
கம்யூனிஸம் — தமிழிலே பொதுவுடைமைத் தத்துவம். இளைஞர்களைக் கவர்ந்திழுக்கும் அரசியல் கொள்கை. கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் பருவத்தில் கனத்த கதர் குர்தா, ஜீன்ஸ் அல்லது பைஜாமா, தாடி, தோளிலே ஒரு ஜோல்னா பை, அதற்குள் சித்தாந்த புத்தகங்கள், ஒரு அறையில் பக்கத்து கடையிலிருந்து வரும் டீக்கு நடுவே சித்தாந்த வேற்றுமைகள், உழைப்பாளர் உயர்வு, முதலாளித்துவ ஒழிப்பு போன்ற உயரிய விஷயங்களைப் பற்றி மணிக்கணக்கில் விவாதம், ரத்தத்திலே ஊறிய போராட்ட குணம், கொள்கைக்காக வாழும் மனிதர்கள் என்று சமூகத்திலே மதிப்பு, நாட்டையும் அரசியலையும் மாற்ற வேண்டும் என்ற ஆதங்கம் — இதெல்லாம் கம்யூனிஸத்தின் அடையாளங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.
இதனால் தானோ என்னவோ கம்யூனிஸம் அதன் சிவப்பு நிறமும் ஈர்க்கிறது. இதை அப்படிக்கா வெச்சிட்டு இப்படிக்கா வாங்க.
சோவியத் ரஷ்யா, சீனா, வடகொரியா, வியட்நாம், ஹங்கேரி, கிழக்கு ஜெர்மனி, போலந்து, யூகோஸ்லாவியா, செக்கோஸ்லாவியா, க்யூபா, வெனிசுவேலா, பொலிவியா, நிகராகுவா, எல் சால்வடார், ரொமேனியா என்று அகிலமெங்கும் பரவியிருந்தது கம்யூனிஸ நாடுகள். இன்றைக்கு கண்ணுல வெளக்கெண்ணை ஊற்றித் தேட வேண்டும். சீனாவில் இருப்பது கம்யூனிஸக் கட்சி அரசு, ஆனால் கடைபிடிப்பது பொருளாதாரக் கொள்கையும் முதலாளித்துவக் கொள்கைகளும்.
நல்ல வேலையில் இருக்கும் இளைஞர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் கம்யூனிஸத்தால் ஈர்க்கப்படுவதில்லையே ஏன்? இன்றைக்கும் ஐ டி துறையில் தொழிற்சங்கங்களுக்கு இடமில்லை. இதைப் பற்றி அங்கே பணிபுரியும் ஒருவரும் கவலைப்படவில்லை. நல்ல சம்பளம், ஏராளமான சலுகைகள், வெளிநாட்டு வாய்ப்புக்கள் – அப்புறம் எதற்கு சங்கங்கள்? ஆனால் ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஒரு பெரிய நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானவர்களை வேலைநீக்கம் செய்த போது வேலையிழந்தவர்கள் உடனே தொழிற்சங்கம் வேண்டுமென்று கொடிபிடித்தனர். இவர்கள் ரீ-ஸ்கில்லிங் எனப்படும் மாற்றுத்திறன்படுத்தலில் தேர்ச்சி பெறவில்லை, இடம் மாறவும் ஒப்புதலில்லை. திறமையும் குறைவாக இருந்தது. எனவே கடைசிகட்ட நடவடிக்கையாகவே பணிநீக்கம் செய்தோம் என்று அறிக்கை வெளியிட்டது நிறுவனம். இப்போது கேள்வி பணிநீக்கம் செய்தது சரியா தவறா என்பதல்ல. இத்தனை காலம் கைநிறைய சம்பளம் கிடைத்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கு எதற்கு உங்கள் தொழிற்சங்கங்கள் என்று துச்சமென மதித்த ஐ டி ஊழியர்கள், பிரச்சினை என்று வந்தவுடன் தொழிற்சங்கங்கள் வேண்டும் என்று கூச்சலிடுவது வடிகட்டிய சுயநலமில்லையா? சரி, கஷ்டம் என்று வந்தபோதுதான் தெரிகிறது என்று சொல்லலாம், ஆனால் இன்றைக்கும் தொழிற்சங்கங்கள் இல்லையே? பணியில் இருப்பவர்கள் யாரும் தொழிற்சங்கத்தைத் தொடங்குவதில் அக்கறை காட்டவில்லையே ஏன்? தொழிற்சங்கங்கள் இல்லாமலும் அவர்கள் பணிச்சூழல் நன்றாக இருக்கிறது என்பதாலா? அல்லது தொழிற்சங்கங்கள் அவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதாலா?
முதலில் பொதுவுடைமைத் தத்துவம்தான் என்ன? சுருக்கமா சொல்லணும்னா நிலம் தொழிற்சாலைகள் போன்ற எல்லாமே அரசுடைமை. தனிமனிதன் தொழில் தொடங்க முடியாது, நிலத்துக்கு சொந்தம் கொண்டாட முடியாது. நிலத்திலும் தொழிற்சாலையிலும் வேலை செய்வதென்னவோ மக்கள் தான். ஆனால் சம்பளம் அல்லது கூலி மட்டும் தான், லாபம் என்பது கிடையாது. ஏன்னா ரெண்டு காரணம் – ஒண்ணு மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களைக் கொடுக்க வேண்டுமென்பதால் லாபமே கிட்டத்தட்ட கிடையாதுன்னு சொல்லலாம், ரெண்டு அப்படியே லாபம் வந்தாலும் அது அரசின் பிற திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
இப்போ யோசிச்சு பாருங்க, ஒரு ஓட்டப்பந்தயத்தில் 10 பேர் ஓடறாங்க. நீங்க கடினமா பயிற்சி செஞ்சு முதலாவதா வரீங்க. ஆனா பரிசுத்தொகையை பத்துபேருக்கும் சரிசமமாப் பகிர்ந்து தருவோம்னு சொன்னா, நீங்க பயிற்சி செய்வீங்களா? அதே மாதிரிதான் நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சாலும் எல்லோருக்கும் கிடைக்கும் குறைந்த சம்பளம்தான் உங்களுக்கும். என்னாத்த வேலை செஞ்சு என்னாத்த சம்பாதிச்சுங்கற மனநிலை. இதனால உற்பத்தித்திறன் குறைவு.
