என்னோட பால்ய சினேகிதன்.  கல்லூரி காலங்களில் நாங்களெல்லாம் சினிமா நாடகம் என்று சுற்ற இவன் மட்டும் சிரத்தையாக கம்ப்யூட்டர் கிளாஸ் சேர்ந்து ஜாவா முடித்தான்.  படித்தது பி எஸ்ஸி கணக்கு என்றாலும் ஜாவா அவனுடைய மதிப்பை உயர்த்தியது. சினிமாவைப் போலவே சர்ரென்று உயரத்திற்குப் போய்விட்டான். ஹெலிகாப்டர் மட்டும்தான் வாங்கவில்லை. ஓ எம் ஆரில் 3 பெட்ரூம் ஃப்ளாட், நீலாங்கரையில் பண்ணை வீடு, தனக்கு ஒரு ஹூண்டாய், மனைவிக்கு ஒரு மாருதி சுஸுகி, வாரஇறுதியில் ஒரு ஹார்லி டேவிட்ஸன் — வாழ்க்கையை அனுபவிச்சான் போங்க எங்களையும் கூட சேர்த்துக் கொண்டு.  அந்த நன்றிக்காகத்தான் இந்த வேண்டுகோள். அவனோட ப்ளாட்டும் பண்ணை வீடும் குறைவான விலைக்கு வருது, யாராச்சும் வாங்கிக்கறீங்களா? பாவம் அவனால ஈ எம் ஐ கட்ட முடியல.

 

என்ன ஆச்சுன்னு கேக்கறீங்களா? இந்த ஐ டி கம்பெனியிலே ரொம்ப நாள் தொடர்ந்து வேலை பாக்கறது அபூர்வமாமே.  வாடகைக்குக் குடியிருப்பவர் வீட்டையே கேப்பாரோன்னு காலி பண்ண சொல்றது மாதிரி ரொம்ப வருஷம் ஆயிடுச்சின்னா அவங்களே போகச் சொல்லிடுவாங்களாம். அது சரி, நாமளும்தான் சம்பளம் கூடக் கிடைச்சா தாவிடுறோம்ல.  அது மாதிரி இவனையும் போகச் சொல்லிட்டாங்களாம். இவனுக்கு இது எட்டாவது கம்பெனி, இதுலே சுமார் 10 வருஷமா இருந்தான். இப்போ மறுபடியும் வேலை தேடணும். இங்கேதான் சிக்கல் ஆரம்பம்.

இத்தனை வருஷமா ஜாவாவை மட்டுமே நம்பி இருந்துட்டான். அவனோட கூட இருந்தவனெல்லாம் பைதன், ஆர், ஹடூப், ஸாப், ஆரக்கிள்னு எதை எதையோ படிக்க இவன் மட்டும் பிடிவாதமா கம்யூனிகேஷனுக்கு ஆங்கிலம், கோடிங்க் பண்ண ஜாவான்னு ஒத்தக்கால்ல நிந்தான்.  ஜாவா எத்தனை வருஷமா இருக்கு தெரியுமா? உலகத்துல நீங்க நினைச்சுப் பாக்காத எடத்திலெல்லாம் ஜாவா இருக்கு, ஆனா நீங்க சொல்றதெல்லாம் எத்தனை எடத்துல இருக்கு? பைதன், ஆர், ஹடூப்புன்னு எங்க மேலே திணிச்சு ஜாவாவை அழிக்கப் பாக்கறீங்க. உயிரைக் கொடுத்தாவது நான் ஜாவாவைக் காப்பேன்னு சுடலை மாடசாமி மாதிரி வசனம் பேசிக்கிட்டிருந்தான்,  இன்னைக்கு எந்த கம்பெனியிலே இண்டர்வியூவுக்குப் போனாலும் ஜாவா மட்டும்தான் தெரியுமா? ஓ கே, வி வில் லெட் யூ நோ ன்னு சொல்லியனுப்பிடுவாங்க. தே வில் நெவர் லெட் ஹிம் நோ.

 

இப்போ புரியுதா?  ஹிந்தி வந்தா தமிழ் அழிஞ்சிடும்னு ஒரு கும்பல் கூத்தாடிக்கிட்டிருக்கு.  கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாருங்க. ஹிந்திக்குப் பதிலாக ஆங்கிலம்தான்னு கோஷம் போடறோம். இத்தனை வருஷமா ஆங்கிலம்தான் இங்கே இருக்கு. ஆங்கிலம் உலக மொழின்னு வேற சொல்லிக்கிறோம்.  சரி, ஆங்கிலத்தால இதுவரை தமிழ் அழிஞ்சிருக்கா? இதுக்கு பதில் இல்லைன்னு சொன்னா அப்போ ஆங்கிலத்தை விடவும் சக்தி வாய்ந்த மொழியா ஹிந்தி? ஆங்கிலத்தாலேயே அழிக்க முடியாத தமிழை ஹிந்தி எப்படி அழித்து விட முடியும்?

