
சமீபத்தில் குலசைப் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என ISRO அறிவித்து இருந்தது. சென்ற நவம்பர் 28, 2019 அன்று அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சர் திரு ஜித்தேந்திர சிங் இதனை ராஜ்யசபாவில் அறிவித்து இருந்தார்.
சமீபத்தில் ISRO இது பற்றி அறிக்கை வெளியிட்டவுடன் அதனை மீடியாக்கள் அறிவித்து, தனது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் செய்தியைப் பகிர்ந்து இருந்தது. அதன் பின்னூட்டங்களில் எப்போதும் போல சில பொங்கல்களைப் பார்க்க நேர்ந்தது…
> விவசாய நிலங்கள் பாழ்படும்!
> எத்தனையோ பேர் இங்கு உணவின்றித் தவிக்க, ராக்கெட்கள் அவசியமா?
> இன்னமும் கைகளால் மலம் அள்ளும் மனிதர்கள் இருக்கும் நாட்டிற்கு ராக்கெட் ஒரு கேடா?
> அழிவுத் திட்டங்கள் (?!) ஏன் தமிழகத்தில் மட்டுமே நிறுவப்படுகின்றன?
> குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு ஆபத்து!
> ராக்கெட் வெடித்தால் மக்கள் என்ன ஆவார்கள்?
> இதுவும் மோடியின் தமிழகத்தை பாழ் படுத்தும் திட்டங்களில் ஒன்று!
இன்னமும் என்னவெல்லாம் பைத்தியக்காரத் தனமாக யோசிக்க முடியுமோ, அவ்வளவையும் யோசித்து எழுதுகிறார்கள் முன் தோன்றிய மூத்த குடிகளின் வாரிசுகள்!
இரு விஷயங்கள் இன்னமும் நான் பார்க்கவில்லை:
– யார்-யாரின் அப்பத்தாக்கள் இதில் பாதிக்கப்படப் போகிறார்கள் என இதுவரை யாரும் எழுதவில்லை…
– எந்தெந்த மொட்டைப் பனை மரத்தின் உச்சியில் கூடு கட்டி வாழும் பச்சைக் கிளிகள் பாதிக்கப்படும் என்று சொல்லும் பட்டியலும் வரவில்லை.
இவை இரண்டும் ஓரிரு நாளில் வரலாம் என எதிர்பார்க்கிறேன்.
நிற்க.
குலசேகரன்பட்டினம் பற்றி பார்க்கும் முன், ராக்கெட் ஏவ எவ்வகை வசதிகள் வேண்டும் என முதலில் பார்ப்போம்.
1. ராக்கெட் ஏவுதளம் கிழக்குக் கடற்கரையை ஒட்டி இருக்க வேண்டும்
2. பூமத்திய ரேகைக்கு எவ்வளவுக்கு-எவ்வளவு அருகில் இருக்கிறதோ அவ்வளவுக்கு-அவ்வளவு செலவு குறையும்
பூமி மேற்கில் இருந்து கிழக்காக சுற்றும் போது, ஒரு ராக்கெட் கிழக்குக் கடற்கரையில் இருந்து கிழக்குப் பக்கமாக ஏவப்படும் போது, அந்த ராக்கெட்டிற்கு கூடுதல் உந்துதல் கிடைக்கிறது. இந்தக் கூடுதல் உந்துதல் எரிபொருள் செலவில்லாமல் நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது.
அப்படியானால், கிழக்குப் பக்கமாக ஏவ வேண்டும் அவ்வளவுதானே, அது ஏன் கடற்கரை ஓரம் எனும் கேள்வி எழும். ராக்கெட் ஏவப்படும் போது, அது மேலே செல்லச்-செல்ல, தன் முதல்-நிலை, இரண்டாம்-நிலை என எரிபொருள் கொண்ட நிலைக் கலன்களை கழற்றிவிடும், அது கடலில் விழும். மேலும், ராக்கெட் ஏவப்படும் போது ஏதாவது தவறு நேர்ந்தால் அது கீழே விழும் அல்லது, வெடித்து சிதறும் அல்லது நாமே அதனை சிதறடிப்போம். அவ்வாறு அசம்பாவிதம் நிகழும் போது அது நிலப்பகுதியில் விழுந்தால் அங்கு வாழும் மக்களுக்கு ஆபத்து என்பதால் நிலம் இல்லாத பகுதிகள் (கடல்) மீது பறக்குமாறு ராக்கெட் நிரல் (program) செய்யப்படும். ராக்கெட் ஏவப்படும் நேரத்தில் அதன் பாதையில் கடற்பகுதியில் கப்பற் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து ஆகியவை குறிப்பிட்ட நேர அளவிற்கு தற்காலிகமாக நிறுத்தப்படும்.
