
எப்படித்தான் கணக்கு போடறாங்களோ தெரியலப்பா, ஒவ்வொரு படமும் வந்தவுடனே முதல் நாள் இத்தனை கோடி வசூல், ஒரு வாரத்தில் இத்தனை கோடி வசூல்னு அடிச்சு விடறாங்க. இப்போ இந்த மாதிரி வசூலை ஏத்திக் காண்பிப்பதற்காகவே காசு வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள், உண்மையில் அவ்வளவு வசூல் இல்லவே இல்லை என்ற குற்றச்சாட்டும் பெரிய அளவில் எழுந்திருக்கிறது. ஒரு படம் 5 நாட்களில் 200 கோடி வசூல் செய்ததாக ஒரு தகவல் வருதுன்னு வெச்சுக்குவோம். அதாவது ஒரு நாளைக்கு 40 கோடி. சுமார் 650 அரங்குகளில் வெளியான ஒரு படம் ஒரு நாளைக்கு 40 கோடி என்றால் சராசரியாக ஒரு அரங்கில் ஒரு நாளைக்கு ரூ.6,15,385 வசூலாகியிருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 4 காட்சிகள் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு காட்சிக்கு சுமாராக 1,30,000. சென்னை தவிர்த்து பிற இடங்களில் டிக்கெட் விலை குறைவு. எனினும் சராசரியாக 150 ரூ என்று வைத்தால் ஒரு காட்சிக்கு 866 பேர் வந்திருக்க வேண்டும். எத்தனை அரங்குகளில் இத்தனை இருக்கைகள் உள்ளன? அதிலும் எத்தனை காட்சிகள் அரங்கு நிரம்பின?
பின் எதற்காக இத்தனை கோடி வசூல் என்ற பில்டப்? கதை நன்றாக இருக்கிறது, நடிப்பு நன்றாக இருக்கிறது என்று விளம்பரப்படுத்துவது அரிதாகிவிட்டது. வசூல் குவிக்கிறது என்று சொன்னால் உடனே ரசிகர்கள் கூட்டமாகக் குவிவார்கள் என்ற எண்ணமே இப்போது மேலோங்கியிருக்கிறது. இதுதான் தமிழ் சினிமாவைப் படுகுழியில் தள்ளிக் கொண்டிருக்கிறது.
கதையையும் நடிப்பையும் நம்பிப் படமெடுப்பது என்பது காணாமலே போய்விட்டது. நடிகரின் ஸ்டார் வேல்யூவை மட்டுமே நம்பி அவரது ரசிகர்களை மட்டுமே நம்பிப் படமெடுப்பதுதான் இப்போது ட்ரெண்ட். விலக்காக சில நடிகர்கள் வித்தியாசமான கதையம்சங்களைக் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சில நல்ல படங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நல்ல படங்கள் வசூலில் வெற்றி பெறுவதில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் – ஸ்டார்கள் நடித்த படங்களும் உண்மையில் பெரிய வசூலைக் குவிப்பதில்லை. அடுத்தது இது போன்ற நல்ல படங்களுக்கு பெரிய அளவில் விளம்பர பட்ஜெட் இல்லை, ஊடகங்களும் இவைகளைப் பெரிய அளவில் ஆதரிப்பதில்லை. ஓடாத படத்தையெல்லாம் நடிகர்களின் பேட்டி, ஃபர்ஸ்ட் லூக், டீஸர் என்று விளம்பரத்துக்கு செலவு செய்து ஓட்டலாமா என்று பார்க்கும்போது விளம்பர பட்ஜெட் குறைவான படங்கள் வசூலைக் குவிக்கத் தவறுவது இயற்கைதான்.
இதில் இன்னொரு ஆச்சரியமான அதே சமயத்தில் வருத்தமான ஒரு விஷயம் – போட்ட காசுக்கு நஷ்டம் வராமல் எல்லோருக்கும் லாபத்தைக் கொடுத்த ஒரு படம் – இருட்டு அறையில் முரட்டு குத்தாம். இந்தப் படத்தைக் பார்க்கும்போது சென்சார் தூங்கிக் கொண்டிருந்தார்களா என்று தோன்றும். குடும்பத்துடன் பார்க்க முடியாத அளவுக்கு அருவருப்பான வசனங்கள். எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?
கடைசியாக 100 நாள் ஓடிய படம் எது நினைவிருக்கிறதா? 1990கள் வரைக்கும் பல படங்கள் நூறாவது நாள் கொண்டாடியிருக்கின்றன. இப்போது வெற்றிகரமான பத்தாவது நாள் என்று போஸ்டர் அடிக்க வேண்டிய நிலை. 25 வாரம் என்பதெல்லாம் கனவுதான். வெளியான ஒரு மாதத்திலேயே அமேஸான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் என்று வெளியிடப்படும் நிலை.