 

ஹிந்தியை ஏன் எதிர்க்க வேண்டும்?  

 

ஹிந்தி படித்தால் வேலை என்பதெல்லாம் பொய். இப்போது ஹிந்திக்காரர்கள்தான் வேலை தேடி தென்னகத்துக்குப் படையெடுக்கிறார்கள். நாங்க மட்டும் தமிழ் ஆங்கிலம் ஹிந்தின்னு மூணு மொழியைப் படிக்கணும், அவங்க ஹிந்தி ஆங்கிலம் ரெண்டு படிச்சா போதும்.  அடுத்த காரணம் நான் ஏன் உன் மொழியைப் படிக்க வேண்டும்? நீ என் மொழியைப் படிக்கிறாயா? இல்லையே?  

 

எல்லாமே உண்மை போலவே இருக்கு. இப்போ ஒவ்வொண்ணாப் பாப்போம்.  உலகமயமாக்கலுக்குப் பிறகு தனியார் நிறுவனங்களில் வேலை என்பது இந்தியாவெங்கும் மாறுதலுக்குட்பட்டது.  ஐ டி நிறுவனங்களில் பெரும்பாலானவை கர்நாடகத்திலும் அடுத்து ஆந்திரா தமிழகத்திலும் அமைந்துள்ளன. இதிலே வேலை கிடைத்த வடமாநிலத்தவர் கட்டாயம் உள்ளூர் மொழியைக் கற்றுத்தான் ஆக வேண்டும்.  இதனால் அவங்க மட்டும் ரெண்டு மொழிங்கறது ஏமாத்து வேலை.  

ஆமாம், வடஇந்தியர்கள் தென்னகத்தை நோக்கி வேலை தேடிப் படையெடுக்கிறார்கள்.  இரண்டு காரணங்கள் – அவங்க ஊரிலே வேலை குறைவு. இங்கே அந்த வேலைகளைச் செய்வதற்கு நாம் தயாராக இல்லை.  இங்கே வேலைக்கு வந்த வடக்கத்தியர் நாளாவட்டத்தில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இல்லாமல் சமாளிக்க முடியாது.

 

இதையெல்லாத்தையும் கூட விட்டுத்தள்ளுங்க சார்.  எந்த ஆங்கிலேயனாவது தமிழ் படிக்கிறானா? அப்புறம் என்ன நீ என் மொழியைப் படிக்காதபோது நான் ஏன் உன் மொழியைப் படிக்க வேண்டும் அப்டீன்னு அலப்பறை?  

 

டம்ளர் அறிக்கை கூறுகிறது ஆங்கிலேயரைப் போல தமிழர்கள் ஆங்கிலம் பேச கற்றுக் கொடுக்கப்படுமாம்.  எந்த ஆங்கிலேயேனாவது தமிழனைப் போல தமிழ் பேசுவேன்னு சொன்னானா? விட்டுத் தள்ளுங்க. ஒரு மலையாளியைப் போல மலையாளம் பேசுவேன், தெலுங்கனைப் போல தெலுங்கு பேசுவேன்னு நாம சொல்லியிருக்கோமா?  சரி, ஒரு ஃப்ரென்ச்சுக்காரனைப் போல ஃப்ரென்ச்சு பேசுவோம்னாவது சொல்லியிருக்கோமா? இல்லையே. அப்போ ஏன் வெள்ளைக்காரன் மாதிரி ஆங்கிலம் பேசுவோம்னு பெருமை?

அது வேற ஒண்ணுமில்லீங்க. சுதந்திரம் கிடைச்சப்போ அய்யோ எங்களுக்கு மட்டும் சுதந்திரம் வேண்டாம், நீங்களே ஆளுங்கன்னு வெள்ளைக்காரனிடம் மண்டியிடாத குறையா வேண்டிக் கொண்ட அடிமைத்தனம் இந்தியாவிலேயே இங்கே மட்டும்தான் இருந்தது? அந்த அடிமைத்தனம் இன்னும் போகவில்லை. அதனால்தான் ஆங்கிலம் என்பது ஒரு மொழி என்பதிலிருந்து ஆங்கிலம் என்பது அறிவு என்று ஆகிவிட்டது.

