
மகிழ்நாடு என்ற கற்பனை தேசத்தில் இன்று காலை 9 மணிக்கு வீடியோ செய்தி மூலம் மக்களிடம் உரையாற்றிய பிரதம மந்திரி மேடி, இனிமேல் இவரை சர்வாதிகாரி மேடி என்றே கூறலாம், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இரவு மின்சார விளக்குகளையெல்லாம் அணைத்து விட்டு மற்ற விளக்குகளை ஏற்றி வைத்து 9 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
இதில் ஏதோ சூட்சுமம் இருக்கின்றது என்பதை உணர்ந்த நமது சிறப்பு நிருபர் கழுதையார் உடனே விசாரணையில் இறங்கினார். விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்களை அவர் உடனுக்குடன் நம்மிடையே அலைபேசியில் பகிர்ந்து கொண்டார். அந்த அதிர்ச்சிகரமான சதிவேலையின் பின்னணியை உங்களுடன் இதோ பகிர்ந்து கொள்கிறோம்.
மகிழ்நாட்டில் கககவை ஒழித்துக் கட்டினால்தான் பாபாக வளர முடியும் என்று மேடியிடம் சுமித்ஷா கூறியிருக்கிறார். அதனை கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டுக் கொண்ட மேடி உடனே அருகில் இருந்த தனது செயலாளரை அறையை விட்டு வெளியே போகும்படி கூறிவிட்டு தனிமையில் சுமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினார்.
சுமார் 47 ½ நிமிடங்கள் நடந்த இந்த ஆலொசனையின்போது இவர்கள் இருவரைத் தவிர வேறு யாருமே இல்லை என்று கழுதையார் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
அப்போது சுமித்ஷா அவரிடம் நாமும் மகிழர்கள் பாணியைப் பின்பற்றினால்தான் கணிசமான ஓட்டுக்களை வாங்க முடியும் என்று கூறினாராம். அதனை மேடியும் ஆமோதித்தாராம்.
இதற்கு என்ன வழி என்று மேடி கேட்க சுமித்ஷா இந்த பயங்கர திட்டத்தை விவரித்திருக்கிறார். இந்தத் திட்டத்தைக் கேட்ட நமக்கு ரத்தம் உறைந்து விட்டது.
கழுதையார் தொடர்ந்தார் “இரவு 9 மணிக்கு மின்சார விளக்குகளையெல்லாம் அணைத்து விட்டு 9 நிமிடங்களுக்கு பிற விளக்குகளை ஏற்றி வைத்து பால்கனியில் நிற்க வேண்டும்” என்பதே சுமித்ஷாவின் திட்டம்.
முதலில் இது சாதாரண திட்டமாகத்தான் நமக்குத் தோன்றியது. இதிலென்ன சதி இருக்க முடியும் என்று கேட்டோம். உடனே கழுதையார் கோபத்துடன் நம்மைப் பார்த்து முறைத்தார்.
இப்படி ஒன்றும் அறியாத முட்டாள்களாக, சோற்றால் அடித்த பிண்டங்களாக இருப்பதால்தான் மகிழர்களை வடக்கத்தியர்கள் இன்னமும் அடிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று பொரிந்து தள்ளி விட்டார்.
அவரை சமாதானப்படுத்தி சதியை விவரிக்குமாறு கேட்டுக் கொண்டோம்.
கழுதையாரும் சமாதானமடைந்து ஒரு டம்ளர் ஐஸ் வாட்டரைக் குடித்து விட்டு தொடர்ந்தார்.
