
ஜாதிகள் இல்லையடி பாப்பா,
குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.
– பாரதியார்.
நம் தாய் திருநாடாம் பாரத நாடு, தனது அரசியல் சாசனம் கொண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பல சலுகைகளையும் மற்றும் முன்னுரிமையும் வழங்கி வந்துள்ளது.
இதில் பிற்படுத்தப்பட்டவர் என்
இதுவரை ஜாதி மற்றும் மத அடிப்படையில் மட்டுமே இந்த பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையர் என்ற அடையாளங்கள் காணப்பட்டன.
பல நூற்றாண்டுகளாய் ஒரு சில சமூகங்கள் அடிமை படுத்தப்பட்டு வந்ததாகவும், அவர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகவும் இது போன்ற சலுகைகள் அவசியம் என்ற நல்ல சிந்தனையில் உதித்ததே இந்த சட்டம்.
மிகவும் பாராட்டப்பட வேண்டியவை. எல்லோரையும் அணைத்து செல்லும் மக்கள் பாரத மக்கள் என்பதற்கு இதுவும் ஒரு நல்ல சான்று.
நாளடைவில் இந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் நன்கு படித்து, வேலை வாய்ப்பினில் முன்னுரிமை பெற்று வாழ்க்கையிலும் சமூகத்திலும் சமநிலை பெற்று திகழ்ந்து வாழ்வார்கள் என்ற நல்லெண்ணமே இதற்கு பெருங்காரணம்.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
பல மக்கள் இதனால் லாபமடைந்தாலும், இந்த சலுகையால் பல சமூகத்தினர் முன்னேறினாலும் அவர்கள் இந்த முன்னுரிமையை மற்றவருக்கு விட்டு கொடுக்க முன்வரவில்லை.
இவர்கள் மற்ற சமூகத்தினருக்கு விட்டு கொடுக்க வேண்டும் என்று எவருமே எதிர்நோக்கவில்லை. மாறாக, அவர்களுது மக்களுக்கே விட்டு கொடுத்து அவர்களையும் தம்போல் நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்றே விரும்பினார்கள்.
ஆனால் ஏனோ, இவர்களுக்கு அந்த பெருந்தன்மை அறவே இல்லை. அதற்கான அறிகுறியும் தென்படவில்லை.
இதில் வருத்தப்பட வேண்டியது யாதெனில், இந்த சலுகையால் மிகவும் பயனடைந்தோர், தன் நிலை உயர்ந்த பின்னும் தன் சமூகத்தில் இருக்கும் இதர மக்களுக்கு வழிவிட மனமின்றி இதை அனுபவித்து வந்ததே.
சட்டப்படி இதில் எந்த குற்றமும் இல்லை. அவர்கள் வழிவிட வேண்டும் என்று எந்த சட்டமும் கூறவில்லை.
ஆனால், தம் சமூகம் முன்னேறவேண்டும் என்ற தார்மீக பொறுப்பு அவர்களுக்கும் இருக்கும் பட்சத்தில் மனசாட்சி உள்ள அவர்கள் அதை செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்ப்பார்ப்பது நியாயமானது தானே?
இவ்வாறே அவர்களே அவர்களது சமூகத்தின் வளர்ச்சிக்கு முட்டு கட்டையாக திகழ்ந்து வந்தனர்.
உதாரணத்திற்கு, ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த ஒருவர் முன்னுரிமை மற்றும் இதர சலுகையை உபயோகித்து வாழ்க்கையில் முன்னேறுகிறார் என்று வைத்து கொள்ளுங்கள். ஒரு மருத்துவராகவோ, தொழிலாளியாகவோ அல்லது ஒரு ஆட்சியாளராகவோ கூட அவர் ஆகலாம்.
அப்படி ஆகும் பொழுது அவரும் இந்த சமூகத்தில் சம நிலையில் வாழ துவங்குகிறார். இன்னும் கூற போனால், பல அடித்தர மக்களை விட உயர்ந்த நிலையில் உள்ளார்கள் என்பதே உண்மை. ஆதலால் அவருக்கு அந்த சலுகையின் தேவையில்லை.
