gst

“எங்கெங்கும் காணினும் சக்தியடா” மாறாக, “எதையதை விற்றாலும் GST வரியடா” ன்னு பாடத்தோணுது.

நாலு மாசமா எத தொட்டாலும் GST பத்தி தான் பேச்சு. பால் விலை ஏங்க ஜாஸ்தி, எல்லா பொருளுக்கும் GST வரி போட்டுட்டாங்க. தீபாவளிக்கு மட்டன் விலை 550₹, எல்லாம் GST மகிமை. போனா மாசம் 150₹ க்கு பண்ணின த்ரெட்டிங் 250₹. ஏன்னா GST விலையேற்றம்.

என்ன கொடுமை சரவணா இது. இப்படி தானே உங்களுக்கும் வலிக்குது. அப்போ நீங்கள் தான் இனி நான் சொல்ல போவதை கேட்க சரியான நபர்.

major minor charactersஇப்படி தான் எங்கள் ஊருல மேஜர், மைனர்ன்னு ரெண்டு பேரு இருந்தாங்க. ரெண்டு பேருக்குள்ளே அம்பேத்கார்ல இருந்து ஆப்ரகாம் லிங்கன் வரைக்கும், வாடிகன்ல இருந்து வலங்கைமான் வரைக்கும் உலக நியாயம் ஒண்ணு விடாம பேசி தீர்த்துக்குவாங்க. ஒட்டு கேட்டா நமக்கு எதாவது புரியுதான்னு பார்ப்போம்.

டேய் தம்பி மைனரு, என்ன பாத்தும் பாக்காத போற?

அட ஏனுங்க மேஜர், என்னோட சித்தப்பா மவனோட ஒரே ரோதனை. நானே உங்கள பாக்கலாம்ன்னு இருந்தேன். மாட்ட புடிச்சு கட்டிட்டு வரலாம்ன்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்க புடிச்சிடீங்க.

சரிதான். வேலில போறத எடுத்து நானே வேட்டிகுள்ள விட்டுடனா. சரி சொல்லு கேப்போம். சின்ன பையன், அவன் என்னப்பா பண்ணினான்.

முந்தா நேத்து காடு வித்த பணம் வாங்கிட்டு என்கிட்டே வந்து ஏதாவது தொழில் தொடங்க முடியுமான்னு கேட்டு நின்னான். பயபுள்ள தெளிவா இருக்கான். வரி கட்டாத பிசினஸ் எதாவது சொல்லுங்கன்னு ஒரே நச்சரிப்பு. இப்போ ஏதோ புதுசா GST வரி வந்திருக்காமில்லே, அதுக்கு பயந்துட்டான்.

அப்போ கோழி பண்ண வையுடான்னு சொல்லி விட்டேன். அவனுக்கு ஹோட்டல் தான் வெக்கொணும்ன்னு ஆசை. அப்போ மெஸ் மாதிரி நடத்துன்னு சொன்னேன். பெருசா பண்ணனும்ங்கிறான். எப்படி போனாலும் கேட் போடறான். சரி அது தான் உங்க கிட்டே கேட்டுட்டு சொல்றேன்ன்னு வந்துட்டேன்.

இரு இரு, நீ பாட்டுக்கு புதுசா GSTன்னு சொல்றே. இதுக்கு முன்னாடி வரியே போடாம தான் இங்கே தொழில் நடந்ததா தம்பி?

மேஜர், நமக்கு இத பத்தி எல்லாம் தெரியாதுங்க, ஏதோ கடைக்கு போனோமா பொருள் வாங்கினோமான்னு இருந்தேன். இப்போ தான் இந்த வரி பத்தி எல்லாம் சொல்றாங்க. அப்போ புதுசு தானுங்களே.

gst

அடேய், இந்த சினிமாகாரன் மாதிரி நீயும் பேசாதே. உனக்கு சொல்லி குடுக்கறதே எனக்கு வேலையா போச்சு. 2005க்கு முன்னாடி வரை பொதுவா GENERAL SALES TAXன்னு ஒரு GST இருந்துச்சுடா. அதாவது பொது விற்பனை வரி. ஆனா இது விக்கிற பொருளுக்கு மட்டும் தான் இருக்கும். அதுக்கு அப்புறம் VAT வாட் வரி கொண்டு வந்தாங்க. அதாவது VALUE ADDED TAX.