இண்டர்நெட்டில் வெளியிடப்படுவதால் வசூல் குறைகிறது என்ற ஆட்டமெல்லாம் வேண்டாம். இந்தப் பிரச்சினை மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பிற மொழிப் படங்களைப் பெரிதாக பாதிக்கவில்லையே ஏன்? அங்கெல்லாம் ஜியோ இல்லையா அல்லது இண்டர்நெட்டே இல்லையா? ஆக தவறு வேறு எங்கோ இருக்கிறது.
இப்போ இங்கே வருவோம். இன்று வரைக்கும் தமிழ்நாட்டின் வசூல் சக்ரவர்த்தி என்றால் அது எம் கே தியாகராஜ பாகவதர்தான். அவரது ஹரிதாஸ் படம் 1944ல் வெளியாகியது. சென்னையில் பிராட்வே டாக்கீஸில் 1000 நாட்கள், ஆமாங்க ஆயிரம் நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. இன்று வரைக்கும் அதனை முறியடிக்க எந்த ஒரு மாஸ் ஹீரோவாலும் முடியவில்லை என்பதுதான் உண்மை. உடனே பொங்காதீங்க அந்தக் காலத்துல அதிகமான திரையரங்கங்கள் இல்லை, வேறு பொழுதுபோக்கு இல்லையென்று. அந்த காலத்தில் அதிகமான மக்கள் தொகையும் என்பதையும் அந்த அளவுக்கு பொருளாதார முன்னேற்றம் இல்லையென்பதும் கூட உண்மை.
அது மட்டுமல்ல, இதே எம் கே டி நடித்த சில படங்கள் படு தோல்வி அடைந்திருக்கின்றன. குறிப்பாக சிறையிலிருந்து மீண்ட பிறகு அவர் நடித்த 5 படங்களும் மிகப் பெரிய தோல்வியைக் கண்டன. அதிலிருந்து பாகவதரால் மீளவே முடியவில்லை.
இன்றைக்கும் தமிழ்த் திரையுலக வரலாற்றில் பாகவதரைத் தவிர்த்து எழுத முடியாது. ஆனால் அவர் நடித்தது மொத்தமே 14 படங்கள்தான். சிக்கன்65 போல பாகவதர்65 என்றெல்லாம் வாய்ப்பே இல்லை. ஆனாலும் அவர் தொட்ட சிகரங்கள் யாரும் தொடவில்லை, தொடப்போவதுமில்லை. அந்த காலத்திலேயே ஒரு படத்துக்கு 2 லட்சம் வாங்கியவர் பாகவதர். இன்றைக்கு அதன் மதிப்பு கோடிகளைத் தாண்டி நிற்கும்.
செய்யாத குற்றத்திற்காக தண்டனை பெற்று பின்பு அப்பீலில் சிறையிலிருந்து மீண்ட பிறகு திரையுலகை விட்டு வெளியேறுவதாக முடிவு செய்தார். ஆனாலும் சில காரணங்களால் 5 படங்களில் நடித்தார். அனைத்தும் தோல்வி. அவரது வறுமை நிலையைப் பார்த்து திரையுலக நண்பர்கள் பலர் உதவியளிக்க வந்த போதும் எதனையும் ஏற்றுக் கொள்ளாமல் அனைத்தையும் தர்ம காரியங்களுக்காகவே திருப்பிக் கொடுத்த தன்மானச் சிங்கம் பாகவதர்.
1940களிலே பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்போதே பாகவதர் வந்திருக்கிறார் என்று தெரிந்தால் வீட்டுக் காரியங்களை அப்படியே போட்டு விட்டு பெண்கள் ஓடி வருவார்களாம் அவரைப் பார்க்க. ஒருமுறை அவர் படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்து பெண்கள் கூட்டம் படையெடுக்க போலீஸ் வரவழைக்கப்பட்டதாம் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி திருப்பியனுப்ப.
அவர் இருக்கும் இடமே அவரால் பிரகாசமாக இருக்கும் என்று பாகவதரைப் புகழ்ந்தது நம் மக்கள் திலகம் எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள். அத்தகைய பிரகாசமான மேனியைக் கொண்டிருந்த பாகவதர் தன் கடைசிக் காலத்தில் கண் பார்வை குன்றி வறுமையில் வாடி நவம்பர் 1, 1959ல் மறைந்தார். அவர் மறைந்து இன்றோடு 60 வருடங்கள் ஆகிறது. ஆனாலும் அவர் புகழ் என்றும் மறையாது. அவர் தொட்ட சிகரங்களின் அடியையாவது இன்றுள்ளவர்கள் அடைய முயல்வார்களா?
ஸ்ரீஅருண்குமார்