
இப்போதெல்லாம் ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் கட்டமைப்பை மாற்றியமைக்க துப்பாக்கிகள் தேவையில்லை – மனித உரிமை என்ற பெயரில் கோஷமிடும் கூட்டமே போதும் என்பதை நமது முந்தைய கட்டுரையான மக்கள்தொகைக் கட்டமைப்பு யுத்தத்தில் பார்த்தோம்.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் மற்றும் சில அரபு நாடுகளில் எழுந்த புரட்சிகளின் விளைவாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளை நோக்கி அகதிகளின் பெருங்கூட்டம் படையெடுத்தது. எத்தகைய அகதிகள் எந்த நாட்டை நோக்கி புலம்பெயருகிறார்கள் என்பது நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம் மாறுபடும். அரபு நாடுகளிலிருந்து வெளியேறும் அகதிகள் ஐரோப்பாவில் தஞ்சம் புகுகின்றனர். உள்நாட்டுக் கலகம் அல்லது இன மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிரியா, இராக், எகிப்து லெபனான் போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளும் மெக்ஸிகோ மற்றும் பிற தென்அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளும் மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நீளமான காவல் குறைந்த எல்லையின் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்து விடுகின்றனர்.
இவ்வாறு அகதிகளும் சட்டவிரோத குடியேறிகளும் பெருமளவில் நாட்டுக்குள் நுழைவது விரிவான விவாதத்தைத் தூண்டியதோடல்லாமல் பல நாடுகளில் இத்தகைய திறந்த எல்லைகளை பலமாக எதிர்க்கும் தேசியவாத சக்திகளை உருவாக்கியிருக்கிறது. சட்டவிரோதமாக குடியேறுபவர்களைக் குறைக்கவும் அவ்வாறு குடியேறியவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் வகையிலும் கடுமையான குடியேற்ற சட்டங்களை ஹங்கேரியின் விக்டர் ஓர்பான், பிரிட்டனின் போரிஸ் ஜான்சன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் நிறைவேற்ற ஆரம்பித்துள்ளனர்.
யார் வேண்டுமானாலும் நுழையலாம் என்று எல்லையில் கதவைத் திறந்து வைத்திருக்கும் கொள்கையால் அகதிகளும் சட்டவிரோத குடியேறிகளும் ஏராளமாகக் குடியேறுவதால் ஐரோப்பாவின் மக்கள்தொகை கட்டமைப்பே பெருத்த அபாயத்துக்குள்ளாகியிருக்கிறது என்று ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் பெருத்த எதிர்ப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
மெக்சிகோ வழியாக நுழையும் சட்டவிரோத குடியேறிகளைக் காவலில் வைக்க அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம் தடுப்புக்காவல் மையங்களை ஏற்படுத்தியுள்ளதோடு அவர்களது சொந்த நாடுகளுக்கும் திருப்பி அனுப்பி வைக்கிறது.
மக்கள்தொகைக் கட்டமைப்பு மாற்றப்படுவதன் மூலம் விளையக்கூடிய அபாயங்கள் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் இந்தியா இந்தப் பிரச்சினையில் இவ்வளவு நாள் தூங்கிவிட்டு இப்போதுதான் விழித்துக் கொண்டிருக்கிறது. சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்தே இந்தியா எப்போதுமே அகதிகள் பிரச்சினையால் பாதிக்கப்படுவதில் முன்னணியில் இருந்திருக்கின்றது. 1947-49ல் பிரிவினையின் போதும் 1971 பங்களாதேச விடுதலைப் போருக்கு முன்னரும் மதரீதியான சிறுபான்மையினர் அகதிகளாக அன்றைய கிழக்கு பாக்கிஸ்தானிலிருந்து ஏராளமாகத் தஞ்சம் புகுந்தனர். பாக்கிஸ்தானியப் படைகள் ஹிந்துக்களை கொடூரமாக இனப்படுகொலை செய்ததை “The Blood Telegram” — ரத்த தந்தி என்ற புத்தகம் விவரமாக விளக்கியுள்ளது. உலகத்தையே கதிகலங்க வைத்த இந்தப் புத்தகம் இந்தப் படுகொலையை எதிர்த்து எதுவும் செய்யாமல் கையாலாகாத்தனத்தை வெளிக்காட்டிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹென்றி கிஸ்ஸிஞ்சரையும் அமெரிக்க அதிபர் நிக்ஸனையும் தலைகுனிய வைத்ததும் இந்தப் புத்தகம்தான்.
இதற்கடுத்த அகதிகள் புகுதல் இலங்கையில் நடந்த உள்நாட்டுக் கலவரத்தின்போது ஏற்பட்டது. இரானிலிருந்து பார்ஸிகள், திபெத்திலிருந்து பவுத்தர்கள், பூட்டானிலிருந்து கிறிஸ்தவர்கள் என்று பிற மதத்தைச் சேர்ந்த் அகதிகளையும் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த பத்தாண்டு காலங்களில் மயான்மாரிலிருந்து பங்களாதேஷ் வழியாக ரோஹிங்க்யாக்கள் ஊடுருவலையும் இந்தியா கண்டுகொண்டிருக்கின்றது. அதிகரித்து வருகின்ற அகதிகள் மற்றும் சட்டவிரோதக் குடியேறிகளின் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்து குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு மூலமாக இதனை எதிர்கொள்ள ஒருவழியாக இந்தியா முடிவெடுத்துள்ளது.
