
மறுபடியும் ஒரு கிராமத்துக்கதை. அந்தக் கிராமத்துல பல தெருக்கள் இருக்கு. அதுல ஒரு தெருவுலதேன் நம்ம குடும்பம் இருக்கு. கொஞ்சம் பெரிய குடும்பம்தேன். கிராமத்துலயே ரொம்பப் பழைய குடும்பம் வேறன்னா பாத்துக்கிடுங்களேன். அந்தக் குடும்பத்துல மொத்தம் 31 பிள்ளைங்க. இப்போ அது 32 ஆகிப்போச்சு.
ஒவ்வொரு பிள்ளைகளும் தங்களோட குடும்பத்தோட அந்தத் தெரு முழுக்க குடுத்தனம் நடத்திட்டு வராங்க. அதுல பாருங்க அது ஒரு பெரிய கூட்டுக் குடும்பம். மூத்தவருதான் எப்பவும் வரவு செலவெல்லாம் பாக்கறது. அவரு தன்னோட மூத்த மவன் சென்னப்ப ராயன் வீட்டுலதான் இருப்பாரு. அதனாலயோ என்னவோ தெரியல எப்பவுமே மூத்த மவனுக்குத்தான் சலுகை அதிகம். எதாச்சும் சந்தைலே புதுசா வந்திருக்கா? அது மூத்த பையனுக்குத்தேன்.
சென்னப்ப ராயன் உபயோகிச்சு பழசாகிப் போச்சின்னாத்தான் அது மத்த பசங்களுக்கு. வீட்டுக்கு வெள்ளையடிக்கணுமா? சென்னப்பன் வீட்டுக்குப் போகத்தான் மத்த வீடுகளுக்கு சுண்ணாம்பு. பண்டிகையா? சென்னப்பனுக்கு போகத்தான் மத்தவங்களுக்கு பலகாரம். வீட்டுல கரண்டு இழுத்தாக்கா, சென்னப்பன் வீட்டுக்குப் போவத்தான் மத்தவங்களுக்குன்னா பாத்துக்கிடுங்களேன்.
என்னாச்சுன்னா ஒரு பத்து வருசத்துக்கு முன்னால கரண்டுக்கு ரொம்ப கெடுபிடி ஆயிடுச்சு. மொறை வெச்சுதான் விட்டாங்க. அப்பவும் பாருங்க மத்த புள்ளைங்களெல்லாம் வீட்டுல வெளக்கெரிக்க முடியல. ராவுல கொசு கடிக்காம இருக்காம ஒரு விசிறி கூடப் போட முடியல. ஆனா மொத்த கரண்டும் சென்னப்பன் வீட்டுக்கு குளு குளு மெசினுக்குப் போயிடுச்சு. ஏன்னா அங்கேதான் மூத்தவரும் மத்த பெரிசுங்களும் இருக்காங்களாம், அவிங்க குளு குளு இல்லாம இருக்க முடியாதாம்.
இத்தனைக்கும் பாருங்க மத்த புள்ளைங்கதான் விவசாயம் பாத்து சோறு போடுது. சென்னப்பன் மட்டும் ஏதோ கம்பெனிலே வேலை பாக்கறானாம், சம்பாத்தியம் அதிகமாம், இப்படியும் சொல்லுதாங்க மூத்தவரு. என்னதான் சம்பாதிச்சாலும் வருஷத்துக்கு நெல்லு விளையாமப் போச்சுன்னா எப்படி சோறு திங்கறது? யாராவது யோசிச்சாங்களா? பம்பு செட்டுக்கு இல்லாட்டாலும் பரவாயில்லை, சென்னப்பன் வூட்டுல சீரியல் செட்டுக்கு கரண்டு வேணுமாம், என்ன அக்குறும்பு பாருங்க
இதுல கோவையன்னு ஒரு புள்ள. ரொம்ப புத்திசாலியான புள்ளை. விவசாயத்தையும் பாத்துக்கிடுதான். பட்டறையும் நடத்தறான், ஜவுளி வேலையும் பாக்கறான், சொல்லப்போனா சென்னப்பன விடவும் நெறையவே சம்பாதிக்கறான், ஆனாலும் மூத்தவரு என்னா செய்யறாரு தெரியுமா? அவன் சம்பளத்தையும் புடுங்கி சென்னப்பனுக்குதான் செலவு செய்யறாரு.
ஒரு நாளு கோவையன் கேட்டான் “அய்யா எங்க சம்பாத்தியத்தையும் புடுங்கி சென்னப்பனுக்கே செலவு செஞ்ச எப்புடி? மருத, அண்ணாமலை, நெல்லையான்னு ஏகப்பட்ட தம்பிங்க கஷ்டப்படறாங்களே, அவிங்களுக்கு எதாச்சும் செய்யலாமில்லே?”. மூத்தவரு செரி செரின்னு தலையாட்டினாரே தவிர காரியத்துல ஒண்ணுமில்ல.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாங்க கோவையன் வீட்டுல இருக்க புள்ளைங்க. ஒருநாள் அவிங்களுக்கும் எல்லை மீறிப் போய் நாங்க இனிமே தனிக்குடித்தனம் போறோம், எங்கூட வர்ற தம்பிமாருங்க வாங்க. இனிமேலும் சென்னப்பனுக்கு அடங்கி இருக்க முடியாதுன்னு சிலித்துக்கிட்டு கெளம்பினாங்க. மூத்தவரு அலண்டு போயிட்டாரு. போதாக்குறைக்கு நாங்க நாதமுனி தாத்தாகிட்டே போறோம்னு சவுண்டு குடுத்தாங்க. நாதமுனி தாத்தாக்கு கோவையன் மேலே பிரியம் அதிகம்.
ஒரு காலத்துல தாத்தாவை எல்லாரும் தள்ளி வெச்சிருந்தப்போ இந்தக் குடும்பத்துல தாத்தாவுக்கு சப்போர்ட் பண்ணது கோவையன் வீடு மட்டும்தான். அதனால மூத்தவரு கொஞ்சம் எறங்கி வந்து “தம்பி உனக்கில்லாததா? இப்போ கூட பாரு கரண்டுல ஓடற பஸ்ஸு 500வந்திருக்கு. அதுல 100 உனக்குத்தான். எடுத்துக்கோன்னாரு”.
அய்யோ பாவம் கோவையன். மனசு மாறி சரி போங்கப்பு, இனிமேலாச்சும் கொஞ்சம் எல்லா புள்ளைங்களையும் சரிசமமா நடத்துங்கோன்னு திரும்பி வந்துட்டான்.
இனிமேலாவது மூத்தவரு திருந்தி நடப்பாரா? கொஞ்சம் சமாதானமான கோவையன் அமைதியா இருப்பானா இல்லே மறுபடியும் பொங்கி எழுவானா? நாதமுனி தாத்தா என்ன செய்வார்? அமுது மாமா கோவையன் வீட்டுக்கு வருவாரா? கோவையன் மறுபடியும் தாத்தாவையும் மாமாவையும் வீட்டுக்கு அழச்சி மரியாதை செய்வானா? பொறுத்திருந்து பாக்கலாம்.
ஸ்ரீஅருண்குமார்
தனி கொங்குநாடு மாநிலம் அமைப்பதே இதற்கு தீர்வு.