
சென்ற முறை நாம் இத்தாலியிலுள்ள உள்ள பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் கண்டு களித்து வந்தோம். இன்று நாம் எங்கே செல்லவுள்ளோம் தெரியுமா?
சுனாமிக்கு பூகம்பத்திற்கும் பிரசித்தி பெற்ற நாடு இது.
ஒழுக்கத்திற்கும், சுறுசுறுப்பிற்கும் பெயர் போன நாடு இது.
இன்னும் தெரியவில்லையா?
புல்லெட் ரயில் என்றதும் உங்கள் நினைவுக்கு வரும் நாடு எது?
ஆம், ஜப்பான் நாட்டிற்கு தான் இன்று நாம் விஜயம் செய்ய உள்ளோம்.
ஆங்கிலம் இன்றி உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிறைக்க முடியாது என்று கூறி கொள்ளும் யாவரும், இந்த நாட்டிலிருந்து கற்று கொள்ள வேண்டிய பாடம் நிறையவே உள்ளது. அணுகுண்டு தாக்குதலில் முற்றிலும் தன்னை இழந்த போதும், இன்று உலக அரங்கில் ஓர் பெரும் சக்தியாக எழுந்திருப்பது ஆச்சர்யமே. அதற்கு அந்நாட்டு மக்களின் ஒழுக்கமும், சுறுசுறுப்பும் மட்டுமல்ல, அவர்களது நாட்டுப்பற்றும் ஓர் மிக முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.
அப்படி முன்னிற்கு வர இவர்களுக்கு ஆங்கில மொழி தேவைப்படவில்லை. தங்கள் தாய்மொழியிலேயே இன்றும் இவர்கள் பற்று கொண்டுள்ளனர். அதன் மூலமே படித்து இன்று பல கண்டுபிடிப்புகளுக்கும் சொந்தக்காரர்களாக உள்ளனர். நாம் தான் இன்னும் ஆங்கில மோகத்தினுள்ளே இருந்து வெளிவர மறுக்கின்றோம்.
அது மட்டுமல்ல, எனது பல வருட ஜப்பான் பயண அனுபவத்தில் மற்றும் ஒரு முக்கியமான விஷயம், இங்கு நான் ஒரு பிச்சைகாரர் கூட பார்த்தது இல்லை. ஆம், மற்றவரிடம் கை ஏந்துவதையே ஒரு இழுக்காக எண்ணுபவர்களே இங்கு அதிகம். அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு தான் நாம் இன்று சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளோம்.
சரி இப்பொழுது நாம் நமது பயண கட்டுரைக்கு வருவோம்.
ஜப்பான் நாட்டின் தலைநகரமான டோக்கியோ [Tokyo] அருகில் உள்ள ஒரு புத்த கோவிலை தரிசிக்கவே இன்று நாம் செல்லவுள்ளோம்.
கமக்குரா [Kamakura] என்றழைக்கப்படும் இந்த புத்த கோவில் டோக்கியோ நகரத்திலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ளது. கடற்கரையின் அருகில் அமைந்துள்ளதால், இவ்விடம் கோடை காலங்களில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
டோக்கியோ நகரத்து கூட்ட நெரிசலில் இருந்து தனித்து இருக்க விரும்பினால் கமக்குரா மிக பொருத்தமானதாக இருக்கும்.
ஜப்பான் நாட்டை பொறுத்தவரை நீங்கள் எங்கு செல்ல வேண்டுமானாலும் ரயிலே மிக சிறந்த போக்குவரத்து. டோக்யோவிலிருந்து கமக்குரா செல்ல ரயிலில் சுமார் 2 மணி நேரம் வரை ஆகும்.
டோக்கியோ ரயில் நிலையத்திலிருந்து நேரடியாக இங்கு செல்ல ரயில் வசதி உண்டு.
ஜப்பானை பொறுத்தவரை, நீங்கள் கண்ணை மூடி கொண்டு உங்கள் பயண சீட்டில் குறிப்பிட்டுள்ள மணிக்கு எந்த ரயில் நிலையத்தில் நிற்கிறதோ, அங்கே இறங்கி விடலாம். ஜப்பான் நாட்டு ரயில் சரித்திரத்தில் தாமதம் என்ற வார்த்தைக்கே இடமில்லை. அவ்வளவு துல்லியமாக இருக்கும்.
