
இந்தியா வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற காரணமாயிருந்தது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொருவருக்கும் மேலோங்கியிருந்த ‘நான் இந்தியன்’ என்ற ஒருமித்த உணர்வும் இந்த நாட்டின் மீதிருந்த பற்றும்தான். ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ். மாநிலங்களில் உள்ள செல்வாக்கு மிகுந்த சிறு கட்சிகள் தங்கள் மாநில மக்களை தூண்டி விட்டு தங்கள் மாநிலம் மட்டுமே இந்திய அளவில், ஏன் உலக அளவிலேயே சிறந்தது என்பது போன்ற மாயையை வளர்க்கிறது, காவிரி போன்ற நீர் ஆதாரங்கள் மூலம் மோதலை வளர்த்து பிரிவினையை வளர்க்கின்றன.
ஆதரவாகவோ எதிர்த்தோ மத்திய அரசு முடிவெடுத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்
மத்திய அரசை மட்டுமின்றி இந்தியாவையே தூற்றுகிறது.
கட்டபொம்மன் முதல், வ.உ.சி, திருப்பூர் குமரன் வரை எண்ணற்ற சுதந்திர போராட்ட தியாகிகளை கொண்ட தமிழகத்தில் முதல் முறையாக நாட்டுப்பற்றை நீர்த்து போக செய்ய முயற்சித்த பெருமை திராவிட கட்சிகளையே சாரும். அன்று அண்ணாதுரை பின்வாங்கியதால் சற்றே ஓய்ந்திருந்த பிரிவினை கோஷம் இன்று திராவிட கட்சிகளின் பேரப்பிள்ளைகளால் மீண்டும் உயிர்ப்பிக்கபடுகிறது. இடையிடையே கருணாநிதி போன்றோர்கள் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது போன்ற கோஷங்களாலும், இலங்கையில் இருந்து திரும்பிய இந்திய ராணுவத்தை வரவேற்க மறுத்த செயல்களாலும், பிரிவினைக்கு நீர் ஊற்றி கொண்டே இருந்தனர்.
முன்னர் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்த கட்சி என அறியப்பட்ட தேசிய கட்சியான காங்கிரஸும் இதற்கு விதிவிலக்கல்ல.அன்று ஒருமைப்பாட்டுக்கு குரல் கொடுத்த கட்சியின் தலைமை ஆட்டங்கண்டதால்,காங்கிரஸ் தலைவர்கள் பலர் இந்தியாவை வெளிநாட்டில் அதுவும் குறிப்பாக பாகிஸ்தானில் அவதூறு பேசுவதை குறிக்கோளாகவே கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் துபாய் சென்றபோது இந்தியாவின் நிலைமையை பற்றி பலவாறு திரித்து பேசினார். அவர் பேசிய பேச்சுகளின் மூலம் இந்தியாவில் உள்ள மக்களுக்கு (அதாவது ஹிந்துக்களுக்கு) சகிப்புத்தன்மையே இல்லாது போன மாதிரியும் மோதி அரசு ஊழலில் கொழுத்துப் போய் இருப்பது போலவும் அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் திரித்து பேசினார்.
நாட்டில் எங்கும் மதசண்டைகளும் சாதி சண்டைகளும் நடக்கின்ற என்றும், மதத்தின் பெயரால் நாட்டை துண்டாடுகின்றனர் என்றும் நாட்டில் வறுமை தலைவிரித்து ஆடுகின்றது என்றும் அள்ளி வீசினார்.
ஒருவகையில் அவர் சொன்னது பாதி உண்மையே. எதெல்லாம் அவரும் அவர் சார்ந்த கட்சிகளும், ஊடகங்களும் செய்கின்றனவோ, அதை தான் அவர் தன் வாக்குமூலமாக ஒப்பித்தார். நாட்டை மதத்தின் பெயரால் துண்டாட அவர்கள் எடுக்கும் முயற்சியை தான் தனக்கு தானே குற்றம்சாட்டி கொண்டார்.
அவர் சொல்வதெல்லாம் நகைப்புக்குரியதாக அப்பட்டமான பொய் என இங்கிருக்கும் மக்களுக்கு புரிந்தாலும், அவர் பேசும் தொனியில் உள்ள அழுத்தம் கொண்டு வெளிநாட்டினர் இடையே தவறான கருத்தை பரப்புகிறார். ஒரு வேளை அவர் ஒரு இந்திய பாரம்பரியத்தில் பிறந்திருந்தால், இப்படி நாட்டை சிறுமைபடுத்தி பேசியிருக்க மாட்டார்.