இது கொஞ்சம் வேற மாதிரி. இப்போ 12 வருஷம் கழிஞ்சு GST வரி, சரக்கு மற்றும் சேவை வரி கொண்டு வந்திருக்காங்க. பிரிட்டிஷ்காரன் விட்டுட்டு போனதுக்கு அப்புறம் வரி இல்லாமே இங்கே யாரும் வியாபாரம் பண்ணல.

அடடே, இவ்வளோ இருக்கா. அதென்னங்க அப்பொவே இருக்குன்னும் சொல்றீங்க, எதுக்கு இடைக்கா மாத்திட்டே இருக்காங்க.

அப்படி கேளு. நல்லா சொல்றேன் கேட்டுக்கோ. நம்ம சங்கர் அண்ணாச்சி கடையிலே சோப்பு வாங்கினா இதுக்கு முன்னாடி என்ன வரி குடுத்தேன்னு உனக்கு தெரியுமா?

அதென்னமோ MRP மட்டும் தான் பாத்திருக்கேன். அதுலே ஒண்ணோ ரெண்டோ கொறைச்சு வாங்குவார்.

taxes in indiaஉம் அத சொல்லு. மொத்தம் எவ்வளோ வரி இருக்கு தெரியுமா?

  1. உற்பத்தி பண்றப்போ ஒரு வரி அத எக்சைஸ் வரின்னு சொல்லுவாங்க
  2. இறக்குமதி பண்ணும் போது ஏகப்பட்ட வரி இருக்கும், ஒரு கஸ்டம்ஸ் டூட்டி, CVD, SAD, CESS ன்னு
  3. விக்கும் போது இரண்டு வரி, உள்ளூர்ல வித்தா ஒரு வரி SALES TAX, வெளி மாநிலத்துக்கு வித்தா ஒரு வரி CSTன்னு

இருங்க மேஜர் நான் எல்லாம் எட்டாவது ஏழு வருஷம் படிச்சவன். இப்போவே கண்ண கட்டுது. வாங்க அந்த பேக்கரில ஒரு டீயை போட்டுட்டு பேசுவோம்.

சரி சரி வா, உனக்கு வயித்துக்குள்ளே எதாவது இறக்கிட்டே இருக்கணும். அப்போ தான் சொல்றது மண்டையில ஏறும்.

tea shop gst arguments

சேட்டா டம்ளர நல்லா சுடுத்தண்ணில கழுவி ரெண்டு ஸ்டராங் டீ போடுங்க.

டம்ளர், சுடு்தண்ணினதும் எனக்கு ஒன்னு கேக்க தோணுது. இப்படி எல்லாம் வரி போட்டா மக்கள் கஷ்டபடுவாங்க தானே, இதுக்கு பேசாம விவசாயம், பண்ணை மட்டும் தான் தொழில் பண்ணனும்ன்னு போட்டுட்டா வரியே இல்லாம ஜாலியா இருக்கலாம் இல்லீங்களா.

அப்புறம் நாயர் விவசாயம் பாக்க போய்ட்டா, நீ டீ குடிக்க வேண்டி கல்யாணம் பண்ண வேண்டி வரும் பரவல்லியா?. எந்த தொழிலும் கேவலமில்லப்பு. எல்லாம் இருந்தா தான் நாடு நல்லா இருக்கும். அந்த முட்டாபசங்க சொல்றாங்கன்னு நீயும் ஏதாவது கேக்காதே.

அரசாங்கம் என்பது இல்லாதவங்களுக்கு அரிசி கொடுக்கணும், ரோடு போடணும், வீதிக்கு வீதி லைட் போடணும், படிக்க ஸ்கூல் கட்டணும், ஆஸ்ப்பத்திரி கட்டணும், இத எல்லாம் பராமரிக்க நிர்வாகம் செய்ய ஆளுங்க வேணும், அவங்களுக்கு சம்பளம் கொடுக்கணும். இதை எல்லாம் அரசாங்கம் எங்கே இருந்து கொடுக்கும் தம்பி.

