மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்

– திருவள்ளுவர் 

இன்றைய விவசாய மக்களின் நிலைமையை கண்டதும் தோன்றிய முதல் குறள்.

மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான் போன்று தன் மானம் இழந்தால் உயிரிழப்பர் மேன்மக்கள் என்பதே என் அய்யன் வள்ளுவனின் கருத்து. இதற்கு மாற்று கருத்து கூற எவரும் பிறக்கவில்லை, பிறக்கவும் வாய்ப்பில்லை.

பண்டை தொட்டே நம் நாடு விவசாய நாடு. இந்த உலகிற்கே விவசாயம் கற்று கொடுத்த மாபெரும் நாடு நமது.

மாடுக்கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனைக்கட்டி போரடித்த பெருமை மிக்க நாடு இது

ஆனால் இன்றைய விவசாயிகளின் நிலை? மீசைமுறுக்கி மார்த்தட்டி பெருமைபடும் விதமாகவா இருக்கிறது? அவரது நிலைமையை எண்ணுகையிலேயே கண்ணில் நீர் எட்டி பார்க்க தான் செய்கிறது.

நான் அரசியல் காரணமாக, அல்லது வருமான வரியின் கண்களுக்கு மண்ணை தூவ தன்னை விவசாயிகள் என்று கூறிக்கொள்ளும் மக்களை கூறவில்லை.

தினமும் நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தி, கூழோ கஞ்சியோ மானத்துடன் குடித்து, நாம் சோற்றில் கைவைக்க நிதமும் அந்த சேற்றில் தன் கால் பதிக்கும் உண்மையான உழைப்பாளியாக போற்றவேண்டிய விவசாய பெருமக்களை கூறுகிறேன்.

நம் நாடு விவசாய நாடென்பதாலும், விவசாயத்தை வளர்க்கும் பெரும் நோக்கத்திலும் தான் விவசாயத்தின் வருமானங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை எத்தனை பெயர் தவறாக பயன்படுத்துகின்றனர் என்பதை நான் கூறி நீங்கள் அறிய வேண்டியதில்லை என்பதே உண்மை.

சரி, விவசாய பெருமக்களின் கோரிக்கைகள் தான் என்ன?

நிச்சயமாக இலவசங்கள் இல்லை என்று என்னால் ஆணித்தரமாக கூறமுடியும். பல அரசாங்கமும் அவர்களுக்கு இலவசங்களை அளித்து, அல்லது அளிக்கின்றோம் என்று பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அமரவே நினைக்கிறது.

பல விவசாயிகளும் ஒரு சூழ்நிலை கைதியாக இதை நம்பி அவர்களை ஆட்சியில் அமரவும் செய்து பின் தான் ஏமாற்றப்பட்டோம் என்று தற்கொலை வரையும் சென்றுள்ளனர்.

நம் தமிழகத்திலும் இன்னும் வேறு சில மாநிலங்களிலும் கூட பல ஆண்டுகளாக விவசாயத்திற்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. எந்த ஒரு பொருளும் இலவசமாக கிடைக்குமாயின் அதன் பெருமையை இழக்கும் என்பதற்கு இது ஒரு சாலச்சான்று.

இலவசம் தானே என்று பலர் தவறாக உபயோகிக்க, சில வருடங்களிலேயே மின்சார பற்றாக்குறை தலைவிரிக்க ஆரம்பித்தது. இதற்கு அதிக உபயோகம் மட்டுமே காரணம் இல்லை எனினும், அதும் ஒரு பெருங்காரணமாகவே இருந்துள்ளது.

எந்த விவசாயியும் இலவசங்களுக்காக காத்திருப்பதில்லை. தயை கூர்ந்து அவர்களை இலவசங்களுக்காக ஏங்கும் பிச்சைகாரர்களாக மாற்றிவிடவேண்டாம். அவர்கள் விரும்புவது தடை இல்லா மின்சாரம், மானமுடன் வாழ ஒரு வழிவகை.

இதை வெற்றிகரமாக சாதித்து காட்டியுள்ளார்கள் குஜராத் ஆட்சியாளர்கள்.

அது எப்படி அவர்களால் மட்டும் இது சாத்தியப்பட்டது?

என்று ஒரு பொருளை நாம் காசு கொடுத்து வாங்கி உபயோகிக்க துவங்குகின்றோமோ, அன்றே நமக்கும் பொறுப்புணர்வு எழுந்துவிடும். அது எவ்வளவு சிறிய பணமாக இருந்தாலும் சரி.

அதுபோலவே, இலவசம் என்பதை நீக்கி, உபயோகத்தை கணக்கிடப்பட்டு, பெயருக்கு ஒரு கட்டணம் என்று மிக குறைந்த விலையில் கொடுக்கப்பட்ட மின்சாரம் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே உதவ ஆரம்பித்தது.

ஆம், கணக்கிடப்படுவதால், விவசாயிகளும் பொறுப்போடு அதை உபயோகிக்க, விரயமாகும் மின்சாரமும் சேமிக்கப்பட்டது. இது போன்ற திட்டங்களாலும், சூரிய ஒளி மின்சாரம் என்று வேறு பல முயற்சிகளாலும் பற்றாக்குறையும் நீங்கியது.

இதை ஏன் ஒவ்வொரு மாநிலமும் ஓர் முன்னுதாரணமாக மேற்கொண்டு செயல்படுத்தவில்லை?

அடுத்து விவசாயக்கடன்.

இன்றும் விவசாயிகள் வங்கிகளில் கடன் வாங்கி தான் தன் நிலங்களில் பயிரிடுகின்றனர். சில சமயங்களில் இயற்க்கை பொய்த்துவிடுகிறது. அது போன்று நடக்கும் தருவாயில் அவர்களுக்கு எந்த நஷ்டஈடுகளும் கிடைக்க வழியின்றி தவித்தனர்.

