இந்த உலகத்துல எல்லா ஜீவராசிகளுக்கும் இயற்கையாகவே நீச்சல் வரும்.  தண்ணியையே பாக்காத ஒரு தெரு நாய் கூட திடீர்னு தண்ணியிலே தூக்கிப் போட்ட நீந்தி வந்துடும். ஆனா இந்த மனுசப்பயலுவ மட்டுந்தேன் துட்டு குடுத்து நீச்சல் கத்துக்கறான்.  ஆனா வித்தியாசமான விஷயம் ஒண்ணு சொல்லட்டா? ஒரு 30-40 வருஷம் முன்னாடி வரைக்கும் சைக்கிள் கத்துக்கும் படலம் ரொம்ப விமரிசையா நடக்கும். ஆனா இப்போ? யாருமே சைக்கிள் கத்துக்கறா மாதிரித் தெரியலையே! எப்படி?

 

சின்னப் புள்ளையா இருக்கும்போதே ரெண்டு பக்கமும் சின்னதா கூடுதல் சக்கரங்கள் வெச்ச சைக்கிளை ஓட்டறாங்க.  அப்படியே ஓட்டி ஓட்டி அந்த சக்கரம் கொஞ்சம் கொஞ்சமா பிஞ்சிப் போயி ஒரு நாள் வெறும் கம்பி மட்டுமே நீட்டிட்டிருக்கும். எதேச்சையா இதை கவனிச்ச புள்ளை உடனே அப்பாகிட்டே சொல்லி கம்பியைக் கழட்டிப் போடச் சொல்லும். அவ்ளோதாங்க, இனிமே எந்த சைக்கிள் வேணும்னாலும் ஓட்டலாம். ஆனாக்கா,  தினமும் தவறாமல் ரெண்டு சக்கரமும் சரியா இருக்குதான்னு பாத்துகிட்டே ஓட்டினா இந்த ஜென்மத்துல சைக்கிள் கத்துக்கவே முடியாது, சரியா?

 

இப்போ விஷயத்துக்கு வருவோம்.  என் தாய்மொழி மீது கைவைத்தால்… கருகும்முனு இருட்டான எடத்துல நின்னுகிட்டு ஒரு விக்ஸ் மாத்திரைக்கு வக்கில்லாதவன் மாதிரி வேணும்னே தொண்டையை ஒரு மாதிரி வெச்சிக்கிட்டு எதையாவது உளறிக்கொட்டிட்டிருந்தா ஒலக்க நாயகன் ஆக முடியுமா?  சரிங்க, எவ்வளவு நாளைக்குத்தான் இவங்களை கலாய்ச்சிக்கிட்டே இருக்கறது? ஒரு தடவையாவது இவங்களுக்கு ஆதரவா இருக்க முயற்சி செய்யலாமேங்கற எண்ணம்தான் இது.

 

இந்த கூடுதல் ரெண்டு சக்கரம் இருக்கே  அதுதான் இணைப்பு மொழி. அதாவது ஆங்கிலம். தமிழ் வளரணும்னா என்ன அர்த்தம்?  ஒரே அர்த்தம்தான். தமிழ் பேசறவங்கள் அதிகமாகணும். அதானே? அப்போ மொதல்லே இந்தியாவிலே தமிழ் பேசறவங்களை அதிகமாக்கணும். ஆரம்பிக்கலாமா?

 

தெருவுக்குத் தெரு பானி பூரி விக்கறான்னு வடஇந்தியர்களைக் கலாய்க்கறோம். யோசிச்சுப் பாருங்க —  எவ்ளோன்னு கேக்கறோம். அவன் உடனே ட்வெண்டி ருபீஸ்னு இங்கிலீஷ்லே பதில் சொல்றான். நாமளும் உடனே அம்பது ரூவா நோட்டை நீட்டறோம்.  அவன் உடனே நோ சேஞ்ச் அப்டீன்னு சொல்றான். நாமளும் புரிஞ்சிகிட்டு தேடி எடுத்து 20 ரூபா நோட்டை நீட்டறோம்.  இப்போ சொல்லுங்க மக்களே, அவன் ட்வெண்டி ருபீஸ்னு சொன்னதுமே நாம என்ன செஞ்சிருக்கணும்? எனக்கு புரியலே. தமிழ்லே சொல்லு அப்டீன்னு பதில் சொன்னோம்னா அவன் தமிழ் கத்துக்க ஆரம்பிப்பானில்லே?  நாமதான் பானிபூரி விக்கறவனைத் தமிழ் படிக்க விடாமத் தடுக்கிறோம், புரியுதா? அதனால தமிழ்லே விலை சொன்னாத்தான் பானிபூரி வாங்குவோம்னு இன்னிலேந்து சபதம் எடுப்போம்.