அவங்களே நோட்டு அடிச்சு குடுத்திட்டே இருக்க முடியுமா. அதுக்கு தான் வரி வாங்கறாங்க. ஒண்ணு நல்லா புரிஞ்சிக்கோ, யாரும் அரசாங்கத்தை ஏமாத்தாம முறையா தொழில் செஞ்சோ, வேலைக்கு போயோ வரி கட்டினா இவ்வளோ வரி கட்ட வேண்டி இருக்காது.

120 கோடி பேர்ல 1.75 கோடி பேர் தான் வருமான வரியே கட்டறாங்க. அந்த 1.75 கோடி பேரோட வருமான வரி வெச்சு 120 கோடி பேருக்கும் செலவு பண்ணனும்னா அதிகமா வரி போட்டா தானே முடியும்.

அதுக்கு தான் இப்போ மறைமுகமா GST வரில எல்லாரையும் கட்ட வைக்கிறாங்க. ரெண்டு மாசமா பாரு, மாசம் 90,000 கோடி வரி வசூல் பண்ணிருக்கங்க. இப்போ படிப்படியா வரிய குறைக்க தொடங்கிட்டாங்க. எங்கே இந்த அரசு பேரு வாங்கிடுமோன்னு அவனவன் இல்லாததும் பொல்லாததும் சினிமால எல்லாம் சொல்லி மக்களை ஏமாத்த பாக்கறானுங்க.

60 வருஷமா நம்மூர்ல இலவசமா ஆஸ்பத்திரி இருக்கிறத மறந்திட்டு சிங்கப்பூர்ல முன்னாடியே காசு கட்டி வைத்தியம் பாக்கறத இலவசம்னு பொய் சொல்லறாங்க. ஏன்னா எங்கேயோ சிங்கப்பூர் மாதிரி தூரத்திலே இருக்கிற வெளிநாட்ட சொன்னதானே மக்கள் அப்படியே நம்புவாங்கன்னு நினைப்பு.

ஆனா இப்போ அவனவன் கைல மொபைல் போன் வெச்சிட்டு கலாய்ச்சிட்டு இருக்கான். மக்கள எப்பவுமே முட்டாளா வெக்கலாம்ன்னு நினைச்சவங்க நினைப்புல மண்ணு விழுந்திடுச்சு.

அடங்கொப்புரானே ஊடால எதுக்கு கலியாணம்ன்னு வேண்டாதத இழுக்கறீங்க. நான் எல்லாம் பம்மல் உவ்வே சம்பந்தம் ரசிகனாக்கும்.

மேஜரே, ஞானும் நிங்கள் பரஞ்சது கொறைச்சு கேட்டு. என்னிக்கும் ஒரு டவுட் உண்டு. எந்தினு இவ்வளவு வரி முதலிலே இட்டு. அப்பவும் இப்பவும் எந்தா வித்தியாசம். அது கேக்காமோ?

நாயரே ஒரு சோப்பு தயாரிக்கும் போதே அதுக்கு ஒரு வரி இருக்கு. அது எடுத்திட்டு கடைக்கு விக்க வந்தா அப்போ தான் விற்பனை வரி வாங்கறாங்கே. ஒரு பேப்பர் பேனா கொண்டாங்க சொல்றேன்.

10₹ சோப்பு, உற்பத்தி வரி 3₹, விற்பனை வரி 1.5₹ = கடைக்கு வரும் போது 14.5₹ கடைக்காரன் லாபம் 3₹ சேர்த்தி 17.5₹ அப்புறம் அவன் விக்கும் போது அந்த 17.5₹க்கும் சேர்த்தி அதுக்கு வரி 2.5₹ இப்போ விலை 20₹ ஆயிடுச்சு.

இன்னொரு சின்ன கடைக்காரன் வாங்கிட்டு போய் வித்தா அந்த 20க்கும் மேல அவன் லாபம் சேர்த்தி 25₹ வருதுன்னு வெச்சுக்கோங்க, அந்த 25க்கும் வரி போட்டு தான் விக்கணும். இது தான் முதல்ல இருந்த வரி, ஜெனரல் சேல்ஸ் டாக்ஸ். இப்படி மூணு நாலு கை மாறி போகும் போது பொருளோட விலை ஏறி தான் போகும்.

