
#கடமை #உரிமை
இன்னும் நம் நாட்டில் எதற்காகக் குடியரசு தினம் கொண்டாடுகிறோம் என்று கூடத் தெரியாத அறிவிலி தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்பேற்பட்ட தலைவர்கள்தான் அப்பாவி தொண்டர்களை தூண்டி விட்டு ‘வாழ்வுரிமை போராட்டம்‘ ‘தமிழர் உரிமை போராட்டம்‘ எனப் பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டு இந்த நாட்டின் அமைதியை குலைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் மக்களுக்கும் ‘உரிமைப் பிரச்சனை தான் 24 மணி நேர போராட்டமாகத் தோன்றுகிறதே தவிர ‘கடமை‘ என்பதைப் பற்றி ஒருவருக்கும் கவலையில்லை. சொல்லப் போனால் கடமை என்ற வார்த்தையே இப்போது ஒரு சம்பிரதாய வார்த்தையாகிப் போனது. வருடத்தில் 364 நாட்களும் உரிமையைப் பற்றி நினைக்கும் நாம் இந்தக் குடியரசு தினத்திலாவது ஒரு நல்ல குடிமகனாக ஆற்ற வேண்டிய கடமைகளை சிந்தித்துப் பார்ப்போம்.
ஒரு குடிமகனது அடிப்படை கடமைகள் பற்றி நம் இந்திய அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டது 1976ம் ஆண்டு. சோவியத் ரஷ்யாவைப் பின்பற்றியே இந்தப் பகுதி சேர்க்கப்பட்டதாக சொல்லப்படுவதுண்டு. முதலில் 10 புள்ளிகளாக இருந்தது 2002ம் ஆண்டு மேலும் ஒரு புள்ளி சேர்க்கப்பட்டு மொத்தம் 11 புள்ளி கொண்டதாக இப்போது உள்ளது. அவற்றில் இரு புள்ளிகளைப் பற்றிதான் நாம் பார்க்க இருக்கிறோம்.
இந்திய அரசியல் சாசனத்தில் குடிமகனது முதல் கடமையாக கூறப்பட்டுள்ளது: அரசியல் சாசனம் மற்றும் அதன் நிறுவனங்கள், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்துக்கு மரியாதை செய்தல். ஆனால் இன்று நாட்டு நிலைமை அப்படியா இருக்கிறது? மத்தியப் பிரதேச முதல்வராக காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பதவியேற்ற கையோடு பிரதி மாதம் முதல் நாள் தலைமைச் செயலகத்தில் 15 வருடமாக பா.ஜ. அரசின் கீழ் இருந்த பழக்கமான தேசிய கீதம், வந்தே மாதரம் பாடல் இசைக்கும் நிகழ்ச்சிக்கு மூடு விழா நடத்தினார். எதிர் கட்சிகள் எதிர்ப்புக் குரல் எழுப்பியபோது ‘தேசிய கீதம் பாடுவது ஒருவரது தேச பக்தியை காட்டாது‘ என எகத்தாளமாக பதில் அளித்தார். எதிர்ப்பு வலுக்கவே மாதம் முதல் நாள் போலீஸ் பேண்டு வாத்தியக்குழு தலைமைச் செயலகம் வரும்போது மட்டும் தேசிய பாடல்கள் பாடப்படும் எனக் கூறி சமாளித்தார் (Financial Express 02.01.2019 & 03.01.2019). அதாவது இவர்களது மோடி எதிர்ப்பு வெறி ஹிந்துத்வா எதிர்ப்பு வெறியாக மாறி இப்போது இந்தியாவையே எதிர்க்கும் ஒரு துவேஷமாக உருமாறி வந்து நிற்கிறது. மொழிகளாலும், கலாச்சாரங்களாலும் பிரிந்து கிடக்கும் நம் பாரத தேசத்தை இணைப்பது ‘வந்தே மாதரம் என்ற முழக்கமும் நம்முடைய தேசிய கீதமும்தான். ஆனால் ஒரு மாநில முதல்வரே அதை பாடக் கூடாது என்று சொல்லும் நிலையில் தான் நம் நாடு இன்று உள்ளது. சினிமா தியேட்டர்களில் கட்டாயமாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று சொன்னபோது எவ்வளவு ஏளனப் பேச்சுகள், எவ்வளவு நக்கல் நையாண்டிகள்? வேலைக்குப் போவதற்கும், சொந்த ஊருக்கு போவதற்கும் மணிக்கணக்கில் கால் கடுக்க நிற்க தயாராக இருக்கும் குடிமகன்கள் கூட ஏஸி அறையில், குஷன் நாற்காலியில் இருந்து 52 வினாடிகள் எழுந்து நிற்க தயாராயில்லை. இப்பேற்பட்ட குடிமகன்கள் தான் சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோதி இந்தியா வராமல் ஊர் சுற்றுகிறார் என அவதூறு பரப்புபவர்கள். என்ன செய்ய, தியேட்டர்களில் படத்துக்கு டிக்கெட் ரிசர்வ் செய்வது போல நாமும் நம்முடைய நாட்டுப் பற்றை ஜனவரி 26க்கும், ஆகஸ்ட் 15க்கும் ரிசர்வ் செய்து வைத்துள்ளோம்.
