
#MeToo என்கிற இயக்கம் முதலில் பிரபலமானது மேற்கத்திய நாட்டில், குறிப்பாக அமெரிக்காவில். பெண்கள் மானபங்கப் படுத்தப்படும்போது, எல்லா சமயங்களிலும் தவறு செய்யும் ஆண், சாட்சி இல்லாமல் தான் பெண்ணிடம் சீண்டுவது காலம் தொட்டு நடந்து வரும் பழக்கம். கேவலமான சொற்களால் கூச்சப்படுத்துவது, படுக்கைக்கு உறவு கொள்ள அழைப்பது போன்றவை யாரும் அருகில் இல்லாத சமயத்தில் தான் பெண்களிடம் சொல்லப்படும். எல்லா துறைகளிலும் நடக்கும் ஒரு கீழ்த்தரமான செயல் தான் இது என்றாலும் பெரும்பாலும் கலைத் துறையில் இருப்பவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு இந்தக் கயவர்கள் மேல் வழக்குத் தொடுக்க முடியாது, ஏனென்றால் சாட்சியம் கிடையாது. நீதிமன்றம் சென்றால் யார் சொல் அம்பலம் ஏறும்? சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர் சொல்லா இல்லை வளர்ந்து வரும் ஒரு மத்திய தர அல்லது ஏழையின் சொல்லா? அதை வெளி உலகுக்கு சொல்லி அவ்வாறு செய்தவர்களுக்கு வேறு எந்த தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாவிட்டாலும் தான் ஒருவரால் பட்ட இன்னலை சொல்லி அவரை அவமானப் படுத்துவது ஒன்றே அப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இருக்கும் ஒரே தஞ்சம். அதுவே #MeToo இயக்கம். இதில் ஒருவர் துணிச்சலுடன் ஒரு பெரிய மனிதரின் பெயரை குறிப்பிட்டு அவர் செய்த இழி செயலை ஊடகங்களிலும், சமூக வலைத் தளங்களிலும் பகிர்ந்தவுடன், இது நாள் வரை அவமானத்தை மனத்திலேயே போட்டு புழுங்கித் தவித்த பல நூறு, ஆயிரம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த வன்புணர்வு துன்புறுத்தல்களை (sexual harassment) துணிச்சலுடன் பகிர தொடங்கினர். இந்த மாதிரி தனக்கு நேர்ந்த அவமானத்தை வீட்டில் பெற்றோரிடமோ கணவரிடமோ ஒரு பெண்ணால் பகிரக் கூட முடியாது. தவறை இழைப்பது ஆணாக இருந்தாலும் தண்டிக்கப்படுவது பெண்ணாக தான் இருக்கும். இப்படி பகிரங்கமாக வெளியில் சொன்ன பிறகும் ஏச்சும் பேச்சும் கேட்பது அந்தப் பெண் தானே? எவ்வளவு மன வேதனை இருந்தால், எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருந்தால், வெளிப்படையாக ஒரு சமூகத்தில் பெரும் பதவியில் இருப்பவரை குற்றம் சாட்டுவதால் தான் மிரட்டபடுவோம், மேலும் கீழ்த்தரமாக வசை பாடப் படுவோம், நம் வாழ்வாதாரம் அந்த பெரிய மனிதரால் பாதிக்கப்படும் என்று தெரிந்தும் ஒரு பெண் தன் வெட்கத்தை விட்டு அந்த இழிச் செயல் தனக்கு நடந்ததை சொல்ல வருகிறாள் என்பதை சமூகம் உணர வேண்டும். ஆனால் சமூகம் ஆண்கள் கட்டமைப்பால் உருவாகியிருப்பதால் இதை நடைமுறையில் எதிர்ப்பார்க்க முடிவதில்லை.
இந்த #MeToo இயக்கம் இந்தியாவிலும் வட நாட்டில் தொடங்கி இங்கே தென்னகத்தில் பிரபலம் அடைந்தது. பாடகி சின்மயி துணிச்சலுடன் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய திமுகவின் தலைவர் மறைந்த கருணாநிதியின் ஆதரவு பெற்ற திரைப்படங்களுக்குப் பாட்டெழுதும் வைரமுத்துவை பெயரிட்டு தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதற்குப் பிறகு பல பெண்கள் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர். ஆனால் சின்மயி இதனால் பலவிதங்களில் பாதிக்கப்பட்டார். அவர் பின்னணி பாடல் வாய்ப்புகளும் டப்பிங் வாய்ப்புகளும் குறைந்தன. சினிமாவில் டப்பிங் யூனியனில் இருந்து நேர்மையற்ற முறையில் ராதா ரவி என்கிற நடிகரால் விலக்கப்பட்டார். ஆனாலும் துணிச்சலுடன் முன் வைத்தக் காலை பின் வைக்காமல் போராடி வருகிறார். இவரின் இந்த செயலால் பலரின் முகத் திரைகள் கிழிக்கப்பட்டுள்ளன. இதில் பல கர்நாடக இசை கலைஞர்களும் அடக்கம்.
