
தமிழ்நாட்டில் வாழும் மக்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள் அல்ல என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது (அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு என்று சொன்னால் இன்னும் நம்புகிற மாதிரி இருக்கும்). எப்படீன்னு கேக்கறீங்களா? நீங்கள் யாரென்று கேட்டால் கிடைக்கும் பதில் தமிலர், தமிளர், டமிலர் என்பதாகத்தான் இருக்கிறது. அப்போ தமிழர்கள் யார்? தமிழ் எங்கே போனது? தமிலும் தமிளும் டமிலும் எப்படி உள்ளே வந்தது?
இன்றைய இளைய தலைமுறை ழகரத்தை அறவே ஒழித்துக் கட்டிவிட்டது. திரைப்படங்களில் ஹிந்தி நடிகைகள் கூட டப்பிங் குரலில் அழகாக ழகரத்தை உச்சரிக்கும்போது தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்த இளையதலைமுறை ழகரத்தை உச்சரிக்கத் தவறியது ஏன்?
தமிழ் வாழ்க தமிழ் வெல்க என்று பலகைகளும் பதாகைகளும் வைத்து விட்டால் தமிழ் வளர்ந்து விடும் என்று நம்மை நம்ப வைத்திருக்கிறார்கள். மலையாளச் செல்வன், தெலுங்கு செல்வி, கன்னடன் பிரசாந்த் என்றெல்லாம் பெயர்களை நீங்கள் பார்க்க முடியாது, ஆனாலும் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் இத்தனை சீர்கேடடையவில்லை. மொழியின் மீது உயிரையே வைத்திருப்பதாகச் சொல்லும் நாம், மொழிக்காக உயிரையும் கொடுப்போம் என்று சொல்லும் நாம் இன்றைக்குத் தமிழ் மொழியை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறோம்.
தமிழுக்காகப் போராடுகிறோம் என்று முழங்குபவர்களின் பிள்ளைகளுக்கு வடமொழிப் பெயர்கள் – ஆனால் தொண்டர்களுக்கு மட்டும் தூய தமிழ்ப் பெயர்கள். ஹிந்தியை எதிர்ப்போம் ஆனால் தலைவர்களது குடும்பத்தினர் மட்டும் ஹிந்தி கற்போம், அவர்கள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்திக்கு இடம் கொடுத்துத் தமிழை விரட்டியடிப்போம். தமிழுக்காகப் போராடும் தலைவர்கள் போராளிகளின் பிள்ளைகள் பலர் தமிழ் படிப்பதே இல்லை என்பது கொஞ்சம் கூட நமக்கு அதிர்ச்சி தரவில்லை – நாம் இதனையெல்லாம் சாதாரண விஷயமாக ஏற்றுக் கொண்டோம் என்பதையே காட்டுகிறது.
பாராளுமன்றத்தில் தமிழ் வாழ்க என்று கோஷமிடுவதால் தமிழ் வளராது, புறநானுறு படிப்பதாலும் தமிழ் வளராது என்பதுதான் உண்மை. Long live English, Body for the soil, Soul for English என்றெல்லாம் தெருமுனையில் முழங்கியதால் ஆங்கிலம் வளரவில்லை. ஒவ்வொரு ஊரிலும் ஆங்கிலம் கற்றுக் கொடுக்க நிறுவனங்களும் தனிநபர்களும் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழ் கற்றுக் கொடுக்க ஒரு அமைப்பாவது இருக்கிறதா? ஆங்கிலம் படி என்று யாரும் சொல்லவில்லை, ஆனாலும் காசு கொடுத்து ஆங்கிலம் படிக்க விழைகின்றனர் கோடிக்கணக்கானோர். தமிழை அப்படி யாராவது கற்கிறார்களா? விதிவிலக்காக ஓரிரு வெளிநாட்டவர் இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கும் இந்தத் தமிழ் ஆர்வலர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஹிந்தி மொழி கற்றால் தமிழ் அழிந்து விடும் — தமிழை இந்த அளவுக்கு யாரும் கேவலப்படுத்த முடியாது. ஒரு காலத்தில் சமஸ்கிருத வார்த்தைகளை கலந்து பேசுவதை மணிப்பிரவாள நடை என்று கூறி தூயதமிழ் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் திரு.வி.க. ஆனால் ஏராளமான சமஸ்கிருதச் சொற்களைத் தன்னகத்தே கொண்டுள்ள மலையளமும் கன்னடமும் இன்னமும் சீரழியாமல் இருக்கின்றன. இன்றைக்கு ஆங்கில வார்த்தைகள் கலக்காமல் தமிழ் பேசுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆங்கிலம் என்பதை ஒரு மொழி என்று கருதாமல் அதனை அறிவின் உச்சம் என்று கொண்டாடும் அவலம் இங்கே மட்டும்தான் இருக்கிறது. என் மகன் பாராளுமன்றத்துக்குப் போனால் அருமையாக ஆங்கிலத்தில் பேசுவான், இவரால் முடியுமா? என்று தமிழ் என் மூச்சு என்று முன்னூறு தடவை சொல்லிக்கொள்ளும் தலைவர் கூறியதை மறக்க முடியுமா? என் மகன் அழகுத் தமிழில் பேசுவான் என்று ஏன் கூற முடியவில்லை? தமிழுக்கு அழகும் கம்பீரமும் இல்லையா? அல்லது தமிழ் பேச வராதா?
