
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று துவங்கி கடவுள் பாதி மிருகம் பாதியாக மாறிய நமது இந்தியன் தாத்தா.
திரையில் நாம் கண்டு வியந்த ஒரு மனிதர் இன்று அரசியல் களத்தில் இறங்கி அரத பழைய வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளதை காணும் போது சற்றே வருத்தம் மேலோங்கிகிறது.
எப்படி இருந்த மனிதர் இன்று அரசியல் மைய்யத்தில் வந்து இப்படி ஆகிவிட்டாரே என்று நினைத்து பார்க்கும் போது, சோக சோகமா வருது.. ஆனா அந்த சோகம் கொரோனா சோகத்தோடு சேந்து நம்பள தான தாக்கும்னு நினைக்கும் போது, வந்த சோகம் கூட பறந்து போயிடுது.. அபிராமி.. அபிராமி..
இன்றைய சூழ்நிலையில் அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் அவரவர் பங்கிற்கு ஒரு கடிதம் வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்த மாண்பை பின்பற்றி இதோ எனது கடுதாசி, வேண்டாம் மடல், இல்லை கடிதம்.
குடிகாரரே… பரமகுடிகாரரே… (நன்றி இளையராஜா அவர்களே!),
நீங்கள் சமீபத்துல் எழுதிய திறந்த கடிதம் பற்றி பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் சுற்றி கொண்டிருக்கிறது. நீங்க பப்லிசிட்டிக்காக தான் இப்படி எழுதியதாக கூட சில செய்தி உலா வருகிறது. அது உண்மையா இல்லையா என்பது எனக்கு தெரியாது.
வணக்கத்துக்குரிய பிரதமர் அவர்களுக்கு @PMOIndia @narendramodi pic.twitter.com/LvgVUgUZYz
— Kamal Haasan (@ikamalhaasan) April 6, 2020
என்னை பொறுத்த வரை வெள்ளி திரையில் ஒளிவிட்டு கொண்டிருக்கும் உங்களுக்கு உலக நாயகன், ஆஸ்கார் நாயகன், காதல் மன்னன் என்று புபிளிசிட்டி எக்கச்சக்கமாகவே இருக்கிறது. அதனால் இந்த மாதிரி ஸ்டண்ட் அடிக்க உங்களுக்கு எந்த காரணமும் இல்லை என்றே நான் நம்புகிறேன்.
ஆனால், உங்கள் நானாகிய, நானும் இந்த கடிதம் எழுதுவது ஒரு பபிளிசிட்டிக்கு தான் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணம் தவறு என்று சுட்டிக்காட்ட எனக்கு வயதுமில்லை, அனுபவமும் இல்லை.
உலக நாயகனே, நான்கு மாதம் அவகாசம் இருந்த பொழுதும் நான்கு மணிநேரத்தில் ஊரடங்கை நிறுவியதற்கு கண்டனம் என்று தெரிவித்துள்ளீர்கள். கேட்பதற்கு வேண்டுமாயின் டைமிங்கும் ரைமிங்கும் நன்றாக இருக்கலாம், ஆனால், மீண்டும் ஒரு முறை உலக நிகழ்வுகளை வரிசையுடன் நினைவு கூர்ந்து நோக்கினால் நீங்கள் கூறியது எவ்வளவு தவறு என்று தங்களுக்கே தெரியும்.
இதை ஒரு பத்திரிகை நிபுணர் கேள்வியாக எழுப்பினால் உங்கள் மையத்திலிருந்து மேலும் ஒரு கடிதமும், எழுத்து பிழைக்கு மன்னிப்பும் ஒருசேர வெளிவருகிறது. இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், அந்த கடிதத்திலும் விடையில்லை. மறுக்கேள்விகளே உள்ளன.
