
இதென்ன சமையல் குறிப்பு போல் இருக்கேன்னு யோசிக்கிறீங்களா? இப்போதெல்லாம் திரைப்பட தயாரிப்பும் ஒரு ஃபார்முலா போல ஆகிவிட்டது. அதனால அதற்கான வழிமுறைகளை ஆவணப்படுத்தும் ஒரு முயற்சிதான் இது. இன்றைக்கு ஏராளமான படங்கள் பெட்டிக்குள்ளேயே அடங்கிக் கிடக்கின்றன அல்லது வெளியாகி தோல்வியைத் தழுவுகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு யோசனைதான் இது.
முதலில் கதாநாயகன் — அவர் திரைக்கு வெளியே தன்னை ஒரு போராளியாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வப்போது பொதுமேடைகளில் தமிழர்களுக்காகப் போராடுபவர் என்று அறிவித்துக் கொள்ள வேண்டும். இதற்கு சுலபமான வழி மோடி & பாஜக அரசை எதிர்த்து எங்காவது பேசினால் போதும். இடையிடையே ஹிந்து மதத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். கட்சி அல்லது நிறுவனம் அல்லது அமைப்பு சார்ந்துள்ள ஊடகங்களின் ஆதரவு அப்போதுதான் கிடைக்கும். ஊடக ஆதரவு இல்லாமல் ஒருவர் கதாநாயகனாக நிலைக்க முடியாது. அப்புறம் நாயகனுக்கு ஒரு பட்டமும் கொடுத்து விடவேண்டும் – மக்கள் நாயகன், மக்கள் தொண்டன், மக்கள் நல ஆர்வலர் – இப்படி.
இயக்குனர் — இவர்கள் இன்னும் கொஞ்சம் தீவிரமான போராளியாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இயக்குனர் – நாயகன் கூட்டணி ஒரு கொள்கைக் கூட்டணியாக ஏற்றுக் கொள்ளப்படும், இல்லையென்றால் அரசியல் கட்சிகளின் சந்தர்ப்பவாதக் கூட்டணியாகிவிடும்.
கதாநாயகி என்பவர் கதாநாயகன் அல்லது இயக்குனரின் தேர்வு. தமிழ், தமிழர் கலாச்சாரம் என்று பேசலாம், ஆனால் நாயகி கட்டாயம் தமிழராக இருக்கக் கூடாது. கறுப்புதான் எங்கள் நிறம் என்று பேச வேண்டும், ஆனால் நாயகி வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும், இதுதான் முதல் கட்டம். அடுத்தது கதை. முன்பெல்லாம் கதாசிரியர்கள் மண்டையை உடைத்துக் கொண்டு புதுசாக எதையாவது எழுத வேண்டுமே என்று அவஸ்தைப்படுவார்கள். ஆனால் இப்போது அந்தக் கஷ்டமே இல்லை. எல்லாமே ஒரு டெம்ப்ளேட்தான்.
கதாநாயகன் ஏழையா பணக்காரனா என்று காட்டவே கூடாது. எந்த வேலையும் செய்யாமல், சொத்து எதுவும் இல்லாத மாதிரி காட்ட வேண்டும். ஆனாலும் பணத்துக்கு என்ன செய்கிறார் என்று கேட்கக் கூடாது. நல்ல வசதியாக இருப்பார் கதாநாயகன். ஏனென்றால் அவர் கதாநாயகன். அவ்வளவுதான். நாயகனை ஒரு திருடன், போக்கிரி, கடத்தல்காரன் என்று காட்டினால் மிகவும் உத்தமம். போதை மருந்து கடத்தலாம், ஆட்களைக் கடத்தலாம், காசுக்கு கொலை செய்யலாம், தெருவில் நடமாடுபவர்களிடமிருந்து சங்கிலி, பணம் என்று எதை வேண்டுமானாலும் திருடலாம், வீடு புகுந்து கொள்ளையடிக்கலாம் இதெல்லாம் கதாநாயக லட்சணங்கள். ஆனால் ஏதாவது ஒரு காட்சியில் அவர் ஏழைகளுக்கு உதவுவதாகக் காட்டி விட வேண்டும். போதும். அதே சமயத்தில் பெண்கள் விஷயத்தில் மிகவும் கண்ணியமாக இருப்பார் என்று காட்ட வேண்டும். அப்போதுதான் தாய்க்குலத்தின் பேராதரவுடன் என்று போஸ்டர் அடிக்க முடியும். அதே சமயம் இந்த கண்ணியம் கதாநாயகியிடம் செல்லாது. நாயகி மற்றும் அவரது நண்பிகளிடம் நாயகன் மிக மோசமாக நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நாயகிக்கு நாயகன் மேல் காதல் வரும்.
