கடந்த சில நாட்களாக, நம்ப ஊருல உண்மையான விவசாயிகளை விட விவசாயிகளின் நண்பன் அப்பிடின்னு சொல்லிட்டு இருக்குறவங்க தான் விவசாயி மசோதா பத்தி பொலம்பிட்டு இருக்காங்க.

அது வந்தா இப்படி ஆகிடும், அப்படி ஆகிடும், ஜனநாயகத்தின் படுகொலை அப்பிடின்னு கலர்கலரா சொல்லுறாங்களே தவிர, ஏன் பாதிக்கும், எப்படி பாதிக்கும்னு சொல்ல மாட்டேன்றாங்க.

இதை பார்த்தா எனக்கு நம்ம கிரேஸி மோகன் நாடகம் தான் ஞபாகம் வருது. “இவன் எப்பவுமே இப்படி தான். அது அது மேல இருக்குனு சொல்லுவான், ஆனா எது எது மேல இருக்குனு சொல்லமாட்டான்.

இப்படி தான் அவங்களுக்கும் தெளிவு இல்லாம, நமக்கும் சரியா தெளிவு படுத்தாம, படுத்துறானுங்க. (கடுப்பேத்துறார் மை லார்ட்.)

இந்த மசோதாவில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், அடிப்படையாக ஒரு விஷயம் இருக்கு. விவசாயிகள் அவர்கள் விளைப்பொருட்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம்.

அது எப்படி விவசாயி வண்டி புடிச்சி டெல்லி, பஞ்சாபில் இருக்குற ஆளுங்களுக்கு விக்க முடியும்னு கிளம்புற ஆளுங்களா நீங்க? அப்ப மேலும் படிங்க.

விவசாயி ஏன் ஊரு ஊரா போய் விக்கணும்? யார் வேணும்னாலும் விவசாயிகிட்ட வந்து நேரடியா வாங்கலாமே.

அதாவது விவசாயி தன் பொருட்களை வாங்குறவங்க இடத்துக்கு போய் தான் விற்கணும் என்று எங்கயும் கூறவேயில்லை. தேவைக்கேற்ற மாதிரி விவசாயி இடத்திற்கே வந்து மற்றவர்கள் வாங்குவதற்கு வழிவகை செய்திருக்கு இந்த மசோதா.

இதில் மேலும் என்ன சிறப்பென்றால் விவசாயிகள் அவர்கள் விளைய வைக்க போகும் பொருளுக்கு முன்னமே இவ்வளவு காசு என்று நிர்ணயம் செய்துவிட்டு அதை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொண்டுதான் நிலத்தில் கால் பதிக்க போகிறார்கள்.

சரி, இதுநாள் வரையில் விவசாயிகளுக்கு என்ன கஷ்டம் இருந்தது?

விவசாயிகள், ஒவ்வொரு சீசனுக்கு ஏற்றார் போன்று பயிரையிட்டு அதை வெற்றிகரமாக அறுவடை செய்யும் வரையிலும், அதற்கு என்ன விலை கிடைக்குமென்று அறியாமல் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு தான் இருந்தனர்.

இப்பொழுது இது மாற உள்ளது.

காண்ட்ராக்ட் பார்மிங்” என்கின்ற முறையில, பொருள்களை வாங்குகிறவர்களிடம் விலையை பேசி தீர்மானம் செய்துவிட்ட பின்பே, அது கட்டுப்படியானால் மட்டுமே வேலையை துவங்குவார்கள். இல்லையெனில், வேறு ஒரு வணிகரிடம் ஒப்பந்தம் போடலாம். இதைப்போன்றே அதிகபட்சமாக ஐந்து வருடம் வரை ஒரே சமயத்தில் ஓப்பந்தம் மேற்கொள்ளலாம்.

இப்படி, எந்த வணிகர் தங்களுக்கு நியாயமான விலை தர முன் வருகிறார்களோ அவர்களுடன் மட்டும் விவசாயிகள் வியாபார ஒப்பந்தம் செய்து மகிழ்ச்சியோடு விவசாயம் செய்யலாம்.

ஒருவேளை வெள்ளம், இயற்க்கை சீற்றம் என்று பொருள்களை ஒப்பந்தம் செய்த படியே தர முடியவில்லையென்றால்?

ஆம். உண்மை, இந்த மசோதா இல்லைன்றாலும் இந்த நிலைமை மாறாது. ஆனால், அதற்கு பல காப்பிட்டு திட்டங்கள் உள்ளன, அவை காக்கும்.

மேலும், இந்த மசோதா படியே, அவர்களுக்கு வேண்டுமாயின், “service contract” போன்று போட்டு லாபமோ நஷ்டமோ அதையும் கார்ப்ரேட் கூடவே பகிர்ந்து கொள்ளலாம்.

இன்னும் ஒத்துக்க மனசு வரலியா?

இதுக்கு ஒரு எளிமையான விளக்கம் தருகிறேன். கடந்த காலத்தில் நம்முடைய ஆட்டோ அனுபவத்தை சிறிதே சிந்தித்து பாருங்க.

முன்பெல்லாம் நாம் ஆட்டோவில் செல்லவேண்டுமெனில் வயிற்றில் புளியை கரைக்கும். ஆனால், தற்பொழுது பாருங்கள். OLA , UBER என்று பல தனியார் நிறுவனங்கள் மக்கள் சேவைக்கு நேரடியாகவே வந்தாயிற்று. நாமும் காசு அதிகமாக இருந்தாலும் நிம்மதியாக அதை உபயோகப்படுத்துகிறோம்.

