
தமிழகத்திற்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அணை நிரம்பினால் பாதுகாப்பு கருதி செயற்பொறியாளர்களே நீரை திறந்து விடலாம் என்று பொதுப்பணித்துறை அனுமதி அளித்துள்ளது-
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகளில் 15 பெரிய அணைகள் பெரும்பாலும் நிரம்பி உள்ளன. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பியுள்ளன. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு 7ஆம் தேதி சிவப்பு எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. எனவே, கன மழை பெய்து நீர்நிலைகளில் கரை உடைப்பு ஏதும் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய 5 லட்சம் மணல் மூட்டைகளை பொதுப்பணி துறை தயார் நிலையில் வைத்துள்ளது.
இதேபோல செயற் பொறியாளர்கள் தலைமையில் அணைகளின் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணிக்குமாறும், நீர் வரத்து, நீர் வெளியேற்றம் குறித்த தகவல்களை தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணை நிரம்பினால் செயற்பொறியாளார்கள் நீரை பாதுகாப்பு கருதி திறந்து விடலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து, இருப்பு, வெளியேற்றம் குறித்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தெரிவிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.