எங்கள் நாட்டு எல்லைகளை நாங்களே தீர்மானிப்போம்,  எங்களை நாங்கள்தான் ஆள வேண்டும், எங்கள் வரிப்பணத்தை மாற்றானுக்குக் கொடுக்க மாட்டோம், எங்களுக்குத் தேவையான சட்டங்களை நாங்கள் மட்டுமே இயற்றுவோம், மாற்றான் எங்களைக் கட்டுப்படுத்துவதை எதிர்ப்போம், இது ஒரு இன்னுமொரு சுதந்திர கோஷம் —  இது ஏதோ பிரிவினைவாதிகளின் போராட்டத்தில் எழுப்பிய கோஷம் போன்று தோன்றுகிறதா? பிரிட்டனில் 2016ம் வருடம் ஜூன் 23ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா விலகுவதா என்று நடைபெற்ற பொதுவாக்கெடுப்புக்கு முன்பு எழுப்பப்பட்ட கோஷங்கள்தான் இவை.

சமீப காலமாக எந்த ஒரு விஷயத்துக்கும் மக்கள் கருத்தைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற கோரிக்கை பெரிதாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.  மக்கள் கருத்து கேட்டு அரசுகள் செயல்பட வேண்டும் என்பது கேட்பதற்கு நன்றாகத் தோன்றலாம். ஆனால் நடைமுறையில் கையாண்டால் ஏற்படும் சிக்கல்கள் ஜனநாயகத்தை விடவும் சர்வாதிகாரமே பரவாயில்லை என்று எண்ண வைக்கும்.  மக்கள் கருத்து என்பது பாதிக்கப்படுகின்ற சிலரின் கருத்தா? அல்லது பலனடையப்போகும் பலரின் கருத்தா? அல்லது தொடர்பேயில்லாத நடுநிலையாளர்களின் கருத்தா? அறிவுஜீவிகளின் கருத்தா? எத்தகைய விஷயங்களில் மக்கள்கருத்தைக் கேட்பது? எல்லா விஷயத்துக்கும் கேட்பதா?  எந்த முறையில் கேட்பது?  

 

திட்டங்கள் நிறைவேறப்போகும் இடத்தில் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களைச் சந்தித்து நேரடியாக கருத்து கேட்கலாமா?  அவர்கள் அந்தப் பகுதி மக்கள்தானா அல்லது ஏற்பாடு செய்யப்பட்டு அழைத்து வந்தவர்களா என்பதை யார் உறுதிப்படுத்துவது? அல்லது கருத்து கணிப்புக்கள் நடத்தலாமா?  தேர்தலின் போது நடக்கும் கருத்து கணிப்புகள் சார்புடையதாகவும் தவறாகப் போவதையும் பார்த்த பிறகு கருத்து கணிப்பை எப்படி நம்புவது? தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போல அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பலாமா?  அல்லது ஒவ்வொரு திட்டத்துக்கும் வாக்கெடுப்பு நடத்தலாமா? கருத்து கேட்கும் முறைகளை முதலில் உறுதி செய்தபின்னர் எந்தெந்த விஷயங்களுக்கு கருத்து கேட்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். அரசாங்கம் எடுக்கும் எந்த ஒரு முடிவும் ஏதோ ஒரு விஷயத்தில் மக்களை பாதிக்கும் என்பதால் எல்லா முடிவுகளுக்கும் கருத்து கேட்கலாமா?

சேலம்-சென்னை  எட்டு வழிச்சாலை.  சமீபத்தில் மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கும் ஒரு திட்டம்.  மக்களின் எதிர்ப்பு என்று சொல்வதை விடவும் விவசாயிகளின் எதிர்ப்பு என்று சொல்லலாம். குறிப்பாக சில விவசாயிகளின் எதிர்ப்பு என்றும் சொல்லலாம்.  இதிலென்ன தவறு இருக்கிறது? பாதிக்கப்படுகிறவர்களின் கருத்துதான் அவசியம். விவசாயத்தை அழித்து விட்டு, விவசாயிகளை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு சாலைகள் தேவையா? என்று கேட்பது உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பலாம்.  நிதானமாக யோசித்துப் பார்க்கலாமா?

 

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திருவொற்றியூர் வரைக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறும் வடசென்னை மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.  ஆனால் பாதையில் இருக்கும் கடைகள் இடிக்கப்படுவதால் வியாபாரிகள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்துகிறார்கள். இப்போது சொல்லுங்கள் இதிலே மக்கள் கருத்து என்பது  எது? 

