pon manickavel, idol wing

ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு துணை நின்ற சென்னை உயர்நீதிமன்றம். சிலைதடுப்பு பிரிவின் கடும்முயற்சி வீண் போகாது என்று அறிவிப்பு. சென்னை உயர்நீதிமன்றம் சிலை தடுப்பு பிரிவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்புபிரிவுடன் அரசு மோதல் போக்கை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சிலைதடுப்பு பிரிவு போலீசார், தங்கள் சீரிய பணியை நிலைநாட்ட நீதிமன்றத்தினை நாடினர். சமீபத்தில் ராஜராஜசோழன் சிலை மீட்டெடுத்து மக்கள் போற்றத்தக்க அளப்பரிய பணியாற்றினாலும், தங்கள் கடமையை செய்ய இதுபோன்று நீதிமன்றத்தினை நாட வேண்டியுள்ளது வருந்ததக்கது.

அவர்களின் ஒரே ஆறுதல், நீதிமன்றம் அதனை உணர்ந்து சிலைதடுப்பு பிரிவினர் பணியில் யார் தலையீடும் அனுமதிக்க முடியாது என்று கறாராக கூறியது. முன்னர் நீதிமன்றம் தான் சிலைதடுப்பு பிரிவின் தலைவராக ஐ.ஜி பொன் மாணிக்கவேலை சிறப்பு அந்தஸ்தில் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கையின் கூற்றுப்படி முன்னதாக சிலைதடுப்பு சம்பந்தமாக நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் முறையிட்டு இருந்தார். இவர் ட்ரான்ஸபர் செய்யப்பட்டதாக சிலநாட்களாக உலவி வந்த வதந்திக்கு இது முற்றுபுள்ளி வைத்தது.

தமிழக காவல் துறையில் சிலைகடத்தல் பிரிவு ஒரு சிறிய team. இருப்பினும் அந்த teamஐ வைத்துக்கொண்டு பல ஆச்சர்யங்களை நிகழ்த்தினார் பொன் மாணிக்கவேல். எத்தனை லட்சம் கோடிரூபாய் மதிப்புள்ள தமிழக கலைச்செல்வங்கள் கொள்ளை போயுள்ளன என்பது இவர் அந்தப்பதவிக்கு வந்தபின்பே தெரியவந்துள்ளது. சிலைகடத்தல் விசாரணையில் முக்கிய அரசியல் புள்ளிகள் சிலர் பெயரை அவர் வெளியிட்டு இருந்ததால், சம்பந்தப்பட்ட சில அரசியல் சக்திகள் பணியிட மாற்றம் செய்ய முனைந்ததாக செய்திகள் உலாவந்தன.

“இந்த கோர்ட் உத்தரவுகள் மீறப்படுவதை எள்ளளவும் அனுமதிக்க முடியாது என்றும், அங்கனம் மீறப்படுவதை இந்த கோர்ட் கடுமையாக பரிசீலிக்கும்” என்றார் நீதிபதி ஆர்.மகாதேவன்.

கடந்த வருடம் ஜூலை மாதம் சிலைகடத்தல் சம்பவங்களை முக்கிய வழக்காக கருத்தில் கொண்டு அது தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு மாற்றி, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ ஜி பொன்மாணிக்கவேல் பணியிட மாற்றம் செய்யப்பட்ட போதிலும் அவர் தலைமையிலான குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளை வழங்கி இருந்தது. ஜூலை 21, 2017ம் தேதி நீதிபதி மகாதேவன் வழங்கிய உத்தரவில் பழங்கால சிலைகளை பாதுகாப்பாக வைக்க, அறநிலையதுறையின் கீழ்வரும் அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு அறைகளை நிறுவ வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் இன்று (ஜூன் 27, 2018) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஐஜி பொன் மாணிக்கவேல், சிலைகளை பாதுகாப்பாக வைக்க பாதுகாப்பு அறைகள் அமைப்பது தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டினார்.

அதற்கு அரசு தரப்பில், கோவில்கள் புனரமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் பாதுகாப்பு அறை கட்டுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக 11512 கோவில்களில் பாதுகாப்பு அறைகள் நிறுவபட்டுள்ளதாக அறநிலையதுறை கமிஷனர் ஆர். ஜெயா தெரிவித்தார். ஆனால் திரு. பொன் மாணிக்கவேல் வாதிடுகையில், வெறும் 250 ரூபாய் மதிப்புள்ள பூட்டுகளை கொண்டு கோடிக்கணக்கில் மதிப்புடைய சிலைகளை பாதுகாப்பது எப்படி என்று முறையிட்டார். அது மட்டுமின்றி அறநிலையத்துறை கமிஷனர் சிலைகடத்தல் சம்பவம் நடந்த எந்த இடத்தையும் இதுவரை பார்வையிடவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து, கோவில்களில் சிலைகள் பாதுகாப்பு அறை அமைப்பது தொடர்பாக அறிக்கையை ஜூலை 11ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என இறுதிக்கெடு விதித்து நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார். தவறினால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார்.