இக்கட்டுரை எழுதப்படுகின்ற சமயத்தில் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு அமல்படுத்தப்படுமென்ற அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த தேசிய மக்கள் தொகைப் பதிவேடானது தேசிய குடிமக்கள் பதிவேட்டினை உருவாக்க ஏதுவாக இருக்கும்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019 என்பது ஒரு குறுகிய காலகட்டத்தில் இஸ்லாமியக் குடியரசுகளான பாக்கிஸ்தான், பங்களாதேஷ் & ஆஃப்கானிஸ்தானத்தில் மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளான மதச் சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்ஸிகளுக்குக் குடியுரிமை வழங்க வகை செய்யும் ஒரு மசோதாவாகும். புதிய சட்டத்திருத்தத்தின்படி 31 டிசம்பர் 2014க்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த மதரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளான சிறுபான்மையினருக்கு குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகள் தீவிரப்படுத்தப்படுவதோடு 11 வருடம் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை 6 வருடம் என்றும் குறைத்திருக்கிறது.
குடியுரிமை சட்டம் குறித்த விவாதங்களில் சில அடிப்படை உண்மைகளைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் — பாக்கிஸ்தானில் தேசப்பிரிவினையின்போது 13% ஆக இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை தற்போது 1.3% மட்டுமே உள்ளது. அதே போல பங்களாதேஷில் ஹிந்துக்களின் எண்ணிக்கையானது 31%லிருந்து 8%மாக குறைந்து விட்டது. பெருமளவில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது ஒரு கேள்வியை முன்வைக்கிறது — இந்த ஹிந்துக்கள் ஒன்று இந்தியாவுக்கு திரும்பியிருக்க வேண்டும் அல்லது இஸ்லாமியர்களாக மதம் மாறியிருக்க வேண்டும் அல்லது இனப்படுகொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அப்பட்டமான மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என ஏராளமான சம்பவங்கள் பாக்கிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட பாக்கிஸ்தானிலுள்ள நான்கானா சாஹிபின் தலைமை ஜதேதாரின் மகளைக் கடத்திச் சென்று கட்டாய மதமாற்றம் செய்துள்ளது ஹிந்துக்களும் சீக்கியர்களும் எத்தகைய கொடூரமான அச்சுறுத்தல்களுக்கும் தாக்குதல்களுக்கும் ஆளாகின்றனர் என்பதைக் காட்டுகிறது.
பங்களாதேஷில் கணக்கிலடங்கா கோவில்கள் மதத்தீவிரவாத இஸ்லாமியர்களால் அழித்தொழிக்கப்பட்டதன் விளைவாக ஏராளமான பெங்காலி ஹிந்துக்கள் அஸ்ஸாம், திரிபுரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஜோகிந்தர் நாத் மண்டல் என்பவர் தேசப்பிரிவினையின்போது முஸ்லீம் லீகுடன் சேர்ந்து கொண்டு கிழக்கு பாக்கிஸ்தானுக்குக் குடியேறி பாக்கிஸ்தானில் அரசில் சட்டத்துறை அமைச்சராக 1947 முதல் 1950 வரை பணியாற்றி விட்டு பிறகு பாக்கிஸ்தானே வேண்டாம் என்று பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவுக்குத் திரும்பி விட்டார். மதச்சிறுபான்மையினர் என்பதால் ஒரு அமைச்சருக்கே திரும்பி ஓடும் அளவுக்குத் துன்புறுத்தல்கள் இருந்துள்ளது என்றால் சாதாரண மக்களுக்கு எத்தகைய துன்புறுத்தல்கள் இருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது.
இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு தேசமான பாக்கிஸ்தானில் ஹிந்துக்கள் எதிர்கொள்ளும் வலியையும் வேதனையையும் அவர் எழுதிய ராஜினாமா கடிதம் தெள்ளத்தெளிவாக விளக்குகிறது. 1990களில் ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஷரியா ஆட்சியில் சிக்கிச் சின்னாபின்னமாகித் தங்கள் வீடுகளை விட்டு ஓடோடி வந்த சீக்கியர்கள் அடைந்த துன்பங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. ஆப்கானிஸ்தானில் இஸ்லாத்துக்கு எதிரானது என்று கூறி பழம்பெருமை வாய்ந்த பாமியான் புத்தர் சிலையை வெடி வைத்துத் தகர்த்தது அப்போதைய தாலிபான்களின் கும்பல். இதை மௌனசாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தது இந்த உலகம்.
பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் & பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் மதச்சிறுபான்மையினர் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்த்த நாம் இப்போது குடியுரிமை சட்ட திருத்தம் 2019 குறித்து எழுப்பப்படும் சட்டரீதியான வினாக்களைப் பார்ப்போம்.
முஸ்லீம்களை இந்த சட்டத்தில் சேர்க்காததின் மூலம் இந்தச் சட்டம் இந்திய முஸ்லீம்களுக்கு எதிரானது என்பது தான் முதல்.
இந்தக் குற்றச்சாட்டில் துளிக்கூட உண்மையில்லை. குடியுரிமை சட்டமானது இந்தியர்களுக்கான சட்டமல்ல, அவர்கள் ஹிந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிக்கள் என யாராக இருந்தாலும்.