மாறாக அவர் தனது சலுகையை விட்டு கொடுக்கும் பட்சத்தில் அந்த சலுகை இவரது சமூகத்தில் இருக்கும் வேறு ஒரு குடும்பத்திற்கு சென்றடையுமே. அந்த குடும்பமும் பயனடையுமே?
இது போன்று அனைவரும் செய்ய துவங்கினால், அணைத்து சமூகத்திலும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பலர் வாழ்க்கையில் முன்னேறி நாளடைவில் பிற்படுத்தப்பட்டோர் (ஜாதி, மத அடிப்படையில்) என்பதே கூட இல்லாமல் போக வாய்ப்புள்ளது.
அவ்வாறு நிகழ்ந்தாலே ஒழிய, ஜாதியை ஒழிக்க முடியாது என்பது எனது தாழ்வான கருத்து.
எந்த ஒரு நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட சமூகமோ, அல்லது ஜாதியோ மட்டுமே வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்வதில்லை. வறுமை என்பது ஜாதி மதம் கண்டு வருவதில்லை. எல்லா சமூகத்திலும் பணக்காரர்களும் ஏழைகளும் இருக்கவே செய்கின்றனர்.
அப்படியிருக்க “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற கொள்கை கொண்ட நம் நாடு ஒரு குறிப்பிட்ட மதமோ ஜாதியோ வைத்து மட்டுமே சலுகைகள் தந்து வந்தது பல தரப்பு மக்களால் ஓர் அநீதியாகவே பார்க்கப்பட்டது.
எல்லோரும் சமம் என்ற குரல் ஒலித்தபோதும், இல்லாதாரை வாழ்வில் ஏற்றி விட வேண்டும் என்ற காரணத்தால் இந்த சலுகைகளை திரும்ப பெற முடியாமலே போனது.
அது மட்டுமின்றி, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த சலுகை என்பது ஒரு அரசியல் தந்திரமாகவே மாறிவிட்டது. எனவே, எந்த ஒரு அரசுக்கும் இதில் கை வைக்க துணிச்சலில்லை என்று தான் கூறவேண்டும்.
இருப்பினும், தற்போது இந்த வோட்டு அரசியலை பற்றி சிறிதும் கவலையின்றி அதை அடித்து நொறுக்கும் வகையில் இந்திய அரசு இயற்றியிருக்கும் சட்டம் இந்திய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமே என்று கூறினால் அது மிகையாகாது.
ஏன்?
இதுவரை இருந்து வந்த எந்த முன்னுரிமையும் சலுகைகளும் மக்களின் பொருளாதார அடிப்படையில் வழங்கப்பட்டதல்ல. அது இனம், மொழி, ஜாதி, மத அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வந்தது.
இதனால் நடந்த நன்மைகளை விட தீமைகள் தான் அதிகமோ என்று அஞ்சும் அளவிற்கு நம் நாட்டில் அரசியல் களம் மாறியுள்ளது.
ஆம், நம் நாட்டில் அரசியல் என்பது ஜாதி அரசியலாகவே மாற்றி விட்டது. ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு கட்சி தோன்றும் அளவிற்கு கீழ்த்தரமாக சென்ற வரலாறு தான் நாம் இதுவரை கண்டோம்.
மாறாக, எவராக இருப்பினும் – ஜாதி இன மத பாகுபாடின்றி – அவர்களுக்கு பொருளாதார நெருக்கடியென்றால் சலுகைகள் பெற்று தர சட்டம் இயற்றியுள்ளது நமது தற்போதைய அரசு. இதை பாராட்ட வேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையல்லவா?
ஒரு அரசு, ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தோ, அல்லது ஜாதி சார்ந்தோ புதிய ஒரு சலுகைகள் நிறைந்த சட்டம் இயற்றியிருந்தால் அது வன்மையாக தண்டிக்கப்பட வேண்டியவை.