கம்யூனிஸம் என்பது உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமைக்கானது. சரி, எல்லோருமே தொழிலாளர்களாக இருந்து விட்டால் முதலாளி? என்னது முதலாளியா? பேசவே கூடாது. அரசாங்கம் தான் எல்லாத்துக்கும் ஓனர். லாபமே இல்லாம அல்லது குறைந்த லாபத்துக்கு உற்பத்தி செய்தால் புதுசாக தொழிற்சாலைகள் தொடங்குவது எப்படி? முதலீடு செய்வது எப்படி? இதுதான் சோவியத் ரஷ்யாவில் பிரச்சினைக்கு ஆரம்பம். புதிய முதலீட்டுக்குப் பணம் வேண்டும், அதைவிட முக்கியமாக ராணுவத்துக்கு ஏராளமான செலவு செய்ய வேண்டும். அப்போ சம்பளத்தைக் குறைத்தாக வேண்டும். உற்பத்திறன் குறைவு. எல்லாவற்றிற்கும் தட்டுப்பாடு என்ற நிலைமை. எத்தனை காலம்தான் இதனை மக்கள் பொறுத்துக் கொள்வார்கள்?
சோவியத் ரஷ்யாவின் கடைசி அதிபர் மிகைல் கோர்பசேவ் பெரெஸ்த்ரோய்க்கா க்ளாஸ்னாட் என்று இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அப்போதுதான் பல உண்மைகள் வெளிவந்தன. மாமிச உற்பத்தி என்று ஒரு கணக்கு காட்டுவார்கள். ஒரு ஆட்டின் மாமிசம் என்பது அதன் உயிர் எடையை விடவும் குறைவாக இருக்கும் கொம்பு, தோல், குளம்பு போன்ற கழிவுகள் போக. ஆனால் உற்பத்தியை உயர்த்திக் காட்ட உயிரோடு இருந்த ஆட்டின் எடையைக் காட்டியிருக்கிறார்கள். ஆக, புள்ளிவிவரப்படி உற்பத்தி அதிகம். ஆனால் மக்களுக்குக் கிடைத்ததோ குறைவு. மேலும் அங்கு அரசாங்கத்தின் புள்ளிவிவரத்தைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை கிடையாது.
இது ஒருபுறமென்றால் இன்னொரு புறத்தில் கட்சியில் பொறுப்பாளர்கள் மட்டும் பற்றாக்குறைகளினால் பாதிக்கப்படாமல் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இங்கேயும் பொதுவுடைமைத் தத்துவம் பேசும் பலரது வாரிசுகள் அமெரிக்காவில் படிப்பதும் முதலாளித்துவ பன்னாட்டு நிறுவங்களில் பணிபுரிவது சாதாரணம். ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய Animal Farm – இது தமிழிலே கூட விலங்குப் பண்ணை என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது – படித்தால் கம்யூனிஸ சித்தாந்தமும் விளங்கும், அது எப்படி அழியும் என்பதும் சுலபமாக விளங்கும். அதுதான் நடந்தது சோவியத் ரஷ்யாவில்.
கம்யூனிஸம் என்பது எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று பாடுபடுகிற சித்தாந்தமாயிற்றே! அப்புறம் அதனை எப்படிக் குறை சொல்லலாம் என்று ஒரு கும்பல் கிளம்பும்.
நன்றாக யோசித்துப் பாருங்கள், கம்யூனிஸம் என்பது ஏழைகளும் குறைந்த சம்பளத்துடன் ஏமாற்றப்படும் தொழிலாளர்களும் இருக்கும் வரைக்கும் தான் நிலைக்கும். எப்போது ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்கிறதோ எப்போது தொழிலாளர்களை ஏய்ப்பது நிற்கிறதோ அப்போது கம்யூனிஸத்துக்கே தேவையில்லை. இன்னொரு பக்கத்தில் திறமைக்கு மதிப்பில்லை அங்கீகாரமில்லை எனும்போது மனிதனின் உற்சாகம் குறையும், உற்பத்தித்திறன் பாதிப்படையும்.
நான், எனது மகன், எனது பேரன் என்று சொத்து சேர்த்து வைக்க முடியாது என்கிறது கம்யூனிஸம். நீ எவ்வளவு உழைக்கிறாயோ அவ்வளவு உயரலாம் என்ற நிலையை மறுக்கிறது கம்யூனிஸம். பரவாயில்லை, நான் எவ்வளவு உழைத்தாலும் எல்லோரையும் போல குறைந்த சம்பளம் கொடுத்தால் போதும், என் வாரிசுகளுக்கு சொத்து சேர்க்க ஆசையில்லை, நான் காலம் பூராவும் வண்டி மாடு போல உழைத்துக் கொண்டேயிருப்பேன், என் உழைப்பால் அடுத்தவன் வயிறு நிறைந்தால் அதுவே என் சந்தோஷம் என்ற எண்ணம் உங்களுக்கிருந்தால் உங்களுக்கு ஏற்ற சித்தாந்தம் கம்யூனிஸம். வாழ்க வளமுடன்.
ஸ்ரீஅருண்குமார்