அப்போ குடியுரிமை சட்டம் யாருக்குத்தான் பொருந்தும்? 31 டிசம்பர் 2014க்கு முன்பாக, மேலே குறிப்பிட்டுள்ள மூன்று இஸ்லாமிய நாடுகளிலிருந்து மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, அந்நாடுகளை விட்டு வெளியேறி இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்து, சட்டரீதியாக அவர்கள் நிலை முடிவு செய்யப்படும்வரை உள்ளாட்சி அமைப்புக்களால் தற்காலிகமான அனுமதி கொடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும். ஆக, இவர்கள் யாருமே இந்தியர்கள் இல்லை.
இத்தகைய அகதிகளுக்காக மட்டுமே இந்த குடியுரிமை சட்டம் 2019 அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குடியுரிமை பெறப்போகிறவர்கள் எத்தனை பேர் தெரியுமா? 25,447 ஹிந்துக்கள், 5,807 சீக்கியர்கள், 55 கிறிஸ்தவர்கள், 2 பவுத்தர்கள், 2 பார்சிக்கள் என சுமார் 31,000 பேர் தான்.
அடுத்த கேள்வி என்னவென்றால் இந்த குடியுரிமை சட்டத்தில் எதற்காக பாக்கிஸ்தான், பங்களாதேச முஸ்லீம்கள், அஹமதியாக்கள், ஷியாக்கள் அல்லது ஹசாராக்கள் போன்றவர்களை சேர்க்கவில்லை என்பது தான்.
ஒரே ஒரு காரணம் தான் — இவையெல்லாம் பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் அரசாங்கத்தின் மதமாக இருக்கும் இஸ்லாத்தின் பிரிவுகள். இவைகள் அந்நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினை. அரசியல் மற்றும் இன ரீதியான பிரச்சினைகளோடு சேர்த்து இவைகளைத் தீர்க்க வேண்டியது அந்தந்த நாடுகளின் கடமையாகும்.
குடியுரிமை சட்ட திருத்தம் 2019ன் ஷரத்துக்களல்லாமல், இந்த மூன்று நாடுகளிலிருக்கும் இஸ்லாமியர்களின் எந்தப் பிரிவினரும், ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள் என எந்த மதத்தினரும் எந்த நாட்டினராக இருந்தாலும் குடியுரிமை சட்டம் 1955ன் கீழ் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.
2014-2019 காலகட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதிலிருந்தே குடியுரிமை சட்ட திருத்தம் 2019 என்பது பாகுபாடு காட்டுவதல்ல, சில சிறப்பு ஷரத்துக்களை மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் சிறுபான்மையினருக்கு வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டதே என்பது விளங்கும்.
அடுத்த கேள்வி என்னவென்றால் எதற்காக இலங்கைத் தமிழர்களையும் பூட்டானின் கிறிஸ்தவர்களையும் இந்த சிறப்பு பட்டியலில் சேர்க்கவில்லை என்பதுதான்.
விடை என்னவென்றால் இலங்கை மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் மத அடிப்படையிலான நாடுகள் கிடையாது, மற்றும் இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்ததால் தற்போது இலங்கை அகதிகள் தங்கள் தாயகம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் .
குடியுரிமை திருத்த சட்டம் 2019ல் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு ஷரத்துக்கள் ஏதோ தான்தோன்றித்தனமாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கொண்டுவரப்பட்டவையல்ல. இவற்றிற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கின்றது. 1950ல் கையெழுத்திடப்பட்ட நேரு-லியாகத் ஒப்பந்தப்படி இந்தியா பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினரைப் பாதுகாக்க ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால் தரவுகள் சுட்டிக்காட்டுவது போல, இந்தியா இந்த விஷயத்தில் சட்ட ரீதியான பாதுகாப்புக்களை உருவாக்கியது போல, பாக்கிஸ்தான் செய்யத்தவறி விட்டது.
சொல்லப்போனால் பல கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டத்தில் 25 நவம்பர் 1947 அன்று மஹாத்மா காந்தியின் வார்த்தைகளுக்கிணங்க பாக்கிஸ்தானிலுள்ள சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வர விரும்பினால் அதற்கான வழிகோல வேண்டும் எனவும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2003ல் அன்றைய ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸின் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், தேசப்பிரிவினையினால் பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தானில் கைவிடப்பட்டு துன்புறுத்தல்களுக்கு ஆளான சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்ய வேண்டும் என்று அன்றைய துணை பிரதமர் எல் கே அத்வானி அவர்களிடம் கோரிக்கை வைத்துப் பேசினார்.
லோக்சபாவில் மம்தா பானர்ஜியால் 2005லும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ப்ரகாஷ் காரத், ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் அசோக் கெலாட், அஸாமின் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் போன்றவர்களாலும் இது போன்ற கோரிக்கைகள் பல்வேறு காலகட்டங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன.
சட்டரீதியான கேள்வி என்னவென்றால் இந்த சட்டமானது இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 14 — சமத்துவம் – இதற்கு உட்பட்டதா என்பதுதான்.
ஆம் என்பதுதான் பதிலாக இருக்கும். ஏனென்றால் அரசியல் சட்டத்தின் 14வது பிரிவு அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. இதனை ஆராய்ந்த உச்சநீதிமன்றமானது பாராளுமன்றம் அறிவுப்பூர்வமான பேதங்களால் நியாயமான பாகுபாடுகளின் அடிப்படையில் மக்களின் ஒரு சாராரை தனி வகுப்பாகப் பிரித்து சட்டமியற்றலாம் என்று விளக்குகிறது. குடியுரிமை சட்டத்தின் நோக்கங்களில் கூறப்பட்டிருப்பதைப் போல இஸ்லாம் மதத்தை அரசு மதமாகக் கொண்டுள்ள இஸ்லாமிய நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினருக்கு சிறப்பு சட்டங்கள் உருவாக்குவது அரசியல் சட்டத்தின்படி அனுமதிக்கப்பட்டதே ஆகும். 1950 நேரு – லியாகத் ஒப்பந்தத்துடன் சேர்த்துப் பார்க்கும்போது இத்தகைய ஒரு சிறப்பு பாகுபாட்டினை நியாயமான பிரிவுகளில் ஏற்படுத்தியுள்ளதற்கு ஆழமான காரணங்கள் உள்ளன என்பது புலனாகும்.