பூமத்திய ரேகைக்கு அருகில் ஏன் எனும் கேள்விக்கு பதில் – பூமிப் பந்து தன்னைதானே சுற்றும் என்று நமக்குத் தெரியும், ஆனால் அதன் வேகம் பூமத்திய ரேகைப் பகுதியில் அதிகமாகவும் துருவப் பகுதிக்கு செல்ல-செல்ல குறையும் என்று தெரியுமா?
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் எடுக்துக் கொள்வது நமக்குத் தெரியும். பூமத்திய ரேகையின் நீளம் 40075 km, அட்ச ரேகையின் நீளம் 36770 km. ஆக, பூமத்திய ரேகை ஒரு சுற்று சுற்றுவதற்கும், அட்ச ரேகை ஒரு சுற்று சுற்றுவதற்கும் ஒரே நேரம். பூமத்திய ரேகையில் பூமி சுற்றும் வேகம் 40075 ÷ 24 = 1669.8 kmph. அட்ச ரேகையில் பூமி சுற்றும் வேகம் 36770 ÷ 24 = 1532.1 kmph. பூமியின் வேகம் பூமத்திய ரேகையில் அட்ச ரேகையை விட சுமார் 170 kmph அதிகம், இது ராக்கெட்டிற்கு கொடுக்கும் இலவச உந்து சக்தியை ஏன் விடுவானேன்? எரிபொருளை அதிகமாக ஏன் செலவழிப்பானேன்? அதனால் தான் பூமத்திய ரேகைக்கு அருகில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அனைத்து நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன.

மேலும், துருவ செயற்கைக்கோள் ஏவுதலுக்கும், புவிநிலை (geostationary) செயற்கைக்கோள் ஏவுதலுக்கும் உள்ள வித்தியாசத்தை படத்தில் காணலாம். துருவ செயற்கைக்கோள் வடக்கில் இருந்து தெற்காக ஏவப்படும். புவிநிலை செயற்கைக்கோள் தென்கிழக்காக ஏவப்படும். ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து புவிநிலை செயற்கைக்கோள் ஏவுதல் எளிது, துருவ செயற்கைக்கோள் நேராக தெற்கு நோக்கி செலுத்தப்பட்டால், அது இலங்கையின் வான் பரப்பின் மீது பறக்க நேரும். ஆகையால், இன்றுவரை கூடுதலாக எரிபொருள் செலவழிக்கப்பட்டு ராக்கெட் சற்றே திருப்பப்பட்டு தான் ஏவப்படுகிறது. குலசையில் இருந்து ஏவினால் நேராக தெற்கு நோக்கி ராக்கெட்டை செலுத்தலாம், எந்த நாட்டின் மீதும் பறக்க வேண்டிய அவசியம் இல்லை, எரிபொருளுக்கு ஆகும் செலவைக் குறைத்து, அந்த எரிபொருளுக்கு இணையான எடையை ராக்கெட்டில் payload (ஏவப்படும் செயற்கைக்கோள்) உடன் சேர்த்து அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை ஏவலாம். இது செலவைக் குறைப்பதால், சர்வதேச கோள் வர்தகத்தில் இந்தியா மேலும் முன்னணியில் இருக்க வாய்ப்புகள் அதிகரிக்கும்.
குலசை ஏன்?
1. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசை, சற்றே கடலுடன் notch உள்ள பகுதி! அங்கு சுமார் 3000 ஏக்கர்கள் நில ஆர்ஜிதம் செய்யும் அளவிற்கு மக்கள் வாழ்விடங்கள் மிகக் குறைந்ததாக இருக்கிறது.