http://www.newindianexpress.com/nation/2019/jan/02/no-national-song-singing-by-babus-in-naths-mp-1919494.html
குடிமகன்களின் கடமைகளில் 5வது புள்ளியாக கூறப்பட்டுள்ளது: ‘மத, மொழி, இன மற்றும் பிராந்திய கட்டுப்பாடுகளை கடந்து சகோதரத்துவத்தை மேம்படுத்துதல், பெண்களின் தன்மானத்துக்கு பங்கம் விளைவிக்கும் பழக்கங்களை கைவிடுதல்‘ ஆகும். இது, இன்று நடப்பதற்கும் அன்று சொல்லப்பட்டதற்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமாவில் காதல் என்ற பெயரில் பெண்களை கண்ணியமின்றி காட்டுவதும் மெகாத் தொடர்களில் பெண்களே பெண்களுக்கு கொடுமை இழைப்பதாக காட்டுவதும் தினசரி வாடிக்கை ஆகி உள்ளது. இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் பெண்கள் பதவிக்காக சொந்த தந்தையைக் கூட கொல்வது போல காட்டுகின்றனர். இதுவா பெண்கள் சுதந்திரம்? இதுவா பெண்கள் முன்னேற்றம்? சக்தியையும் சிவனையும் ஒருசேர வணங்கும் நம் சமூகத்தில்தான் இப்படிப்பட்ட அலங்கோலங்களும் அரங்கேறுகின்றன. ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற பெண்கள் வாழ்ந்த மண்ணுக்குதான் இந்த நிலை. சமீபத்தில் லயோலா கல்லூரியில் நடந்த ஓவியக் கண்காட்சியில் பாரத மாதாவும், இந்து மதக் கடவுள்களும் – குறிப்பாக பெண் கடவுள்களை எவ்வாறு கேவலமாக சித்தரிக்கப்பட்டிருந்தனர் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.
இதேபோல இன்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருப்பது சிறுபான்மையினரும், பெரும்பான்மையினரும் மாறி மாறி சொல்லிக் கொள்ளும் பழிகள். ‘நான் இந்தியன்‘ என்ற உணர்வு மேலோங்கும்போது எங்கிருந்து சிறுபான்மை, பெரும்பான்மை பிரிவினை வருகிறது? தங்களுடைய சுய அரசியல் லாபத்திற்காக பிராந்திய கட்சிகளும், காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளும் இந்தப் பிரிவினையை மக்களிடையே தூண்டி விட்டு குளிர் காய்கின்றன. இதனால் சிறுபான்மையினருக்கு தாங்கள் எப்போதும் வஞ்சிக்கப்படுவது போலவும், பெரும்பான்மையினருக்கு ஒரு போலியான குற்ற உணர்ச்சியும் தோன்றுகிறது. இதை வைத்து அரசியல் தலைவர்களும் ஓட்டு வங்கி அரசியல் நடத்தி லாபம் அடைகின்றனர்.
இப்படியாகப் பல்வேறு கடமைகளை நம் அரசியல் சாசனம் நமக்கு எடுத்துக் கூறுகிறது.
கடமை என்று இருந்தால் உரிமை என்பது நிச்சயம் இருக்கும். அந்த வகையில், இந்திய குடிமகனுக்கு உள்ள உரிமைகள் யாவை என்று பார்ப்போம்.
இந்திய அரசியலமைப்பு, முதலில் ஏழு அடிப்படை உரிமைகளைக் கொண்டிருந்தது. 1978ம் ஆண்டு 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, சொத்துரிமையானது அடிப்படை உரிமையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதால், தற்போது ஆறு அடிப்படைகள் உரிமைகள் உள்ளன.
1. சமத்துவ உரிமை
2. சுதந்திரத்திற்கான உரிமை
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (!!)
4. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை
5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்
6. அரசியலமைப்பு தீர்வு வழிகளுக்கான உரிமை ஆகியவையாகும்.
ஆனால் இன்றைய தலைமுறையோ உரிமைப் போராட்டம் மட்டுமே தங்கள் வாழ்வின் தலையாயக் கடமையாகக் கொண்டு ‘போராளி‘ என்ற வார்த்தையின் மரியாதையையே பாழாக்கிக் கொண்டுள்ளனர். இந்தக் குடியரசு தினத்தில் மட்டுமாவது நம்முடைய உரிமைகளை மட்டுமே நினைவில் கொள்ளாமல் நாம் நம் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் உணர்வோம். இந்தியராக உயர்வோம்.
ஜெய் ஹிந்த்.
Article by : Symbianian