
தமிழ்நாட்டில் தொழில் நகரங்கள் அமைந்த பகுதி மேற்கு மாவட்டங்கள். தமிழ்நாட்டு அரசின் பெரும் வருவாயை ஈட்டித் தருவதும் இந்தப் பகுதியே. பின்னலாடை, நூற்பு ஆலைகள், விசைத்தறிகள் என்று நெசவுத்தொழிலில் உச்சமும் முட்டைகளையும் கூமுட்டைகளையும் உருவாக்கும் அதிக கட்டணம் வாங்கும் பள்ளிகளும், இந்தியாவின் மொத்த லாரிகளில் 25% வைத்திருக்கும் சிற்றூரையும், “திருப்பூர் வந்தவன் வெறுங்கையோட திரும்ப மாட்டான்”என்ற சொலவடையும் பல சிறப்புகளை கொண்ட மேற்கு மண்டல மக்களின் பல கோரிக்கைகளை வரிசையாக வந்த அரசுகள் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டையொட்டி இந்த பதிவு.
₹10,000 கோடி செலவில் சென்னை முதல் சேலம் வரை புதிய 8 வழிச்சாலை அமைக்க அறிவித்த நிலையில் அதற்கான போராட்டங்களும்(?) வழக்கம் போல இந்த திட்டத்தை எதிர்த்து செய்திக் கட்டுரைகளும் வந்த வண்ணம் உள்ளன. இது வழக்கம் போல மேற்கு மண்டல வளர்ச்சியை தடுக்க சிலர் தடையாக இருப்பதாக சிலர் கூறுகிறார்கள்.
மேற்கு மாவட்டங்களை ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை எப்பொழுதும் இந்த பகுதியில் கேட்கலாம் . சில வருடங்களுக்கு முன்னர் தனி மாநிலம் கேட்டு சில அமைப்புகளும் சில லெட்டர்பேட் அரசியல் கட்சிகளும் கூட முளைத்தன. ‘வஞ்சிக்கப்படும் மேற்கு மாவட்டங்கள்‘ என ஓய்வுபெற்ற அரசு அதிகாரி புத்தகமே எழுதும் அளவுக்கு விஷயம் பெரியது.
எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் இந்த பகுதி சட்ட மன்ற உறுப்பினர்களின் பங்கு அதிகமிருந்தாலும் பெரும்பாலும் அவர்கள் அரசியல் கட்சிகளுக்கே செயல்படுவதாகவும் அந்த பகுதி மக்களுக்கு புதிய திட்டங்களை கொண்டு வருவதில்லையென்றும் அதிகார மையத்தை சென்னையில் சுருக்கி வைத்திருப்பதாகவும், இந்த பகுதியிலிருந்து இதுநாள் வரையில் ஒரு முதல்வர் கூட தமிழ்நாட்டை ஆளவில்லை. இங்கே தயாரிக்கப்படும் மின்சாரம் இந்த பகுதிகளுக்கு வழங்கப்படாமல் வேறு பகுதிகளுக்கு வழங்கி தமிழ்நாட்டு அரசு வஞ்சிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொழில்
மேற்கு மாவட்டங்கள் தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பகுதி என அனைவரும் அறிந்ததே. கோவை பகுதி தமிழக அரசுக்கு ஈட்டித் தரும் வரி வருமானம் சுமார் ~43% இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சாயப்பட்டறைகள் அதிகம், அதனால் அங்கு நிலத்தடி நீர் மாசடைவதை தடுக்க ஒருங்கிணைந்த சாயப்பட்டறைகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்தனர். அரசு இதுவரை அந்த நிலையத்தை அமைக்காததால் ஆற்றிலும் வாய்க்காலிலும் சாயக்கழிவு கலந்து நீர்நிலைகள் மாசடைந்து நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் அனைத்து சாயப்பட்டறைகளும் மூடப்பட்டன. திருப்பூர் பின்னலாடை தொழிலின் ஒரு வருட மொத்த வர்த்தகம் சுமார் 2 பில்லியன் டாலர்களாக இருந்தது. அன்னிய செலாவணியை ஈட்டித் தருவதால் மத்தியில் இருக்கும் அரசாங்கம் பெரும்பாலும் உதவி செய்தது.