இப்படி எல்லாத்துக்கும் வரி போட்டதுனால மக்கள் முதலிலேயே வரி கட்டாம ஏமாத்த பழகிட்டாங்க. அப்போ வரி வருமானம் குறைய தொடங்கிச்சு. ஒவ்வொரு பட்ஜெட்டும் பற்றாக்குறை பட்ஜெட்டா போட்டு பழகினவங்க வரிய ஏத்தி ஏத்தி அதை சரி கட்டுனாங்க.

ஒரு 40 வருஷமா எந்த மாற்றமும் செய்யாம அப்படியே விட்டு வரி கட்டாம ஏமாத்த மக்களையும் பழக்கிட்டாங்க. அப்போ தானே அவங்க பண்ற தப்ப மக்கள் கண்டுக்க மாட்டாங்க.

இத அப்படியே விட்டா சரி ஆகாதுன்னு வாஜ்பாய் வந்தப்போ வாட் வரி கொண்டு வர முயற்சி எடுத்தார். அப்படி வாட் வரி கொண்டு வந்து ஒரு 5 வருசத்தில அப்படியே GST வரியா மாத்திடலாம் ன்னு பிளான் போட்டாங்க.

ஆனா மக்கள் புரிஞ்சுக்காம 2004ல திரும்பவும் ஆட்சிய மாத்திட்டங்க. 2004ல வந்தவங்க அப்படி இப்படி இழுத்து வாட் வரி கொண்டு வந்தாங்க. அதுல என்ன ப்ரயோஜனம்ன்னா உள்ளூர் விற்பனை வரி மட்டும் கழிச்சு கட்டிக்கலாம்.

அதாவது முன்னமே ஒரு பொருளுக்கு உள்ளூர் விற்பனை வரி கட்டிருந்தா அத கழிச்சிட்டு லாபதுக்கு மட்டும் திரும்ப வரி கட்டினா போதும். அந்த சோப்பு விலையே எடுத்திக்கிட்டீங்கனா மொத கடையிலே 20₹க்கு சோப்பு வாங்கற சின்ன கடைக்காரர் அவர் லாபம் 5₹ சேர்த்தி 25₹ விக்கும் போது, அவர் அந்த 5₹க்கு மட்டும் வரி திரும்ப வாங்கினா போதும். ஏன்னா அந்த அடக்க விலை 20₹ லேயே முன்னமே கட்டின வரி இருக்கும்.

இப்போ நாலு கை மாறி போகும் போது அவ்வளவா வரி ஏறாது. ஆனா இதுல மூணு விஷயம் பாக்கணும். ஒன்னு உற்பத்தி வரிய கழிக்க முடியாது. ரெண்டாவது வெளிமாநிலத்தில இருந்து வாங்கறப்போ கட்டின CST வரிய கழிக்க முடியாது. இதெல்லாம் பொருளோட விலையில் ஏறிடும்.

அத சேர்த்துதான் பொருளோட அடக்க விலையே. இன்னொன்னு இந்த டைம்ல தான் சேவை வரி பெருசா ஆச்சு. யோக்கிய சிகாமணிக நின்னா வரி, நடந்தா வரின்னு எல்லாத்துக்கும் வரி போட்டாங்க. சேவை வரி பெரிய அளவில கொண்டு வந்தது அப்போ தான்.

அட இத விட பேங்க்ல பணம் கட்டினா வரி, ATMல பணம் எடுத்தா வரின்னு எல்லாம் கொண்டு வந்தது அப்போ தான். இன்னைக்கு இப்படி கூப்பாடு போடரவங்க அன்னைக்கு சின்னதா ஒரு துள்ளு துள்ளிட்டு அடங்கிட்டங்க.

ஒரு பொருளோட விலையை வாட் வரி குறைக்கும் போது, கூடவே சேவை வரி 8, 10, 12.5, 15.5% ன்னு ஏத்தி விட்டாங்க. பொருள கொண்டு போக கொரியர்க்கு எல்லாம் சேவை வரி போட பொருள் விலை எந்த மாற்றமும் இல்லாம எறிட்டே இருந்திச்சு. இது எப்படினா ஊர்பக்கம் சொல்வாங்களே “சாத்துல இருத்தாப்புல ஊத்தறது”ன்னு.

