
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. அதை விமர்சிக்க அவர்களுக்கு ஏதேனும் உரிமை உள்ளதா? கடந்த காலங்களில் காங்கிரஸின் சில செயல்களை நாம் இங்கே பார்ப்போம், பின்னர் ரஞ்சன் கோகோய் பரிந்துரைக்கப்பட்டதை விமர்சிக்க அவர்களுக்கு ஏதேனும் உரிமை இருக்கிறதா என்று முடிவு செய்யலாம்.
நீதிபதி மொஹம்மதலி கரிம் சாக்லா:
எம். சி. சாக்லா (30 செப்டம்பர் 1900 – 9 பிப்ரவரி 1981) 1941 இல் பம்பாய் உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார், பின்னர்1948 முதல் 1958 வரை அதன் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். ஓய்வுக்குப் பின்னர் அவர் 1958 முதல் 1961 வரை அமெரிக்காவிற்கான இந்தியாவின் தூதரானார். ஏப்ரல் 1962 முதல் 1963 செப்டம்பர் வரை இங்கிலாந்தில் இந்தியாவின் உயர் ஆணையராக பணியாற்றினார். பாகிஸ்தான் தந்தை ஜின்னாவை அவரது தேசியவாத கொள்கை காரணமாக ஆத்மார்த்த குருவாக கருதி முஸ்லீம் லீக்கில் உறுப்பினராக இருந்தார். சாக்லாவின் நியமனத்தை, நீதியாளர் எம்.சி. செடல்வாட் அந்த காலத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நீதிபதி பஹ்ருல் இஸ்லாம்:
நீதிபதி பஹ்ருல் இஸ்லாம் 1962 முதல் 1972 வரை காங்கிரசின் (I) மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அந்த மாநிலங்களவை உறுப்பினர் பின்னர் 20.01.1972 அன்று அசாம் மற்றும் நாகாலாந்து உயர்நீதிமன்றத்தில் நீதிபதியானார். 1.03.1980 அன்று குவஹாத்தி உயர்நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்றார். இனிமேல் தான் ட்விஸ்ட்டே, உயர்நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் 14.12.1980ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இப்போது கதையின் முக்கிய திருப்பம். எஸ்.சி. நீதிபதியாக இருந்த காலத்தில்,
அப்போதைய பீகார் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ராவுக்கு மோசடி மற்றும் குற்றவியல் முறைகேடு தொடர்பான விசாரணையில் இருந்து விடுபட அனுமதி அளித்தார். மோசடி வழக்கில் பீகார் முதலமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ராவுக்கு நிவாரணம் வழங்கிய தீர்ப்பை வழங்கிய 4 வாரங்களுக்குப் பிறகு, நீதிபதி இஸ்லாம் உச்சநீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்கிறார். அதுவும் ஓய்வு பெறுவதற்கு ஆறு வாரங்களுக்கு முன்பு ராஜினாமா. அவர் 6 வாரங்கள் காத்திருக்க முடியும், ஆனால் அவர் ஏன் இவ்வளவு அவசரத்தில் ராஜினாமா செய்தார்? அசாம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 19 ஆகும். அதனால் ஜனவரி 13 அன்று ராஜினாமா!!!, காங்கிரஸின் மீது அவர் கொண்ட விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பஹருல் இஸ்லாத்தை மாநிலங்களவை எம்.பி.யாகவும், குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாகவும் உயர்த்துவது நீதித்துறையின் மிகவும் சுயாதீனமான தன்மை மீதான தாக்குதலுக்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு.
நீதிபதி எம். ஹிதாயதுல்லா
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நவம்பர் 1956 இல், நீதிபதி எம். ஹிதாயதுல்லா நியமிக்கப்பட்டார். டிசம்பர் 1, 1958 அன்று, அவர் இந்திய உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதியாக பதவி உயர்வு பெறுகிறார்.
அவரது காலத்தில் அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மிக இளைய நீதிபதியாக இருந்தார். ஏறக்குறைய 10 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றிய பின்னர், அவர் பிப்ரவரி 28, 1968 அன்று இந்தியாவின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும்போது, இந்தியாவின் முதல் முஸ்லிம் தலைமை நீதிபதி ஆனார். அவர் டிசம்பர் 16, 1970 அன்று ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின்னர், 1979 ஆம் ஆண்டில் ஹிதாயத்துல்லா இந்தியாவின் துணைத் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ப்ரோடோகால் படி இதனால் அவர் மாநிலங்களவையின் தலைவராகவும் பணியாற்றினார். இதன் மூலம், இந்திய தலைமை நீதிபதி, இந்தியக் குடியரசுத் தலைவர், மற்றும் இந்திய துணை ஜனாதிபதியாக, மூன்று அலுவலகங்களில் பணியாற்றிய ஒரே நபராக ஹிதாயதுல்லா விளங்கினார்.