தமிழில் பிழையில்லாமல் எழுத முடியுமா இந்த போராளிகளால்?
ஆயிரமாயிரமாண்டு பழமை வாய்ந்தது தமிழ் மொழி என்று பெருமை பேசுவார்கள். தமிழில் பிழையில்லாமல் ஒரு பக்கம் எதைப்பற்றியாவது எழுத முடியுமா இந்தத் தமிழ்ப் போராளிகளால்? அவ்வையார் கூட நமக்கு ஞாபகம் இருப்பதற்குக் காரணம் ஓரிரு திரைப்படங்களில் அவ்வையாரை நமக்குக் காட்டியதுதான். இல்லையென்றால் அவ்வையாரையும் நமக்குத் தெரிந்திருக்காது.
சமீபத்தில் வெளியான ஒரு விளம்பரம் —
“உனக்குத் தெரியுமா? இன்னும் ஏலு ரன் எடுக்கணும்”.
இந்தத் தமிழ்க்கொலையை எதிர்த்து ஏன் யாரும் குரலெழுப்பவில்லை? ஏனென்றால் நாங்களே ஏலு என்றுதான் சொல்லுவோம்.
சிறிது காலத்துக்கு முன்பு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தமிழ் மொழியை இனிமேல் ஆங்கில எழுத்துக்களில் எழுதலாம் என்றார், உடனே பொங்கிவிட்டனர் தமிழ்ப்போராளிகள். இன்றைக்கு சமூகவலைதளங்களில் தங்கிலீஷ் என்று ஒன்று உருவாகி விட்டது. அதாவது தமிழை ஆங்கில எழுத்துக்களில் தட்டச்சுவது. இதற்கு இரண்டு காரணங்கள் — ஒன்று இவர்களுக்குத் தமிழ் எழுதவோ படிக்கவொ தெரியாது, இரண்டாவது ஆங்கிலத்தில் தட்டுவது சுலபமாக இருக்கிறது.
சமீபத்தில் வெளியான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழைப் பிழையின்றிப் பேசுவது வெளிமாநிலத்தவர்கள் என்பதும் அவர்கள்தான் தமிழ் எழுதப்படிக்கக் கற்றுள்ளனர் என்பதும் தமிழர்கள் என்று கூறிக்கொள்ளும் நாம் தமிழை ஒதுக்கியிருக்கிறோம் என்பதும் புலனானது. மொழி என்பது என் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு சாதனம், ஆகவே அதற்கு எனக்கு ஆங்கிலம் போதும் என்று ஒரு சிலர், எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும் என்னால் தமிழ் பேச முடியும், அது போதும் என்று ஒரு சிலர், எனக்கு சௌகர்யமாக இருக்கிறது, லாபகரமானதாக இருக்கிறது என்று ஒரு சிலர். தமிழ் எழுத்து மொழி என்பது குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தமிழில் இலக்கிய வளர்ச்சி என்பது நின்று போகும் விரைவில். அப்புறம் தமிழில் எழுதினால் படிப்பவர்களும் குறையும் என்பதால் தமிழில் எழுதுவதும் மறைந்து போகும்.
மொழி என்பது செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு சாதனம் மட்டும் கிடையாது. மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அது ஒரு முக்கியமான நிகழ்வு. உலகின் எல்லா மொழிகளிலும் தாயைக் குறிக்கும் சொல்லில் மகரம் இருக்கும், அம்மா, மதர், மாத்ரே, மாதாஜி, மம்மி, அம்மே – ஏதாவது உலக மொழியியல் மாநாடு கூட்டி எடுத்த முடிவா இது? இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு எல்லாமே மொழி சார்ந்தது. மொழி அழிந்து போனால் தமிழ்க்கலாச்சாரம் என்று எதைக் கூற முடியும்? இப்போது மட்டும் என்ன வாழ்கிறது என்கிறீர்களா?
அதுவும் சரிதான், ஹிந்தியை எதிர்ப்போம், ஹிந்தி மொழி மூலம் எங்களது கலாச்சாரத்தை அழிப்பதை எதிர்ப்போம் என்று கோஷம் ஒரு புறம் — நமது பாரம்பரியமான புடவை தாவணி இவற்றை ஒழித்து விட்டு ஹிந்தி பேசும் மக்களின் உடையான சல்வார் கமீஸை மனமுவந்து ஏற்றுக் கொள்வோம். நமது பாரம்பரிய உணவு வகைகளான கேழ்வரகு கம்பு இவற்றைத் தள்ளிவிட்டு, அரிசியையும் ஒழித்து விட்டு ஹிந்தி பேசும் பகுதிகளின் உணவான சப்பாத்தி, பூரி, பரோட்டா, பானிபூரி இவற்றை சந்தோஷமாக ருசிப்போம். இப்போது மராத்திய உணவான பாவ் பாஜியும் சென்னையில் பல இடங்களில் கோலோச்சத் துவங்கி விட்டது, பாவம் இட்லி தட்டுக்கடைகளில் ஏழைகள் மட்டுமே உண்ணும் உண்ணும் நாள் வெகுதொலைவில் இல்லை.
