சட்டென்று மாறுது வானிலை.

ஜென்டில்மேன் என்று ஒரு சினிமா, அதில் வரும் கதாநாயகனின் நண்பன், ஏழை என்ற ஒரே காரணத்துக்காக மேல்படிப்பு படிக்க வழியில்லாமல் அவனும் அவன் தாயும் தற்கொலை செய்து கொள்வர். அந்த படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது மனம் மிகவும் பாரமாக இருந்தது.

என்ன இல்லை அவனிடம்? ஏன் இந்த முடிவு? இடஒதுக்கீடு என்பதை மனம் அறியாத காலகட்டம். என்ன தவறு அவனிடம் என்று யோசிக்கவே முடியவில்லை.

அப்புறம் தான் தெரிந்தது அவன் அரசாங்கம் குடுக்கும் சலுகைகளை பெற இயலாத சாதியில் பிறந்தவனாம். அவன் சாதியை சேர்ந்த பலர் முன்னரே சமூகத்தில் மேன்மை அடைந்ததால்,  அவனுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.

சமூகத்தில் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசு இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது, இருகரம் கூப்பி வரவேற்க வேண்டிய ஒன்று. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதற்கு என்ன அளவுகோல். சாதி மட்டுமே தான் காரணமா? ஆழ்ந்து யோசிக்கவேண்டிய ஒன்று.


இன்று காசு இல்லாவிட்டால், நாய் கூட மதிக்காது என்பர். பணம்ன்னு சொன்னா பிணம் கூட வாய்திறக்கும் என்றும் சொல்லுவர்.

பணம் இல்லாதவனால் என்ன பெற முடியும் இந்த ஊரில்? இன்று ஒருவனை இந்த சமூகம் மதிக்க பணம் என்னும் அளவுகோல் தான் உபயோகிக்கப்படுகிறது.

சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூகம் ஒருநல்வழி கோலியுள்ளது.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் இடஒதுக்கீடு.

ரிசர்வேஷன் என்னும் இடஒதுக்கீடு கடலில் மூழ்கும் ஒருவனை காப்பாற்ற வீசப்படும் தூண்டில் போன்றது. இன்று அதை பயன்படுத்தி எண்ணற்ற உயிர்கள் கரைசேர்ந்துள்ளனர். ஆனால் அது மட்டுமே போதுமா?


பாபுவும் ரங்கனும் இணைபிரியாத நண்பர்கள். ஒரே அளவுக்கு ஏழ்மையான குடும்ப சூழ்நிலை. பாபுவின் அப்பா ஒரு டீக்கடைக்காரர். ரங்கனின் அப்பா ஒரு ஆட்டோ ஓட்டுனர். இருவரும் என்ன சாதி என்று இருவரும் ஒருவரை ஒருவர் கேட்டுகொள்ளவில்லை. தெரியவும் தெரியாது. பன்னிரெண்டாம் வகுப்பின் இறுதியில் தான் இருவருக்கும் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தால் என்ஜின்யரிங் படிக்க முடியும் என்று  ஆராய்ந்து பார்த்தனர். இருவரும் ஒரே மதிப்பெண்கள் எடுத்தும், நுழைவுதேர்வில் 50க்கு 50 எடுத்தாலும் பாபுவிற்கு இடம் கிடைக்க ஒரு சில மதிப்பெண்கள் குறைவு. ஆனால் ரங்கன் நுழைவு தேர்வு எழுதினாலே போதும் என்ற நிலை. சாதி ரீதியாக ஒதுக்கீடு ரங்கனுக்கு கைகொடுத்தது.பணம் கொடுத்து படிக்க இயலாது என்ற சூழ்நிலையை கணக்கில் கொண்டு பாபு ஒதுங்கி கொண்டான். ஆனால் ரங்கன் மிகப்பெரிய கல்லூரியில் படிப்பதை நினைத்து பெருமை கொண்டான். முதல்முறையாக பாபுவிற்கு இந்த சமூக ஏற்றத்தாழ்வு புரிந்தது. தாழ்வு மன்ப்பானமை வந்தது. இன்று ரங்கன் நன்றாக பிடித்து முன்னேறி மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறான், பாபு ஒரு தனியார் கம்பெனியில் கடைநிலை ஊழியன். இன்றும் இருவரும் தங்கள் நட்பை தொடர்கிறார்கள்.

நிற்க, இன்று ரங்கனின் மகனுக்கும் ரங்கனுக்கு கிடைத்த அதே சலுகைகள் தொடர்கின்றன. ஆனால் பாபு தன் மகனிடம் சொல்கிறான், “நமக்கு எல்லாம் ரிசர்வேஷன் இல்லடா, நல்லா படிக்க முடிஞ்சா படி, இல்லேன்னா பெருசா எல்லாம் மனசுல கனவு வளர்க்காதே” என்று.

இது தான் நிதர்சனம். சமூகத்தில் சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமே கைகொடுத்து தூக்கிவிடவேண்டியவர்களா? இல்லை. பொருளாதாரரீதியாக ஒடுக்கப்பட்டவர்களும் கைகொடுத்து தூக்கிவிட வேண்டியவர்களே. சமூகத்தின் எந்த நிலையிலும் இருக்கும் ஏற்றதாழ்வுகளும் களையப்படவேண்டியவையே.