மாறாக, அனைவருக்கும் சமமாக வாய்ப்பளிப்பதின் மூலம் இந்த அரசு தான் அனைத்து இந்திய மக்களுக்கும் பொதுவான ஓர் அரசு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
இது வெறும் ஆரம்பமே. வருங்காலத்தில் படிப்படியாக இதுவே அணைத்து தரப்பினராலும் ஏற்று கொள்ள பட்டு பொருளாதார அடிப்படையிலேயே அனைவருக்கும் அணைத்து சலுகைகளும் கிடைக்க பெறுமானால் ஆச்சர்யம் கொள்ள தேவையில்லை.
சரி, இப்பேற்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சட்டம் இயற்றிய அரசை பாராட்டாமல் இருந்தால் கூடாது பரவாயில்லை, இந்த அரசு நியாயம் தவறி சட்டம் இயற்றியதாக கட்டுகட்டாக பொய் பிரச்சாரம் செய்து வந்தால் என்ன ஒரு அநியாயம்?
சரி, ஊடகம் அப்படி செய்யவில்லை என்றால் தான் ஆச்சர்யம் என்கிறீர்களா? அதுவும் உண்மை தான்.
ஏதோ இது ஓர் குறிப்பிட்ட சமூகத்தினை மகிழ்ச்சியூட்டி அவர்களது வோட்டினை கவர்ந்திடவே இந்த சட்டம் இயற்றப்பட்டது போன்று ஒரு மாயையை ஏற்படுத்த முனைந்தன பல ஊடகங்கள்.
அது மட்டுமா, பொது சமூகம் (open category) என்பது ஏதோ வெறும் பிராமணர்கள் மட்டும் கொண்டது போன்று, மக்களை குழப்ப ஆரம்பித்தனர்.
என்ன செய்வது, பெயரிலேயே பொது இருந்த பொழுதும், பொது என்றால் அனைவருக்கும் பொதுவானது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் தான் இன்று பேனா (சரி, தட்டச்சு) பிடித்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த விலைபோன ஊடகங்களிடம் வேற என்ன எதிர்ப்பார்க்க முடியும்?
இந்நிலையில் நாம் அனைவரும் இந்த ஊடகத்தின் பொய்களை கண்டு வேரறுக்க வேண்டியது இன்றியமையாத ஒன்று.
நண்பர்களே, ஊடக பொய்களை கண்டறிவது என்பது மிகவும் சுலபமான ஒன்று. இன்றைய சமூக தளங்களின் உதவியால் இது பெரிதும் எளிமையாகி விட்டது.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒன்றே ஒன்று தான். செய்தி வந்த அடுத்த ஒரு மணிநேரம் கவனமாக பொறுத்திருந்தாலே போதும். வேறு ஒன்றும் வேண்டாம்.
அந்த செய்தியில் உள்ள உண்மை பொய்களை தோலுரித்து காட்டிவிடுவார்கள் நம் மக்கள்.
அது போன்றே இந்த முறையும் பல ஊடகங்கள் போட்டி போட்டு கொண்டு பொய் செய்திகளை வெளிட்ட போதும், அது நீண்ட நேரம் தாக்கு பிடிக்கவில்லை என்றே கூற வேண்டும்.
எப்படியோ, குய்யோமுய்யோ என்று கத்திய அணைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வாலை சுருட்டி கொண்டு இந்த சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றி விட்டனர். வேறு வழி? சட்டம் கொண்டு வந்தது யார்?
இல்லை, இந்திய வரலாற்றில் இது போன்றதொரு சிறப்புமிக்க சட்டத்தை எதிர்க்கதான் முடியுமா?
எப்படி முடியும்?? எதிர்த்தால் தான் இவர்கள் சாயம் மக்களிடம் வெளுத்து விடுமே. அந்த கவலை கூடவா இவர்களிடம் இல்லாமல் போகும்?
ஹ்ம், இன்னும் இருக்கும் ஆறு மாத காலத்தில் பிரிதமர் மோடி இவர்களுக்கு இன்னும் என்னவெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் செய்ய போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வேங்கை பராக்.
ஒருவேளை சட்டத்தின் முன் அனைவரும் சமன் (UCC) என்று அடுத்த குண்டை வீச காத்திருக்கிறாரோ நமது பிரதமர்?
யாமறியேன் பராபரமே!!!