புரியாத புதிர் – இயக்குனர் கே எஸ் ரவிகுமார் அவர்களின் முதல் படம்.  இதிலே I know என்பதை பல்வேறு மாடுலேஷன்களில் ரகுவரன் சொல்வது ரொம்பவே பிரபலமாகப் பேசப்பட்டது 1990ல்.  படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் வாழ்க்கையில் இதுபோல நிறையவே புரியாத புதிர்கள் இருக்கின்றன.  அதற்கெல்லாம் நம் பதில் I don’t know தான். அதிலே ஒரு புதிர் இப்போது சொல்லவா?

 

சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் விலைவாசி என்பது ஒரு முக்கிய கோஷமாக இருந்து வந்தது.  விலைவாசியைக் குறைப்போம் என்று எதிர்க்கட்சிகள் வாக்குறுதி தருவதும், விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்ட அரசு பதவி விலக வேண்டும் என்று ஆளுங்கட்சியைக் குறை சொல்வதும் வழக்கமான நிகழ்வுகள். 2019ல் நடந்த தேர்தலில் என்ன ஆச்சு இந்த விலைவாசிக்கு?  ஏன் இதனைப் பற்றி ஒருவரும் பேசவில்லை? பெட்ரோல் விலை ஏகமாக ஏறிய போது கூட விலைவாசி அடங்கி ஒடுங்கிப் போய் இருந்ததே ஏன்? I don’t know.

 

ஒரு பழைய நகைச்சுவை ஒன்றை கவுண்டமணி – செந்தில் ஜோடி திரையில் அமர்க்களப்படுத்தி இருப்பார்கள்.  கவுண்டமணி ஊர் தலைவர். எல்லாவற்றிற்கும் அவர்தான் முன்னிலை. பொறாமை கொண்ட செந்தில் நானும் ஒரு நாள் போகிறேனே என்பார்.  வாய்ப்பு கிடைத்த இடத்தில் கணவனை இழந்த பெண்ணிடம் ஆறுதல் சொல்கிறேன் என்று உளறிக் கொட்டி உதை வாங்கிக் கொண்டு வருவார். இந்த நகைச்சுவை மூலம் நம் முன்னோர்கள் சொல்ல வந்தது என்னவென்றால் எல்லாவற்றிற்கும் அனுபவம் வேண்டும்.

 

ராகுல் காந்திதான் பட்டத்துக்கு உரியவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் முதலில் காங்கிரஸ் கட்சியில் துணைத்தலைவர் பதவி கொடுத்து அதன் பிறகுதான் தலைவர் பதவிக்கு வந்தார். அது மட்டுமல்ல பல ஆண்டுகளாக எம் பி ஆக இருந்து வருகிறார். நம்ம ஊருல எடுத்துக்கிட்டா நம்ம தலைவர் கட்சி எதிர் – மன்னிக்கணும் – எதிர்க்கட்சித் தலைவர் – எனக்கும் டங்கு ஸ்லிப்பு – இளைஞர் அணித் தலைவர், சென்னை மேயர், துணை முதல்வர், செயல் தலைவர் பிறகுதான் தலைவர். இது நடுவில் பல்லாண்டுகளாக எம் எல் ஏ.  இது போலத்தான் கழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் உதயநிதியும் இளைஞர் அணித் தலைவர் ஆக்கப்பட்டுள்ளார். அடுத்தது எம் எல் ஏ ஆவார். இப்படித்தான் படிப்படியாக மேலே வருவார். என்னதான் பட்டத்து இளவரசராக இருந்தாலும் அரியணை ஏறுவதற்கு அனுபவம் அவசியம் என்பதை நம் முன்னோர்கள் அறிவுறுத்தி வைத்திருக்கிறார்கள்.