ஒருவேளை நீங்கள் யோகோஹாமா [Yokohama] அல்லது அதை சுற்றியுள்ள இடங்களில் தங்க நேர்ந்தால் முதலில் நீங்கள் சிஞ்சுக்கு [Sinjuku] என்னும் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கு ரயில் மாற வேண்டும். கமக்குரா-வில் இருந்து எனொடேன் [Enoden] ரயில்வே லைன் மூலமாக, மூன்றாவது ரயில் நிலையத்தில் நீங்கள் இறங்க வேண்டும். இந்த நிலையத்தின் பெயர் ஹாசே [Hase].
தங்கள் வசதிக்காக அந்த ரயில் நிலையத்தின் ஆங்கில பெயரும் அடங்கிய வரைபடத்தை இங்கே அளித்துள்ளேன்.
ஹாசே ரயில் நிலையத்திலிருந்து சுமார் பத்து நிமிட நடையில் நீங்கள் இந்த புத்த கோவிலை அடைவீர்கள். தாய்புட்சு [Daibutsu] என்ற பெயரால் வழங்கப்படும் இந்த புத்தர் சிலைதான் ஜப்பான் நாட்டிலேயே இரண்டாவது உயர்ந்த சிலை. 1252ம் வருடம் கட்டப்பட்ட இந்த சிலை முழுவதுமாக வெண்கலத்தால் ஆனது.
இது ஒரு பெரிய கோவிலின் உள்ளே அமையப்பெற்றிருந்தது. 13 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலையின் எடை சுமார் 121 டன்.
1498ம் வருடம் வந்த ஒரு சுனாமியின் காரணத்தால் அந்த கோவில் முழுவதுமாக அழிந்து விட்டது. அதிஷ்டவசமாக இந்த சிலை மட்டுமே தப்பியது. பின் 1923ம் வருடம் இந்த இடம் ஒரு பெரும் பூகம்பத்தால் தாக்கப்பட்ட போதும் இந்த சிலைக்கு ஒரு சேதமும் இல்லை, ஆனால் இதன் தளம் மிகவும் பாதிப்புக்குள்ளானது.
தொடர்ந்து இது போன்ற இயற்க்கை இன்னல்கள் தோன்றியதால் பிற்காலத்தில் இதன் அடிப்பகுதி சீரமைக்க பெற்று, இன்று நிலநடுக்கம் வந்தாலும் தாங்கும் வகையில் சீர்ப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிலையை காண நேர்ந்தால் நீங்கள் நிச்சயம் அதன் உள் சென்று வர வேண்டும். ஆம், இந்த சிலையின் வெளிப்புறம் மட்டுமே வெண்கலங்களினால் ஆனது. ஆனால், இதன் உள்ளே, ஏதும் இன்றி மக்கள் உள்ளே சென்று பார்வை இடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உள்ளே செல்ல சிறிய கட்டணமும் வசூலிக்கப்படுகிறது, ஆனால் அது மிக மிக குறைவு. நமது ரூபாய் மதிப்பில் 150 ரூபாயை விட குறைவு. கோடை காலங்களில் இதன் உள்ளே சென்றால், உங்கள் சட்டை வியர்த்து தான் நீங்கள் வெளியில் வருவீர்கள். நமது ஊரின் அக்னி நட்சத்திரத்தையே கண்டு வந்த நமக்கு இது ஒரு பெரிய பொருட்டே இல்லை என்பது வேறு விஷயம்.
நேரமிருப்பின், அருகில் உள்ள கடற்கரைக்கு சென்று சிறிது காலை நனைக்கலாமே? ஆம், சுத்தமான கடல் நீரில் சிறிது விளையாடிய பின் நீங்கள் அங்கிருந்து வெளியேறினால் உங்கள் மனமும் புத்துணர்ச்சி பெரும் இல்லையா?
என்ன வாசகர்களே, இன்றைய ஜப்பான் பயணம் எப்படியிருந்தது? நீங்கள் மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இது போன்ற மேலும் பல சுவாரசியமான சுற்றுலா தளங்களுக்கு செல்ல ஆசையா? அப்படியென்றால் தவறாமல் இந்த வலை தளத்தை குறித்து கொள்ளுங்கள்.
மீண்டும் வேறு ஒரு நாளில் வேறு ஒரு நாட்டில் உங்களை சந்திக்கும் வரை, விடைபெறுவது…
உங்கள்
மகேஷ்