உயிரற்ற வாகனம் வாங்கினால் கூட அதற்கு ஓர் உத்திரவாதம் உள்ளது. காப்பீட்டு நிறுவனங்களும் கைகொடுக்க உள்ளது. ஆனால், ஓர் விவசாயி தன் உயிருள்ள பயிர்களுக்கு மட்டுமல்ல தன் உயிருக்கும் எந்த உத்திரவாதமும் இன்றி தவித்து வந்தனர்.

இதை பிரதமர் பசல் பீமா யோஜனா போன்ற இந்திய அரசாங்க காப்பீட்டு திட்டம் மூலமாக விவசாயிகளுக்கு ஒரு விடிவை தேடி தந்துள்ளது அரசு. பாராட்டப்பட வேண்டியவை.

இருப்பினும், விவசாயிகள் பலர் கடன் தொல்லைகளால் தற்கொலை செய்வதென்பது குறைந்தபாடில்லை.

ஏன் இந்த அவநிலை?

முதல் காரணம், விவசாய மக்களில் இன்றும் பலர் வங்கிகளில் கடன் வாங்குவதை தவிர்த்து தனியார்களிடம் வாங்கி அவதிக்குள்ளாகிறார்கள். அவர்களின் மிரட்டலும், அவமானங்களும் அவரது தற்கொலைக்கு காரணம்.

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் என்று கூறிய கம்பன், பொய் கூறவில்லை. அப்படி கலங்கி நின்ற மக்களுக்கு அந்த கடனை தள்ளுபடி செய்வது எப்படி ஓர் அரசாங்கத்தின் கடமையோ, அது போன்றே அடுத்து இது போன்றதொரு நிலைமை வராதிருக்க ஆவண செய்யவும் வேண்டும்.

ஆனால், இதை காரணம் காட்டி, பல அரசுகளும் விவசாய கடனை ரத்து செய்கிறோம் என்று கிளம்பி விடுகிறதே தவிர, இனி அச்சூழ்நிலை ஏற்படாதவன்னம் எந்த நடவடிக்கை மேற்கொண்டதாக தெரியவில்லை.

அப்படி சிலருக்கு கடன் தள்ளுபடி செய்தால், இதுவரை முறையாக தவணை கட்டி கடனை அடைத்த விவசாயிகளின் மனோநிலை? அவர்கள் தான் ஏமாற்றப்பட்டதாக தானே எண்ணுவர்? அதில் தவறும் இல்லை என்பதே எனது வாதமும்.

முறையாக கடனை கட்டிய ஒருவர், தான் நாணயமாக வாழ்ந்ததாலேயே வஞ்சிக்கப்பட்டுள்ளோம் என்று நினைக்கத்துவங்கினால் மறுமுறை அவர் எவ்வாறு கடனை திரும்பச்செலுத்த முனைவர்? இது ஒரு தவறான எடுத்துக்காட்டாக முடியாதோ?

அப்படி என்றால் என்ன செய்யவேண்டும்?

ஒருவர் தவறு செய்கிறார் என்றால், அவர்களை மன்னிப்பது தவறில்லை.அதே வேளையில், நேர்மையுடன் ஒருவர் இருந்தமையால் அவர்களை தண்டிப்பது என்ன நியாயம்?

கடன் தள்ளுபடி என்பது தவறை மன்னிப்பதற்கு சமம். அது போன்றே, நேர்மையுடன் செயல்பட்ட என் சக விவசாயிகளுக்கு அவர்கள் நாணயத்தை போற்றும் வகையில் தக்க சன்மானம் அளிக்க வேண்டாமா?

ஆம், அவ்வாறு ஒரு விவசாயி நேர்மையுடன் இருக்கும் பட்சத்தில் அவரை ஊக்குவிக்க இந்த அரசாங்கம் ஏதும் செய்ய வேண்டும். அது பொருளாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் நற்சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.

மற்றும், அந்த சான்றுள்ள அணைத்து விவசாயிகளுக்கும் அவர்களது நேர்மையை பாராட்டும் வகையில் குறைந்த வட்டியிலோ, அல்லது வட்டியே இல்லாத கடனாக வழங்கி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டியது இந்த அரசின் கடமை.

காலங்காலமாக அரசுகள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தவன்னம் உள்ளது. இருப்பினும், ஆட்சிகள் பல மாறிய பொழுதும், இத்தனை ஆண்டுகள் உருண்டோடியும் அவர்களது வாழ்கை தரம் உயராமல் இருக்கின்றதே, அதன் காரணம் என்னவென்று நாம் அலசி ஆராய வேண்டாமா?

கண்டிப்பாக ஆராய வேண்டும். அதன் தொடக்கமே இந்த பதிவு. சிந்தியுங்கள் தோழர்களே, விவசாய மக்களே. அரசு தள்ளுபடி செய்யும் கடன் மற்றும் அதற்கான பணமும் உரிய நபரை சென்று சேருகின்றதா என்று சிந்தியுங்கள்.

சேரவில்லை என்றால், அது எவ்வாறு சரியான மக்களுக்கு சென்று சேரவைப்பது என்று சிந்தியுங்கள். ஏன் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்புங்கள். மீண்டும் இது போன்றதொரு நிலைமை தோன்றாதிருக்க என்ன செய்ய வேண்டும் என்று வினா எழுப்புங்கள்.

ஏன் என்ற கேள்வி

இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை.

இன்று சிந்திக்கவில்லை என்றால்

நாளை வாழ்க்கையே இல்லை.

விழித்திரு, விழித்தெழு,

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.