
சமீப காலமாக தமிழகத்தில் — தமிழகத்தில் மட்டும் ஓங்கி எழுந்து கொண்டிருக்கும் ஒரு கோஷம் – கார்ப்பொரேட்டுகளை ஒழித்துக் கட்டுவோம். திரைப்படங்கள் தொடங்கி வார இதழ்கள் சிறுகதைகள் குறும்படங்கள் யூட்யூப் சேனல்கள் என்று எல்லாவற்றிலும் கார்ப்பொரேட்டுகளை ஒழித்தால்தான் நாடு உருப்படும் என்ற செய்தி ஆணித்தரமாக வலியுறுத்தப்படுகிறது. என்னவோ தெரியலை இந்த நாட்டிலே 27 மாநிலங்களிலும் 9 யூனியன் பிரதேசங்களிலும் இல்லாத எதிர்ப்பு தமிழ்நாட்டில் மட்டும் ஏன்?
இதுல முக்கியமான இன்னொரு விஷயம் என்னன்னா கார்ப்பொரேட்டுகளை ஒழிப்போம்னு பேசுற அத்தனைபேரும் மறக்காம சொல்ற இன்னொண்ணு — அரசு ஊழியர்கள் அனைவரும் சோம்பேறிகள், மக்களின் ரத்தம் குடிக்கும் அட்டைகள், ஊழல் பேர்வழிகள். இதை மூச்சுப்பிடிச்சுட்டு சொல்லி முடிச்ச அதே கையோட சொல்வது – கார்ப்பொரேட்டுகள் தொழிலாளிகளை கசக்கிப் பிழிகிறார்கள், குறைவான சம்பளம் கொடுத்து கடினமாக வேலை வாங்குகிறார்கள்.
என்னங்க இது? நிறைய சம்பளம் வாங்கிட்டு சும்மா இருக்கறவங்களை புடிக்காது. அப்போ அவங்க வேலை செய்யற அரசு நிறுவனங்களை இழுத்து மூடலாம்னா அய்யய்யோ எல்லாத்தையும் தனியார் துறைக்குத் தாரை வார்த்துட்டாரேன்னு அலறல். சரி, வாங்கற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்ங்கன்னு கட்டுப்பாடுகளை கடினமாக்கினால் உடனே அய்யய்யோ அரசு ஊழியர்களை கசக்கிப் பிழியறாங்களேன்னு பொலம்பல். அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செஞ்சா அதுக்கும் ஆதரவு. என்னதான்யா உங்க பிரச்சினை?
சில வருடங்களுக்கு முன்பு ஐ டி துறையில் ஏராளமான சம்பளம் கொடுக்கப்பட்டது. அப்போதெல்லாம் கார்ப்பொரேட்டுகள் கடவுளாகக் காட்சியளித்தனர். இன்றைக்கு போட்டியின் காரணமாக லாபம் குறைந்ததால் சம்பளமும் குறைக்கப்பட்ட பிறகு அதே கார்ப்பொரேட்டுகள் சாத்தானாகக் காட்சியளிக்கின்றனர். இன்றைக்கும் பல கார்ப்பொரேட் நிறுவனங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கி வருகின்றன. ஆனால் ஊதியத்துக்கேற்ப உழைப்பு என்பதும் சரிதானே!
அரசு ஊழியர்களின் சம்பளம் தனியார் துறையை விட பலமடங்கு அதிகம். ஒத்துக்கறேன். ஆனா வாங்குற சம்பளத்துக்கு அவிங்க வேலை செய்யலைன்னு பொலம்பறீங்களா? சரி அதையும் ஒத்துக்கறேன். கார்ப்பொரேட்டுகளில் சம்பளம் குறைவு. சரி. கார்ப்பொரேட் நிறுவனங்களில் வேலை செய்யாமல் பஜனை செய்ய முடியாது. ஆமாம். அப்போ இதுல என்ன செய்யணுங்கறீங்க?
ஏழை நெசவாளர்களின் தயாரிப்பான கைத்தறித் துணிகளை விற்கும் கோ-ஆப்டெக்ஸும் காதியும் ஈயடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் கார்ப்பொரேட்டுகள் தயாரித்து விற்கும் துணிவகைகள்தான் இங்கே எல்லாரது விருப்பமும். என்னங்கய்யா இது? ஹிந்தியை எதிர்ப்போம், ஆனால் எங்கள் பள்ளிகளில் ஹிந்தி கட்டாய பாடம் என்று உங்கள் தலைவர்கள் வழிகாட்டுவது போல தொண்டர்களுமா?