காதல் மட்டும் இப்போது போணியாகாது. அதனால் விவசாயம், கார்ப்பொரேட் எதிர்ப்பு, அரசியல் மாற்றம் அல்லது தாதாக்களின் போராட்டம் — இவற்றில் ஏதாவது ஒன்றுதான் வெற்றிக்கான ஃபார்முலா. திரையில் விவசாயத்துக்காகவே போராடும் நாயகன் நிஜத்தில் ஒரு கார்ப்பொரேட் கம்பெனி நடத்தி விவசாய நிலங்களை ஆட்டையைப் போடலாம், தவறில்லை. கார்ப்பொரேட் நிறுவனங்களை எதிர்க்கும் நாயகன் ஒரு கார்ப்பொரேட் நிறுவனம் நடத்தலாம் தவறில்லை. அரசியல் கட்சிகளெல்லாம் மோசம் என்று திரையில் அலறும் நாயகன் தானும் அதே போல ஒரு அரசியல் கட்சி தொடங்கி ஆட்சிக்கு வரவேண்டும் என்று கனவு காணலாம் தவறில்லை. ஏனென்றால் கொள்கை வேறு வியாபாரம் வேறு என்பதை தமிழக அரசியல் கட்சிகள் நன்றாக மக்கள் மனதில் பதிய வைத்துள்ளன.
வசனங்களுக்கும் உண்மைக்கும் தொடர்பு இருக்கிறதா என்று யாரும் கேட்டு விடக்கூடாது, கூடுமானவரை உண்மைக்கு வெகுதூரத்தில் வசனம் இருக்க வேண்டும். அப்போதுதான் இதனை நாலு பேர் கேள்வி கேட்பார்கள். நான் மக்களுக்காகப் பாடுபடுவதால் என்னை கேள்வி கேட்கிறார்கள் என்று உடனே ஊடகங்களில் ஒப்பாரி வைக்கலாம், இதை வைத்து நாலு நாள் அதிகமாக படத்தை ஓட்டலாம்.
ஆங்காங்கே மோடியின் படத்தைக் காண்பித்து நாடு நாசமாகப் போய்விட்டது என்று நாயகன் பேச வேண்டும். நீட் தேர்வு, ஹிந்தி எதிர்ப்பு இதைப்பற்றியெல்லாம் சில வசனங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். கட்டாயமாக ஒரு கதாபாத்திரம் நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டோ அல்லது விபூதிப் பட்டை, குங்குமத்துடனோ இருக்க வேண்டும், அதிலும் பிராமணத் தமிழ் பேசிக் கொண்டு. அந்தக் கதாபாத்திரம் தீண்டாமையைக் கடைப்பிடிப்பது போலவோ அல்லது சாதியை உயர்த்திப் பேசுவது போலவோ அல்லது ஏழைகளைத் துன்புறுத்துவது போலவோ அமைய வேண்டும். கதைக்கும் இதற்கும் சம்மந்தம் இருக்கிறதா என்று கேட்கக் கூடாது, ஏனென்றால் யதார்த்தத்துக்கும் இதற்குமே சம்மந்தம் இருக்காது.
அவ்வப்போது நாயகன் அரசியலுக்கு வருவேன், ஆட்சியை மாற்றுவேன், மக்களுக்கு நல்லது செய்வேன் என்று முழங்க வேண்டும். அப்போதுதான் இவர் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையில் உங்கள் படத்தை வெற்றிப் படமாக்க முன்வருவார்கள். உங்களால் ஒரு பிரயோஜனமும் இல்லையென்றால் எதற்காக உங்கள் படத்தை காசு கொடுத்து பார்க்க வேண்டும்?
கட்டாயமாக நாயகன் மத ஒற்றுமையைப் பற்றிப் பேச வேண்டும் அல்லது சிறுபான்மை மதத்தினருக்கு உதவி செய்வது போலவோ அல்லது சிறுபான்மையினர் இவருக்கு உதவி செய்வது போலவோ ஒரு காட்சி இருக்க வேண்டும்.
அதே சமயத்தில் ஹிந்து மதத்தை இழிவு படுத்தும் ஒரு காட்சி இருக்க வேண்டும். அப்போதுதான் படத்துக்கு எதிர்ப்பு வரும், அதை வைத்து இன்னும் நாலு நாள் படத்தை ஓட்டலாம்.