இப்போ இங்கே கட்டிட வேலைக்கெல்லா மொத்தமா பீகாரிகள்தான். அவனுக்குத் தமிழ் தெரியுமா?  நாம கஷ்டப்பட்டு சைகையாலயும் ஹிந்தி தெரிஞ்ச நம்மாளு ஒருத்தன் மூலமாவும் அவனோட பேசி வேலை வாங்கறோம்.  எதுக்காக? அவன் ஒரு நாளைக்கு ரொம்ப நேரம் வேலை செய்யறான், கூலியும் குறைச்சலா வாங்கிக்கறான். நீங்க இனிமே பீகாரிகள் தமிழ்லே பேசினாத்தான் வேலை, இல்லேன்னா இங்கே வேலை கிடாயாதுன்னு கட்டாயமா சொல்லிடுங்க. அப்போ அவன் தமிழ் கத்துக்கிட்டுதானே ஆகணும்?

 

சிவகாசி, திருப்பூர், கோவைவாசிகள் கவனத்திற்கு – இந்த வடக்கத்திக்காரங்க உங்க தயாரிப்புக்களை வாங்க வருவாங்க. நீங்களும் வியாபாரம் நடக்குதேன்னு சந்தோஷத்துல ஹிந்தி / ஆங்கிலத்துல பேசிடாதீங்க.  தமிழ்லே பேசினாத்தான் சரக்கை விப்போம்னு சொல்லிப்பாருங்க, தானா தமிழ் கத்துப்பானுங்க.

 

நம்மோட தமிழ்த் திரைப்படங்கள் – எதுக்காக இதை மலையாளம், சீனம், ஜப்பான், தெலுங்குன்னு யாரோ வேற மொழியிலே பேசி அதை அந்தந்த இடத்திலே திரையிட வேண்டும்?  உனக்கு எங்க மாபெரும் ஒலக்க நாயகர்களின் படங்களைப் பார்க்க வேண்டுமென்றால் நீ தமிழ் கற்றேயாக வேண்டும்னு நிர்பந்தம் பண்ணுங்க. மொழி மாற்றம் பண்ணாதீங்க. அப்போ அவங்கள்லாம் தமிழ் கத்துக்கிட்டே ஆகணும், இல்லையா?

 

முக்கியமான விஷயம் —  அடுத்த படம் எடுக்கும்போது ஃப்ரென்ச், ஜெர்மன், கொரியன் படங்களைப் பாத்து காப்பியடிக்காமல் சுத்தமான தமிழ்ப் படத்தைப் பாத்துத்தான் காப்பியடிச்சு படம் எடுக்கணும், சரியா?

 

இதனாலே என்ன ஆயிடப்போவுது? வியாபாரம் நடக்காது, தொழிலை மூட வேண்டியதுதான், படம் போணியாவாது, குறைஞ்ச கூலிக்கு ஆள் கிடைக்காது, சாயங்காலத்துல திங்கறதுக்கு பானி பூரி கிடைக்காது. போகட்டுமே? மொழி முக்கியமா தொழில் முக்கியமா?  மொழிக்காக உயிரையே விடத்தயாராக இருக்கும் நாட்டில் தொழிலையும் வியாபாரத்தையும் பணத்தையும் விட்டுக் கொடுக்க முடியாதா?

இந்த இணைப்பு மொழி இருக்கற வரைக்கும் எதுவுமே உருப்படாதுங்க.  எதுக்கு இணைப்பு மொழி? நம்மூரிலே ஒருத்தரோட ஒருத்தர் தமிழிலே பேசிப்போம்.  அடுத்த மாநிலத்துக்காரனோட நமுக்கு எதுக்கு சம்மந்தம்? ஏற்கெனவே 75% வேலைகள் தமிழருக்கேன்னு கோஷம் எழுப்பிட்டிருக்கோம். அதை 150% ஆக்கிடுங்க.  அவனுக்கு வேணும்னா தமிழ் கத்துக்கிட்டு நம்மகிட்டே பேசட்டும். நாம இங்கிலீஷ்லே பேசறதாலத்தானே அவன் தமிழ் படிக்க மாட்டேங்கறான்?  