நீதிபதி கோகா ராவ், எதிர்க்கட்சிக்கான ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட, 1967 ல் தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் தேர்தலில் ஜாகிர் உசாய் வெற்றி பெற்றார்.
1973 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி அவரை மீறி ஏ.என்.ரேயை தலைமை நீதிபதியாக நியமித்தபோது உச்ச நீதிமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்த நீதிபதி கே.எஸ். ஹெக்டே, ஜனதா கட்சியில் சேர்ந்தார், பின்னர் கட்சியின் டிக்கெட்டில் பெங்களூரிலிருந்து (தெற்கு) மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 முதல் 1980 வரை மக்களவை சபாநாயகராக பணியாற்றினார்.
நீதிபதி விஜய் பகுகுணா
பிப்ரவரி 28, 1947 அன்று அலகாபாத்தில் பிறந்த விஜய் பகுகுணா அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் பின்னர் பம்பாய் உயர் நீதிமன்றத்திலும் நீதிபதியாக வருவதற்கு முன்பு வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். விஜய் பகுகுணா, முன்னாள் உத்தர பிரதேச முதல்வர் ஹேம்வதி நந்தன் பகுகுணாவின் மகனாவார்.
நந்தன் பகுகுணா சஞ்சய் காந்திக்கு நெருங்கிய நண்பராவார். அரசியலில் சேர விஜய் பகுகுணா 1995 பிப்ரவரியில் ராஜினாமா செய்தார். பின்னர் விஜய் பகுகுணா உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் முதல்வரும் ஆனார்.
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா
தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா நவம்பர் 1991 இல் ஓய்வு பெற்றார். 1984 சீக்கிய படுகொலை குறித்த வழக்கில் அவர் காங்கிரசுக்கு சாதகமான ஒரு தீர்ப்பை கொடுத்திருந்தார். ராஜீவ் காந்தி நியமித்த 1984 சீக்கிய எதிர்ப்பு படுகொலை குறித்த விசாரணை ஆணையத்திற்கு நீதிபதி மிஸ்ரா தலைமை தாங்கினார். விசாரணை ஒரு மோசடி என்பது அனைவருக்கும் தெரியும். ஆதாரங்களை கொடுப்பது பாதிக்கப்பட்டவர்கள் மேலே விழுந்தது!!! அதனால் விசாரணை முடிவில் காங்கிரஸ் / ராஜீவ் காந்தி களங்கமில்லாமல் சுத்தமாக வெளியே வந்ததில் ஆச்சரியமில்லை. இதற்கு பரிசாக நீதிபதி ரங்கந்தா மிஸ்ரா 1990 இல் தலைமை நீதிபதியானார். ஆனால் கதை இங்கே முடிவடைந்ததா? நீதிபதி மிஸ்ரா தேசிய மனித உரிமை கழகத்தின் (என்.எச்.ஆர்.சி./NHRC) முதல் தலைவரானார். அதைப் பற்றி சிந்தியுங்கள். 1984 ஆம் ஆண்டில் சீக்கிய எதிர்ப்பு படுகொலையில் யாரும் யாரையும் கொல்லவில்லை என்று கூறியவர் 1993 ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசாங்கத்தால் என்.எச்.ஆர்.சி.இன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் காங்கிரஸ் அராஜகம் இன்னும் முடியவில்லை. என்.எச்.ஆர்.சி.யில் அவரது பதவிக்காலம் 1996 இல் முடிந்தது. செய்த உதவிக்கு காங்கிரஸ் இன்னும் கடன் பட்டிருந்தது. எனவே, 1998 ல் காங்கிரஸ் நீதிபதி மிஸ்ராவை மாநிலங்களவை உறுப்பினராகி அழகு பார்த்தது. இது காங்கிரசின் வரலாறு. கொசுறு . . . ரங்கநாத் மிஸ்ரா, CJI தீபக் மிஸ்ராவின் மாமா ஆவார்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர், Dr.MSGill, அதாவது இந்திய வாக்காளர்கள் ஓட்டு போட்டு மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் ஒரு அரசியலமைப்பு பதவியில் இருந்தவரை ராஜ்ய சபாவின் காங்கிரஸ் உறுப்பினராக அமர்த்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அமைச்சராகவும் பணியாற்றினார். தேர்தல் ஆணையர் டி. ஏன். சேஷன் காங்கிரஸ் வேட்பாளரானார். அது சரியா?