பெரும்பான்மை மதத்தை எதிர்த்து காட்சி இருந்தால் எப்படி படம் ஓடும் என்று கேட்டால் நீங்கள் தமிழ்நாட்டிற்கு வெளியே வசிக்கிறீர்கள் என்று அர்த்தம். தன் மதத்தை எவ்வளவு இழிவுபடுத்தினாலும் சந்தோஷமாக அவர்களுக்கே ஓட்டுப் போட்டு வெற்றி பெறச் செய்வதுதான் மதச்சார்பின்மை என்பது தமிழகத்தில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்தாலும் ஓடுமா என்றால் பொறுங்கள், இன்னும் சில உத்திகளைக் கையாள வேண்டும். படம் வெளியிடுவதற்கு முன்பு டீஸர் ஒன்று வெளியிட வேண்டும், அந்த டீஸர் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்ப வேண்டும். அதாவது பிரச்சினையை உருவாக்கவே டீஸர் வெளியீடு. அப்போதுதான் உங்கள் படம் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கும். படம் வெளியாகு முன்பு அதன் வெளியீட்டுக்குத் தடை கோரி யாராவது வழக்கு தொடுக்க வேண்டும், இதை வைத்து ஊடகங்கள் ஒரு நாலு நாள் விவாதம் செய்வார்கள். எதிர்பார்ப்பு இன்னும் ஏறும்.
இப்போதெல்லாம் ஒரு படம் ஒரு வாரம் ஓடினாலே அதிகம், மூன்று நாட்கள் தாண்டுவதே அரிது. ஆகவே ஐந்து நாட்கள் ஆனதும் ஏதாவது ஒரு அமைப்பு படத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டும். இதற்கெல்லாம் ஏகப்பட்ட செலவாகும், இருந்தாலும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
விருது கொடுப்பதற்கென்றே ஏகப்பட்ட அமைப்புக்கள் வெளிநாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தகைய அமைப்புக்களில் விருது வாங்கிவிட்டு அதனைத் திரைப்பட விளம்பரங்களில் கட்டாயம் காட்ட வேண்டும். வெளிநாட்டுக்காரன் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்பது நம் அசைக்க முடியாத நம்பிக்கை, இதுவும் படத்தின் வெற்றிக்கு உதவும். படம் வெளியான அன்றே வெற்றிகரமான முதல் வாரம், பத்தாவது நாள் என்றெல்லாம் போஸ்டர் அடித்து வைத்திருக்க வேண்டும். மூன்றாம் நாள் முதல்வாரம் போஸ்டரை ஒட்ட வேண்டும், ஒரு வாரம் முடிந்தவுடன் பத்தாவது நாள் போஸ்டரை ஒட்ட வேண்டும். வெற்றிகரமாக ஓடுகிறதாமே? அப்போது நாமும் பார்த்து விட வேண்டும் என்று அது ரசிகனைத் தூண்டும். ஊருடன் ஒத்து வாழ் என்ற பழமொழியை நாம் இங்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சமையலில் உப்பு காரம் முதலியவை அவரவர் தேவைக்கு ஏற்றாற்போல கூடவோ குறையவோ செய்வது போல இந்தக் குறிப்பில் சொல்லப்பட்டிருப்பவைகளை கூடவோ குறைத்து சேர்த்துக் கொள்ளலாம். இப்படியெல்லாம் செய்தால் படம் பெருவெற்றி பெறுமான்னு கேட்கக் கூடாது, ஆனால் ஊடகத்திலெல்லாம் மாபெரும் வெற்றிப்படம்னு பேச வைக்கலாம், இத வெச்சு இன்னும் நாலு படம் எடுக்கலாம், அப்புறம் சென்னை மாதிரி ஒரு பெருநகரத்தில் பங்களா வாங்கிக்கொண்டு, சென்னைக்கு வெளியே சந்தடியற்ற ஒரு கிராமப்புறத்தில் விவசாய நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி ஒரு பண்ணைவீடு கட்டிக் கொண்டு சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஒருகார்ப்பொரேட் நிறுவனைத்த நடத்தியோ அல்லது முதலீடு செய்தோ நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டலாம், ஏனென்றால் கொள்கை வேறு, வியாபாரம் வேறு.
ஸ்ரீஅருண்குமார்
Excellent article, precisely depicts the sorry state of kollywood