
மரம் சும்மா இருந்தாலும் காற்று விடாது. அது சரி, காய்த்த மரமென்றால் பலன் யாருக்கு?
ஆம், ‘காய்த்த மரமே கல்லடிப்படும்‘, என்ற கருத்து எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ பல்லாயிரம் காலமாக வாழ்ந்து, வாழ வைத்து கொண்டிருக்கும் ஹிந்து சமுதாயத்திற்கு மிக சரியாக பொருந்தும்.
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று கூட ஒரு பழமொழி உண்டு.
மற்றவர்களை மதிக்கவும் ஆதரிக்கவும் வேண்டும் என்ற உயரிய பண்பை புகட்டவே இந்த பழமொழி.
ஆனால், அதற்காக உங்கள் பிள்ளைகளுக்கு இவ்வளவு செய்கிறீர்களே, அதை விட்டு விட்டு, ஊரார் பிள்ளைக்கு செய்ய கூடாதா என்று கேட்டால் எவ்வளவு மடத்தனமோ, அதே போன்று தான், கோயிலுக்கு எதற்கு செலவு செய்கிறீர்கள், அதற்கு மாறாக கல்விகளுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறுவதும்.
இன்றிருக்கும் சூழலில், ஒரு தரப்பு இவ்வாறு கூறினால் மறு தரப்பும் வேறு ஒன்றை விடுத்து கல்விக்கு உதவுங்கள் என்று கொடி பிடிக்காதா?
உதாரணமாக – ஏன் சினிமாவிற்கு செலவு செய்து பணத்தை விரயமாக்க வேண்டும்? பல நூறுகள் முதல் சில ஆயிரம் வரை செலவு வைக்கும் சினிமாவை விடுத்து அந்த காசை கொண்டு ஏழைகளுக்கு சில வாரங்களுக்கு தேவையான அரிசி பருப்பு வாங்கி தர முடியுமே?
ஏற்கனவே கோடியில் புரளும் நடிகர் நடிகைகளுக்கு லட்சங்கள் பல செலவு செய்து எதற்கு விருது வழங்கும் விழா? அதில் ஒரு பங்கை கல்விக்கு செலவு செய்தால் கூட பல குழந்தைகள் பல வருடம் படிக்க போதுமான தொகையாக இருக்குமே?
இப்படியே சென்று கொண்டிருந்தால் இதற்கு விடிவு தான் என்ன?
ஒன்றை இழந்து தான் மற்றொண்டை அடைய வேண்டும் என்ற எண்ணங்கள் தவறானது. அவ்வாறு இருந்திருந்தால், வாடிகன் கிருத்துவ ஆலயம் இன்று உலகிலேயே பெரும் பணக்கார ஆலயமாக திகழ வாய்ப்பிருக்குமா?
மக்கள் தங்கள் மனமுவந்து உண்டியலில் இடும் சில துளிகள் கூட இவர்கள் கண்ணை உறுத்துவதை காணும் போது என்னவென்று சொல்ல?
தீர்த்த யாத்திரைக்கும், புனித பயணத்திற்கும் அனைத்து மத மக்களும் செலவு செய்வது பொதுவானதே. மத காரியங்களுக்கு செலவுகள் செய்வது தவறு என்று கூறினால் அது தனி மனித உரிமைக்குள் மூக்கை நுழைப்பதற்கு சமன்.
அது ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட உரிமை. அதில் அவருக்கு ஒரு ஆத்தம நிம்மதி கிடைக்கும் என்ற காரணத்தினாலேயே அது போன்ற செயல்கள் மேற்கொள்ளப்படுகிறது.
இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் சிறுக சிறுக சேர்த்த தன் அனைத்து சேமிப்புகளை கொண்டு தன் பெற்றோரை மெக்காவிற்கோ அல்லது ஜெருசலத்திற்கோ அல்லது காசி ராமேஸ்வரம் என்ற தீர்த்த யாத்திரைக்கோ அனுப்பி வைப்பதில் பிள்ளைகள் ஏன் ஆனந்தமடைய போகிறார்கள்?
எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே குறி வைத்து பேசி கொண்டிருக்கும் இந்த சமயத்தில் எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றிய மாதிரி, மீண்டும் ஒரு காரியம் செய்வது தவறு.
முன்னே என்றோ பேசிய பேச்சிற்கு இன்று சமூக வலைத்தளமும் அனைத்து மக்களும் சர்ச்சை கிளம்புவதாக கூறப்படுகிறது.
என்று பேசினாலும், பேசியது உண்மை தானே? அவரது அக்கறையும் எண்ணங்களும் சரியானதாக கூட இருந்திருக்கலாம். ஆனாலும், வார்த்தைகள் தேர்வினால் நிகழ்ந்த தவறாக கூட இது இருக்கலாம். மன்னிப்பு கோரியிருந்தால் முடிந்திருக்கும், அதை விடுத்து இது போன்ற பேச்சுகளினால் நன்மைகளை விட தீமைகளே அதிகம் நேரும்.