ஹிந்தி படிப்பதால் தமிழ் அழிந்து விடுமா?
உண்மை என்னவென்றால் ஹிந்தி கற்றால் தமிழ் வாழும். ஆச்சரியமாக இருக்கிறதா? ஹிந்திக்குப் பதிலாக ஆங்கிலம் என்று இங்கே கூறப்படுகிறது. ஆனால் ஆங்கிலம் என்பது இங்கே மொழி இல்லை, அது அறிவு. ஆங்கிலத்தில் பேசினால் உங்களைப் பெரிய அறிவாளி என்று நினைத்துக் கொள்வார்கள். ஆங்கிலம் கலந்து பேசுவது என்பது இங்கே மரியாதை தரக்கூடிய விஷயமாகப் பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவிலும் இங்கிலாத்திலும் பிச்சைக்காரன் கூட ஆங்கிலம்தான் பேசுவான். ஆனால் ஹிந்தி என்பது அப்படியல்ல, அது ஒரு மொழி மட்டுமே நமக்கு. ஆகவே ஹிந்தி கற்றால் தமிழுடன் ஹிந்தி கலந்து பேசுவது என்பது அதிகமாக இருக்காது. ஹிந்தி கற்றவரை அண்ணாந்து பார்க்கும் அவலமும் இருக்காது. இதற்காகவாவது ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆங்கிலம் என்பது உலக மொழி — சரி இன்றைக்கு சிறு தொழில் செய்வோரும் வாணிபம் செய்வோரும் எல்லாருமே உலக வர்த்தகத்தில் ஈடுபடுவதில்லை, ஆனால் சிவகாசியில் தொழில் செய்வோர் அனைவரும் இந்தியா முழுக்க வாணிபம் செய்கின்றனர், அதனால் அவர்களுக்கு ஹிந்தி மொழியறிவு அவசியம்.
இங்கே தமிழ் ஆதரவு என்பது அரசியல் ஆதாயங்களுக்கு மட்டுமே. அதேதான் ஹிந்தி எதிர்ப்பு என்ற வெற்று கோஷமும் போலி ஆர்பாட்டங்களும். ஹிந்தியை எதிர்ப்பவர்கள் தங்களது குடும்பங்களிலிருந்தும் பள்ளிகளிலிருந்தும் நிறுவனங்களிலிருந்தும் ஹிந்தியை முதலில் ஒழித்துக்கட்டுவார்களா?
ஜாதி, மதம், நாடு போல மொழி என்பதும் பிறப்பால் வருவதேயாகும். தமிழ்க்குடும்பத்தில் பிறந்த குழந்தையை பிறந்தவுடனே ஒரு மலையாளிக் குடும்பத்துக்குத் தத்து கொடுத்து விட்டால் அது மலையாளியாகத்தான் வளரும். என்னைப் பெற்றோர் தமிழர் என்பதால் அக்குழந்தை தானாகவே தமிழ் பேசுமா? அல்லது தமிழண்டா என்று குரலெழுப்புமா?
இன்றைக்கு மொழியின் தேவை என்பது பலனின் அடிப்படையில்தான். வரிச்சலுகை கொடுத்தால்தான் திரைப்படங்களுக்குத் தமிழிலே பெயர் வைக்கும் அளவுக்கு மாறிவிட்டோம். தமிழ் வளர வேண்டுமென்றால் முதலில் தமிழன் வளர வேண்டும். தமிழன் வளர்ந்தால், தமிழ்நாடு வளர்ந்தால் தமிழ் கற்றுக்கொண்டால் பலன் என்று நிறுவினால் பிற மாநில மக்கள் தமிழ் கற்றுக் கொள்வார்கள். தமிழ்நாட்டை வளரவிடாமல், எந்த ஒரு முன்னேற்றத்துக்கான திட்டங்களையும் வர விடாமல், சாலை வசதிகளை விரிவாக்க விடாமல், தொழிற்சாலைகளை அமைக்க விடாமல், ஏற்கெனவே இருந்த தொழிற்சாலைகளை இழுத்து மூடிவிட்டு இங்கே எல்லாவற்றையும் எதிர்த்து தவறான பாதையில் செலுத்துவதற்கு ஏராளமான பணம் செலவழிக்கப்படுகிறது. தமிழ் தழைக்க வேண்டுமென்றால் முதலில் ஆங்கிலத்தின் மீதுள்ள அடிமைத்தனம் ஒழிய வேண்டும். அது விலகாதவரை தமில் தேய்ந்து கொண்டேதான் போகும்.
சுடுகொட்டை