அண்மைக்காலமாக, தேர்தலை ஒட்டி, சமூக வலைதளங்களில் திமுக இந்து விரோதக் கட்சியில்லை அது இந்துத்துவத்திற்குவிரோதமான கட்சி மட்டுமே என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும் அறிவுஜீவிகள் கூட இந்தப் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு இக்கருத்தைப் பரப்பி வருகிறார்கள். இது உண்மையா? திமுக இந்துக்களின் நண்பனா என்பது பற்றி ஆராய்வோம்.

திமுக இந்து விரோதக் கட்சியல்ல என்பதற்கு ஆதரவாக முன்வைக்கப்படும் வாதங்களின் ஒன்று, எங்காவது திமுக சித்திரைத் திருவிழாவையோ, மயிலை அறுபத்துமூவர் உற்சவத்தையோ, இன்னும் மாரியம்மன் பூச்செரிதல் போன்ற கிராம விழாக்களையோ தடுத்திருக்கிறதா? மக்கள் சாமி கும்பிடுவதைத் தடுத்திருக்கிறதா? அக்கட்சி எதிர்ப்பதெல்லாம் விநாயகர் சதுர்த்தி போன்ற ‘இந்துத்துவ’ விழாக்களையே என்பதுதான். மேம்போக்காகப் பார்த்தால் ‘உண்மைதானே’ என்று சொல்லத்தோன்றும் இந்த வாதத்தில் சாரம் உள்ளதா.

தமிழகத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழா போன்றவை நூற்றாண்டுகளைக் கடந்து, காலங்காலமாக, பரம்பரை பரம்பரையாக முறை வைத்து நடத்தப்படுபவை. கிராமத்திருவிழாக்களும் அப்படித்தான். மக்களின் மனத்தில் ஆழமாக ஊறியிருப்பவை. அவற்றிலெல்லாம் கை வைத்தால் என்ன நிகழும் என்பது திமுகவிற்குத் தெரியும். அக்கட்சியைப் பொருத்தவரை, இந்து உணர்வோடு இந்துக்கள் ஒன்றுபடக்கூடாது. அப்படிச் செய்தால் அவர்களுடைய போலிப்பிரச்சாரம் செயலற்றுப் போகும். இந்தக் காரணங்களால், பெருந்திருவிழாக்களைத் தடுத்து மக்களின் மனத்தில் உறங்கிக்கிடக்கும் இந்து உணர்வைத் தட்டி எழுப்பும் வேலையைச் செய்யவே மாட்டார்கள். இதற்கு இன்னும் ஒரு முக்கியமான காரணமும் உண்டு. இந்தத் திருவிழாக்கள் எல்லாம் பெரும்பாலும் அறநிலையத்துறையின் கைவசம் உள்ள கோவில்களால் நடத்தப்படுபவை. பெருமளவில் மக்கள் கூடும் இந்தத் திருவிழாக்களின் போது உண்டியல்களில் சேரும் பணம் கோடிக்கணக்கைத் தாண்டும். அத்தனை வருவாயும் அரசையே சென்றடைகிறது. விழாக்களைத் தடுத்து பொன்முட்டையிடும் வாத்துகளைக் கொல்ல அக்கட்சி துணியுமா என்ன?

சரி, விநாயகர் சதுர்த்திப் பந்தல்களுக்கு எதிர்ப்பு ஏன்?  ஒன்று, தனிப்பட்ட குழுக்களால் நடத்தப்படுபவை. பந்தல்களின் நடைபெறும் இந்த விநாயகர் வழிபாட்டில் சாதி தென்படுவது இல்லை. பெரும்பாலான பந்தல்களில் பூசை செய்வது அந்தப் பந்தல்களை நடத்துபவர்களே. அதனால் இங்கே சாதி மறைந்து இந்து என்ற உணர்வே மேலோங்குகிறது. இது திராவிட இயக்கங்களுக்குப் பெரும் எதிரி. சாதியைச் சொல்லி பிரித்தாள முயலும் அவற்றிற்கு, மக்களிடையே உருவாகும் இந்து என்ற உணர்வு அவர்களின் பிழைப்பைக் கெடுத்துவிடும் என்பதாலேயே இந்த விநாயகர் சதுர்த்திப் பந்தல்களை எதிர்க்கின்றன. தேவையில்லாத கெடுபிடிகளை உருவாக்கி ஒவ்வொரு வருடமும் ஏதாவது பிரச்சனையைக் கிளப்புகின்றன. ஆனால், இந்த அடக்குமுறை நேரெதிரான விளைவுகளை உருவாக்குகிறது என்பதை அவர்கள் அறியவில்லை.