அதாவது உன் பணத்தை உனக்கே தெரியாம திருடறது. திரும்பவும் வரி போடாம ஏய்க்கிற வியாபாரிக ஏமாத்திட்டே இருந்தாங்க. ரொம்ப பெரிசா படிச்ச அறிவாளின்னு சொல்றவங்க ஆட்சி பண்ணும் போது தான் இப்படி நடந்தது. இப்போ நான் சொல்ல வர்றது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.

அதாவது GST வந்தா, உற்பத்தி வரி, வெளிமாநில வரி CST, சேவை வரி எல்லாமே கழிச்சு கட்டலாம். CST வரிய படிப்படியாக கொறைச்சு 5-3-2ன்னு கொறைச்சு GST வரி கொண்டு வர்றது தான் பிளான். படிப்படியாக CST வரி 5%ல இருந்து 2% வந்து அப்படியே நின்னு போச்சு.

GST வந்தா மாநில வரி வருவாய் குறையும்ங்கிறதால் சில மாநிலங்கள் எல்லாம் எதிர்த்தாங்க. அட்ரா சக்கைன்னு அந்த மேதாவிக இத பேசி தீர்க்காம அப்படியே ஊற போட்டாங்க. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம். ஒவ்வொரு மாநிலமும் பேச பேச ஒரு 10 வருஷம் அப்படியே இழுத்தாச்சு.

வரி கட்டறவன் கட்டிட்டே இருக்கான். ஏமாத்தறவன் ஏமாத்திட்டே இருக்கான். இப்போ தான் அதுக்கு ஒரு விடிவு காலம் பொறந்திருக்கு. இப்போ உற்பத்தி வரி இல்லே, சேவை வரி இல்லே, உள்ளூர் விற்பனை வரி இல்லே, வெளி மாநில வரி இல்லே, SADங்கிற இறக்குமதி வரி இல்லே, இதெல்லாம் ஒரே வரில GSTங்கிற பேர்ல அடங்கிடுச்சு.

இதுக்கெல்லாம் வாங்கும் போது கட்டின வரிய, விக்கும் போது கழிச்சு கட்டிக்கலாம். இதுக்கு தான் பேர் வெச்சாங்க ஒரு தேசம் ஒரு வரின்னு.

மேஜர் கைய்ய கொடுங்க, இப்போ தான் விளங்குது. இங்கே பாருங்க ஒரு கூட்டமே கூடிடுச்சு. நாயர் தான் பாவம்.

யேய், எனிக்கு ஒரு ப்ரஷ்னம் இல்யா. இதெல்லாம் எனக்கும் தெரிஞ்ஜிக்க தான். யாருகிட்டே கேக்கணும்ன்னு அறிஞ்சில்யா.

யோவ் மேஜுரு, இதெல்லாம் சரி, ஆனா சாப்பாட்டுக்கு வரி போடறது, கடலை மிட்டாய்க்கு வரி போடறது எல்லாம் சரியா ஓய்.

அடடே யாரு அது, நம்ம வடக்குப்பட்டி ராமசாமியா. என்ன வாத்தியாரே. நீங்களே இப்படி கேக்கலாமா.

அட தெரியலன்னா கேட்டு தானே ஆகோனும். நாக்கை புடுங்கிற மாதிரி ஒவ்வொருத்தனும் கேக்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியுனுமில்லே.

அண்ணே, நம்ம மைனர் பய இதே கேள்வி கேட்டு தான் வந்தான். அது AC இருக்கிற ஹோட்டல்க்கு தான் வரிங்கிறது தெரியுமா.

அப்படியா, இது எப்போ இருந்து?

pre gst restaurant billஅட முன்னமே அப்படி தாங்க இருக்கு. AC ஹோட்டல்க்கு எல்லாம் 6% சேவை வரி, 14.5% வரி ஆக மொத்தம் 20.5% இருந்துச்சு.

அடப்பாவிகளா, அப்புறம் ஏன் இப்போ மட்டும் சொல்றாங்க. இப்போ ஜாஸ்தியா போட்டுட்டங்களா?

