்போது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தேவையா, இல்லையா என்ற கேள்விக்கு வரலாம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போதைய அரசியலானது முந்தைய காலக்கட்டங்களில் இருந்த அரசியலை விட மாறுபாடாக இயங்கிக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு கட்சியும் கூட்டணி இன்றி தனித்து நின்று பெருவாரியான வாக்குகளைப் பெறுவது கடினம் என்பதை தற்போதைய தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி வருகின்றன. இதற்கு கடந்த மூன்று மாதங்களில் நடந்த தேர்தல் முடிவுகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை இரண்டு கூட்டணியிலும் பல்வேறு கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன. ஒவ்வொரு கட்சியின் கூட்டணியில் பலனாக வாக்குகளை பெற்று வருகின்றன. பலாபலன்களை பெற்று வருகின்றன. கலாச்சாரம் சார்ந்த அரசியல் என்பது தேசிய நீரோட்டத்தில் தமிழகத்தை இணைப்பதற்கான முயற்சியாக மாறிவருகிறது.
சமீபத்திய சட்டமன்ற இடைத் தேர்தலை கருத்தில் எடுத்துக்கொண்டால் கூட்டணியின் பலாபலன்களே வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளன. இத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு கூட்டணியிலிருந்து பல்வேறு உழைப்பு நடந்தது. உதாரணமாக பெரும்பகுதி இந்துக்களின் வாக்குகளை இந்து அமைப்புகள் சேகரித்து தந்தன. அதேசமயம் திமுகவிற்கு பதிலடி தருவதே அரசியல் அமைப்புகள் பார்த்துக்கொண்டன. ஒரு கூட்டு முயற்சியின் பலனாக அதிமுக வேட்பாளர்கள் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். எனவே நல்ல தலைமை, நல்ல சித்தாந்தம் ஆகியவற்றைத் தாண்டி கூட்டணியின் அவசியமும் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். நல்ல கூட்டணி நல்ல வெற்றியை தரும் என்பது மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.