இப்போ சொல்லுங்க  நரேந்திர மோடி அவர்கள் குஜராத் முதல்வர் ஆவதற்கு முன்னால் எந்தப் பதவியில் இருந்தார்? அவரைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?  குஜராத் முதல்வராவதற்கு முன்னர் அவரது அனுபவம் என்ன? யாராவது இந்தக் கேள்வியை எழுப்பினார்களா? இதற்கு முன்னர் ஒரு மந்திரியாகக் கூட இல்லாதவரை எப்படி முதல்வராக்கலாம் என்று யாராவது கேட்டார்களா?  அல்லது பதவியேற்ற பிறகு என்றைக்காவது அவருக்கு அனுபவமில்லையென்று யாராவது சொல்லுமளவுக்கு அவர் நடந்து கொண்டாரா? சொல்லப் போனால் அரசு பதவிகளில் அனுபவம் இல்லாத நரேந்திர மோடி அவர்கள்தான் குஜராத்தில் கொண்டு வந்த திட்டங்கள் மூலமும் மாநிலத்தின்  வளர்ச்சி மூலமும் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தார். இதெல்லாம் முன் அனுபவம் இல்லாத ஒருவரின் சாதனைகள். எப்படி முடிந்தது? I don’t know.

 

சந்திரசேகர் அவர்கள் பிரதமராக இருந்த போது அமெரிக்க போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்தன.  அப்போது அந்தப் போர் விமானங்களின் அருகே செல்லக் கூட இந்தியர்களுக்கு அனுமதி இல்லை. இன்றைக்கு? அமெரிக்கப் படைவீரர்களும் இந்திய வீரர்களும் இந்தியப் படையின் பாட்டிற்கு ஒன்றாக நடனமாடுகின்றனர்.  உலக அளவில் நடக்கும் மாநாடுகளில் இந்தியப் பிரதமர் என்பவர் யாருமே கண்டுகொள்ளாமல் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த நிலை மாறி, ஜி-7 அணியில் இந்தியா இல்லாத நிலையிலும் பிரத்யோகமாக அழைக்கப்பட்டது இன்று.  அமெரிக்க அதிபர்கள் என்றாலே பயம் கலந்த மரியாதையுடன் பவ்யமாகப் பம்மி இருந்த நிலை மாறி ஹேய் ட்யூட்  என்பது போல மாறியிருக்கிறது இன்று.

இவருக்கு அமெரிக்கா விசா கொடுக்கக்கூடாது என்று காங்கிரஸ் தொட்டு கழகங்கள் மற்றும் கம்யூனிஸ்ட் வரைக்கும் அமெரிக்காவுக்கு தண்டனிட்டு வேண்டுகோள் விடுத்தது மறந்து விடவில்லை. ஆனால் அவர்தான் இன்றைக்கு அமெரிக்க ஜனாதிபதியின் முன்னாலேயே கம்பீரமாக எங்கள் உள்நாட்டுப் பிரச்சினையில் யாரும் தலையிட வேண்டியதில்லை என்று கர்ஜிக்கிறார். 

 

அப்படி நட்பு இருந்தாலும் அமெரிக்காவின் கட்டளைகளுக்கு அடிபணிந்து ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி விட்டாரே மோடி?  அமெரிக்க ஏகாதிபத்யத்துக்குத் துணை போவதா? என்று சில கம்யூனாஸ்ட்டிகள் கேட்கிறார்கள். இன்றைக்கு உலக அளவில் அமெரிக்காவை எதிர்த்து நிற்பது என்பது பொருளாதார தற்கொலைக்குச் சமம். அதனால்தான் சீனா கூட அமெரிக்காவுடன் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதே சமயம் அமெரிக்க ஏகாதிபத்யம் ஒழிக என்று கோஷமிடும் டோலர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில்தான் படிக்கிறார்கள், அமெரிக்க ஏகாதிபத்யத்தின் அடையாளமான விசா போன்ற கம்பெனிகளில் உழைக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா? ஏன் இவர்களின் பிள்ளைகள் சீனாவிலோ ரஷ்யாவிலோ படிக்கவில்லை? படிப்பது டாஸ் காப்பிடல் உழைப்பது அமெரிக்க காப்பிடல் – இதுதானே கம்யூனிஸ்டுகளின் வாடிக்கை?

 