 

ஆங்கிலம் என்பது இங்கே மொழியல்ல.  திறமை, ஆளுமை, அறிவுடைமை, புலமை. இன்றைக்கு தமிழ் பெரிய அளவில் அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது என்றால் மிகையில்லை. சந்தேகமிருந்தால் தனியார் தொலைக்காட்சிகளைப் பாருங்கள்.  ஆங்கில வார்த்தைகளுக்கு நடுவே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழ் மாட்டிக் கொண்டு தவிக்கிறது. ஆங்கில வார்த்தைகள் இல்லாமல் ஒரு நிமிடம் கூட யாராலும் பேசமுடியவில்லை என்பதுதான் உண்மை.  உங்கள் தொலைபேசி எண் என்னவென்று கேட்டால் 90% ஆங்கிலத்தில்தான் சொல்வார்கள் தமிழர்கள்.

இதைவிட வெட்கக்கேடான விஷயம் மத்திய தர, உயர் மத்திய தரக் குடும்பங்களில் பிறந்த குழந்தையுடன் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுகிறார்கள் நவநாகரீகப் பெற்றோர்கள்.  மால்களிலும், பேருந்துகளிலும், ரயில்களிலும் இது போன்ற காட்சிகளைத் தவறாமல் பார்க்கலாம். எதற்காக இந்த அடிமை புத்தி? ஹிந்தியை எதிர்க்கிறோம் என்று ஆங்கிலத்தை எட்டாத உயரத்தில் அரியாசனத்தில் வைத்ததன் பலன் அடுத்த தலைமுறையில் தமிழ் என்பது கல்லாதவருக்கும் இல்லாதவருக்குமான மொழியாகிப் போய்விடுமோ என்று அஞ்ச வைக்கிறது.

 

ஆங்கிலம் உலக மொழி என்று கூத்தாடுபவர்களுக்கு ஒரு கேள்வி.  உங்களில் எத்தனை பேர் உலக அளவில் வியாபாரம் செய்கிறீர்கள்? எத்தனை பேர் உலக நாடுகளுக்கு மாதம் ஒருமுறை பயணம் செய்கிறீர்கள்?

 

ரஷ்யா, சீனா, ஜப்பான், கொரியா, பெரும்பாலான ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகியவற்றில் ஆங்கிலத்துக்குத் தேவையே இல்லாமல்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை நாட்களுக்குத்தான் தமிழ்நாட்டில் தயாரிக்கும் பொருட்களை இங்கேயே விற்றுக் கொண்டிருப்பது? சிவகாசி, திருப்பூர், கோவை போன்ற தொழில் மண்டலங்களில் உள்ள தமிழர்கள் தவறாமல் ஹிந்தி கற்று வைத்துள்ளனர். ஏனென்றால் அது அவர்களது தேவை.  ஹிந்தி தெரிந்தால் மட்டுமே வடமாநிலங்களில் வியாபாரம் செய்ய முடியும், ஆங்கிலம் போதும் என்றால் நீங்கள் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்திற்கும்தான் சென்று விற்க வேண்டும். 

ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது அவசியத்தின் காரணமாகத்தான்.  தமிழ் வளர வேண்டுமானால் அலுவலகங்களில் பதாகைகள் வைத்தால் போதாது, உயிரை விடுவேன் என்று வெற்று கோஷமிட்டால் போதாது, தமிழன் வளர்ந்தால் மட்டுமே தமிழ் வளரும்.  தமிழ் கற்றால் நமக்கு வாய்ப்புக்கள் அதிகம், லாபம் அதிகம் என்று பிற மொழியினர் உணர்ந்தால் மட்டுமே தமிழ் வளரும். இல்லாவிட்டால் இங்கிருப்பவர்களே தமிழ் படிக்க மாட்டார்கள், தமிழில் பேசவும் மாட்டார்கள். 

 

 

ஸ்ரீஅருண்குமார்

One Reply to “ஜாவா சுந்தரேசன்”

  1. ஹிந்தி வேண்டாம் என்று போராடும் எத்தனைபேர் ATM-இல் தமிழ் option-ஐ தேர்ந்தெடுக்கிறார்கள்? மொழி கம்யூனிகேஷன் செய்வதற்கு மட்டுமே. பற்று இருக்கலாம், பைத்தியமாகவும் இருக்கலாம் ஆனால் வெறி அழித்துவிடும், மொழியையும், வெறிகொண்டவனையும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.