பல லட்சங்களை கொட்டி பெரும் கோடிஸ்வரரான நடிகை நடிகர்களுக்கு விருது வழங்கும் விழாவில், மக்களை கோவில்களுக்கு காணிக்கை இடுவதை விடுத்து பள்ளி குழந்தைகளுக்கு செலவு செய்ய அறிவுறுத்துவதை காணும் போது மிகவும் வேடிக்கையாக தான் இருக்கிறது.
அறிவுரைகள் எல்லாமே மற்றவர்களுக்கு தான் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து உள்ளது இந்த நிகழ்வு.
பெரும்பாலான கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. மக்கள் அளிக்கும் காணிக்கைகள் பெரும்பாலானவை அந்த கோவிலுக்கு கூட செலவு செய்யப்படுவதில்லை. பொது மக்களுக்கு – குறிப்பாக அனைத்து மத மக்களுக்கும் உதவும் வகையில் அரசு இந்த பணத்தை செலவு செய்கிறது.
இன்றைய காலத்தில் புதிதாக அரசு ஏதும் இது போன்ற கோயில்களை கட்டி இருக்கிறதா? இல்லையே!
மாறாக, மூலைக்கு மூலை புதிதாக தோன்றி கொண்டிருக்கும் மற்ற மத வழித்தளங்களுக்கு அதை நிறுவ இங்கே எவ்வளவு தொகை செலவு செய்யப்படுகிறது என்று தெரியுமா? அதை யாரும் தடுத்து வேறு நல்ல காரியங்களுக்கு செலவு செய்யுங்கள் என்று கூற முடியுமா?
ஆயிரமாண்டுகள் தாண்டி இன்றும் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் தஞ்சை கோவில் பற்றி இவ்வாறு பேசியிருப்பது சற்று வருத்தமே. அதை ஒரு வழிப்பாட்டு தளங்களாக மட்டும் காண்பதால் தான் இந்த பேச்சுக்கள் என்று நான் எண்ணுகிறேன்.
அது ஒரு கோயில் மட்டுமல்ல. தமிழர்களின் கலை பொக்கிஷம். தமிழர்களின் கட்டுமான துறைக்கும் கணித துறைக்கும் பொறியியல் வல்லுமைக்கும் எடுத்துக்காட்டு. அதை பேணி பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையும் ஆகும்.
இது போன்ற ஒரு கலை பொக்கிஷத்தை உருவாக்க இந்நாளில் வாழும் நம்மால் நிச்சயம் முடியாது. குறைந்த பட்சம் இந்த பொக்கிஷத்தை பாதுகாத்து நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு சொல்லவேண்டியது மிக அவசியம்.
படப்பிடிப்புகளுக்கு வேண்டி தயாரிப்பாளர்கள் கணக்கில் மட்டுமல்ல விடுமுறைகளுக்கும் உலகம் முழுவதும் சுற்றி கொண்டிருக்கும் நடிகை நடிகர்களுக்கு தெரியாததா?
மேலை நாடுகளில் ஒவ்வொரு அரசுகளும் தம் நாட்டிலுள்ள பழமை வாய்ந்த சின்னங்களுக்கு மக்கள் பணத்தில் இருந்து சீரமைப்புக்கு செலவு செய்கிறார்கள். ஆனால் இங்கே தான் தமிழர்களின் பெருமை சேர்க்கும் வரலாற்று சின்னங்கள் கூட கேட்பார்ரற்று கிடக்கிறது.
கோடி கோடியாக சம்பாதித்து பல ஆயிரங்கள் உதவுவதை விட உயர்ந்தது எது தெரியுமா? நாளைய உணவுக்கு வழி இல்லை எனினும், எங்கள் ஏழை எளிய மக்கள் மற்றவர்களுக்கு உதவிய வண்ணமே இருக்கிறார்கள். அதுவே சிறந்தது. இந்த சிந்தனை நம் மக்களுக்கு, பிறவியிலேயே இருந்து வருகிறது.
எது எப்படியோ, ஒரு சர்ச்சையை உருவாக்குவதும், அந்த சர்ச்சை கொண்டே ஆதாயம் தேடுவதும் சிலருக்கு புதிதல்ல. எனவே இதுவும் கடந்து போவோம்.
மதங்களை கடந்து மனிதம் காண்போம். உண்மை, ஆனால் சில மதங்கள் மட்டும் கடந்தா, அல்லது அனைத்து மதங்களையும் கடந்தா என்பது போக போக தான் தெரியும்.
நன்றி