அரசியல் சட்டத்தின் 14வது பிரிவே சமமில்லாதவர்களுக்கும் சமமானவர்களுக்குமிடையேயான சமத்துவத்தைப் பற்றிப் பேசுகையில் மேலேயுள்ள பத்திகளில் கூறியுள்ளவைகளே இந்த சட்டம் நியாயமானதுதான் என்பதற்குப் போதுமான காரணங்களை எடுத்துரைத்து இது நிறைவேற்றப்பட வேண்டியது என்பதையும் நிறுவுகிறது.
அரசியல் சட்டத்தின் 14வது பிரிவின் கீழான ஆட்சேபணைகளை சட்டரீதியாக எதிர்கொள்ளவும் ஏராளமான சட்டப்பிரிவுகள் உள்ளன.
அரசியல் சட்டப்பிரிவுகள் 21 & 25ன் கீழ் எழுப்பப்படும் ஆட்சேபங்கள் இன்னமும் பலவீனமானதாகும். ஏனென்றால் இவற்றின்படி வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தில் இருக்கும் மத சிறுபான்மையினருக்கான தார்மீக மனிதாபிமான கடமைகளை நிறைவேற்றுவதும் சம அளவு முக்கியமானதாகும்.
அது மட்டுமல்லாமல் அரசியல் சட்டத்தின் 11வது பிரிவானது மேலேயுள்ள அரசியல் சட்டப்பிரிவுகளின் ஷரத்துக்களைத் தாண்டியும் குடியுரிமையைப் பொறுத்த வரையில் எந்த ஒரு சட்டத்தையும் இயற்ற தன்னதிகார உரிமையை வழங்கியுள்ளது.
குடியுரிமை சட்டத்துக்கெதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. என்றாலும் இந்த சட்டமானது முழுக்க முழுக்க சட்டப்பூர்வமானது, பாகுபாடு இல்லாதது என்பதுதான் நமது கருத்தாகும்.
மிகவும் உன்னதமான மனிதாபிமான நடவடிக்கையான குடியுரிமை சட்ட திருத்தம் 2019 நிறைவேற்றமானது இந்தியாவில் பெருத்த எதிர்ப்பையும் கலவரம், வன்முறைகள் ஆகியவற்றைத் தூண்டியிருப்போதோடு கருத்துக்கள் என்ற பெயரில் நாராசமான கோஷங்களையும் எழுப்பியுள்ளது.
தொடக்கத்தில் மேற்கு வங்காளத்தில் ஆரம்பித்த இந்த எதிர்ப்பானது பிறகு டெல்லி, குஜராத், உத்திரப் பிரதேசம், கர்நாடகா என நாட்டின் பிற பகுதிகளுக்குப் பரவியது. பல பிரபலங்கள் இந்த சட்டம் பாகுபாடானது என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த பிரபலங்களில் பலருக்கும் குடியுரிமை சட்டம் என்னவென்பதே தெரியாது. இந்த அறியாமையை எதிர்க்கட்சிகள், அடிப்படைவாதத் தலைவர்கள், ஊடகங்களில் உலவும் அறிவுஜீவிகள் போன்றவை தங்களது ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்கிடையே பீதியை உருவாக்கி, இந்த சட்டத்தின் மூலம் முஸ்லீம்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் நாடற்றாவர்களாகி தடுப்புக்காவல் மையங்களில் வைக்கப்படுவார்கள் என்ற பயத்தை உருவாக்கி வளர்த்து பரப்பி வருகின்றன.
மாணவர்களையும் அறிவுஜீவிகளையும் முன்வைத்து இஸ்லாமியவாத குழுக்கள் பின்னாலிருந்து கலவரங்களை உண்டாக்கி வருவதோடு ஊடகங்களைத் தங்களது கேடயமாகப் பயன்படுத்தி அரசாங்கத்தை ஒரு அரக்கன் போல சித்தரிக்க முயன்று வருகிறது.
பரிசீலனையிலுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற முடியாத ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள் போன்றவர்கள் இந்த சட்டத்தின் மூலம் தானாகவே குடியுரிமை பெறுவார்கள் என்றும் முஸ்லீம்கள் மட்டும் 1971க்கு முந்தைய செல்லுபடியாகின்ற ஆவணங்களைக் காட்ட வேண்டும் இல்லையேல் தடுப்புக்காவல் மையங்களில் வைக்கப்படுவார்கள் என்றும் ஆட்சேபனைக்குரிய கலவரத்தைத் தூண்டக்கூடிய வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் இந்தியாவெங்கும் மசூதிகளில் வினியோகிக்கப்படுகின்றன .