இதற்கு மாறாக மோதி வெளிநாட்டுக்கு போகும்போது அவர் காங்கிரஸ் கட்சியையோ இத்தாலி குடும்பத்தை பற்றியோ குறை கூறுவதில்லை. மாறாக இந்தியாவை பற்றி புகழ்ந்து மட்டுமே பேசுகிறார். இந்தியாவின் வளர்ச்சியை பற்றியே பேசுகிறார். இது நல்ல பலன் அளித்துள்ளது. முன்பு உலக அரங்கில் இந்தியாவின் மீது இருந்த மதிப்பு இன்று உயர்ந்து, அது வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு நல்லுதவி புரிகின்றது.
ஆனால் ராகுல் காந்தியோ மோதியை சிறுமைப்படுத்த எண்ணி இந்தியாவை அசிங்கப்படுத்துகிறார். உள்நாட்டு அரசியலை வெளிநாட்டில் பரப்பி தாய்நாட்டின் மீதே சேற்றை வாரி இறைக்கிறார். நாட்டை விட, நாட்டின் பெருமதிப்பை விட சுயநல அரசியலே பெரிது என தன்னை அடையாளப்படுத்துகிறார்.
தலைவர் எப்படியோ தொண்டர்களும் அப்படித்தானே? காங்கிரஸில் உள்ள மணிசங்கர் அய்யரும், சல்மான் குர்ஷித்தும் இப்படி இந்தியாவைப் பற்றி இழிவாகப் பேசுவதில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள். 2015ல் இவர்கள் இருவரும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை புகழ்ந்தும் மோதியை இகழ்ந்தும் பேசி புளகாங்கிதம் அடைந்தனர். மோதியை ஆட்சியை விட்டு வெளியேயற்ற பாகிஸ்தானின் உதவியை நாடுவோம் என்று வெளிப்படையாக ஒப்பித்தனர். மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து வெளியே சொல்லிவிட்டனர் பாவம். வழக்கம் போல காங்கிரஸ் இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து எனக் கூறி பூசிமெழுகியது (Times of India, 17.11.2015).
சமீபத்தில் பாகிஸ்தானில் முகநூலில் காங்கிரஸ் கட்சி மோதிக்கு எதிரான விளம்பரங்களை ஒளிபரப்பி கையும் களவுமாக பிடிபட்டது, வழக்கம் போல அதை மறுத்தது (India Today, 08.10.2018). சென்ற ஆண்டு ஆகஸ்டில் பாகிஸ்தான் சென்ற நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் ராணுவத் தலைவர் கமர் ஜாவேத் பஜ்வாலை ‘அன்புடன்’ ஆறத் தழுவி மகிழ்ந்ததும் நினைவிருக்கலாம். வழக்கம் போலவே காங்கிரஸில் இருந்த மற்றவர்கள் ஒப்புக்கு இதை எதிர்த்து குரல் கொடுத்தனர் (India Today, 22.08.2018).
இதே போல காங்கிரஸ் திருவனந்தபுரம் MP சசி தரூர் ‘பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் இந்தியா ஒரு ஹிந்து பாகிஸ்தானாக மாறும்’ எனக் கூறி சர்ச்சையை கிளப்பினார். இதன் மூலம் அவர் இந்தியாவை பழித்தாரா அல்லது பாகிஸ்தானை இகழ்ந்தாரா என்பது அவருக்கே வெளிச்சம் (DD News, 13.07.2018). இதே போல கடந்த ஜூன் மாதம் முன்னாள் மந்திரி சைபுதீன் சோஸ் காஷ்மீருக்கு சுதந்திரம் கொடுப்பதைப் பற்றி பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் கூறிய கருத்துக்கு ஏகோபித்த ஆதரவை தெரிவித்தார் (Free Press Journal, 22.06.2018).
இதையும் மீறி, சென்ற ஆண்டு காங்கிரஸ் தலைவர்களுக்கும் பாகிஸ்தான் தலைவர்களுக்கும் மணிசங்கர் அய்யர் வீட்டில் ரகசிய சந்திப்பு நடத்தியதை பிரதமர் மோதி வெளிப்படையாக கூறிய பின்னர் வேறு வழியின்றி காங்கிரஸ் ஒத்துக் கொண்டதை நினைவில் கொள்ள வேண்டும் (Times Now News, 11.12.2017). சமீபத்தில் புலாந்ஷஹரில் கலவரம் ஏற்பட்டு ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டபோது நடிகர் நஸ்ருதீன் ஷா தன் பிள்ளைகளின் பாதுகாப்புக்காக (??) மிகவும் கவலைப்பட்டு அறிக்கை வெளியிட்டார். அதில், இந்தியாவில் ஒரு மாடு கொல்லப்படுவது, ஒரு போலீஸ்காரர் கொல்லப்படுவதை விட முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் கூறினார். இவரின் அறிக்கை வந்த சில நாட்களிலேயே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தமது நாட்டில் சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக வாழ்வதாகவும் அதைப் பார்த்து பிரதமர் மோதி கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சிலாகித்துப் பேசினார் (Times of India, 22.12.2018).