வைரமுத்துவின் மனைவி ஒரு சிறந்த தமிழ் கவிஞர், முன்னாள் கல்லூரி பேராசிரியர். அவர் கணவருடன் சேர்ந்து வாழவில்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இத்தனைக்கும் இவர்களது திருமணம் பல எதிர்ப்புகள் இடையே நடந்த காதல் திருமணம். இவர்கள் ஏன் பிரிந்து வாழ்கிறார்கள் என்று ஒருவரும் இதுவரை கேள்வி எழுப்பியதில்லை. மோடி தடுக்கி விழுந்தால் கூட பாஜக சரிந்து விழுகிறதா என்று ஊடகங்கள் விவாதம் நடத்துகின்றன. ஆனால் வைரமுத்துவை ஒரு ஊடகவியலாளர் கூட #MeToo விவகாரத்தில் கேள்வி கேட்கவில்லை. எந்த ஊடகமும் அவர் குற்றவாளியா இல்லையா என்று விவாதம் செய்யவில்லை. சின்மயி தான் ஊடகங்களால் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டார். எத்தனை கேள்விகளை வைரமுத்துவின் ஆதரவாளர்கள் சின்மயி முன் வைத்தனர்? ஏன் நடந்தபோதே சொல்லவில்லை? ஏன் காலம் தாழ்த்தி கூறினாய்? ஏன் உன் திருமணத்திற்கு வைரமுத்துவை அழைத்தாய்? இதில் ஜாதி சாயம் வேறு அவர் மேல் பூசப்பட்டு ஏசப்பட்டது.
இந்த மாதிரி விஷயங்களை வெளியில் சொல்ல குடும்பத்தின் முழு ஆதரவு தேவை. இப்பொழுதே இவரின் உடை பற்றியும் நடைமுறைகள் பற்றியும் ஏளனப் பேச்சை வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று வைரமுத்துவின் திக மற்றும் திமுக ஆதரவாளர்கள் அள்ளி வீசுகின்றனர். இதில் திருமணத்திற்கு முன் இதை வெளிப்படையாக சொல்லியிருந்தால் அவர் நிலை என்னவாகியிருக்கும்? உயிருடன் இருப்பாரோ இல்லை ஆசிட் தெளித்த முகத்துடன் இருப்பாரோ? யார் கண்டார்கள்!
இதில் கொடுமை என்னவென்றால் “திராவிட” இயக்கத்தினர் தான் பெண்ணுரிமை பற்றி அதிகம் பேசுகின்றனர். பொட்டை அழி, தாலி அணியாதே, அது பெண்ணடிமைத்தனம் என்று கூக்குரலிடுகின்றனர். எது பெண்ணடிமைத்தனம்? ஒரு பெண் துணிச்சலுடன் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு இந்த மனிதன் ஆளாக்கியிருக்கிறான் என்று சொல்லும்போது அப்பெண்ணுக்கு ஆதரவு தராமல் குற்றம் சாட்டியவனை தலயில் வைத்துக் கூத்தாடுவது தான் பெண்ணடிமைத்தனம். பொட்டையோ பூவையோ அணிவது பெண்ணடிமைத்தனம் அல்ல. அது நம் விருப்பத்துக்கு நாம் செய்வது. துணிச்சலுடன் சமூகத்தில் எல்லா எதிர்ப்பையும் சமாளித்து நிற்கும் ஒரு பெண்ணுக்கு ஆதரவு அளிப்பது தான் பெண்ணியம்! அப்பெண்ணுக்கு சாதி சாயம் பூசி அவளை மேலும் இழிவுப்படுத்துவது அல்ல பெண்ணியம். பல தசாப்தங்களாக தமிழ்நாட்டில் பெண்ணுரிமை பற்றியும் பெண்ணடிமைத்தனம் பற்றியும் தவறான பிரச்சாரம் நடந்து அதனால் பாதிக்கப்பட்டிருப்பது இங்குள்ள பெண்கள் அனைவரும் தான்.
இந்த #MeToo இயக்கம் துவங்கி பலரின் முகத் திரைகள் கிழிக்கப்பட்டபோது பலரும் கேட்ட கேள்வி இதனால் என்ன இலாபம்? உண்மை தான் வைரமுத்து தொடர்ந்து பாடல் எழுதிக் கொண்டு தான் இருந்தார். அக்கப்போர் விழாக்களுக்கு சென்று சொற்பொழிவு ஆற்றிக் கொண்டு தான் இருந்தார். ஆனால் அவரின் வண்டவாளம் தெரிந்து தான் எல்லாரும் அமைதி காத்து வருகின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை. திராவிட கலாச்சாரம் அப்படி! இந்த #MeToo நிகழ்வால் களங்கமடைந்த அவர் புகழ் சமீபத்திய இரு சாணி அடிகளால் முழுவதுமாக இருளில் மறைந்தே விட்டன என்று கூறலாம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இயக்குநர் மணி ரத்தினம் எடுக்கும் மெகா பட்ஜெட் திரைப்படம் பொன்னியின் செல்வனில் இவர் பாடல்கள் எழுதப் போவதில்லை என்று அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இவருக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் தருவதாக அறிவித்திருந்த கௌரவ முனைவர் பட்டத்தை அதுவும் நமது இராணுவத் துறை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் அவர்கள் கையால் பெற இருந்த நிகழ்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய மந்திரிக்கு இவரின் #MeToo வண்டவாளம் பற்றி தெரியப்படுத்தப் பட்டதால் ஏற்பட்ட விளைவு!
சின்மயி உழைப்பு வீண் போகவில்லை. கடவுள் இருக்கான்டா கொமாரு!
பல்லவி