ஆனால் உண்மை நிலை என்பது முற்றிலும் வேறானது. குடியுரிமை சட்ட திருத்தம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. மாறாக 1971 பங்களாதேஷ் யுத்தத்தின்போது அஸாம் மாநிலத்துக்குள் நுழைந்த பங்களாதேஷ் குடிமக்களால் தங்களது கலாச்சாரம், வாழ்க்கை முறை ஆகியவை பாதிக்கப்படுகின்றன என அஸாம் மக்கள் கருதியதால் போராட்டம் வெடித்து ராஜீவ் காந்தி காலத்தில் அஸ்ஸாம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் தேசிய குடிமக்கள் பதிவேடு என்பதை உருவாக்கி சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் வெளியேற்றப் படுவார்கள் என்பது காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். ஆனால் இதுவரை எந்த ஒரு அரசும் தேசிய குடிமக்கள் பதிவேட்டினை அஸ்ஸாமில் நடைமுறைப்படுத்தவில்லை. இறுதியாக உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் இது அமல்படுத்தப்பட்டது.
காங்கிரஸ் அரசாங்கத்தால் 2012ல் வெளிநாட்டவர் பிரச்சினை குறித்து வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையின் பத்தி 4.4.1ல் தடுப்புக்காவல் மையங்கள் ஏற்படுத்துவது குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் 26.05.2011 ஆணையின் பத்தி 37ல் மத்திய உள்துறை அமைச்சகம் சமர்ப்பித்த உறுதிமொழிப்பத்திரத்தில் சட்டவிரோதக் குடியேறிகள் கண்டறியப்பட்டு அவர்கள் தலைமறைவாவதைத் தடுக்க தடுப்புக்காவல் மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது தெளிவாகிறது.
அஸ்ஸாமில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து அவைகளைக் களைவது மேம்படுத்துவதன் மூலம் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்றும் குடியுரிமை சட்டம் எந்தவொரு இந்தியக் குடிமகனின் குடியுரிமையையும் பறிக்காது எனவும், தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது குறித்த விவாதங்களோ சட்ட வரைமுறைகளோ அல்லது கெடு தேதிகளோ எதுவுமே முடிவு செய்யப்படவில்லை எனவும் அரசாங்கம் பல விளக்கங்களைக் கொடுத்த பின்னரும், நாஜிகள், ஃபாஸிஸ்டுகள் போல சிறுபான்மையினருக்கு எதிரானதாக இந்த அரசாங்கத்தைச் சித்தரிக்க ஒரு பொய்ப்பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
பயங்கர சதி
இவையெல்லாம் ஒன்று சேர்ந்து ஆயிரம் பொற்காசுகளுக்கான கேள்வியை முன்வைக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் மனிதாபிமான அடிப்படையிலான ஒன்று, தேசிய குடிமக்கள் பதிவேட்டின் வழிமுறைகள் இன்னமும் உருவாக்கப்படவேயில்லை என்ற நிலையில் இந்தியாவையும் மத்திய அரசையும் மட்டுமின்றி பெரும்பான்மையினரான ஹிந்துக்களையும் இழிவுபடுத்தக்கூடிய கோஷங்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து பிற இடங்களுக்குப் பரவி கலவரங்களும் வன்முறையும் பத்து நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நடக்கக் காரணம் என்ன?
ந்யூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், ந்யூயார்க்கர், கார்டியன் போன்ற பத்திரிக்கைகள் எதற்காக பெரும்பான்மை ஹிந்துக்களைக் கொண்ட இந்தியா பல லட்சக்கணக்கான முஸ்லீம்களை நாடற்றவர்களாக ஆக்கப்போகிறது என்ற விஷமப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்?
வெளிநாட்டு பத்திரிக்கைகள் மற்றும் இந்திய ஊடகங்கள் வாயிலாக ஒரு உன்மத்த கும்பல் நிலையைத் தோற்றுவித்து அதன் மூலம் இந்திய அரசுக்கு எதிராக அரபுப் புரட்சி போன்ற ஒன்றை மறுமேடையேற்ற சதி உருவாகியுள்ளது.
ந்யூயார்க்கர் பத்திரிக்கையில் பொய்த்தகவல்களைப் பரப்பி வரும் ஒரு பத்திரிக்கையாளர் அரபுப் புரட்சி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளதன் மூலம் சட்டப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசைக் கவிழ்க்க பொய்ப்பிரச்சாரத்தின் மூலம் முயற்சி செய்வது புலனாகியுள்ளது.
இதன் பின்னணியில் இந்தியாவின் எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல; இந்தியாவின் வலதுசாரி தேசியவாத சக்திகளின் வளர்ச்சிகளைக் கண்டு ஆயாசமும் அதிர்ச்சியும் அடைந்து இந்தியா தனது வம்சாவழிகளின் மூலமாக அமெரிக்க பிரிட்டன் தேர்தல்களில் தனது பலத்தைப் பிரயோகிக்க முயற்சிக்கிறது என்ற அபாண்டமான பழியை சுமத்திவரும் மேற்கத்திய நாடுகளின் இடதுசாரிக் குழுக்களும் இருக்கின்றன.
ஹில்லாரி க்ளிண்டன் ஒரு சில ஸ்காண்டிநேவியன் நாடுகளின் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் டீஸ்டா ஸெடல்வாடின் நிறுவனத்துக்குப் பண உதவி செய்து அதன் மூலம் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் கல்லறைகளைத் தோண்டி அதன்மூலம் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை போலி என்கவுண்டர் வழக்கில் சிக்கவைக்க முயன்றது ஊரறிந்த ரகசியமாகும்.