இதனிடையே கூடுதல் அட்வகேட் ஜெனரல் திரு. பி.எச்.அரவிந்த் பாண்டியன் குறுக்கிட்டு, தனக்கு இந்த வழக்கில் எந்த சார்பும் இல்லையென்று விளக்கியபின், காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் இந்த வழக்கு சம்பந்தமாக தனது உயர்அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த பொன்.மாணிக்கவேல், இந்த வழக்கு விசாரணை தொடர்பான முக்கிய ஆவணங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு கசிந்துவிட வாய்ப்பு உள்ளதாலேயே தான் ஆய்வு கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை என்று தனது தரப்பை நியாயப்படுத்தினார். அதற்கு கண்டனம் தெரிவித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல், இது உயரதிகாரிகளை களங்கப்படுத்துகிறது என்று கண்டனம் தெரிவித்தார்.

ஆனால் சற்று உணர்ச்சிவசப்பட்ட திரு.பொன் மாணிக்கவேல், களத்தில் இறங்கி குற்றங்களை தடுக்கும் தன் பிரிவினரை , சிலர் A/C அறைகளில் அமர்ந்து உத்தரவுகள் பிறப்பித்து இடையூறு செய்வதாக குற்றஞ்சாட்டினார். மேலும் தனது குழுவினரை தனக்கு தெரியாமல் அடிக்கடி மாற்றி தனது பணியினை சீர்குலைப்பதாக நேரடியாக உயரதிகாரிகளை குற்றஞ்சாட்டினார்.

இதைக் கேட்ட நீதிபதி, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்களை நீதிமன்ற அனுமதி இல்லாமல் பணியிடம் மாற்றம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது. தொடர்ந்து இதுபோல் செயல்பட்டால் டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார். அதே நேரத்தில், திரு. பொன் மாணிக்கவேலின் விசாரணை முயற்சிகள் வீண்போக இந்த கோர்ட் அனுமதிக்காது என்றும், ஆகையால் பயமில்லாமல் ஆய்வு கூட்டங்களில் கலந்துகொண்டு தனது உயர் அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியது.

குழு நியமித்தும் சிலைக்கடத்தல் தொடரவே செய்கிறது என வேதனை தெரிவித்த நீதிபதி, கோவில்களை பாதுகாப்பது மாநில அரசின் கடமை எனவும், இல்லாவிட்டால், கோவில்களுக்கு தனியார் உரிமை கோருவர் எனவும் தெரிவித்தார்.  இதனிடையே மனுதாரர் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் குறுக்கிட்டு நவம்பரில் பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெற இருப்பதால், வேண்டுமென்றே அரசு விசாரணையை காலந்தாழ்த்துவதாக குற்றஞ்சாட்டினார் என்று “தி ஹிந்து” தனது அறிக்கையில் கூறியிருந்தது.

உணர்ச்சிவசப்பட்ட திரு. பொன் மாணிக்கவேலை ஆறுதல் படுத்தும் விதமாக அரசோ, உயர்அதிகாரிகளோ இந்த வழக்கு சம்பந்தமாக எந்த முக்கிய முடிவும் கோர்ட் அனுமதியின்றி எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்றும், அத்தகைய முடிவுகள் கோர்ட்டின் ஆய்வுக்கு உட்பட்டது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 11 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த உத்தரவுகள், நீதிமன்றம் பொன்.மாணிக்கவேல் என்ற தனிஒருவன் மேற்கொண்டுள்ள சிலைதடுப்பு போரில் ஒரு இடைக்கால நிம்மதி வழங்கியுள்ளதாகவே தோன்றுகின்றது. கடவுள் சிலைகளை காப்பாற்றவும் மீட்டெடுக்கவும் அவர் மேற்கொண்டுள்ள கடும்முயற்சியில் அந்த ஆண்டவனே பக்கபலமாக நின்று காக்கவேண்டி மக்கள் பிரார்திகின்றனர்.
நன்றி : ஸ்வராஜ்யாமாக், பிசினஸ் ஸ்டாண்டர்ட், தி ஹிந்து, தந்தி டிவி.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.