திரௌபதி என்று ஒரு பட ட்ரைலர் வெளியிடப்பட்டது தான் தாமதம். சமூகத்தளமே இரண்டாக பிரிந்து சண்டையிட்டு கொண்டிருக்கிறது.

நமக்கென்ன என்று ஒதுங்கி இருக்கலாம் என்றாலும் சில கீச்சுகளை காணும் பொழுது இச்சமூகம் எவ்வளவு கீழே சென்று கொண்டிருக்கிறது என்பதை கண்டு மனம் வருந்தத்தான் செய்கிறது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இங்கே ஒரு உதாரணத்தை மட்டுமே மேற்கோள் காட்டியுள்ளேன்.

 

ஒரு ஆணும் பெண்ணும் கூடினால், அடுத்த தலைமுறை உருவாகும். அதில் எந்த ஐயமும் இல்லை. ஆனாலும், எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணுடனும் கூடுதல் என்பது முறையா? அது தான் நீங்கள் போற்றும் தமிழ் கலாச்சாரமா?

திருமணம் என்பது நல்லதொரு புதிய தலைமுறையை உருவாக்க நடைபெறுவது. பெற்றோரும் உற்றார் உறவினரும் சேர்ந்து வாழ்த்தி அந்த இரு மனங்களையும் முறையே இல்லற வாழ்வில் காலடி எடுத்து வைக்க பிறந்தது அந்த சடங்கு.

                        இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 

                        நல்லாற்றின் நின்ற துணை 

திருவள்ளுவர் கூட இல்லறத்தில் உள்ளவரை துறவிகளுக்கும் மேலாக வைத்து போற்றியுள்ளார்.

அந்த இல்லறத்திற்கு துவக்க புள்ளி தான் இந்த மாப்பிளை/பெண் பார்க்கும் படலம். பெரியவர்கள் சேர்ந்து நல்லது தீயவை அறிந்து இருவீட்டாரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் சம்மதித்து நடைப்பெறுவதே திருமணம்.

அப்படிப்பட்ட ஒரு சுப காரியத்தை இவ்வளவு கீழ்த்தரமாக சித்தரிக்க வேண்டுமாயின், அந்த தீய எண்ணங்கள் கொண்ட மனம் எவ்வளவு கீழ்த்தரமாக இருத்தல் வேண்டும் என்பதை தங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

இப்படி எண்ணும் தோழர்கள் ஏனோ தங்கள் பெற்றோரும் இல்லற வாழ்வில் சேர்ந்தே தான் தங்களை ஈன்றார்கள் என்பதை ஏனோ மறக்கின்றனர். இப்படி கீழ்த்தரமாக பேசுவதன் மூலம், பெற்ற வயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டி கொண்டிருக்கிறார்கள். தவறு. பெற்ற தாயை இழிவுப்படுத்துவதை விட கொடுமையான செயல் வேறு ஒன்றுமில்லை இந்த உலகில். அதை நிச்சயம் அவர்களும் உணர்வார்கள். ஆனால் அவர்கள் உணரும் முன் காலம் கடந்து விடுமோ என்ற கவலை மட்டும் தான் எனக்கு.

இப்படி கூறி கூறி தான் திருமணம் என்றால் பெண்களை அடிமைப்படுவது என்று சித்தரித்து கொண்டுள்ளார்கள் சில பெண்ணியம் பேசும் பெருங்காயங்கள்.

அதற்கு அவர்கள் உதாரணமாக கூறுவது வரதட்சணை கொடுமைகள், வரட்டு கௌரவத்திற்காக நடத்தப்படும் திருமணங்கள். ஒரு சடங்குகளில் குறை இருப்பின், அக்குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டுமே தவிர, அந்த சடங்கையே பழித்தல் என்பது மடமை.

இதை எதிர்த்து இவர்கள் முன்னிறுத்தும் தீர்வு தான் என்ன?

 

நினைத்தவனுடன் செல்வது, பிடித்த வரை ஒன்றாக வாழ்வது, இல்லையேல் பிரிவது என்று இரு மனங்களை சேர்ப்பதை விட பிரிப்பதற்கே முழுமூச்சாய் பாடுபடுகிறார்கள்.

பெற்றோர் பார்த்து திருமணம் செய்த நம்மில் பலரும் ஆரம்ப கால கட்டங்களில் சண்டையிட்டு பின் ஒருவரை ஒருவர் அறிந்து இன்று நீ இன்றி நான் இல்லை என்ற நிலைக்கு வரவில்லையா? ஒரு சிலர் தவறுகள் புரிவதால் இந்த திருமணம் என்ற சடங்கே எப்படி தவறாகும்?

நன்றோ தீதோ, இன்றும் நம் சமூகத்தில் ஆண்கள் வெளி வேலை செய்வதும், பெண்கள் வீட்டு வேலை செய்வதும் இருக்கிறது. சற்றே சிந்தித்து பாருங்கள். ஒரு ஆண்மகன் எந்த வேலையும் இன்றி வீட்டு வேலை மட்டும் செய்து கொண்டிருந்தால், உங்கள் வீட்டு பெண் பிள்ளையை அவனுக்கு கட்டி தர எத்தனை பேர் முன் வருவீர்கள்?

நெஞ்சில் கைவைத்து மனசாட்சியுடன் பதிலளியுங்கள். நீங்கள் தேடுவது “செட்டில்” மாப்பிளை தானே?

நிலையான வேலை, வங்கிகளில் சிறு வைய்ப்பு நிதி, முடிந்தால் அவன் பெயரில் ஒரு சொத்து, இப்படி இருந்தால் தானே பெண்ணை பெற்றவர்களும் பெண் தர முன்வருகிறார்கள்? இது இருக்கும் வரை, பெண்கள் அடுப்படியில் இருப்பதும் ஆண்கள் வெளி வேலைக்கு செல்வதையும் யாராலும் தடுக்க முடியாது.

நல்லவேளையாக இவை இன்று மாற துவங்கியுள்ளது.

இன்று பல இல்லங்களில் ஆண்களும் பெண்களும் தங்கள் வேலைகளை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு செய்ய துவங்கி உள்ளனர். அது துவைப்பதாயினும் சரி, சமைப்பதாயினும் சரி. இன்று வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யும் இல்லங்கள் பல இங்குண்டு.

அப்படி அவர்கள் சந்தோசமாக இருக்கும் இல்லங்களுக்குள் புகுந்து பெண்களே நீங்கள் ஏன் அடுப்படிக்குள் இருக்கிறீர்கள் என்று ஆமை புகுந்த வீடு போன்று நாசமாக்கினால் சரியா?

இரு மனங்களை சேர்க்கும் வேலையை விட்டு சிறு விரிசல்களை பெரிய பிளவுகளாக்கி குடும்பங்களை பிரிப்பதை முதலில் கைவிடுங்கள்.

நீங்கள் உதவவில்லை என்றாலும் சரி, இல்லறத்தில் இருக்கும் ஊடல்களை ஊதி பெரிதாக்கி உடைத்து விடாதீர்கள்.

மணமக்கள், இல்லறத்தார்களே நீங்களும் இது போன்று அடுத்தவர் சொல்ப்பேச்சு கேட்பதை விடுத்து உங்கள் இருவருள் பேசி வாழ்க்கையை தொடருங்கள்.

வாழ்க்கை சிறப்படையும்.

நன்றி.

 

மகேஷ்

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.