இந்த நேரத்தில் 2015ல் உருவாக்கப்பட்ட “இந்தியாவின் மகள்” என்ற ஆவணப்பட சர்ச்சையை நினைவுகூறுவது சரியாக இருக்கும். க்ளிண்டன் அறக்கட்டளையின் ஆதரவு பெற்ற இன்னொரு தொண்டு நிறுவனம் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்தது. நடுவரான ட்ரைபெக்கா திரைப்பட கழகத்தின் அலீஸி நெல்சன் தான் அந்த நிறுவனத்துக்கும் தலைமை செயல் அதிகாரி. ப்ளான் என்ற பிரிட்டன் நிறுவனம் இந்தியாவின் மகளுக்கு உதவியது. ட்ரைபெக்க திரைப்படக் கழகத்துக்கு ஃபோர்ட் பவுண்டேஷன் நிதி உதவி வழங்கிவந்த நிலையில் ப்ளான் நிறுவனத்துக்கும் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படமானது இந்தியாவின் புகழையும் பெயரையும் சீர்குலைக்கவும் இந்தியாவை கற்பழிப்புக்களின் தலைநகராக சித்தரித்து இழிவுபடுத்தவும் மேற்கத்திய இடதுசாரிக் குழுக்கள் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையாகும்.
பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் மேற்கத்திய நாடுகளில் தான் அதிகம் என்பதையும் பிரிட்டனில் தான் பெண்களை மயக்கியும் மிரட்டியும் பணிய வைத்து பாலியல் தொழிலுக்கு ஆளாக்கும் பயங்கரம் பிரிட்டனில் தான் அதிகமாக உள்ளது என்பதையும் பார்க்கும்போது இத்தகைய முயற்சிகள் நகைப்புக்கிடமாகிறது.
உலகம் முழுவதும் இதுபோன்ற விஷமப்பிரச்சாரங்களுக்கு ஆதரவு கொடுக்கும் இன்னொரு இடதுசாரிக்குழுவான ஓப்பன் ஸோர்ஸ் ஃபவுண்டேஷனின் தலைவரான ஜார்ஜ் ஸோராஸ் இதன் இன்னொரு முக்கியமான புள்ளி.
ஜார்ஜ் ஸோரோஸ் உலகம் முழுவதிலும், ஐரோப்பாவிலுள்ள ரோமானியாவிலிருந்து பிரிட்டனின் ப்ரெக்ஸிட் வரைக்கும், வலதுசாரி தேசியவாதத்தை வெளிப்படையாக எதிர்ப்பவர். ‘ட்ரம்ப் எப்போதுமில்லை’ என்ற பிரச்சாரத்தை அமெரிக்காவில் ட்ரம்ப் அதிபராவதற்கெதிராக ஆரம்பித்து ஸோரோஸ், க்ளிண்டன் மற்றும் குழுவினரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பைத்தியக்கார இடதுசாரிகள் என்று பட்டவர்தனமாக வசைபாட நேர்ந்தது.
2016ம் ஆண்டில் நரேந்திர மோடி அரசானது ஜார்ஜ் ஸோராஸின் ஓப்பன் ஸொஸைட்டி நிறுவனத்தை கண்காணிப்பு பட்டியலில் வைத்தது. இதன்மூலம் அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின்படி இந்நிறுவனம் வழங்கும் நன்கொடைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகே வழங்க முடியும். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு சட்டப்பூர்வமாகவும் பிற வகைகளிலும் உதவி செய்வதில் முன்னணியில் இருந்து வரும் போராளிகள், மனித உரிமை வழக்கறிஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு ஸோரொஸின் நிறுவனங்கள் பெருமளவில் நிதியுதவி செய்து வருகின்றது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செப்டம்பர் 2019ல் ஹூஸ்டனில் நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்குத் தன் ஆதரவைத் தெரிவித்ததன் மூலம் ஜனநாயகக் கட்சியின் பகைமையைச் சம்பாதித்துக் கொண்டார். க்ளிண்டன் போன்ற மேட்டுக்குடிகளை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பதவிக்குப் போட்டியிடும் ஹவாய் உறுப்பினர் துல்சி கப்பார்டையும் மோடி அவர்கள் சந்தித்தார்.
ஜனநாயக கட்சியிலுள்ள இடதுசாரிகள் துலசியை சிரியாவில் ஆசாதின் ஆதரவாளர் என்றும் ரஷியாவின் உளவாளி என்றும் பி ஜே பி / ஆர் எஸ் எஸ் நிதி உதவி பெற்று ஜனநாயகக் கட்சியின் பிரச்சாரத்தைக் குலைத்து அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெற்றிக்கு உதவப்போகிறார் என்றும் பகிரங்கமாகக் கூறுகின்றன.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் அதிபர் ட்ரம்புடன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டிருந்த போது ஜனநாயகக் கட்சியின் புரவலரான ஜார்ஜ் ஸோரோஸ் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை ஐக்கிய நாடுகள் பொதுக்குழு கூட்டத்தின் போது சந்தித்து ஜம்மு & காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியையும் இடதுசாரிகளையும் சார்ந்துள்ள ந்யூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், ந்யூயார்க்கர் போன்ற பத்திரிக்கைகள் அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்த பொய்ப்பிரச்சாரத்தையும் கற்பனைக்கதைகளையும் தீவிரமாக மேற்கொள்ள ஆரம்பித்தன.
ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜம்மு&காஷ்மீர் பிரதேசத்தில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள தொலைத்தொடர்பு தடைகள் குறித்தும் சமூக உரிமைகள் குறித்தும் தீர்மானங்கள் கொண்டு வந்தனர்.