கேள்வி கேட்பவர் தான் அறிவாளியா என்று கடிதத்தை துவங்கி வெறும் கேள்விகளாகவே அந்த கடிதத்தை முடித்து வைத்து நாங்களும் அந்த கேள்வி கேட்டவருக்கு இணையானவர் என்று நிரூபிப்பது தான் சாதனையா?
அது என்ன ஆண்டவரே பலவித மத பிரச்சாரம்? பெயர் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எப்படியோ, நல்லொழுக்கம் காரணமாக நீங்கள் கூறவில்லை என்று நம்புவோம். இதன் பொருட்டே இன்று இந்தியாவில் தொற்று பரவி கொண்டிருக்கிறது என்பது உண்மையே. ஆனால், அதற்கு ஒரு ஜனநாயக அரசாங்கத்தில் சட்ட திட்டங்களை வலியுறுத்த தான் முடியும். அதை பின்பற்ற வேண்டியது மக்களின் கடமை. தங்கள் கடமையிலிருந்து தவறுபவர்களை இந்தியன் தாத்தா போன்று “குத்த” இது ஒன்றும் வெள்ளி திரையில்லை.
எனவே நீங்கள் மீண்டும் ஒரு முறை இந்த மக்களுக்கு காகிதத்தில் மடல் எழுதி அவர்களை சட்டங்களை பின்தொடர ஒரு அரசியல் தலைவராய் உங்களால் ஆனவற்றை தயை கூர்ந்து செய்யுங்கள்.
மாநில அரசுக்கு பொறுப்புகளை அளிப்பதை தவறு போன்று சுட்டி காட்டி எழுதியுள்ளீர்கள். அனைத்து பொறுப்புகளையும் ஒருவரே மூட்டை கட்டி வைத்து கொள்ள இது என்ன சர்வாதிகார ஆட்சியா? அனைவரையும் ஒன்று சேர்த்து கூட்டி கொண்டு செல்பவன் தான் உண்மையான தலைவன். நிர்வாக பொறுப்புகளை அவரவர் நிலைக்கு ஏற்றார் போல், பகிர்ந்தளித்து அனைவரையும் ஒரு சேர வெற்றிப்பாதையில் இட்டு செல்லுபவரே சிறந்த தலைவரும் நிர்வாக திறமையும் பெற்றவராவார்.
இதை தானே நமது வள்ளுவரும் கூறியுள்ளார்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
பெரியாரையும் காந்தியையும் பின் தொடர்ந்த தாங்கள் திருவள்ளுவரை மறந்தது ஏனோ? அவர் அறிவானவர் என்பது உங்களுக்கு தெரியவில்லையோ?
மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் கட்சி துவங்கியுள்ளதாக கூறும் நீங்கள் எப்படி? அனைத்து கட்சி பணிகளையும் நீங்கள் ஒரு
பால்கனி பால்கனி என்று அபிராமி குணா போன்று திரும்ப திரும்ப அதையே மேற்கொள்காட்டி தாங்கள் கூற வருவது தான் என்ன?
விளக்கேற்றியதும் கை தட்டியதும் வெறும் மேல்த்தட்டு மக்கள் மட்டுமே போன்று ஒரு பிரம்மையில் இருப்பதை விடுத்து, சமூக வலைத்தளத்திலும் செய்திகளிலும் வெளிவந்த நிழல் படங்களையும் காணொளிகளையும் ஒரு முறை தங்கள் கண் கொண்டு உள்வாங்கி கொள்ளுங்கள்.
நீங்கள் குடிசையில் வாழ்வோரின் இதயத்தில் வாழ்வதாக உங்கள் “வாழ்வே மாயம்” கூறியது உண்மையென்றால், அந்த இதயத்திற்கு சொந்தக்காரர் அந்த இதயத்தில் யாரை வைத்து பூஜித்து கொண்டுள்ளார் என்று தெரியாதா? கூரை வீடென்றாலும், சாரமே கூரையென்றாலும் அதில் வாழ்ந்த அந்த நல்லுள்ளம் எவ்வளவு மகிழ்ச்சியோடு விளக்கேற்றி கொண்டாடியது என்று அந்த நல்லுள்ளத்தில் வாழ்வதாக கூறப்படும் (உண்மையெனின்) உங்களுக்கு புரியாதா?
