
” ஜாதிகள் இல்லையடி பாப்பா” இந்த வாக்கு மகான் பாரதியாரின் அமுத மொழிகளில் இருந்து வந்தது. இந்திய நாடு கலாச்சார வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், அது ஒன்றுபட்ட கூட்டுச்சமுதாயமாக எப்போதும் வளர்ந்து வந்துள்ளதாக வரலாறு பேசியுள்ளது. இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பல்வேறு தடைகள் இருந்தாலும் அவையெல்லாம் தாண்டியும் இந்தியா வளர்ந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாக ஜாதி என்ற மோசமான விஷயம் காணப்படுகிறது.
ஜாதிப்பாகுபாடு குறித்து பல்வேறு வரலாற்று ஆய்வுகள் பல்வேறு முடிவுகளை முன் வைக்கின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் இக்கட்டுரை ஆராயப் புகவில்லை. சமுதாயத்தில் சாதிப் பாகுபாட்டை எவ்வாறு ஒழிப்பது என்பதற்கான வழிமுறைகளை இக்கட்டுரை பேச விழைகிறது.
ஜாதி பாகுபாடு காரணமாக முதலில் வெளிப்படுவது தனிமனிதன் அகங்காரமே ஆகும். தான் இந்த ஜாதியில் பிறந்ததால் உயர்வானவன் அல்லது தாழ்வானவன் என்ற ஒரு கருத்தை வெளிப்படுத்தும் விதமாகவே ஜாதிப் பாகுபாடு ஒருவனின் மனதில் எழுகிறது. பிறரை ஒப்பிடுகையில் தான் உயர்வானவன்/ வலிமையானவன்/சிறந்தவன் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணமே ஒருவனுக்கு முதலில் ஜாதிப்பாகுபாட்டின் ஆரம்பப்புள்ளியாக எழுகிறது.
தான் உயர்வானவன் என்று சொல்லும்போதே பிறர் தாழ்ந்தவன் என்று சொல்லும் கருத்தும் இயல்பாகவே வந்து விடுகிறது . இதன் காரணமாக பிறரை இகழ்தல், பிறரை வஞ்சித்தல், பிறரைத் தூற்றுதல் போன்ற செயல்களும் நடைபெற ஆரம்பிக்கிறது. மேலும் இவ்வகையான ஜாதிப்பாகுபாடு உயர்ஜாதி மற்றும் தாழ்ந்த ஜாதி என்ற வித்தியாசம் இல்லாமல் அனைத்து ஜாதியிலும், வன்மம் கொண்டவர்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படுகிறது. அதாவது தான் உயர்ந்தவன்/தாழ்ந்தவன் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு தவறான சிந்தனைகளில் செல்வதும், பிறரை இகழ்வதும் ஜாதிப்பாகுபாட்டின் வெளிப்பாடே ஆகும். ஒருவன் மனதில் தோன்றும் குரூர எண்ணங்களும் வெளிப்படுத்துவதற்கு மனமானது ஏதேனும் வழி தேடும் போது, ஜாதிப்பாகுபாடாக, பெண்கள்மீது வன்மமாக, சமூகத்தின்மீது வெறுப்பாக, சுற்றத்தாரின் மீது காரணமே இல்லாத கோபமாக, உலகத்தின் மீது அனாவசியமான வெறுப்பாக வெளிப்படுகிறது.
ஜாதித்துவேசம் என்பது தனிப்பட்ட ஒரு நபரின் ஆழ்மனதில் உள்ள கோபத்தை வெளிப்படுத்த ஒரு சாக்குப்போக்கு காரணமே. தன் உள்ளத்தில் எழும் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளத் தெரியாமல்
ஜாதி வன்மம், பெண்கள் மீது வன்மம் என்று தங்களது கோபத்தை நியாயப்படுத்திக் கொள்கின்றனர். உண்மையில் அடிப்படை அளவில் அவர்கள் மாறாவிட்டால் அவர்களது சிந்தனையும் மாறாது. ஜாதிப்பாகுபாடு என்பது மன நோயாக, ஆழ்மனதின் கோபங்களுக்கு வடிகால் தேடும் ஒரு வாய்ப்பாக இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். ஜாதிப் பாகுபாடு என்பது மதம், இனம், மொழி, தேசம் ஆகியவற்றைக் கடந்து தனிமனிதனின் மனநோய் காரணமாக ஏற்படும் ஓர் நிகழ்வு என்று புரிந்துகொள்ளலாம்.
இந்திய நாட்டில் ஜாதிப்பாகுபாடு என்றால், மேலைநாட்டில் இதே மனநோய் இனப்பாகுபாடாக வளர்ந்து நிற்கிறது. எவ்வகையான பாகுபாடு ஆனாலும் அங்கு ஆக்கப்பூர்வமாக எந்த சிந்தனையும், எந்த செயலும் நடைபெறவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
இந்த சிக்கலுக்கு தீர்வு தான் என்ன ? இவற்றை சரி செய்ய என்ன செய்யலாம்? எவ்வகையான பாகுபாடு ஆனாலும், அவற்றை எவ்வளவுதான் மாற்ற முயற்சிகள் வெளியிலிருந்து செய்தாலும் தனிநபரின் மனம் அதை ஏற்றுக் கொள்ளாவிடில் இப்பாகுபாடுகளுக்குத் தீர்வு கிடைக்காது.
முறையாக மனதைப் பக்குவப்படுத்தக் கூடிய யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் இவ்வகையான சிக்கலுக்கு நிரந்தர தீர்வைக் கொடுக்கும். எவ்வாறெனில் இப்பயிற்சிகள் மனதைக் கோபத்தில் இருந்து விடுவிக்கும். மனதிற்கு நிதானமும், தெளிவும் கிடைக்கும். மனம் அன்பின் ஊற்றாக மாறிவிடும்.
நாம் வாழும் இந்த பூமி போன்ற இயற்கையான நிறைவான ஒரு அமைப்பு வேறு எங்கும் அமையவில்லை. இந்த பிரபஞ்சம் மிகப் பெரியது. இவற்றில் நாம் வாழும் காலத்தை சிறுசிறு ஜாதிப் பாகுபாடுகள் மற்றும் சண்டைகளுக்குள் சிக்கி பிணக்குகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமா என்ன? இதுபோன்ற பாகுபாடுகளை தடுத்து, அமைதியாக இருக்க வலியுறுத்தும் விதமாகத் தான் யோகக்கலையின் பெருமைகளை உலகுக்கு நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் வலியுறுத்தி வருகிறார். தனி மனிதன் தமக்குள் இருக்கும் அன்பை உணர்ந்து கொண்டால் எங்குமே சண்டையிட மாட்டான். தன்னை சுற்றியுள்ள இயற்கையை நேசிக்க ஆரம்பித்து விடுவான். இதன் மூலம் அனைத்துப் பாகுபாடுகளும் ஒழிந்துவிடும் என்பதே அவரது உயர்ந்த நோக்கம். உண்மையான ஜாதி ஒழிப்பு இதுவே. எனவே அனைவரும் யோகப்பயிற்சிகளின் மூலம் தத்தமது மனதில் உள்ள அழுக்குகளை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
உலகின் மாமுனிவர் வள்ளுவப் பெருந்தகையே தவம் என்னும் அதிகாரத்தில் இதுபற்றி எழுதியுள்ளார்
குறள் 264:
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.
விளக்கம்:
தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்