அட்லாண்டிக்குக்கு அந்தப் பக்கத்தில் பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஜம்மு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இந்திய அரசின் பலத்த எதிர்ப்பையும் மீறி இந்திய தினத்தன்று லண்டன் மேயர் சாதிக் கான் காலிஸ்தானிகள் மற்றும் ஐ எஸ் ஐ ஆதரவு பெற்ற கும்பலை இந்திய தூதரகத்தைத் தாக்க வழிவகை செய்து கொடுத்தார்.
இதற்கு பதிலடியாக இந்திய ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் பிரிட்டனில் உள்ள கணிசமான இந்திய வம்சாவழியினரை போரிஸ் ஜான்சனுக்கு வாக்களிக்க வைத்து தொழிலாளர் கட்சியின் தோல்விக்கும் கன்ஸர்வேடிவ் கட்சியின் மாபெரும் வெற்றிக்கும் வழிவகுத்தனர் என்று கூறப்படுகிறது.
இது போலவே அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ட்ரம்ப்பின் வெற்றிக்குக் காரணமாகி விடுவார்களோ என்று அமெரிக்காவில் உள்ள இடதுசாரிக் குழுக்களிடையே பதட்டத்தைத் தோற்றுவித்துள்ளது இது.
குடியுரிமை சட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிரான விஷமப் பிரச்சாரத்தை அமெரிக்கா பிரிட்டனில் உள்ள இடதுசாரி ஊடகங்கள் முன்னெடுத்துச் செல்வதற்கு இதுதான் காரணம்.
சில தினங்களுக்கு முன்பு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் அமெரிக்காவுக்கு 2+2 சந்திப்புக்காகச் சென்றிருந்த போது அமெரிக்க செனட்டரான ஜெய்பால் பங்கு பெற்ற ஒரு நாடாளுமன்றக் குழுவை சந்திக்க மறுத்ததற்குக் காரணமே அந்த அமெரிக்க செனட்டர் காஷ்மீர் குறித்தும் இந்தியாவில் மனித உரிமைகள் குறித்தும் எழுதியிருந்த கட்டுரைகளே பின்புலம். இதனையடுத்து கோபாவேசமான எதிர்வினைகள் முன்னணி இடதுசாரிகளான எலிசபெத் வாரன், பெர்னி சாண்டர்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியின் போட்டியாளர்களிடமிருந்து காஷ்மீர் பிரச்சினையிலும் சிறுபான்மையினர் உரிமைகள் விவகாரத்திலும் எழுப்பப்பட்டது.
இடதுசாரி ஊடகங்கள் எதற்காகத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள வலதுசாரி அரசியல்வாதிகளை, ட்ரம்ப் தொடங்கி, நெதன்யாஹு, நரேந்திர மோடி, போரிஸ் ஜான்ஸன், என்று தீவிரமாக எதிர்த்து வருகிறது என்று கண்டுகொள்ள உங்களுக்கு ஐன்ஸ்டீனின் அறிவு தேவையில்லை.
இன்னொரு புறத்தில் இந்தியா தனது வம்சாவழியினரின் மூலமாகத் தனக்கு சாதகமான முடிவுகளைப் பெற முடியும் என்பதற்கான ஒரு சாட்சியமாகவே இது இருக்கிறது.
“ தி ந்யூ க்ளோபல் ஆர்டர்” என்ற புத்தகத்தில் வெளியுறவுத்துறையில் இருந்த இடதுசாரிகளும் அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலராக இருந்த ஹில்லாரி க்ளிண்டனும் எவ்வாறு போராளிகள், சமூக ஊடகங்களின் பிரச்சாரம், உள்ளூர் ஊடகங்கள் மூலமாக சட்டப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரபு அரசுகளைக் குலைக்கவும் கவிழ்க்கவும் நிதி உதவி செய்தது பற்றியும் விரிவாக அலசியுள்ளோம்.
திட்டமிட்டே உருவாக்கப்பட்ட குழுப்பங்கள் மூலம் எகிப்து, சிரியா, லிபியா, இராக், லெபனான், உக்ரைன், சிலி, சூடான் போன்ற நாடுகளில் சட்டப்பூர்வமனான அரசுகள் போராளிகள், சமூக ஊடகங்கள், உள்ளூர் ஊடகங்கள் மூலம் அரசுக்கெதிரான உணர்ச்சிகள் தூண்டிவிடப்பட்டு அரசுகள் நிலை குலையச் செய்து பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டன.
ஆக, குடியுரிமை சட்ட திருத்தத்துக்கெதிராகவும் பரிசீலனையிலுள்ள தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக்கு எதிராகவும் நடக்கும் போராட்டங்கள் திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு விஷமப்பிரச்சாரங்களால் நடத்தப்படுகின்றன.
டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமும் குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி எதுவுமே அறியாதவர்களிடையே பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு அவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தியதாக ஜாமியா பல்கலைக்கழக போராட்டம் குறித்து நம்பப்படுகிறது.