பொதுவாக எல்லா நவீன தொழில் நிறுவனங்களுமே சென்னையைச் சுற்றியே தொடங்கப்படுகின்றன.  இதையே மக்கள் கருத்து கேட்டுத்தான் தொடங்க வேண்டும் என்று வைத்துக் கொண்டால் தங்களது மாவட்டத்தில்தான் தொடங்க வேண்டும் என்று எல்லா மாவட்ட மக்களும் குரலெழுப்ப மாட்டார்களா? அப்போது மக்கள் தொகை அதிகமாக உள்ள மாவட்டமே வெல்லும்.  பிறகு பின்தங்கிய மாவட்டங்களின் நிலைமை?நாளடைவில் மாவட்டங்களுக்கிடையே பொறாமையையும் பகைமையையும் இது உண்டாக்காதா?

 

நெடுவாசல் தொடங்கி எந்த ஒரு இடத்திலும் எங்கள் நிலங்களைப் பறித்துக் கொண்டு அதிலே எண்ணை துரப்பணப் பணிகளை அனுமதிப்பதில்லை என்று சபதமெடுத்துள்ளோம்.  சரி, இதே சபதத்தை ஜார்க்கண்ட் மாநில மக்களும் எடுத்தால் நிலக்கரி எடுப்பது எப்படி, அதன் மூலம் மின் உற்பத்தி செய்வது எப்படி? அனல் மின்நிலையங்களால் ஏராளமான வெப்பம் வெளிப்படுகிறது என்பதும் அதனால் அதனைச் சுற்றி இருக்கும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது போல அனல் மின்நிலையத்தையும் மூடிவிடுவோமா? கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிர்ப்பு. அணு உலையால் ஆபத்து என்றால் கல்பாக்கத்திலும் மூடி விடுவோமா?

 

கர்நாடகம் காவிரியில் தண்ணீர் தர மறுக்கிறது. தண்ணீர் கொடுத்தால் கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கர்நாடகத்தின் வாதம்.  கொடுக்காவிட்டால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதிலே மக்கள் கருத்து என்றால் யார் கருத்தைக் கேட்பது?

 

முல்லைப் பெரியாறு  அணை உடைந்தால் ஆயிரக்கணக்கில் உயிர்ச்சேதம் ஏற்படும் என்று கேரள மக்கள் கூறுகிறார்கள்.  புதிய அணை கட்டினால் எங்களுக்குத் தண்ணீர் கிடைக்காது, விவசாயம் அழிந்து விடும் என்று தமிழக விவசாயிகள் கூறுகிறார்கள்.  உயிரா? பயிரா? என்ற கேள்வி வந்தால் யார் கருத்தை ஏற்றுக் கொள்வது?

2015ல் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டிடங்கள் கட்டியதுதான் காரணம் என்று தெரிய வந்ததும் மக்களிடையே நீர்நிலைகளை மீட்க பெரிய ஆர்வம் எழுந்தது.  ஆனால் ஓரிரு மாதங்களில் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பை மீட்க நடவடிக்கை எடுத்த போது கட்டிடங்களின் உரிமையாளர்கள் எங்கள் வீடுகளை விட்டு நாங்கள் எங்கே போவோம்? என்று இடிக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கவில்லையா?  இதிலே எது மக்கள் கருத்து?

 

இப்போது மீண்டும் ஆரம்பித்த விஷயத்துக்கே வருவோம்.  பிரிட்டனில் நடந்த பொதுமக்கள் வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்று வாக்களித்ததால் இப்போது பிரிட்டன் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.  இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் விலகவேண்டும் என்ற குழுவினர் தங்களது செலவில் பெரும்பகுதி ஃபேஸ்புக் விளம்பரத்துக்கே செலவு செய்தார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. இதனால் தான் விலகுவது என்ற முடிவு கிடைத்ததா என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால் முடிவுகள் வெளிவந்தவுடன் விலகுவதற்கு ஓட்டுப் போட்டவர்களே நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை, மீண்டும் ஒரு பொதுவாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் கோரிக்கை விடுத்ததும் உண்மை.  ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதால் ஏற்படக்கூடிய பாதகங்களை அலசி ஆராய்ந்து மக்கள் வாக்களிக்கவில்லை. பெரும்பாலும் சமூக ஊடகங்களில் வெளியான விளம்பரங்களைப் பார்த்தும் உள்நோக்கம் கொண்ட பிரச்சாரங்களினாலும் ஈர்க்கப்பட்டு வாக்களித்து விட்டு இப்போது நிதானமாக வருந்திக் கொண்டிருக்கின்றனர்.