கார்ப்பொரேட்டுகளான ஜியோ, ஏர்டெல் & வோடஃபோன் இவைதான் நம் மக்களின் தேர்வு. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 90% இவைதான். அரசு நிறுவனமான பி எஸ் என் எல்? அட போங்க சார்.
கார்ப்பொரேட்டுகளின் தயாரிப்பான பைக்குகள், கார்கள், பஸ்கள், ட்ராக்டர்கள் – இவற்றையெல்லாம் வாங்காமல் நிறுத்தினாலே போதுமே?
காலங்காலமா வீட்டிலே காய வெச்சு பக்கத்துல இருக்கற மாவு மிஷின்லே அரைச்சு உபயோகப்படுத்தின மிளகாய்ப்பொடி மசாலாப்பொடிகள் கூட இப்போ கார்ப்பொரேட்டுகளின் தயாரிப்புத்தான்.
சாப்பிடுகிற அரிசி கூட இப்போட கார்ப்பொரேட்டுகளின் ப்ராண்டுடன்தான்.
அவசியமே இல்லாத குளிர்பானங்கள் – இதையாவது ஒழிச்சுக் கட்டலாமே போராளிகள்? அடடா சரக்கோட மிக்ஸ் செய்யறதுக்கு வேற என்ன வழி ப்ரோ?
அட என்ன ப்ரோ.. இந்த சரக்கு கூட கார்ப்பொரேட்டுகளோட தயாரிப்புதான். இது இல்லாம ஒரு நாள் இருக்க முடியுமா? ஒழுங்கா கிராமத்துல கஷ்டப்படுறவன் உற்பத்தி செய்யற கள்ளோட நிறுத்தியிருக்கலாம். சீமைச்சரக்கு மேலே ஆசை. விவசாயியை வீழ்த்தி கார்ப்பொரேட்டை தூக்கி வெச்சிருக்கு.
நம்மோட உயிர்மூச்சுன்னு சொல்லணும்னா திரைப்படங்களை சொல்லலாம். அட ஆமாங்க இப்போ தமிழ்த்திரைப்படங்கள் கூட கார்ப்பொரேட்டுகள்தான். அதுலயும் பாருங்க இருபதாம் நூற்றாண்டு நரி ன்னு ஒரு அமெரிக்கத் திரைப்படக் கம்பெனி. அவிங்க கூட தமிழ்ப்படம் தயாரிக்கறாங்க.
அந்தப் படத்தைப் பாக்கறதுக்கு தியேட்டருக்குப் போகலாம்னா உள்ளூர்ல இருக்கற நம்ம மக்களோட தியேட்டர் வேணாம். கார்ப்பொரேட்டுகளின் மால்கள்தான் நம்மோட விருப்பம்.
காலியில குடிக்கற டீ காபி, டிபனுக்கு வாங்கற இட்லி மாவு, சாப்புடற அரிசி, சாம்பார் பொடி, ரசப்பொடி, மசாலாப் பொடி, உருளைக்கிழங்கு சிப்ஸு, தெனமும் தேவைப்படற சரக்கு, பத்த வெக்கற பீடி சிகரெட்டு, அதைப் பத்த வெக்கற தீப்பெட்டி, அதுல மிக்ஸ் பண்ண சோடா கூல்ட்ரிங்க்ஸ் தினமும் 200 கிடைக்க வழி செய்யற சோஷியல் மீடியா ஓட்டற பைக்கு காரு போகுற பஸ்ஸு போடற உடைகள் பாக்குற சினிமா கையிலெ வெச்சிருக்க மொபைலு – இப்படி எல்லாமே கார்ப்பொரேட்டுகளின் தயாரிப்புத்தானே? கார்ப்பொரேட்டுகளை ஒழித்துக் கட்டிவிட்டால்? அப்புறமென்னா…. எல்லாரும் கூட்டம் கூட்டமா ஆடு மாடு மேய்க்கலாம்…
ஸ்ரீஅருண்குமார்