இந்தப் போராட்டங்களின் முதல் நிலையில் மாணவர்களும் அறிவுஜீவிகளும் முகமூடியாகச் செயல்படுகின்றனர். இரண்டாவது நிலையில் நகர்ப்புற நக்ஸலைட்டுகளும் நகர்ப்புற ஜிஹாதிகளும் போராளிகளாகவும் பலியாடுகளாகவும் நிறுத்தப்படுகின்றனர். இறுதி நிலையில் மேற்கத்திய இடதுசாரிக் குழுக்களுடன் முன்னரே ஒருங்கிணைந்து பணியாற்றிய இந்திய எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. இந்திய ஊடகங்கள் இவர்களுக்கான பாதுகாப்பான கவசமாக செயல்பட்டதோடு சூடான் விவகாரத்தை இதனோடு ஒப்பீடு செய்ய முயன்று சொதப்பலாக முடிந்தது. மேற்கத்திய இடதுசாரிக் குழுக்கள் உருவாக்கிய உன்மத்தத்தால் தூண்டி விடப்பட்டு எதிர்க்கட்சிகளாலும் போராளிகளாலும் முன்னெடுத்துச் செல்லப்பட்ட புனைகதைகளால் ஆரம்பத்தில் இந்தப் போராட்டங்களுக்கு எரியும் நெருப்பில் எண்ணை வார்க்கப்பட்டது.
நாம் ஏற்கெனவே எழுதியபடி மக்கள்தொகைக் கட்டமைப்பே ஒரு நாட்டின் விதியைத் தீர்மானிக்கிறது. ஒரு சமுதாயத்தை உள்ளிருந்து அழிப்பதற்கு உள்நாட்டுக் கலவரத்துக்காளான அகதிகளும் சட்டவிரோதக் குடியேறிகளும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.
வெளிப்படையான அமைதியான சமுதாயம் என்று பெருமை கொண்டிருந்த ஒரு நாடு எவ்வாறு மக்கள்தொகைக் கட்டமைப்பு மாற்றம் மூலம் பெரிதும் பலவீனப்பட்டது என்பதற்கு லெபனான் ஒரு சிறந்த உதாரணமாகும். இத்தகைய ஒரு மக்கள்தொகைக் கட்டமைப்பு யுத்தத்தின் ஒரு பகுதியாகவே துருக்கியின் எர்டோகான் சிரியாவின் அகதிகளை உங்கள் மீது கட்டவிழ்த்து விடுவேன் என்று ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து மிரட்டி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் தான் ஹிந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிகள் என்று எந்த மதத்தினராக இருந்தாலும் இந்தியா தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பங்களாதேஷ், பாக்கிஸ்தான், மயான்மார் போன்ற நாடுகளிலிருந்து நுழைந்து இங்கே குற்றச்செயல்களில் ஈடுபட்டும், இந்தியர்களது வேலைவாய்ப்புக்களைப் பறித்துக் கொள்வதும், நமது நாட்டின் வளங்களைக் கொள்ளையடிப்பதுமான சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிந்து அவர்களைத் திருப்பியனுப்புவது மிகவும் அவசியமாகிறது.
குடியுரிமை திருத்த சட்டம் என்பது உண்மையிலேயே உன்னதமான நோக்கங்களைக் கொண்டது, மனிதாபிமான அடிப்படையிலானது என்றாலும் சாதி, மத, இன அடிப்படையில் எந்த ஒரு இந்தியக் குடிமகனும் பாதிக்கப்படாமல் இருக்க வழிமுறைகளைக் கண்டறிந்து தேசிய குடிமக்கள் பதிவேட்டினை நடைமுறைப்படுத்தி அதன்மூலம் சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிந்து வெளியேற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகும். முடிவாக மக்கள்தொகைக் கட்டமைப்பு என்பதுதான் ஒரு நாட்டின் விதியைத் தீர்மானிக்கிறது. இந்த விஷயத்தில் செயல்பட மறுப்பவர்களை எதிர்கால வரலாறு தேசத்தின் நலனைக் காக்கத் தவறியவர்கள் என்று வசைபாடும்.
#ஸ்ரீஅருண்குமார்
நன்றி : AsianWarrior
கீழே காணப்படும் கட்டுரையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது
[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiZXh0ZXJuYWwiLCJwb3N0IjowLCJwb3N0X2xhYmVsIjoiIiwidXJsIjoiaHR0cHM6Ly93d3cuYXNpYW53YXJyaW9yLmNvbS8yMDE5LzEyL2NhYS1ucmMtZGVtb2dyYXBoeS1pcy1kZXN0aW55Lmh0bWwiLCJpbWFnZV9pZCI6LTEsImltYWdlX3VybCI6Imh0dHBzOi8vd3d3LmFzaWFud2Fycmlvci5jb20vd3AtY29udGVudC91cGxvYWRzLzIwMTkvMTIvaW1hZ2VzLTUuanBlZyIsInRpdGxlIjoiQ0FBLU5SQzogRGVtb2dyYXBoeSBpcyBEZXN0aW55Iiwic3VtbWFyeSI6IkltYWdlIENyZWRpdDogUFRJIEluIG91ciBlYXJsaWVyIHBpZWNlIG9uIERlbW9ncmFwaGljIFdhcmZhcmUgd2UgZXhwbGFpbmVkIGhvdyBndW5zIGFyZSByZXBsYWNlZCBieSBwZW9wbGUgdG8gY2hhbmdlIHRoZSBkZW1vZ3JhcGhpY3Mgb2Ygb3BlbiBzb2NpZXRpZXMgaS5lLiBkZW1vY3JhY2llcyB3aGljaCB0ZW5kIHRvIGNoYW1waW9uIEh1bWFu4oCmIiwidGVtcGxhdGUiOiJ1c2VfZGVmYXVsdF9mcm9tX3NldHRpbmdzIn0=”]