இவற்றால் மட்டுமே திமுக இந்து விரோதக் கட்சி என்று சொல்லிவிட முடியுமா என்றால் அவர்கள் கடந்துவந்த பாதை அப்படி. அவர்களால் தந்தை என்று அழைக்கப்படும் இயக்க முன்னோடியான ஈவேரா இந்து தெய்வங்களை இகழ்ந்தது நாடறிந்த விஷயம். பிள்ளையார் சிலைகளை பொதுவில் உடைத்தவர் அவர். அந்த இயக்கத்திலிருந்து பிரிந்து தனிக்கட்சி கண்ட அண்ணாத்துரை ஓட்டரசியலுக்காக ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று கொள்கையைச் சிறிது தளர்த்திக்கொண்டாலும், இந்து தெய்வங்களை மோசமாகச் சித்தரிப்பதிலிருந்து பின்வாங்கவில்லை. இந்துக்கள் போற்றும் இராமனைத் தலைவனாகக் கொண்ட காரணத்தினாலேயே, அமுதம் போன்ற இனிய தமிழால் இயற்றப் பட்ட கம்பராமாயணத்தை விரசமாகச் சித்தரித்து ‘கம்ப ரசம்’ என்ற மோசமான நூலை எழுதியவர் அண்ணா. தவிர, தமிழுக்குத் தொண்டுசெய்கிறோம் என்று எப்போதும் கூவிக்கொண்டிருக்கும் திமுகவினரால் கம்பராமாயணம் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.  ‘கம்பனடிப்பொடிகள்’ சா. கணேசன் போன்றோருடைய அயராத முயற்சியால் மட்டுமே இன்று மக்களிடையே அது கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. இது போல இந்து நூல்கள் என்ற காரணத்தாலேயே இருட்டடிப்புச் செய்யப்பட்ட தமிழ் நூல்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை.

அண்ணாவிற்குப் பின் வந்த கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் ‘பார்ப்பன எதிர்ப்பு’ என்ற பெயரில் இந்து எதிர்ப்பு உச்சத்தை அடைந்தது. தனிப்பட்ட கட்சி, கொள்கை என்பது எப்படியிருந்தாலும் ஆட்சியில் அமர்ந்துவிட்டால் அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லவேண்டும் என்பது அடிப்படை நடைமுறைகளில் ஒன்று. ‘மதச்சார்பற்ற’ என்பதின் பொருள், எல்லா மதங்களையும் சமமாகக் பாவிக்கவேண்டும் என்பதேயன்றி குறிப்பிட்ட ஒரு மதத்தை, அதிலும் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதத்தைப் புறக்கணிப்பதல்ல. ஆனால் கருணாநிதி இந்த முறைகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டார்.  ரம்ஜான் சமயத்தில் குல்லா அணிந்து நோன்புக்கஞ்சி குடிப்பார். கிறிஸ்மஸ் பண்டிகையின் போது முதல் நாளன்றே வாழ்த்துச் சொல்வார். ஆனால் இந்துப் பண்டிகைகள் ஒன்றையும் கண்டுகொள்ள மாட்டார்.  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ‘இந்து என்றால் திருடன்’ என்று ஏதோ ஒரு அறியப்படாத அகராதியைக் குறிப்பிட்டு விளக்கமும் அளித்தார்.  சேது சமுத்திரச் சர்ச்சையின் போது ‘ராமன் என்ன இன்ஜினியரா’  என்று தெனாவெட்டாகப் பேட்டியும் அளித்தார்.