 

இங்கே தமிழ்நாட்டுலே அரசுப்பள்ளிகளில் படிக்கும் பசங்களைக் கேட்டுப் பாருங்க, கல்லூரியிலேயும் கூடத்தான், எந்தப் பாடத்தை நீக்கலாம்னு கேட்டா உடனே பதில் வரும் ஆங்கிலம்னு. ஏன்னா பல பேரு பரிட்சையில் தவறுவதே இந்த ஆங்கிலத்தில்தான்.  5 & 8 ல் பொதுத்தேர்வுன்னு சொன்னவுடனே இது குலக்கல்வின்னு கும்மியடிச்சாங்களே, அவிங்கள்லாம் ஒண்ணு சேந்து இனிமே ஆங்கிலம் விருப்பப்பாடம்னு கொண்டு வரப் போராடணும். ஏன் தேவையில்லாம ஆங்கிலத்தைத் திணிக்கறீங்க?

 

என் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது என் உரிமை. அட ஒலக்கையே, என் பள்ளிப்பையில் என்ன இருக்க வேண்டியது என்பதும் என் உரிமைதானே?  கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்லூரிக்கனவுகளையும் – ஏன் பத்தாவது கனவைக் கூட — நசுக்கிக் கொண்டிருக்கும் ஆங்கிலப் பாடத்தை விருப்பப்பாடமாக, தேர்வு இல்லாத பாடமாக வைக்கலாம்.  எதற்காக ஆங்கிலத்தை மட்டும் திணிக்க வேண்டும்?  

சரி, இப்போ அடுத்த மேட்டருக்கு வருவோம். இப்போ பாருங்க இந்த புதிய கல்விக் கொள்கையிலே தாய்மொழி கட்டாயமாம். என்ன அநியாயம் மோண்டவரே.  தமிழ் கட்டாயப் பாடம் – எதுக்கு? ஏன் திணிக்கறீங்க? எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கக்கூடாதுன்னு கோஷம் போடறீங்க. அப்புறம் தமிழ் கட்டாயம்னு தொண்டைக்குள்ளே எறக்கினா எப்படி?  யோசிங்க. தமிழ்நாட்டிலே இருக்கவங்க பெரும்பாலானோர் தமிழர்கள். அப்புறம் ஏன் அவங்களைத் தமிழ் படிக்கணும்னு கட்டாயப் படுத்தறீங்க?  

 

அப்படிக் கட்டாயம்னு இல்லாட்டா?  இல்லாட்டா? பெரும்பாலானோர் தமிழைப் படிக்க மாட்டாங்கன்னு பதில் சொன்னா தமிழர்களே ஏன் தமிழ் படிக்க வரலைன்னும் பதில் சொல்லணும். 

 

இதுதான் இந்த வாரத்துக்கான டாஸ்க், நாங்களும் Pig Boss  நடத்துவோம்ல! நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க. காத்திருக்கிறோம். 

இன்னொரு முக்கியமான எச்சரிக்கை. இந்த டாஸ்க்கை சரியாக முடிக்காவிட்டால் எங்கண்ணன் சைமாண்டி நீ தமிழர் சான்றிதழ் கொடுக்க மாட்டாரு.  அடுத்த தேர்தல்லேர்ந்து அண்ணனோட நீ தமிழர் சான்றிதழ் இல்லைன்னா தேர்தல்லே ஓட்டுப் போடக்கூட முடியாது. அப்புறம் மையத்துல இல்லே ஓரத்துல கூட நிக்க முடியாது.

 

ஸ்ரீஅருண்குமார்

One Reply to “வசந்தவல்லி சைக்கிள் பயின்ற கதை..”

  1. ஏதோ சூழலில் பல மொழி பேசுபவர்கள்,சிறுசிறு பண்பாட்டு பேதங்களை மறந்து ஒன்றிணைந்து,அன்றி இணைக்கப்பட்டு, இந்தியர்களாக மாறிவிட்டோம். இந்நிலையில் இருந்துகொண்டே, நமது மொழியையும் பண்பாட்டையும் அழியாமல் காத்து வளர்ப்பதே விவேகம்.என் பதிவை படியுங்கள்
    lvnaga.wordpress.com/2019/08/11/ind…
    உங்கள் கருத்து?

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.