விவசாயம்
கொங்கு நாடு பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாதலால் நீர மேலாண்மை திட்டங்கள் அரசு செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். காவிரி ஆறு பாயும் இடங்களும், காளிங்கராயன் வாய்க்காலும், தென்மேற்கு பருவக்காற்று வீசும் பொள்ளாச்சியும், LBP (Lower Bhavani Project) வாய்க்கால் பாயும் பகுதிகளும், PAP (Parambikkulam-Aliyaaru Project) வாய்க்கால் பாயும் பகுதிகள் மட்டுமே மொத்த மேற்கு மண்டலத்தின் பசுமையான பகுதிகள்.
மேற்சொன்ன நீர்த்திட்டங்கள் யாவும் தலைவர் காமராஜர் காலத்தில் கட்டியவை. காவிரி நீரிலிருந்து காளிங்கராயன் வாய்க்காலைத் தவிர மேற்கு மண்ட மக்களுக்கு ஒரு பயனும் இல்லை. மக்கள் பிழைக்க வழியில்லாததால் தொழில்களை கையிலெடுத்தார்கள். ஏற்கனவே கோவை பகுதி களி மண்ணால் நிறைந்திருந்ததால் பருத்தி விவசாயம் செழித்து(மானாவாரியில் விளைவது) பஞ்சு மில்கள் படையெடுப்பினால் தென்னகத்தின் மான்செஸ்டர் என அழைக்கப்படட்டது. இந்த பகுதியின் நீர்த்தேவையை பெரும்பாலும் பூர்த்தி செய்தது குளம் குட்டை கிணறுகள். காமராஜர் காலத்திற்கு பின் அமைந்த அரசுகள் நீர் மேலான்மையை பற்றி கவலைப்படாமல் கண்துடைப்பிற்காக ஒன்றிரண்டு திட்டங்காளை அறிவித்தனர்.
கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மக்களின் இன்னொரு கோரிக்கை அத்திக்கடவு-அவிநாசி திட்டம்; இந்த திட்டத்தினால் மேற்க்கூறிய மூன்று மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் விவசாயம் செழிக்கும். கேரள மாநிலத்திலிருந்து பவானியாறு தமிழ்நாட்டிற்குள் நுழையும் இடம் தான் அத்திக்கடவு. அங்கிருக்கும் உபரி நீரை வாய்க்கால் அமைத்து வறட்சி மிக்க காரமடை, மேட்டுப்பாளையம், அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், நம்பியூர், புளியம்பட்டி, குன்னத்தூர், பெருந்துறை, காங்கேயம் மற்றும் ஊத்துக்குளி பகுதிகளில் உள்ள முப்பத்தி ஒன்று ஏரிகள், நாற்பது ஊராட்சி ஒன்றியக் குளங்கள் மற்றும் ஏனைய 538 நீர் நிலைகளில் நிரப்புவதன் மூலம், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாகும். சுமார் 60 ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில்!
இங்கிருக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி இருப்பதனால் 24 மணி நேர மின்சாரமும், மும்முனை மின்சாரமும், புதிய இணைப்பு வாங்குவதில் உள்ள சிக்கல்களையும் களைய வேண்டுமென்பது விவசாய பெருமக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
உள்கட்டமைப்பு
தொழில் பகுதியாதலால் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக அமைய வேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக எந்த பெரிய புதிய திட்டங்களும் இங்கே வரவில்லை.
மருத்துவமனை: மாவட்ட மருத்துவமனைகள், பெருந்துறை மருத்துவக்கல்லூரி தவிர பெரிய மருத்துவமனைகளும் சிறப்பு மருத்துவமனைகள் இல்லை. பெருந்துறை மருத்துவக்கல்லூரியின் வளாகத்தில் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை அமையும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்; அதுவும் மதுரைக்கு சென்றது. அரசு மருத்துவமனைகள் இல்லாததால் தனியார் மருத்துவமனைகளின் சுரண்டல் இந்த பகுதியில் அதிகம்.
சாலை: வாஜ்பாய் காலத்தில் அமைக்கப்பட்ட தங்கநாற்கரச்சாலை சேலம்-எர்ணாகுளம் 4 வழிச்சாலை தவிர பெரிய சாலைகள் ஒன்றும் இந்த பகுதியில் இல்லை. கோவை திருப்பூர் சாலைகள் கடும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுகிறது.
சென்னை-சேலம் 8 வழிச்சாலை அமைக்கப்படுவதற்கு முக்கிய காரணம் இதுவரை சென்னையிலிருந்து மேற்கு மாவட்டங்களுக்கும், கேரளாவின் வடக்கு பகுதிகளுக்கும் செல்ல நேரடியான சாலைகள் இல்லை. ஒன்று GST (Grand Southern Trunk) சாலையில் திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, ஆத்துர் வழியாக அல்லது வேலூர் கிருஷ்ணகிரி தருமபுரி வழியாக சேலம் வழியாக மற்ற மேற்கு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும். வேலூர் வழியாக செல்வோர் திருப்பத்தூர் அரூர் வழியாகவும் செல்லலாம் ஆனால் சில இடங்களில் சாலை மோசமாக இருப்பதால் தவிர்ப்பர்.