அது ஏன்?

நிம்மதி. அது தான் முக்கியமாக கவனிக்க வேண்டியவை.

கொஞ்சம் அப்பிடியே 10 – 20 வருஷம் பின்னோக்கி சென்று, நிலைமை எப்படி இருந்தது என்று எண்ணி பாருங்கள்?

ஆட்டோ ஸ்டாண்டில் கேட்டால், நாம் சொல்லும் இடத்திற்கு மட்டும் வரமாட்டேன் என்று அடம்பிடிப்பார்கள். அப்படியே வந்தாலும், ரிட்டர்ன் சவாரி இல்லாமல் வர வேண்டும் என்று புலம்புவார்கள். ஒருவேளை ஒத்துகொண்டு வந்தாலும் போய் இறங்கியவுடன் காசு கொடுக்கும் வரை எவ்வளவு என்று தெரியாது.

மீட்டர் போடுவதே ஆச்சர்யம், இதில் மீட்டருக்கு மேலே, கீழலே என்று வாக்குவாதம் வேறு.

சென்னை ரயில் நிலையத்துல இருந்து மயிலாப்பூருக்கு மூணு தெரு தானே, இதுக்கு ஏன் இவ்வளோ அப்பிடின்னு கேக்குறது, மீட்டரை தூக்கிட்டு “சுட்டுட்டேன்“னு ஆட்டோகாரனை ஓட வைக்கிறது, இவையெல்லாம் ஜென்டில்மேன் போன்ற திரைப்படத்தில் மட்டுமே காண முடியும்.

நிஜத்தில் செய்தால், ஆட்டோகாரங்க நம்பள தூக்கிடுவாங்க.

 

ஆனால், இன்று நிலைமை எப்படி இருக்கு?

வண்டியில் ஏறும் முன்னரே நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்வளவு காசு ஆகும் என்று தெளிவாக தெரிந்துவிடும். நமக்கு விருப்பம் இருந்தால் அந்த வண்டியை புக்கிங் செய்து செல்வோம். ஒருவேளை, காசு அதிகமாக இருப்பதாக தோன்றினால், பிறகு சிறிது நேரம் கழித்து வேறு ஒரு வண்டி பார்ப்போம் என்று சும்மா இருந்துவிடுவோம். சரி தானே?

அதாவது, நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று முன்னமே தெரிந்து விடும். அங்கே போய் சண்டை போட வேண்டிய அவசியம் இல்லை என்ற ஒரு நிம்மதியோடே வண்டி ஏறி போக முடியும்.

இந்த தெளிவும், நிம்மதியும் தாங்க இந்த OLA, UBER அவங்களோட வெற்றி.

அதே போல தான் இப்ப விவசாயிகளின் நிலைமையும். விலை பொருளுக்கு அவங்க எவ்வளோ விலை வைக்கணுமோ அதை நிர்ணயம் செஞ்சி, அந்த விலைக்கு ஒத்துவர ஆளுங்க கூட மட்டும் ஒப்பந்தம் போட்டு நிம்மதியா விவசாயம் பார்க்கலாம்.

இதை சொன்ன நம்மள சங்கி சொல்லுறாங்க.. என்னத்த சொல்ல…

கார்ப்ரேட் விவசாயிகளை ஏமாத்தினா என்ன பண்ணுறது, அப்பிடின்னு ஒருபக்கம் சத்தம் வரலாம்.

OLA, UBER மேல கூட தான் தினமும் ஆயிரம் பிரச்சனை வருது. உடனே நாம்ப என்ன OLA, UBER வேண்டாம். இந்த நாட்டுல இருந்து வெளிய அனுப்புங்கனா கொடி தூக்கினோம்? இல்லையே.

இது போன்ற பிரச்சனையை எப்படி சமாளிக்கிறது? ஒரு நிறுவனம் தகராறு செய்தால், அந்த நிறுவனத்தை அம்போ என்று விட்டுவிட்டு வேறு ஒரு நிறுவனம் கூட சேர்ந்து நமது அன்றாட வேலைகளை செவ்வனே செய்து கொண்டு தான் இருக்கிறோம்.

அது தான்இந்த  திறந்த மார்க்கெட்டில் இருக்கும் மிக பெரிய பலம். போட்டி. போட்டி இருந்தால் மக்களுக்கு நன்மை தானாக வந்து சேரும்.

அதை தான் என்னை பொறுத்தவரையில் இந்த விவசாய மசோதா செய்துள்ளது.

இந்த மசோதாவை பற்றி மேலும் தகவல்கள் பெற விரும்புவோர், நேரே கீழே உள்ள தளத்தில் இருந்து பெறலாம்.

 

https://www.prsindia.org/sites/default/files/bill_files/Farmers%20%28Empowerment%20and%20protection%29%20bill%2C%202020.pdf

இதில் அதிக பக்கங்கள் இல்லை. மொத்தம் 15 பக்கங்களே உள்ளன. சமூக வலைத்தளங்களில் நீங்கள் எதிர்ப்பை  தெரிவிப்பதற்கு முன், குறைந்தது இதை படித்து தெளிவு பெற்று பின் பகிரலாமே.

வாழ்க பாரதம். 

 உங்கள் மகேஷ் 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.