பணம் இருப்பவன் எப்படியும் போவான், ஆனால் பணம் இல்லாதவனின் நிலைமை? இன்று இடஒதுக்கீடு அமலுக்கு வந்து பலஆண்டுகள் ஆகிவிட்டன. சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் ஓரிரு தலைமுறைகள் அதன் பலனை அனுபவித்து விட்டனர். மெல்ல மேலெழுந்து வருகின்றனர். ஆனால் பல தலைமுறைகளாக ஏழைகளாக இருப்பவர்களின் நிலைமை? ஒரு சாதியில் பிறந்ததனாலேயே அவர்கள் இன்னும் பொருளாதாரரீதியாக தீண்டதகாதவர்களாய், எந்த அரசு சலுகைகளும் கிடைக்கபெறாதவர்களாய், எந்த அரசியல் கட்சியும் குரல்கொடுக்காதவர்களாய் எவ்வளவு மக்கள் பரி்தவிக்கின்றனர். அவர்களுக்கு குரல் கொடுக்க அனைவருக்கும் ஒரு தயக்கம்.இதுவும் ஒருவகையிலான சாதிய தீண்டல் தான். குறிப்பிட்ட சாதிகளில் பிறந்ததாலேயே, அவர்கள் என்றும் ஏழைகளாகவே தொடர வேண்டிய நிர்பந்தம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில் பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டை  பற்றி விவாதிக்கபட்டது. ஆனால் சில புல்லுருவிகள் காரணமாக அவர்கள் ஏற்படுத்திய ஓட்டுவங்கி பயம் காரணமாக உடனடியாக அந்த விவாதம் நிறுத்தப்பட்டது. முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. இரண்டாம்தர குடிமக்களாகவே அந்த மக்களின் வாழ்வு தொடர்ந்தது. 1991ல் அவர் மீண்டும் வெற்றிபெற்றால் அதற்க்கு வாய்ப்பு இருப்பதாக ஆசைகாட்டப்பட்டது. ஆனால் விதிவசத்தால் அது இயலாமல் போனது.


இதனால் இழந்த இழப்புகள் ஏராளம். துணிந்த சிலர் லஞ்சம் கொடுத்து சலுகைக்காக சாதியை மாற்றி பொதுப்பட்டியலை விட்டு போயினர். இன்னும் சிலர், ஒதுக்கீடு பலன்பெறும் சாதியில் திருமணம் செய்து போயினர். வழக்கம் போல சிலருக்கு மிஷனரிகள் ஆசைவார்த்தை காட்டி மதமும் மாற்றினர்.


சபாஷ், இன்று நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த சட்டம், அந்த அடித்தட்டு மக்களையும் இனம்கண்டு பொதுப்பிரிவில் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் (10%) உள்ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. நிற்க, பொதுப்பிரிவில் வெறும் பிராமணர்கள் மட்டுமே இல்லை என்பதே உண்மை. கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட சாதியினர் இந்த அடைப்புக்குள் வருகின்றனர்.

ஆனால் இன்று ஏனைய எதிர்கட்சிகள் ஏதோ பிராமணர்கள் மட்டுமே இந்த சலுகையை பெறப்போவது போல் ஒரு மாயையை உருவாக்குகின்றனர். ஏழைகளுக்காக, சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக என்று கட்சி நடந்தும் கம்யூனிஸ்ட்களும், திமுக உற்பட்ட திராவிட கட்சிகளும் ஏழைகளை மனிதர்களாகவே கருதவில்லை போலும். இன்னும் சில கட்சிகள் என்ன சொல்வதென்று தெரியாமல் இதுவரை வாய்மூடி மௌனியாக இருக்கின்றனர். அவர்கள் வாயடைக்க வைத்த மோடி மீது வேறு என்ன குறை சொல்லலாம், அல்லது மற்றவர்கள் சொல்லட்டும், அதை வழிமொழியிலாம் என்று காத்துக் கிடக்கிறார்கள் போலும்.


என் சமூகம் உனக்கு முன்னே செல்கிறது என்று சொல்பவர்கள் பின்னால் திரும்பி இந்த ஏழைகளையும் கொஞ்சம் பாருங்கள்.

இந்த அரசு அனைத்து மக்களுக்கான அரசு என்பதை நிச்சயம் உரக்க சொல்லுவேன். இதுவரை ஒரு அரசியல் கட்சியும் சீண்டாத, வரைபடத்தில் கூட கண்டுகொள்ளப்படாத, ஒரு ஏழை இனத்தை கூட விடுபடாமல் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசு மோடி அரசு.

ஏற்கனவே ஆயூஷ்மான் பாரத் என்னும் ஐந்து லட்ச ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு, வீடு தேடி வந்து மக்களை திக்குமுக்காட வைக்கின்றது. அந்த தித்திப்பு முடியும் முன்னரே பொங்கலுக்கு ஒரு கரும்பை வெட்டி கொடுத்துள்ளது மோடி அரசு. கணக்கு போட்டு பாருங்கள், 15லட்சத்தில் பாதி பணம் வந்துவிட்டது.

கண்டிப்பாக இந்த ஒரு விஷயத்திற்காக மோடி அரசு திரும்ப தேர்ந்தெடுக்கபடவேண்டும்.. இல்லையென்றால் ஓட்டுவங்கி அரசியல் நடத்தும் மாற்றுகட்சிகள் மக்களை குழப்பி இந்த சட்டத்தை மாற்றிவிடுவர். திரும்பவும் காலத்திற்கும் ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டியது தான்.



திரும்பவும் அப்படியே தான் இருக்க போகிறோமா? வாய்ப்பை நழுவ விடாதீர்கள். வரலாறு வரலாறாகவே இருக்கட்டும்.

சட்டென்று மாறுகிறது வானிலை. ஒரு இதமான காற்று வீசுகிறது. ஆளும் கட்சிக்கும், மக்கள் மனநிலைக்கும்.

சிந்திப்போம் செயல்படுவோம்.

 

Article by :  முகுந்தன்

One Reply to “ஏழை ஜாதி”

  1. Awesome… Connecting with movie will make readers understand the concern of upper caste….Good move by Namo

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.