பாராளுமன்றமா, இல்லை பந்தாடும் மைதானமா?

 

கடந்த சில தினங்களாக இந்தியாவில் மிகவும் பேசப்படுவது ரபேல் விவகாரம். பேல் பூரி உண்பவர் முதல் பெல்லி டான்ஸ் காண்பவர் வரை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது இந்த ஒன்று தான்.

ஒரு அரசாங்கம் ராணுவ விமானங்கள் மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் வாங்கும் போது சர்ச்சை கிளம்புவது நம் பாரத நாட்டில் புதிதில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த போபோர்ஸ் ஊழல் நம் மக்கள் அறியாத ஒன்றில்லை.

கடந்த ஆண்டில் பாரத அரசாங்கம் பிரென்ச் அரசாங்கத்துடன் நேர்முகமாக செய்த ஒப்பந்தமே சர்ச்சைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பென்னவென்றால் நம் அரசாங்கம் மட்டுமின்றி, பிரென்ச் அரசாங்கமும், நமது உச்ச நீதிமன்றமும் இதில் ஊழல் இல்லை என்று கூறிய பின்னரும் தொடர்வது தான்.

இது பற்றி கருத்து முரண்பாடு இருப்பின், பாரதத்தின் எதிர்க்கட்சி மட்டுமின்றி எந்த கட்சி வேண்டினும், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை. ஒரு முறை அளிக்கலாம், இருமுறை, ஏன் பல முறை கூட அளிக்கலாம்.

ஆனால், யார் கூறினாலும் கேட்க மறுக்கும் ஒருவரிடம் எப்படி அளிக்க முடியும்? உச்சநீதி மன்றமே கூறினாலும் நான் கூறுவது தான் சரி என்று வீண்வாதம் செய்வோரிடம் பேசி தான் என்ன பலன்?

தூங்குபவர்களை கூட எழுப்பி விடலாம், ஆனால் தூங்குவது போன்று நடிப்பவர்களை எவ்வாறு எழுப்ப முடியும்?

ஜனநாயகத்தின் கோயில் என்று போற்றப்படும் பாராளுமன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது தான், நாம் எவ்வளவு பெரிய தவறு புரிந்துள்ளோம் என்று உணர முடிகிறது.

கண்ணடிப்பது, காகித கோப்புக்களை வீசுவது, காட்டுமிராண்டி போன்று கூச்சலிடுவது, சபாநாயகரையே பேச விடாமல் தடுப்பது என்று பள்ளி கல்லூரி மாணவர்கள் போன்று நடந்து கொள்கிறார்கள் சிலர்.

குற்றம் என்றால் அதற்கு ஆதாரம் தேவை. சரி, ஆதாரம் உள்ளது என்றால் அதை உறுதி செய்து மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். நான் ஆதாரம் உறுதி செய்ய மாட்டேன். எப்படி இதுவரை கண்மூடி தனமாக எங்களின் வார்த்தையை நம்பினீர்களோ, அது போன்றே இப்பொழுதும் நான் கூறினால் கண்மூடி தனமாக நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும் என்று குழந்தை போன்று அடம் பிடித்தால், இவரை என்ன செய்வது? நீங்களே சொல்லுங்கள்.

சரி, உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தருகிறேன் என்று அமைச்சர் எழுந்து நின்றால், அவர் மீது காகித விமானம் விட வேண்டியது.

ஒரு வட்டார வழக்கு ஒன்று உண்டு. ஒரு மாணவன் நன்றாக படித்தால் அவன் கலெக்டர் ஆகவோ, துறை சார்ந்த மேலாளராகவோ வருவான் என்றும், படிக்காத, கடைசி வரிசை மாணவன் அரசியல்வாதியாக வருவான் என்றும் கூறுவார்.

அது எவ்வளவு பெரிய உண்மை என்பது, பாராளுமன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது தான் நமக்கு விளங்குகிறது.

விவாதம் நடக்கும் போது கண்ணடிப்பது, காகித விமானம் விடுவது, கூச்சலிடுவது, வேடிக்கை பார்ப்பதுஎன்று இருந்து விட்டு வெளியில் வந்து ஒன்றுமே புரியவில்லை, அவர்கள் தந்த விளக்கம் போதவில்லை என்று கூவி கொண்டிருந்தால் என்செய்ய?

இவர் தான் இப்படி என்றால், ஊடகம் அதை விட கேவலமாக செயல்படுகிறது.

சபாநாயகர் ஆதாரங்களை சமர்ப்பிக்க அனுமதிக்கவில்லை” என்ற ஒரு தலைப்புடன் செய்தி.

என்ன கொடுமை இது? நீங்கள் கொண்டு வந்த ஆதாரங்களை நீங்களே உறுதி செய்ய முன்வரவில்லை என்று தானே அனுமதிக்கவில்லை? அப்படி என்றால் தலைப்பு என்னவாக இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையை மக்கள் உங்களிடமே விட்டு விடுகிறேன்.

இதுவரை திருடர்கள் திருட்டு தானமாக திருட்டை செய்து தான் நாம் கண்டுள்ளோம். ஆனால் இன்றோ இவர்கள் அப்பட்டமாக தங்கள் திருட்டு வேலையை செய்ய துணிந்துள்ளார்கள். ஊடகங்கள் துணையுடன் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பாடுபடுகிறார்கள்.

பாராளுமன்ற நிகழ்வுகளை காணாத மக்கள் என்ன எண்ணுவார்கள்? இந்த ஊடகம் அவர்களை ஏமாற்ற தானா இவ்வாறு செய்தி வெளியிடுகிறது? வெட்ககேடல்லவா?

சரி, இந்த ஊடகங்கள் தூக்கி வைத்து கொஞ்சும் கதாநாயகனாகவே இருந்து விட்டு போகட்டும் அவர். ஆனால் மக்கள் எப்படி அதை ஏற்று கொள்வார்கள்?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா.

இவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். இவருக்கென்று ஒரு தொகுதியும் உண்டல்லவா? அந்த தொகுதியில் உள்ள கிராமத்தை மேம்படுத்த என்ன செய்தார் என்று பட்டியலிட முடியுமா?

சரி விடுங்கள், பட்டியலிட்டாலும் வரிசைப்படி எண்களை எழுத தான் முடியுமா என்றால் அது வேற கதை.

சில வருடங்களே ஆட்சியில் இருந்த காமராஜர் எவ்வாறு தமிழகத்தை மாற்றியமைத்தார் என்பது நாம் அறிந்ததே. அந்த கட்சியை சேர்ந்த ஒரு குடும்பம் (அந்த குடும்பம் தானே கட்சி?) மூன்று நான்கு தலைமுறையாக அமேதி என்னும் ஒரு குக்கிராமத்தை முன்னேற்ற முடியாமல் இருப்பது வேடிக்கையாக இல்லை?

பெருநகரமாக கூட வேண்டாம், இந்நேரம் அதை ஒரு சிறு நகரமாகவாவது மாற்றியிருக்க வேண்டாமா?

தனது ஒரு தொகுதியையே மேம்படுத்த தெரியாத, மேம்படுத்த முடியாத, மேம்படுத்த விரும்பாத ஒருவரை எப்படி நாம் பாரத நாட்டின் பிரதமராக காண்பது?

இன்றும் நேரம் உள்ளது, அவரது தொகுதியை மேம்படுத்த இந்த இறுதி ஆறு மாத காலங்களை அவர் சரிவர உபயோகித்து சாதித்து காட்டினால் இந்த பாரத மக்கள் வேண்டாம் என்றா கூற போகிறார்கள்?

நம்பிக்கையுடன்,

மகேஷ் 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.