இரண்டு மூன்று வழிகள் இருப்பினும் GST சாலையில் உளுந்தூர்பேட்டை வழியாக சேலம் செல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் மேற்கு மாவட்ட மக்கள். இதிலும் ஒரு சிக்கல்! உளுந்தூர்ப்பேட்டை வரை மத்திய மற்றும் தெற்கு மாவட்ட மக்களும் பயணிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இன்று வாகனங்கள் செல்லுமளவிலேயே போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியவில்லை என்றால் இன்னும் பத்து வருடங்கள் கழித்து என்னாகும் என சிந்திக்க வேண்டியிருக்கிறது. இந்த பசுமை வழிச்சாலை அமைந்தால் GST சாலையில் போக்குவரத்து குறையும். அதே போல சென்னை மாநகரிலிருந்து வெளியே வரும் வாகனங்கள் வெளி வட்டச் சாலை (outer ring road) வரியாக வண்டலூரில் இந்த எட்டு வழிச்சலையைத் தொடும். இதனால் சரக்குப் போக்குவரத்து மற்றும் பெரிய வாகனங்கள் சென்னை நகரங்களுக்கு ஊடாக சென்று போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தாமல் துரைமுகம் செல்லலாம். இந்த சாலை வருங்காலத்திற்குமான இன்றைய முன்னேற்பாடு.
ரயில்கள்: இந்தியாவின் கிழக்குப் பகுதிலிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ரயில்களை பயன்படுத்துகிறார்கள். வெளியிலிருந்து கேரளா செல்லும் பெரும்பாலான ரயில்கள் மேற்கு மாவட்டங்கள் வழியாகச் செல்வதால் கோவை ஈரோடு திருப்பூருக்கு தனி ரயில்கள் கோரிக்கையும் கிடப்பில்.
மின்சாரம்: 24 மணி நேர மும்முனை மின்சாரம் இந்த பகுதியின் தேவை. 2009-2013 வரை கடுமையான மின்வெட்டுகளை சந்தித்ததால் சிறுதொழில்கள் பாதிப்பிற்குள்ளானது. 2012 வரை பல பகுதிகளில் விவசாயத்திற்கு இருமுனை மின்சாரமே வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் முழுதும் காற்றாடிகளை தனியார் நிறுவனங்கள் தனது தேவைக்கு அமைத்த பிறகு அரசாங்கம் வாங்கி மும்முனை மின்சாரம் வழங்கியது.
அகழ்வாராய்ச்சிக் கூடம்: நொய்யலாற்றின் வடபகுதியில் அமைந்த இந்த பெருங்கற்கால களம் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கொங்கு நாடு சேரர்கள் தலைமையிலிருந்த பொழுது முக்கிய வர்த்தக-தொழில் நகரமாக திகழ்ந்திருக்கிறது. பல ஆண்டுகாளாக அகழ்வாராய்ச்சிகள் நடந்த பொழுதும் இங்கே கண்டெடுக்கப்படும் பொருட்கள் தஞ்சாவூருக்கு எடுத்து செல்லப்பட்டன. இப்போது மத்திய தொல்லியல் ஆய்வகம் (ASI) நடத்திய அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவைகளும் பெங்களூரு தென் மண்டல தலைமையகத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.
மேலும் ஆனைமலை, போலுவம்பட்டி, பேரூர், விஜயமங்கலம் ஆகிய முக்கிய தொல்லியல் களங்களுக்கு கோவையிலோ அல்லது கொடுமணலிலோ ஒரு கண்காட்சிக் கூடம் அமைக்க வேண்டும் என்பதும் கோரிக்கை.
மேற்கு மண்டலத்திலிருந்து ஒருவர் இப்போது முதல்வராக இருப்பினும் திட்டங்கள் எதுவும் வந்தபாடில்லை. மேலும் மத்திய அரசின் சில திட்டங்களாலேயே மேற்கு மண்டலம் வளர்ச்சியை எட்டியிருக்கிறது. மேலும் தமிழக அரசு மேற்கு மண்டலத்துக்கென திட்டங்களை அறிவிக்க வேண்டுமென அந்த பகுதி மக்களின் உள்ளக்கிடக்கு.