அட இல்லிங்றேன். 18% மொதல்ல போட்டாங்க, அதுவும் முன்னமே இருந்தத விட கம்மி தான். அப்புறம் 12% பண்ணினாங்க.

இப்போ போன வாரம் 5% பண்ணிட்டாங்க.

post gst bill 5%

இத விட என்ன பண்ண முடியும் சொல்லுங்க. இதுவும் AC ஹோட்டல்க்கு மட்டும் தான். நான் எப்பவும் சாப்பிடற கடையில ACயே இல்லே. அவங்க வரியே வாங்கினது இல்லே.

அடங்கொய்யாலே, அப்புறம் என்ன AC ஹோட்டல் போய் சாப்பிடாம இருந்தா போச்சு.

அப்படி பொதுவா சொல்ல முடியாதுங்க. போய் சாப்பிட்றவங்க சாப்பி்டட்டும். ஆனா 90₹ தயிர் வாங்கி குடிச்சிட்டு அதுக்கு வரிய மட்டும் பெருசா போட்டோ எடுத்து போடறது எல்லாம் தப்பு தானுங்களே.

இப்போ கூட பாருங்க. 5% வரி குறைச்சதுக்கு அப்புறமும் ஹோட்டல்காரங்க விடாப்பிடியா விலை ஏத்தறாங்க. ஏன்னா இப்போ 5% GST போட்டா வரி கழிக்க முடியாதுன்னு இருக்குதில்லே.

ஆமா அப்போ சரி தானே?

என்னங்க சரி, முன்னமே 6% சேவை வரி கழிக்க முடியாது இல்லே. இப்போ அத விட 1% கம்மி தானே. இப்போ விற்பனை வரியும் இல்லே. முன்னே இருந்தது விட 15.5% அரசாங்கத்துக்கு நஷ்டம் தானே.

ஹோட்டல்காரர்க்கு பழைய விலைப்படி 1% லாபம். அதுவும் பத்தலேன்னு விலை ஏத்தறான் பாருங்க.

ஆமாம் அதுவும் சரி தான்.

தலைய எதாவது ஒரு பக்கமா ஆட்டுங்க. இதெல்லாம் கேக்க வேண்டிய மக்களை திசை திருப்பறதுக்குன்னு ஒரு கூட்டம் சுத்துது. கேட்டா அது அவங்க வியாபார உரிமைன்னு சொல்றாங்க.

மேஜர், இது போதும் இருங்க, அந்த தினேஷ் பயல் வரட்டும் ஒரு கை பாக்கறேன். ஹோட்டல் தொடங்கி மரியாதையா நடத்துடா நல்லா லாபம் வரும்ன்னு சொல்லி விட போறேன்.

ஆமா தம்பி, தொழில் தொடங்கறப்போவே அரசாங்கத்தை எப்படி ஏமாத்தறதுன்னு யோசிக்க வேண்டாம்ன்னு சொல்லு. நல்ல தரமா வியாபாரம் பண்ணினா தானா லாபம் வரும் பாரு.

ஆமாங்க வாத்தியாரே. நாம அரசாங்கத்த ஏமாத்தறது நம்மையே ஏமாத்தறது மாதிரி. சொல்லி புரிய வெச்சிடல்லாம் உடுங்க.

ராமசாமி அண்ணே, கடலை மிட்டாய் பத்தி கேட்டீங்க இல்லே. நான் இப்போ ஒரு அவசர ஜோலியா பாப்பம்பட்டி வர போகணும். போயிட்டு வந்து சொல்றேன் பாருங்க. அது GST பத்தி எப்படி மக்கள் கிட்டே பொய் சொல்றாங்கன்னு புரியும்.

சரி தம்பி, நானும் சின்னாத்தா வீட்ல ஒரு விஷேசத்துக்கு போக வேண்டி இருக்கு. போயிட்டு வர்றேன்.

போயிட்டு வரேன் மைனரு, சேட்டா வரட்டா!

2 Replies to “GST பற்றிய ஒரு விவாதம் | டீக்கடை பெஞ்ச்”

  1. அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் எழுதிய ஒரு நல்ல பதிவு. மேலும் பகிருங்கள், அடுத்த பகுதிக்கு காத்திருக்கின்றேன், நன்றி.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.