இதற்கு சற்றும் குறைவில்லாமல் சமீபத்தில் காங்கிரஸ் ஆதாவு ஊடகம் “The Quint” வெளியிட்ட கட்டுக்கதை கட்டுரை பாகிஸ்தானின் சிறையில் வாடும் ஒரு அப்பாவி இந்தியனின் உயிருக்கு உலைவைக்கின்றது. சாதாரணமாக பாகிஸ்தான் எந்த இந்தியரை கைது செய்தாலும் அவர் மீது உளவுபார்த்ததாக குற்றம்சாட்டி சிறையில் அடைப்பது இயல்பு. அப்படி ஒருவர் தான் குல்பூஷன்சிங் ஜாதவ். 2016ல் கைது செய்யப்பட்ட அவருக்கு 2017ல் மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவரை விடுவிக்க இந்திய அரசு எடுத்த பெரும்முயற்சியால் பொய்யான குற்றச்சாட்டு என்று சர்வதேச நீதிமன்றம் மூலம் அதற்கு தடைவிதிக்கப்பட்டது.
இன்று உயிருக்கு ஏங்கி கொண்டு இருக்கும் ஒருவரை சகஇந்திய பத்திரிக்கையான “The Quint” அவரை ஒரு உளவாளி என்று காட்டிகொடுக்கின்றது. கட்டுரை வெளிவந்த ஒரு சிலநிமிடங்களில் பாகிஸ்தானின் செய்தி சேனல்களும், உளவு அதிகாரிகளும் இந்த கட்டுரையை ஆதாரமாக்கி குல்பூஷன் ஜாதவிற்கு மீண்டும் மரணதண்டனை விதிக்க முயல்கின்றனர். சர்வதேச நீதிமன்றத்தில் அதை ஆதாரமாக்கி அவரது தண்டனையை உறுதிப்படுத்த பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இல்லாவிட்டாலும் பாகிஸ்தான் அரசு அதையே செய்யும்.
அதை கண்டு இங்கே காட்டிகொடுத்த குய்ண்ட்டும் அதன் தாயான காங்கிரஸ் கட்சியும் சிரிக்கின்றனர். மோதியின் முயற்சிக்கு முட்டுக்கட்டையிட்டு மோதியை வீழ்த்திவிட கொக்கரிக்கின்றனர். சுய அரசியல் லாபத்திற்காக ஒரு உயிரை பலிகொடுக்கவும் தயங்காத இவர்கள் மாண்பு இதில் வெட்டவெளிச்சமாகி உள்ளது.
தாய்நாட்டை காட்டி குடுப்பவனுக்கும் தாய்க்கு விலை சொல்பவனுக்கும் வித்தி்யாசமே இல்லை. The Quint அத்தகைய பத்திரிக்கைகளில் ஒன்று.
இன்று குல்பூஷண், நாளை ரபெல் ரகசியங்களை கொடுத்து நம் அனைவரின் பாதுகாப்புக்கும் உயிருக்கும் உலை வைக்க தயங்கமாட்டர் இவர்.
இதே போல திருமுருகன் காந்தி என்னும் தமிழகத்தை சேர்ந்த ஒரு ஈனப்பிறவி, ஈழத்தமிழர்களுக்காக குரல் குடுக்கிறேன் என்ற போர்வையில் ஐ.நா சபை போன்ற பொதுவெளியில் இந்தியாவை தூற்றுகிறார். இதை கண்டு பொங்கிய இந்திய அரசு தேசதுரோக வழக்கில் அவரை கைது செய்தால், அவருக்கும் வக்காலத்து வாங்கி விடுவிக்க சிலபேர் இருக்கத்தான் செய்கின்றனர்.
நாடென்ன செய்தது எனக்கு என்று கேள்விகள் கேட்பது தவறு.
நீயென்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் வாழ்க்கை இருக்கு.
Author : Symbianian