2. மேற்சொன்ன மற்ற நாட்டு வான்பரப்பினை தவிர்க்கலாம், செலவைக் குறைக்கலாம், அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை செலுத்த முடியும், வர்த்தகம் அதிகரிக்கும்.
3. ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரன்பட்டினத்தில் வானிலை சீராக இருக்கும்.
4. ராக்கெட் உபகரண சோதனைகள், திரவ எரிபொருள் சோதனைகள் ஆகியவை குலசையில் இருந்து 70 km தூரத்தில் உள்ள மகேந்திரகிரி – திரவ உந்துவிசை அமைப்பு மையத்தில் (Liquid Propulsion Systems Centre) நடக்கிறது. அங்கிருந்து குலசைக்கு போக்குவரத்து எளிது. (ஸ்ரீஹரிகோட்டா அங்கிருந்து 770 km).
(( இலங்கையின் தெற்கு / தென்-கிழக்குக் கடற்கரை மிகவும் உசிதமான இடம். அங்கு சீனா ஒரு ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கவிருக்கிறது என global times பத்திரிக்கை முன்பு செய்தி வெளியிட்டு இருந்தது, அதன் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்தியா இலங்கையுடன் பேசி, குலசையுடன் மற்றொரு ராக்கெட் ஏவுதளம் அங்கு அமைக்க முயற்சிக்கலாம் )).
அறிவியல் மற்றும் யதார்த்த விஷயங்கள் போகட்டும். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், ராக்கெட் ஏவுதளதிற்கு சுமார் 2300 ஏக்கர்கள் நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் தொடங்கும் என அறிவித்து இருக்கிறார்.
தென் தமிழகத்தில் இப்போது எந்த வகை முதலீடுகளும் வருவதில்லை என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தான், காரணம் அங்கு காரணமின்றி செய்யப்படும் போராட்டங்கள். இந்த ராக்கெட் ஏவுதளதிற்கும் ஏதாவது போராட்டம் அது-இது என ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம். குறுகிய கால அரசியல் ஆதாயம் தேடும் அரசியல் கட்சிகளும், அதன் அடிவருடிகளும் அர்த்தமில்லாத விஷயங்களையும், பொய்களையும் பரப்பி, மக்களைக் குழப்பி குளிர் காய்கின்றன. மக்கள் சிந்திக்காமல் அவர்கள் பின்னும் செல்லத் தயாராகவே இருக்கிறார்கள்.
சமீபத்திய CAA போராட்டம், அதற்கு அரசியல் கட்சிகள் சில சொல்லும் வியாக்யானங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. எல்லாவற்றிற்கும் மேலாக கேரளத்தில் சட்டசபையில் அர்த்தமே இல்லாமல் ஒரு தீர்மானம் நிறைவேறும் அளவிற்கு மக்கள் பிரதிநிதிகள் முட்டாள்களாக இருக்கிறார்கள் அல்லது வேண்டுமென்றே மக்களை திசைதிருப்பி, நாட்டை சீரழிக்க முனைக்கிறார்கள்.

நாமும் சளைத்தவர்கள் அல்ல… இன்னமும் கைகளால் மலம் அள்ளும் மனிதர்கள் இருக்கும் நாட்டிற்கு ராக்கெட் ஒரு கேடா எனக் கேட்பவர்கள், இவ்வளவு நாட்கள் பதவியில் இருந்த/இருக்கும் அரசியல்வாதிகளை, ‘இந்த அவல நிலை ஏன்?’ எனக் கேள்வி கேட்க மாட்டார்கள். எப்படிக் கேட்பார்கள்? பணம் பெற்றுக் கொண்டு வாக்குகளை விற்கும் கேவலத்தை எல்லோரும் செய்து கொண்டு வளர்ச்சியையும், நேர்மையையும் எதிர்பார்த்தால் எப்படி?
குலசை ராக்கெட் ஏவுதளம் என்னவாகும்?
காலம் பதில் சொல்லும், பார்ப்போம்!