நீதிபதி அபய் திப்சே
அபய் திப்சே யாரென்றால், பெரும் அரசியல் புயல்களை விதைத்த பெஸ்ட் பேக்கரி, சோராபுதின் என்கௌண்டர் போன்ற வழக்குகளை கையாண்டவர். இந்த வழக்குகளில் இவரின் தீர்ப்புகள் பல அரசியல் பின் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. 2008 மாலேகான் குண்டுவெடிப்பை இந்துக்கள் நடத்தியதாகவும், இந்து அமைப்புகள் வெடிகுண்டு கலாச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம் சாட்டியவர், பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவர் 1979 இல் பார் கவுன்சிலில் சேர்ந்தார், 1987 இல் மாஜிஸ்திரேட் ஆனார்; மாவட்ட நீதித்துறையில் 24 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் அவர் 2011 இல் உயர் நீதிமன்றத்திற்கு பணி உயர்த்தப்பட்டார். அவர் மே 2016 இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார், அங்கிருந்து அவர் மார்ச் 2017 இல் ஓய்வு பெற்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் தலைமை நீதிபதி சதாசிவம் என்றாலும், ஒரு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ். ஃபஸ்ல் அலி ஆவார், அவர் 1952 மே மாதம் ஓய்வு பெற்றார். அடுத்த மாதம் ஒடிசாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1992இல் உச்சநீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற பாத்திமா பீவி, 1997ஆம் ஆண்டில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
கோகோயின் தந்தை, கேசப் சந்திரா கோகோய் ஒரு காங்கிரஸ் தலைவராகவும், 1982 ல் அசாமின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். அயோத்தி மற்றும் ரஃபேல் தொடர்பான முக்கிய தீர்ப்புகளுக்கான ஒரு ‘லஞ்சமாக‘ கோகோய்க்கு மாநிலங்களவை நியமனம் என்றும் பலர் குற்றம் சாட்டினர். அயோத்தி தீர்ப்பானது, பாப்டே (தற்போதைய தலைமை நீதிபதி), நீதியரசர் சந்திரசுட் (தலைமை நீதிபதி வரிசையில் அடுத்து இருப்பவர்), நீதியரசர் அசோக் பூஷன் மற்றும் நீதியரசர் எஸ் அப்துல் நசீர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் ஒருமனதாக கொடுத்த தீர்ப்பு. இதேபோல், ரஃபேலும் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பாகும்.
இவற்றுள் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், முந்தைய நீதிபதிகள் காங்கிரஸ் கட்சியால் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஜனாதிபதியால் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்ட 12 உறுப்பினர்களில் ஒருவராக ரஞ்சன் கோகோய் இருக்கிறார். அவர் பாஜகவில் சேரவில்லை, பாஜக அவருக்கு தேர்தலில் வாக்களிக்கவில்லை. அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி செயல்படுவதால் இது ஒரு அரசியல் முடிவு என்று வாதிட்டாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. ஒரு கட்சியிலிருந்து அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அந்த கட்சியின் கொறடாவுக்கு கட்டுப்பட்டவர்கள். அவை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை அவர்களால் மீற முடியாது. பொதுவாக, அவர்கள் கட்சி மற்றும் ஆட்சியை விமர்சிக்க முடியாது. மறுபுறம், ரஞ்சன் கோகோய் போன்ற பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் ஒரு சுயாதீன உறுப்பினர், எந்தவொரு கட்சி கொறடாவுக்கும் கட்டுப்பட்டவர் அல்ல. எனவே, மாநிலங்களவையில் பாஜக அரசுக்கு எதிராக ரஞ்சன் கோகோய் பேசினால், அரசாங்கமோ அல்லது பாஜகவோ எதுவும் செய்ய முடியாது.
நீதிபதி பஹ்ருல் இஸ்லாம், நீதிபதி அபய் திப்சே, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா, டி. ஏன். சேஷன் போன்றவர்கள் காங்கிரஸில் இணைந்து அவைக்கு சென்றபோதெல்லாம் கெடாத ஜனநாயகம் . . . ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட 12 உறுப்பினர்களில் ஒருவராக நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவைக்கு செல்லும்போது கெட்டுவிட்டதா?