இதே பாரம்பரியம் தான் கருணாநிதியின் வாரிசுகளின் காலத்திலும் தொடர்கிறது. நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று ஸ்டாலின் சொன்ன அடுத்த இரண்டு நாட்களின் ‘தென்னாடுடைய’ சிவனின் சிவராத்திரித் திருவிழா வந்தது. திமுகவினர் திருந்திவிட்டார்கள் போலும் என்று நினைத்த அப்பாவிப் பொதுஜனம் அவர் சிவராத்திரி வாழ்த்துகளைச் சொல்வார் என்று ஆவலுடன் காத்திருந்தது. ஆனால் விடிய விடிய முழித்துக்கொண்டிருந்தது தான் மிச்சம். வாழ்த்து மட்டும் வரவில்லை. அதற்கு முன்பு தப்பித்தவறி விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்லி அடுத்த சில மணிகளில் அப்படி நான் எதுவும் சொல்லவில்லை, அட்மினின் தவறு என்று ஸ்டாலின் பல்டியடித்ததெல்லாம் வரலாறு. ஒரு புறம் மதச்சின்னமான குல்லாவை அணிந்துகொண்டு கஞ்சி குடிப்பார்கள், மறுபுறம் கோவில் வாசலில் பூசிய திருநீறை உடனடியாக அழிப்பார்கள். ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு இந்து மதச் சடங்குகளான ஹோமம் வளர்ப்பது போன்றவற்றை இழிவாகப் பேசியவர்தானே ஸ்டாலின். அவரது சகோதரியான கனிமொழி ‘திருப்பதி வெங்கடாசலபதிக்குச் சக்தியிருந்தால் அவரது உண்டியலைக் காத்துக்கொள்ள வேண்டியதுதானே’ என்று பேசினார்.

இதையெல்லாம் கேள்வி கேட்டால், கடவுள் மறுப்பு எங்கள் கொள்கை மற்றபடி மற்றவர்கள் நம்பிக்கையில் நாங்கள் தலையிடுவதில்லை என்று வீராப்பாகப் பேசுவார்கள்.  ஆனால் இந்துக்கள் நெற்றியில் குங்குமம் அணிந்துகொண்டால் ‘நெற்றியிலிருந்து வடியும் இரத்தம் போல’ அது இருக்கிறது என்பார்கள்.  ஊர்த்திருவிழாவான பண்ணாரியம்மன் கோவில் தீ மிதிக்கும் திருவிழாவில் செல்வராஜ் என்ற அமைச்சர் கலந்துகொண்டதற்காக அவரை அமைச்சர் பதவியிலிருந்தே நீக்கிய கட்சி திமுக. கால்டுவெல் போன்ற மிஷனரிகளை தங்களது ஞானத்தந்தையாகப் போற்றும் திராவிட இயக்கம், இப்படித் தனிப்பட்ட இந்துக்களின் நம்பிக்கையை அவமதிக்காவிட்டால்தான் ஆச்சரியம்.

இப்படி தனிப்பட்ட இந்துக்கள் வழிபடும் பிள்ளையாரையும், ராமனையும், வெங்கடாசலபதியையும இழிவுபடுத்துவது, ‘ஸ்ரீரங்கநாதரையும் சிதம்பரம் நடராஜரையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் தான் எனக்கு திருநாள்’ என்று வெளிப்படையாக அறிவிப்பது என்று தொடர்ந்து சாதாரண இந்துக்களின் நம்பிக்கைக்கு விரோதமான செயல்களைச் செய்துவிட்டு திமுக இந்து விரோதக் கட்சியல்ல என்றெல்லாம் பேசுவதை மக்கள் நம்பிவிடுவார்களா என்ன? இந்தக் காணொளியைப் பார்த்தாலே தெரியுமே.

 

Article by : பராசரன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.