 

ஒரு புறம் விவசாயக் கூலி வேலைகள் போன்ற கடைநிலை வேலைகளுக்கு ஆள் பற்றாக்குறை. இன்னொரு புறம் திறன் தேவையுள்ள அதிக சம்பளம் தரக்கூடிய வேலைகள் பிரிட்டனை விட்டு வெளியேறும் சூழல்.  பல தொழில் நிறுவனங்களும் முதலீட்டு நிறுவனங்களும் பிரிட்டனை விட்டு வெளியேறும் நாள் தொலைவில் இல்லை. தனது உணவுத் தேவையில் சுமார் பாதியை இறக்குமதி செய்யும் பிரிட்டன் வெளியேற்றம் முழுமையான பிறகு கடுமையான உணவுப்பஞ்சத்தைச் சந்திக்கும் எனவும் கூடவே மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் பிரிட்டனின் அமைச்சர்களே மக்களை எச்சரித்து வருகின்றனர்.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல ஒன்றியத்தை விட்டு விலகவும் வேண்டும், ஆனால் ஒன்றியத்தில் இணைந்திருந்தால் ஏற்படக்கூடிய நன்மைகளும் வேண்டும் என்றால் அது நடக்காது என்பது ஐரோப்பிய நாடுகளின் உறுதியான நிலைப்பாடு.  விளைவு? ஒன்றியத்தை விட்டு விலகுவதால் ஒன்றியத்தின் நடவடிக்கைகளில் எந்த விதமான பங்கும் உரிமையும் கிடையாது, அதே சமயம் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம். எங்கள் சட்டங்களை நாங்களே இயற்றுவோம், மாற்றான் எங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற கோஷங்களின் அடிப்படையில் உருவான வெளியேறு இயக்கத்தால் இன்று சட்டமியற்றும் அதிகாரத்தில் பங்கு கிடையாது ஆனாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களைத் தவறாது பின்பற்ற வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது பிரிட்டன்.  இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தால் பொருளாதார சீரழிவு, பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம் என்று பல குழப்பங்கள்.

 

அரசியலுக்கு இலக்கணம் வகுத்த அரிஸ்டாட்டில் அரசியலின் விகார வடிவம் தான் ஜனநாயகம் என்று கூறுகிறார். ஒரு சிலரிடமிருக்கும் அதிகாரத்தை பலர் கையிலெடுத்துக் கொள்வதுதான் விகாரம் என்று விளக்குகிறார். 

 

பாராளுமன்ற ஜனநாயகம் என்பது மக்களின் கருத்துக்களைத் தலைவர்கள் பிரதிபலிக்கும் ஆட்சிமுறை. ஆனால் எல்லாவற்றிற்கும் மக்களின் கருத்தைக் கேட்டுத்தான் ஆட்சி நடத்த வேண்டும் என்றால் அது அனர்த்தத்தில் தான் முடியும். 

வாஜ்பாய் காலத்தில் தங்கநாற்கரச் சாலைகள் போடும்போது கூடத்தான் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. ஆனால் எதிர்ப்பு எழவில்லையே? அதன் பலனை நாம் இன்று அனுபவிக்கவில்லையா? இன்றைக்கு மீம்ஸ் போடுவது பெரிய தொழிலாகி விட்டது.  அரசை எதிர்ப்பது என்பது வீரமாகி விட்டது. பிரிட்டனில் உறுதியாக முடிவெடுக்க வேண்டிய தலைவர்கள் தடுமாறி பொதுவாக்கெடுப்பு என்று போனதால் இன்று பிரிட்டனின் எதிர்காலமே கேள்விக்குறியாகி நிற்கிறது. மக்கள் கருத்துக்தைக் கேட்டு நடந்தால் என்ன ஆகும் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்தான். கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம் என்று எல்லாத் துறைகளிலும் முன்னணியில் உள்ள பிரிட்டனுக்கே இந்த நிலைமை என்றால் இங்கு என்ன ஆகும் என்று நினைக்கும்போது பகீரென்கிறது. 

 

எதற்கும் இந்த விஷயத்தில் மக்கள் கருத்து என்னவென்பதைக் கேட்டு விடலாமா? 

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.