ஒரு பழங்காலக் கதை. ஒரு ராஜா பட்டத்து யானையின் மேல் போய்க் கொண்டிருந்தாராம். அப்போது தெருவில் ஒருவன் நடந்து போய்க் கொண்டிருந்தானாம்.  தெரு ஓரத்தில் தண்ணீரும் சேறுமாக இருந்தது. அப்போது அவன் சேற்றில் எகிறி குதித்ததும் ஒரு துளி சேறு ராஜாவின் மேல் விழுந்தது. ராஜாவும் புன்னகையுடன் கடந்து சென்று விட்டார். அரண்மனை திரும்பியதும் யானையிலிருந்து இறங்கியவுடன் உடையில் ஒட்டிக் கொண்டிருந்த சேற்றைப் பற்றிக் கேட்டது ராஜா நடந்ததைக் கூறினார். உடனே வீரர்கள் வெகுண்டெழுந்து அவனை வெட்டிக் கொண்டு வருகிறோம் என்று ஆர்பரித்தனர். ராஜா அவர்களை சமாதானப் படுத்தினார்.  என் கடமை ராஜ்யத்தைப் பராமரிப்பது.  இந்த விஷயத்துக்கெல்லாம் நான் என் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தால் ராஜ்யத்தை நானெப்படி கவனிப்பது? விட்டுத்தள்ளுங்கள்

 

மோடி பத்திரிகையாளர்களிடம் பேசுவதில்லை,  பிரச்சினைகள் பற்றி கருத்து சொல்வதில்லை என்று போராளிகள் பெரிதும் அங்கலாய்க்கிறார்கள்.  ஐயா போராளிகளே, உங்களுக்கு முழுநேர வேலையே கருத்து சொல்வதுதான். ஆனால் அவருக்கு அதுவா வேலை?  நாட்டை எப்படி முன்னேற்றுவது? பிற நாடுகளுடன் எப்படி உறவைப் பேணுவது? தொழில் வளத்தை எப்படிப் பெருக்குவது?  இப்படி ஏகப்பட்ட வேலைகள் இருக்கும்போது உங்கள் மீம்ஸுக்கும் ட்விட்டர் கேள்விகளுக்கும் பதில் சொல்வதுதானா முக்கியம்?

 

ஊழல் —  யார் வந்தாலும் ஒழிக்க முடியாது என்ற நிலை மாறி மந்திரிகளில் மட்டத்தில் ஊழல் என்பது அறவே இல்லை என்று காட்டியது நரேந்திர மோடிதானே? 

Pradhan Mantri Kisan Maan Dhan Yojana #PMKMY

அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் என்றிருந்த நிலை மாறி இன்றைக்கு விவசாயிகள், முறைசாரா தொழிலாளர்கள், சிறு குறு வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஓய்வூதியம் கிடைக்கும் என்பதற்குக் காரணம் நரேந்திர மோடிதானே?

 

கிராமங்களில் ஏழைக் குடும்பங்களுக்கும் எரிவாயு கிடைக்க வழி செய்தது நரேந்திர மோடிதானே?

 

சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்களாகியும் மின்சாரம் என்பதையே கண்டறியாத கிராமங்களைக் கூட வெளிச்சத்தின் ஆளுமையில் கொண்டு வந்தது நரேந்திர மோடிதானே?

 

மக்களின் பணத்தை திருடித் தின்றவர்கள் தக்க தண்டனை அடைய வேண்டும் என்று சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்து வருவது நரேந்திர மோடிதானே?

 

இன்று இந்தியா என்றாலே உலக நாடுகள் அனைத்தும் மரியாதையுடன் பார்ப்பதற்குக் காரணம் நரேந்திர மோடிதானே?

பாக்கிஸ்தானை உலக அரங்கில் தனிமைப்படுத்தி கையில் பிச்சைப்பாத்திரத்துடன் அலையவிட்டது நரேந்திர மோடிதானே?

 

பாக்கிஸ்தான் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் நாங்கள் இந்தியாவைத்தான் ஆதரிப்போம் என்று உலக நாடுகள் ஒன்று திரள்வதற்குக் காரணம் நரேந்திர மோடிதானே?

 

இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும், ஆனால் என்னால் இவ்வளவுதான் கம்ப்யூட்டரில் தட்ட முடியும். 

 

இவ்வளவு இருந்தும் ஒரு சிலர் மட்டும் தொடர்ந்து மோடியை தீவிரமாக எதிர்ப்பதன் காரணம் I know, I know, I know.

எத்தனை கீழ்த்தரமான வசவுகளும் எதிர்ப்புக்களும் வந்தாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று நாட்டுக்காகவே நாளெல்லாம் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு கர்மவீரனுக்கு இன்று பிறந்த நாள்.  ஆனால் நான் எல்லாரையும் போல வாழ்த்து சொல்லப் போவதில்லை. அதற்குப் பதிலாக இப்படி ஒரு மனிதரை நம் நாட்டில் பிறக்க வைத்த அந்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

 

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.