மகிழ்நாட்டில் இன்னும் ஒரு வருட காலத்தில் தேர்தல் வேலைகள் தொடங்கி விடும். கடந்த 9 வருடமாக மாநிலத்திலும் 6 வருடங்களாக மத்தியிலும் ககக ஆட்சியில் இல்லை. மக்களின் மறதிதான் பிரசித்தமானதாயிற்றே. அதனால் ககக ஆட்சி எப்படி இருந்தது, இனி எப்படி இருக்கும் என்பது பற்றிய நினைவு மக்களிடம் இருக்காது, அதனால் ககக ஆட்சியை மக்களுக்கு நினைவு படுத்தும் வண்ணம் மின் விளக்குகளை அணைத்து விட்டு பால்கனியில் 9 நிமிடங்கள் நின்று கொண்டிருந்தால் 2006-2011 காலகட்டத்தில் மகிழக மக்கள் மின்வெட்டால் அவதிப்பட்டது அவர்கள் நினைவுக்கு வரும். மின்விசிறி கூட இல்லாமல் பால்கனியிலும் மொட்டைமாடியிலும் கழித்த நாட்கள் நினைவுக்கு வர வேண்டுமென்பதற்காகவே மின்விளக்குகளை அணைத்து விட்டு வீட்டுக்குள்ளேயே இருக்க சொல்லாமல் அவர்களை பால்கனிக்கும் மொட்டை மாடிகளுக்கும் வரச்சொல்லியிருக்கிறார் என்றார் கழுதையார்.
சுமித்ஷாவின் பயங்கர சதித்திட்டம் இப்போதுதான் நமக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.
ஆனாலும் ஒரு சந்தேகம் எழுந்தது. கழுதையாரின் கோவம் தடுத்தாலும் துணிந்து கேட்டு விட்டோம். எதற்காக 9 நிமிடங்கள்?
கோவப்படாமல் கழுதையார் பொறுமையாக விளக்கினார். உஸ்ரேலைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் உஸ்ரவேலை கொஸ்ரயாகி. இவர் உஸ்ரேல் பிரதமர் பஞ்சமின் பதன்யாஹூவின் நெருங்கிய ஆலோசகர். பஞ்சமின் பதன்யாஹூ பிரதமர் மேடிக்கு மிக நெருக்கமானவர் என்பது எல்லோருக்கும் தெரியும். 8 நிமிடங்களுக்கு மேல் போனால்தான் பழைய ஞாபகங்கள் நினைவுக்கு வரும் என்று அவர் கண்டுபிடித்திருக்கிறார். ககக கடைசியாக ஆட்சியில் இருந்தது 2011ல். அதாவது இன்றைக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு. ஆகவே 9 நிமிடங்கள் போனால்தான் 9 வருடத்துக்கு முந்தைய நினைவுகள் மக்களுக்கு வருமாம். அதனால்தான் 9 நிமிட விளக்கணைப்பு என்று விளக்கினார் கழுதையார்.
விவரங்களைக் கேட்டதும் நமக்கே கதிகலங்கி விட்டது. உடனே இதனை சம்மந்தப்பட்டவர்களிடம் பகிர்ந்து கொண்டோம். இதனை முறியடிப்பது எப்படி என்று குஷால் உஷார் போண்டேயின் ஆலோசனைகளைக் கேட்கவிருப்பதாக மூளைக்கோவில் வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. லாக்டவுன் காலகட்டத்தில் வேலை செய்வதற்காக இதற்காக தனியாக 50 கோடிகள் கொடுக்க வேண்டுமென்று குஷால் உஷார் கேட்டதாகவும் அதனை மூளைக்கோவில் ஏற்றுக் கொண்டதாகவும் நம்பத்தகுந்த செய்திகள் கூறுகின்றன.
எப்படியாவது சுமித்ஷாவின் சதியை முறியடிப்பார் நம் தலைவர் லெனின் என்று தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
தகவலை சொல்லி முடித்ததும் பக்கத்தில் பிரியாணி இலை விழும் சத்தம் கேட்டதும் கழுதையார் போனைக் கட் செய்து விட்டு சிட்டாகப் பறந்து விட்டார்.
ஸ்ரீஅருண்குமார்
ennum appadie than ulleergal arivu jeevi. dinamalaril veliyana vrinipuram kadaiyai podavum