லாக் டவுன் என்றால் என்ன வென்று புரிவதற்கு அவகாசம் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளிர்கள். இதன் மூலம் இந்தியமக்களின் அறிவுத்திறனை எள்ளி நகைக்கின்றீரோ என்று தோன்றுகிறது.
இருப்பினும் அறிவாளிகள் என்றால் பிரதமருக்கு பிடிக்காது என்று கூறுவதன் மூலம், பிரதமர் அலுவலகம் முழுவதும் அறிவாளிகள் இல்லை என்பது போன்று நீங்கள் இதே கடிதத்தில் கூறியிருப்பதை காணும்போது, IAS போன்று படித்து மேல்பதவியில் இருக்கும் எண்ணற்ற அரசியல் சேவகர்களையே அறிவற்றவர்கள் என்று நீங்கும் எண்ணும் பொழுது சாமானியர்களை அவ்வாறு எண்ணுவது பிழையில்லை என்றே தோன்றுவதால் தங்கள் மீது பரிதாபம் தான் தோன்றுகிறது.
இந்திய நாட்டில் சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நாட்டிற்கு பெரும் சவாலாக விளங்கும் கொரோனாவிற்கு எதிராக தோள் குடுத்து கொண்டிருக்கும் பொழுது நீங்கள் இப்படி ஒரு கடிதம் எழுதியது கண்டு வருத்தமே.
அனுதினமும் சின்னங்சிறிய குழந்தைகள் கூட தங்கள் உண்டியல் சேமிப்பு கொண்டு தங்களால் ஆன உதவியை இந்த நாட்டிற்கு அளித்து பெருமை சேர்த்து கொண்டிருக்கும் பொழுது, கோடியில் புரளும் தாங்கள் இது போன்று சிறுபிள்ளை தனமாக கடிதம் எழுதுவது சிறந்ததாகாது என்பது எனது தாழ்மையான கருத்து.
மன்னிக்கவும், தனி மனிதனாக உங்கள் அயரா உழைப்பால் நீங்கள் சம்பாதித்த பொருள் உங்கள் உரிமை. அதை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதும் உங்கள் உரிமை. எனவே, நீங்கள் எவ்வளவு தானமளித்திர்கள், எத்தனை பெயருக்கு உதவியுள்ளீர்கள் என்று நான் கேட்கவும் முடியாது, கேட்கவும் மாட்டேன்.
இருப்பினும், பொது மக்களுக்காக நீங்கள் உருவாக்கிய உங்கள் கட்சி மூலமாக, இந்த மக்களுக்கு ஒரு நல்ல வழியை காட்ட முற்படுவீர்கள் என்று நம்புகிறேன். மக்களில் ஒருவனாக அதை வேண்டுகோளாகவும் வைக்கின்றேன்.
மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் என்று வெளிப்படையாவே சொன்னிங்க, பாராட்டுக்கள். ஆனால், இந்த மாதிரி சமயத்தில் ஏன் அந்த மிருகத்தை வெளியில் சுத்த விடுறீங்க? கைல இருக்குற டார்ச்ச வச்சி நடுமண்டைல நச்சுனு ஒன்னு போட்டு அடக்கி வையுங்க (பிக்) பாஸ்.
என்னை போன்ற சாமானியன் வரையும் மடல் உங்கள் வீட்டு கதவு வரை சென்று சேருமா என்று தெரியாது. ஒருவேளை, அது நிகழ்ந்து “அப்படியென்றால் எனது கடிதத்தில் சரக்கே இல்லையா” என்று நீங்கள் கேட்கும் தருணத்தில் எனது பதில் இதுவே.
சரக்கில்லை என்று கூறமாட்டேன், இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தான் கூறுகிறேன்.
நன்றி,